சுதந்திரத் தென்றல்.

கன காலமாகிவிட்டது?!…
சுதந்திரத் தென்றல் நம்மைத் தழுவத்தொடங்கி…
இன்னும் ஏன் விடாப்பிடியாய்
சுவாசித்துக் கொண்டே இருக்கின்றாய்?
அடிமை நாற்றத்தை!….

அடிமைப்படுத்திய வெள்ளையன் வெளியேறி
ஆண்டுகள் அறுபதைக் கடக்கின்றது
நீ ஏனின்றும்
அடங்கியேத்தானிருப் பேனென்று
அடம்பிடிக்கின்றாய்…
அரிதார நாயகர்களுக்குப் பின்னும்
அநாகரீக அரசியல் தலைவனுக்கு பின்னும்
அடிமாடாய் அணி வகுக்கின்றாய்?!….

நொடிக்கொரு முறை,
இரவினில் சுதந்திரம் பெற்றோம்
இன்னும் விடியவே இல்லையென்று
ஒப்பாரி வைக்கின்றாய்…
வீணே புலம்பித் தவிக்கின்றாய்…

நச்சுச் செடிகளையும் பதர்களையும்
நடவு செய்துவிட்டு
நல்மணிகளை அருவடை செய்ய
நினைப்பதென்ன நியாயம்?!…

சுரங்கெட்டவர்களை மேடையேற்றி விட்டு
சுகராகங்களை கேட்கலாமென்று
சுரத்தின்றி காத்திருப்பது பாவம்!…

மணலைப்பிசைந்து கடைந்து கடைந்து
மட்பாண்டம் செய்ய முயல்வது
மதியிலார் செய்யும் மடத்தனம்!…

யார் இந்த
மக்கள் நலன் மறந்த அரசியல் வியாதிகள்…
கடமை தவறிய ஊழல் அதிகாரிகள்…
தர்மம் துறந்து உயிருக்கு விலைசெய்யும்
வியாபாரி மருத்துவர்கள்…
பத்திமார்க்கம் மறந்த காமுக போலிச்சாமிகள்…
சமூக ஒழுக்கம் ஒழுகாத சராசரி சாமான்யர்கள்?…

வானிலிருந்து வந்தார்களா?!…
வேற்றுக்கிரக வாசிகளா?!…

இல்லை…
நம் முன்னோர்
நேற்று நட்ட விச விதைகளின்
விருட்சங்கள்!…
சாக்கடையாய் வளர்க்கப்பட்ட
சாத்தான்கள்!!…

முட்களை நடவு செய்து விட்டு
முல்லைப் பூவை
அருவடை செய்யமுடியாது!…
நல்ல நெறியோடு
குழந்தையை வளர்க்காதபோது
குற்றமற்ற நாணய மனிதரை
காண்பதெவ்வாறு?!…

ஏ! என் இனிய இந்தியனே!! வா!!!
சுதந்திர தின சபதமேற்றுக் கொள்வோம்….
நம் வீட்டு குழந்தை தெய்வங்களை
கருணை, தியாக உள்ளம் கொண்டவராய்
நன்நெறி தவராதவராய் ஒழுக்க சீலராய்
உயர்நோக்கு கொண்டோராய்
வீரத்தில் சிறந்தோராய்
ஞானத்தில் பரந்தோராய்
தேசபக்தி கொண்டோராய்
வளர்ப்போம்…

நாளைய பாரதம்
பாரினில் சிறந்ததென்று
சூழுரைப்போம்…

* * *

மறுமொழியொன்றை வழங்குக