நவம்பர் 30, 2007 இல் 10:57 பிற்பகல் (பெண்ணியம்)
Tags: பெண் விடுதலை, பெண்ணடிமை, பெண்ணியம்
பெண்ணென்று பூமியில் பிறந்தோம் – மிகு
புண்பட்டு புழுவாய் துயரில் துடிக்கின்றோம்
பிறப்பொன்றாய் மண் மீதில் உதித்தோம்
பின்னேன் தாழ்வுற்று தனித்தீவாய் தவிக்கின்றோம்
உயிர் ஒன்றாய் இருந்த போதும்
உடற்கூறால் கீழென்றாகி குறுகித் தவிக்கின்றோம்
தாயென்றும் தெய்வமென்றும் சீர்பெற்று சிறந்தோம்
தரணி வாழ்வில் எவ்வகையில் தாழ்ந்தோம்
பிறந்த இடத்திலும் புறந்தள்ளி தவிப்பு
பிறத்தி யாரிடத்தும் சொல்லொண்னா முறைப்பு
நித்தமும் செத்து செத்து பிறப்பு
நித்திய வாழ்வில் ஏனிந்த பரிதவிப்பு
நீதியற்ற செயல்கள் ஒழித்திட விழித்திடுவோம்
நிகர்தான் நாமென்று இனி உரைத்திடுவோம்
நடுங்கி அஞ்சும் நிலையை அகற்றிடுவோம்
நடை பிணங்களல்ல நாங்களென்று உயர்ந்திடுவோம்
நம்மினமே நமை தாழ்த்தாமல் தடுத்திடுவோம்
நயவஞ்சகரை இனம்பிரித்து வேர றுத்திடுவோம்
நெஞ்சத்தில் நேர்நின்று நடந்திடுவோம்
நாளைய உலகம் நாமென்று உணர்த்திடுவோம்.
ஃஃஃ
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 30, 2007 இல் 8:53 பிற்பகல் (காதல், ஹைகூ)
பூக்களோ பூச்செடியோ அருகில் இல்லை
தென்றலோ பூ வாசம் சுமந்து….
தூரத்தில் பூவையவள்.
ஃ
கூச்சலும் குழப்பமுமான சந்தைச் சூழல்
அவன் காதில் அமுத இசைமட்டுமே கேட்டது
காற்றோடு அவளனுப்பிய முத்தம்.
ஃ
தூண்டிலில் மீன்கள் அகப்படுவதே வழக்கம்
மீன்களும் தூண்டிலானது ஆச்சர்யம்!…
பெண்களின் கண்கள்.
ஃஃஃ
1 மறுமொழி
நவம்பர் 30, 2007 இல் 4:45 பிற்பகல் (ஹைகூ)
ஓயாமல் சிரித்துக் கொண்டே இருக்கின்றது
அவள் பாதம் தொட்ட சந்தோசமோ?!…
வெள்ளிக் கொலுசுகள்.
ஃஃஃ
நான் தான் காதலில் உருகி அழைக்கின்றேன்
மலைகளுக்கு என்ன நேர்ந்தது அவள் பெயர் சொல்ல?…
திக்கெட்டும் பரவும் எதிரொலிகள்.
ஃஃஃஃ
3 மறுமொழிகள்
நவம்பர் 20, 2007 இல் 8:52 மு.பகல் (காதல்)
காலைக் கதிரொளி மெல்ல விரிந்து
கிழக்கு வானம் புத்தொளியாய் புலரும்போது
உன் புன்முறுவல் பூத்த இன்முகம்
என் கண்ணில் விரிகின்றது…
இயற்கை இரவெல்லாம் மெல்லத் தெளித்த
பன்னீர்த் துளிகள் பட்டு பரிணமிக்கும்
ரோஜா இதழ் பார்க்கையில் சிவந்த
உன்னிதழ்கள் கண்ணில் மிளிர்கின்றது…
கூடுவிட்டு இரை தேடி பறக்கும்
சிறுசிறு பறவைகளின் குரல் கேட்கையில்
சின்னப்பெண்ணாய் நீ குழந்தைகளோடு கொஞ்சிக்குலாவும்
மழலைமொழி காதில் இனிக்கின்றது…
குறும்பு செய்யும் குஞ்சுள் குளிருக்கஞ்சி
தாய்பறவை சிறகுக்குள் அடைக்கலமாவதை காண்கையில்
மார்போடு மடிசாய்ந்துன் கைகளின் இறுக்கத்தில்
குளிர்காய்ந்த தருணங்கள் நெஞ்சோடு உறவாடுகின்றது…
செல்லமாய் சண்டையிட்டு களைத்தோய்ந்து, முகத்தோடு
முகமுரசி மூச்சிரைக்கும் நாய்க்குட்டி காண்கையில்
காரணமற்ற காரணங்களுக்காய் ஊடல் கொண்டு
என்தோள்சேரும் நிமிடங்கள் நெஞ்சில் மலர்கின்றது…
ஒவ்வென்றாய் மனதில் ஒளிப்படம்போல் தெரிந்தாலும்
ஏன் தான் இவையெல்லாம் நடக்கின்றதென்று
வெறுப்பாய் தான் உணர்கின்றது மனது….
நீ அருகில்லாத நாட்களில்!…
* * *
3 மறுமொழிகள்
நவம்பர் 19, 2007 இல் 1:20 பிற்பகல் (சான்றோர்)

என் கவிச்சூரியனே…
உன்
கவி வீச்சின்
கதிர்கள் என்னையும் தீண்டி ஆசிர்வதிக்க
நீ மண்ணில் அவதரித்த இந்நாளில்
உன் பாதமலர்களில்
மானசீகமாய் யாசித்து நிற்கின்றேன்.
சிறுவயதில் சுமக்க ஆரம்பித்தவன்
உன்னை சுமந்து செல்லும் வரை
சுமைகளைமட்டுமே
சுகங்களாய் சுமந்தவன் நீ…
பள்ளியில் வகுப்பு மூன்றைக்
கடக்க வழியில்லாத வறுமையில்,
புத்தகத்தை இறக்கி வைத்துவிட்டு
குடும்பத்தை தோளில் சுமந்தவன் நீ…
இறக்கும் வரை சுமையை
இறக்காமலேயே இறுமாப்போடு வலம் வந்தவன்.
உன் பாதம் பட்ட
காணியாற்று மலையின் அடிவாரத்தின்
ஒவ்வொரு திசையிலும்
உன் பெயர் சொல்லி
சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றது…
நீ நட்டு வளர்த்த மரங்கள்…
துயரங்களை துரத்தியே பழக்கப்பட்ட உன்னையும்
வறுமையின் கொடுமை
அரேபியாவிற்கு துரத்தியதென்ன புதுமை!…
பாலைவனத்தின் அனல் காற்று
உன் பாதம் பட்டதால்
தளிர்த்த மரங்களில் பட்டு குளிர்ந்தது உண்மை…
பாலைவனத்தில் பூத்ததால் தான்
உன் கவிமலர்கள்
உலகிற்கு தெரியாமல் போனதோ?!…
என் கவிச்சூரியனின் கதிர்களை
உலகில் ஒளிரச்செய்யாமல் செய்த
மேகம் எது?…
சூரியனின் மறைவிலும்
சந்திரன் அதன் ஒளியை பிரதிபலிக்கும்…
என் சூரியனே…
நீ மறைந்திருக்கலாம்
நீ தந்த கவிதைச் செல்வம் மறையாது…
சந்திரனாய் நின்று
உலகிற்கு புகல்வேன் நன்றே…
* * *
கருத்துத் தெரிவிக்கவும்