மௌனம் வெறுக்கிறேன் !…

மலர் மலர்தல்
சுகந்த மணம் தவழ
மெல்ல
மொட்டவிழும்
மலரின் மௌனம் ரசிப்பேன்.

அலைகள் வீசி ஓய்ந்து
அயர்வாய்
அலைகளின்றி தூங்கும்
நீர்நிலையின் மௌனம் ரசிப்பேன்.

பள்ளி சென்று படித்து – பின்
விளையாடி ஓய்ந்து
என் மேல் கொடியாய்
கால்பரப்பி கண்ணயரும்
என் செல்ல மகளின்
மௌனமான தூக்கம் ரசிப்பேன்.

நீ
சில நேரம்
சிடு சிடுத்து சிணுங்கி – பின்
அமைதியாய்
என் கைகளுக்குள் அடைக்கலமாகும்
மௌன அழகை ரசிப்பேன்.

பகலுக்கு
கருமை பூசி
கண்மூடிக் கிடக்கும்
இரவின்
ஏகாந்த மௌனம் ரசிப்பேன்.

புயலின் அபாயமின்றி
பூப்போல
மெல்ல வருடிச்செல்லும்
தென்றல் கைற்றின்
மெல்லிய மௌனம் ரசிப்பேன்.

அந்தரத்தில்
தொங்கி
அழகாய் ஜொலிஜொலிக்கும்
நட்சத்திரக் கூட்டத்தின்
ஒப்பில்லா மௌனம் ரசிப்பேன்.

மௌனம் ரசிக்கும் நானே
என்
மௌனம் வெறுக்கின்றேன்.

உன்னோடு
ஊடல் கொண்டு
நான் மௌனம் காக்கும்
சில மணித்துளிகளில்
நீ
மரணவேதனையை
அனுபவித்த கணங்களை
நான் ரசிக்கவா முடியும்?!…

என்
மௌனம் வெறுக்கின்றேன்
நீ
என்வோடு இருக்கும் போது
மட்டும்!…
ஃஃஃஃ

By மா.கலை அரசன்.

மறுமொழியொன்றை வழங்குக