வேசம் இல்லா பாசம்……

வாசம் வாசம் வாசம் வயசுப் பொண்ணு நேசம்
வீசும் தென்றல் காற்றும் பேசும் எங்களின் நேசம்
காசுப் பார்க்கா நேசம் வளர்க்கும் எங்கும் பாசம்
வேசம் இல்லா பாசம், வேலிகள் அறுக்கும் தேசம்

காசு பார்த்து வந்தால் பாசம் என்பது மோசம்
பாசம் குறைந்து போனால் நேசம் எல்லாம் வேசம்
நேசம் வரண்டு போனால் தேசம் குலைந்து நாசம்
தேசம் என்பது தாயானால் பாசத்தால் வளர்போம் நேசம்.

பேசும் பொய்கள் குறைப்போம் வீசும் தென்றலாய் இருப்போம்
தூசுபடிந்த நெஞ்சை துடைப்போம் கூசும் வார்த்தையை தவிர்ப்போம்
மாசுபட்ட மனதைக் கலைப்போம் மோசத்தை முற்றாய் அழிப்போம்
பூசுமஞ்சளாய் இனி ஜொலிப்போம் வீசுசந்தணமாய் நாளும் மணப்போம்.

ஃஃஃ

நாங்கள் ஜந்துக்கள் அல்ல…

காவியங்களைக்
கடலில் போட்டு விட்டு
ஓவியங்களை
உடைத்தெறிந்து விட்டு
ஏ!… சமுதாயமே!!…
எரிந்து போன
ஏடுகளில் இருந்து
எழுத்துக்களைத் தேடாதே!…

மனமுடைந்தே சொல்லுகின்றேன்…
ஏய்க்கப்படும் எங்களில்
இரக்கத்தைத் தேடாதே!…

ஏ! சமுதாயமே!!…
நாங்கள்
வரண்ட நாவிற்கு
தண்ணீர் கிடைக்காமல்
உடைந்து விட்ட பானைகள்…
பாழடைந்த சிதிலங்களில்
பாம்புகள் தான் குடியிருக்கும்
அங்கே நீ
அமுதத்தைத் தேடி அலையாதே,
அருகிப்போய் விடுவாய்…

வன்முறை
பிறப்பிலே வருவதில்லை…
வறுமையில் – அது
வாய்மூடி நிற்பதில்லை…
பசியில்
வெந்து மடிந்துபோக
நாங்கள் ஜந்துக்களும் அல்ல…

ஏ! சமுதாயமே!!…
நீதியென்று ஒன்றைச் சொல்லி
எங்களை நிற்கதியாய் நிற்க விடாதே…
சட்டமென்று ஒன்றைச் சொல்லி
எங்களை சடலங்களாய்க் கிடக்கச் செய்யாதே…

அரசியல்வாதி வீட்டு
படி நுழையாத நீதி
எங்களின் செவிகளில் நுழைந்தா விடும்.
வஞ்சகர் வீட்டு
படிக்கட்டை கடக்க முடியாத சட்டம்
வரண்டுபோன எங்களை வதைத்தா விடும்?…

இன்று எரிவதோ
எங்களின் பட்டினி வயிறுதான்..
நாளை எரியப்போவதோ
சமத்துவம் இல்லா இச்சமூகம்!…

இனி
எரிமலை வெடிக்கும் போதுதான்
எங்களின்
இதயமே துடிக்கும்!!…

ஏ! வஞ்சக சமுதாயமே!!
நீ வெந்து துடிப்பாய்…
நாங்கள்
நாளையதை
கண்டு கழிப்போம்!!!…

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

புண்ணியமே ஓடு…

புண்ணியமே ஓடு….

கேடு கெட்ட சமுதாயம்!…

யாரோ ஓலமிடும் சத்தம் கேட்டு
அன்னாந்து பார்த்தேன் – அதற்குள்
அரைஞாண் கயிற்றைக் காணவில்லை.

குனிந்து பார்த்தேன் அரையை
அதோ!…
குல்லாவையும் பரித்துவிட்டு ஓடுகின்றான்.

கேடு கெட்ட சமுதாயம்!!…

தன்னந்தனியே தவித்து நின்றாள்
அண்ணா உதவியென்றாள்
பாசவார்த்தையின்
அதிர்வலை மறைவதற்குள்
நாலுபேர் மத்தியில் நின்று
அத்தான் என்னை கைவிட்டுவிடாதீர் என்றாள்…
அடடா!
பகல்வேசமிடும் பரத்தையர் கூட்டம்.

கேடு கெட்ட சமுதாயம்!!!…

“கருப்பு மலையின் அடியில்
தவம் கிடக்கும் சமவெளி உன் நெற்றியடி

வானத்தில் வட்டமிடும்
வெள்ளி நிலா உன் நெற்றிப் பொட்டடி

பூமயிலே உன் புன்னகையோ,
ஜாலமிடும் அருவி ஓசையடி

இணைந்த புல்லாங்குழல் – உன்
எடுப்பான நாசி துவாரமடி

ஒருமித்துப் பார்த்தால் – நீ
கந்தர்வக் கன்னியடி…”, என்றான்.

சொன்னானே கந்தர்வக் கன்னியென்று…
நின்றானா நிலையாக…
விட்டானா அவளையாவது
கன்னியாக!….

அட, பெண்ணே!…
நீ கோழையடி!!…
அவனோ சுத்த பரத்தையனடி!!!…

கேடுகெட்ட சமுதாயம்!…

கெட்டதோ சமுதாயம்?
கெடுத்தோமே ஜனநாயகம்…
தடுத்தோமா கொடுமை?

படித்தோமே பாரதியை
விடுத்தோமா பெண்ணடிமை?

உழுத்துப்போன சமுதாயம்…
உழைப்பை விட்டோம்,
உண்மையை விட்டோம்,
உயர்வோ நம்மை விட்டோடியது.

பாரதியை மட்டுமென்ன விட்டா வைப்போம்?!…

கேடுகெட்ட சமுதாயம்!!…

கெட்டுப் போக படித்தா தரவேண்டும்
எங்களுக்கு….
பண்டிதர்களாயிற்றே நாங்கள்!…
புழுதிகள் வந்தா
எங்களை அழித்துவிடப்போகின்றது
நாங்கள் பூகம்ப மாயிற்றே…

புண்ணியமே ஓடு – நீ
கண் ணிமைக்காமல் ஓடு
கண்ணை இருக மூடிக்கொண்டே ஓடு…
ஆம்,
கண்ணைத் திறந்தால் ஒட்டிக்கொள்வோம்
நாங்கள் கேட்காமலேயே கெடுக்கும்
புதுப் புயல்கள், புழுதிப் புயல்கள்
புண்ணிய தேசத்தின்
புழுதிபடிந்த புதுத்தூண்கள்
எங்கள் புழுதியில் கலந்துவிடாதே

ஏ புண்ணியமே ஓடு! ஓடு!!…

நண்பன் சொன்னான்
அவனுடன் பழகாதே
அவன் குள்ள நரி குணத்தவனென்று…

குதர்க்கமாக சொன்னேன்
குள்ள நரி என்றால் என்ன?
குறுக்கே போனால்
நல்ல சகுணம் தானே!…

நாய்போல் நன்றியோடு பழகுகின்றானே
இவனா நரியென்றேன்…
நண்பனையும் திட்டினேன், செல்லமாக…

நண்பனே!
நீ தீர்க்க தரிசி…

நீ நரியென்றவன்
செல்லாமல் செய்துவிட்டுப் போனதை
அறிவாயா?…

நாயனையன் அல்ல நான்…
நல்ல பாம்பனையன் என்று
என்னையும் விசமாக்கிச் சென்று விட்டான்….

நண்பனே!
நீ திர்க்க தரிசி!!…

நண்பனே!
கெட்டுப்போன கேடுகெட்ட சமுதாயம்
இதில் கெட்டுப்போகாமல் இருக்கும்
பட்டுப்பூச்சி நீ.

ஓய்ந்து விடாதே…
நாளைய மலர்கள்
உனக்காகவே மலரும்.

உயரே… உயரே… பறந்து செல்.
அதோ!
இன்றே மொட்டுக்கள் தயாராகிவிட்டது;
நாளைய மலர்கள் உனக்காகவே!!!.

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கீதா நீ எனக்கு வேண்டும்.

‘அப்பா’, விவேக்கிற்கு புரியாத புதிராகவே இருந்தார்.

இப்போது என்ன செய்கின்றார், அடுத்து என்ன செய்வார் என்பதே புரியவில்லை. அவர் என்ன செய்தாலும் ஒரு புதிராகவே இருந்தது விவேக்கிற்கு.

“ச்ச…அஸ்ட்ரானமில ஒரு கணக்கு போட்டார்னா கூட இப்படி சர்வ குழப்பமா இருக்காது. உண்டு அல்லது இல்லைண்ணு சட்டுண்ணு சொல்லிவிடலாம்.

சுத்தமோசம். இந்த மார்டர் அல்ஜிப்ராபோல புரியும் படியாகவும் நடந்துக்க மாட்டார். புரிஞ்சுக்கலாம் என நினைத்தாலும் முடியல்ல, மனசுக்குள்ளே அலுத்துக்கொள்வான் விவேக் அடிக்கடி.

சத்தியசிவம்.

ஐம்பதைத் தாண்டிய வயது. அடர்த்தி குறைய ஆரம்பித்திருக்கும் தலை. நெற்றியிலோ படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலுக்குறிய பிரம்மா, விஷ்ணு, சிவனை நினைத்து தீட்டப்பட்ட திருநீருப்பட்டை. வெண்பஞ்சு மேகமாய் வெள்ளுடை. பார்ப்பதற்கு தீர்க்க தரிசி போல் இருந்தார்.

நாற்பத்து ஏழைக் கடந்தபோது நாயகியை இழந்துவிட்டிருந்தார். ஒரு வகையில் துவண்டுபோன அவர் மனதுக்கு அவள் நினைவே தூண்டுகோலாகவும் இருந்து மீதிவாழ்வை ஓட்ட துணைபுரிந்தது என்றால் மறுபுறம் விவேக். அவன் மீது பாசம் முழுவதும் வைத்திருந்தார். ஆனால் எந்த சமயத்திலும் தன் கண்டிப்பை மீறி இளகியமனதை வெளிக்காட்டியது இல்லை. மனைவியின் நினைவுகளை மனதில் சுமந்து வருவதை வரவேற்கும் மனப்பக்குவம் பெற்றிருந்தார்.

உழைத்து உழைத்து உடல் உரமேறியிருந்தது. உண்மை நேர்மையினால் ஊரில் அவருக்கு புகழும் கூடியிருந்தது. அவரை தர்மகர்த்தாவாக ஊர் முத்தாரம்மன் ஆலயம் கூட தத்தெடுத்திருந்தது.

ஊருக்கெல்லாம் தெரிந்த அவரை அவர் மகன் விவேக்கால் மட்டும் எப்படித்தான் புரிந்துகொள்ள முடியாமல் இருந்ததோ?….

விவேக் இருபதுவயதைக் கடக்கும் கட்டழகன். அறிவு முப்பதைத் தாண்டி வேக நடையிட்டது. படிப்பில் கெட்டி. இந்த வருடம் தான் இளங்கலை கணிதவியல் முடித்திருந்தான்.

இருந்தும் என்ன பயன் அப்பாவைப் பற்றி நன்றாக புரிந்துகொள்ள முடியவில்லையே?

விவேக்கின் ஆசிரியர்கள் அடிக்கடி அவனைப் புகழ்ந்தது உண்டு. சுடலைமணி ஆசிரியர் அடிக்கடி சொல்வார் “விவேக் நீ வருங்காலத்தில் பெரிய ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வரவேணும். அப்பத்தான் எங்களுக்கெல்லாம் பெறுமை. உன்னுடைய அறிவுக்கு நீ கண்டிப்பா வருவே. வரணும்”.

சொல்லும் போது அவர் உள்ளம் பூரிக்கும். விவேக்கோ கூச்சத்தால் உள்ளம் குளிர்ந்து போவான். புகழ்ச்சி தாங்காமல் கைகால்களில் உள்ள மெல்லிய மயிர்க்கால்கள் சில்லிட்டு நிற்க, நெளிந்து நெளிந்து பதில் சொல்வான், “உங்க விருப்பப்படியே வர முயற்சி செய்யறேன் சார்.”

வரும் டிசம்பரில் நடக்க இருக்கும் ஐ.ஏ.எஸ் முதல்நிலைத் தேர்விர்க்காக தயாராகவும் இருந்தான்.

எதற்கு தயாராக இருந்து என்ன பிரயோஜனம். எத்தனை ஆசிரியர்கள் பாராட்டி என்ன பயன். ஒரு சிறு விசயத்தில்கூட அப்பாவைப் பிரிந்துகொள்ள முடியவில்லையே என அடிக்கடி மனதிற்குள் புழுங்கிக்கொள்வான்.
எப்போதும் முகத்தில் ஒரு அமைதி. நாம் தப்பு செய்தாலும் அமைதியாக கவனிப்பார். ஏதாவது சாதனை செய்துவிட்டு வந்து, “அப்பா, நான் அதில் இந்த சாதனை செய்து இருக்கின்றேன்” என்றாலும் அதே அமைதியான புன்முருவல்.

“ஒருவேளை நம் மகன் சிந்திக்கத் தெரிந்தவன். நல்லது கெட்டது அறிந்தவன். நல்லது கெட்டது தெரிந்து நடந்து கொள்வான் என நினைத்து என்னை என் வழியிலிலேயே விட்டு விட்டாரா? அல்லது இவன் எக்கேடு கொட்டால் நமக்கென்ன என நினைத்து விட்டாரா?”, விவேக் தனக்குள்ளேயை அடிக்கடி கோட்டுக்கொள்வான்.

“என் அப்பா என்னை கெட்டுப்போகட்டும் என்று நினைப்பாரா? எப்படியெல்லாம் என்னை சீராட்டி வளர்த்தார். அம்மாவின் மடியில் இருந்து விளையாடிய நாட்களை விடவும் அப்பாவின் மார்பில் சாய்ந்து தூங்கிய நாட்கள் அதிகமல்லவா?
தன் உயிரின்மேல் வைத்த அன்பைவிடவும் அப்பாவிற்கு என்மேல் உள்ள அன்பு அதிகமல்லவா? அப்படிப்பட்ட அப்பா நான் எக்கேடு கெட்டாலும் கெட்டுப்போகட்டும் என்று நினைப்பாரா?
சீ…சீ.. அப்படியெல்லாம் நினைக்க மாட்டார்”, தனக்குத்தானே சமாதானமும் சொல்லிக் கொள்வான்.

அப்படியானால் கீதாவுடன் பழகுவது தெரிந்தபின்னும் அதுபற்றி என்னிடமேன் கேட்கவில்லை.

உலகத்தில் நடக்காததையா நம்மகன் செய்துவிட்டான் என்று நினைத்துவிட்டாரோ?

ஒருவேளை கீதா சேரி குப்பனின் மகள் என்று அப்பாவிற்கு தெரிந்திருக்காதோ? அதெப்படி தெரியாமல் இருக்கும். போன வருட பொங்கலுக்குக் புதுத்துணி அப்பாவிடம் வாங்கும்போது கூட குப்பன் கீதாவையும் அழைத்து வந்து ‘ஐயா, இதாங்க எம்பொண்ணு, பேரு கீதா. அவ மாமா வீட்டுல நின்னு பனிரெண்டாம் வகுப்பு படிக்குதுங்க’, என்று சொன்னாரே.

படத்துல வர்ர வில்லன்க மாதிரி அமைதியா இருந்து சதிபண்ணி எங்களை பிரிக்கப் பார்க்கிறாரோ?…

அதெப்படி இந்த இளம் பறவைகளை சிறகொடிக்கப் பார்ப்பார் என் அப்பா? அவர் அவ்வளவு கொடிய குணம் படைத்தவரல்லவே… தெரியாமல் காலில் மிதி பட்டு இறந்துபோகும் எரும்புக்காக அனுதாபப்படுபவரல்லாவா?!… அவர் எங்களை பிரிக்க நினைக்க மாட்டார்.
அப்பாவிடமே கேட்டு விடலாமா? இந்த மன சஞ்சலமாவது நீங்குமல்லவா? ‘அவளை மறந்துவிடு, இல்லையென்றால்…’ என்று ஏதாவது சினிமா வசனம் பேசினாரென்றால் அதற்குப்பின் நம்பாதையை வகுத்துக் கொள்வது.

காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாரென்றால் அவர்வழியில் செல்வது.

ஒருவேளை என்னிடமே வந்து உன் நிலைகளை விளக்குகின்றாயா எனக் கேட்டுவிட்டால் என்ன செய்வது.

அப்பாவை நினைத்து காதல் போயின்….”, விவேக்கின் எண்ண ஓட்டத்தை கதவு தட்டப்படும் ஓசை கலைத்தது.

அப்பா தான் கதவைத்தட்டி அவனை அழைத்தார்.

“விவேக் கோயில்ல இருந்து ஆள்வந்திருக்காங்க என்ன கூட்டிப்போறதுக்கு. நிகழ்ச்சி தொடங்க இன்னும் அரைமணி நேரம் தான் இருக்கு. நான் கோயிலுக்கு புறப்பட்டு போறேன். நீயும் வர்றியா? இங்க தனியாத்தானே இருக்கணும். அதைவிட கோயிலுக்கு போயிட்டு வரலாம் வா”.

விவேக்கால் அப்பாவின் வார்த்தைகளை தட்டமுடியவில்லை. வீட்டிலும் வேறு வேலையில்லை. அப்பாவுடனேயே சென்றான்.

ஆனாலும், மனதில் சிறு பொறி தட்டியது, “தனியாத விட்டுச் சென்றால் கீதாவைப் பார்க்கச் சென்றுவிடுவேனென்று தான் உடன் அழைத்துச் செல்கின்றாரோ?…”

கோவிலில் இன்று எட்டாவது நாள் திருவிழா. சித்திரை மாதத்து காற்று தன் கை வரிசையைக் காட்டிக்கொண்டிருந்தது.
அப்பா மேடையில் சென்று அமர்ந்து கொண்டார். விவேக் மேடையின் முன்னால் மணலில் அமர்ந்திருந்த மக்கள் வெள்ளத்தில் தானும் ஐக்கியமாகிக் கொண்டான்.

கூட்டத்தில் பெண்கள் பகுதில் கீதா இருக்கின்றாளா என நோட்டம் விட்டான். ம்கூம்…பார்த்து பார்த்து கழுத்து வலித்ததுதான் மிச்சம். கீதாவை காணமுடியவில்லை.

மேடையில் பெண்ணுரிமை பற்றியும், சாதிக்கொடுமைகள் பற்றியும், சாதிக்கொடுமைகள் நம் புராணங்களில் உள்ளனவா?,பெண்ணுரிமை பற்றி இந்துமதம் என்ன சொல்கின்றது என்பது பற்றியெல்லாம் யார் யாரோ பெரியவர்கள் பேசியதில் ஒன்று கூட விவேக்கின் செவியினுள் நுழையவில்லை.

அவன் கண்கள் அவன் மனதைக்கொள்ளை கொண்ட கீதாவையல்லவா தேடிக்கொண்டிருந்தது. அவன் செவிகளை பறிகொடுக்க நினைத்தது கீதாவின் காதல் மொழிகளுக்கல்லவா? பிறகெப்படி சொற்பொழிவை கேட்கும் அவன் செவிகள்.

ஆனாலும் அடுத்து அவனது அப்பா பேசப் போகின்றார் என்ற அறிவிப்பு காதில் விழுந்ததும் கண்களும் காதும் மனதும் ஒருசேர கீதாவின் நினைவை தற்செயலாக ஒதுக்கிவைக்கத்தான் செய்தது.

ஊரிலேயே மதிப்புமிக்கவர் என்பதாலா இனிமையாகப் பேசக்கூடியவர் என்பதாலா என்பது தெரியவில்லை, அவர் பேச எழுந்தவுடன் கூட்டத்தில் கைதட்டலும், விசிலடியடிதலும் கோவில் வழாகத்தை அதிரத்தான் செய்தது.

ஆரவாரத்தை விரும்பாதவராய் அனாவசிய ஒலிகளை அடக்கிவிட்டு பேச ஆரம்பித்தார் சத்தியசிவம். அவரது வார்த்தைகளும் ‘சத்திய’ மாகவே விழுந்தது, சத்தமாகவும் இருந்தது.

“நம் புராணங்கள் பெண்ணுரிமையையும், சாதிக்கொடுமைகளையும் எந்த கண்ணோட்டத்தில் நோக்குகின்றன என்பதைப் பற்றி எனக்கு முன் பேசிய அன்பர்கள் அழகாக எடுத்துக் கூறினார்கள்.

நானும் அரைத்த மாவையே மீண்டும் அரைப்பது போல அவர்கள் கூறியதைத்தான் கூறப்போகின்றேன். ஆனால், என் மொழியில் கூறப்போகின்றேன்.

யாராவது நம்ம எல்லோருடைய மொழியும் தமிழ்தானே நாம தமிழன்தானே என குதர்க்கம் பேச வேண்டாம். நான் கூறும் மொழி என்பது எனது பாங்கில் சொல்லப்போகின்றேன்.

எனக்குத்தெரிந்து நம் புராணங்களில் எந்த ஓர் இடத்திலும் பெண்களை இழிவாக நடத்தியதாக என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஆண்களை விடபெண்களுக்குத்தான் முக்கியத்துவம் அதிகமாக இருந்தது இருக்கின்றது. கல்விக்கும், செல்வத்திற்கும், வீரத்திற்கும் பெண் தெய்வங்களைத்தானே கும்பிடுகின்றோம்.

நான்….

இன்னும் பலப் பலப் பேசினார். ஆனால் அவர் பேச்சை முடிக்கும்முன் கடைசியாக கூறிய வார்த்தைகள் விவேக்கை சிந்திக்கத் தூண்டியது. அவர் அத்தனையும் சத்தியமானவை.

“நான் ஏதோ ஜாதியற்ற சமுதாயம் மலருவதை தடைசெய்யப் பேசுவதுபோல பேசுகின்றேன் என நினைத்து விடாதீர்கள். நான் எதார்த்தத்தைப் பேசுகின்றேன். இதற்கு முன்பும் இதைத்தான் ஏதார்த்தத்தோடு ஒப்பிட்டு பேசினேன். இதில் சிறுவேறுபாடு அவ்வளவே…

நான் பேசுவதைக் கேட்டு நான் காதலுக்கு எதிரானவன், கலப்பு மணத்திற்கு ஏதிரானவன் என்று நினைக்க வேண்டாம்.

காதல் புனிதமானது தான். கலப்புத் திருமணங்கள் வரவேற்கப்பட வேண்டியதுதான். நானும் காதலை மதிக்கின்றேன். கலப்பு திருமணத்தை ஆதரிக்கின்றேன். ஆனால் இன்னொன்றையும் சிந்தித்தாக வேண்டும். நானும் நீயும் வரவேற்கின்றோம். இந்த அரசாங்கம் வரவேற்கின்ரதா? சாதியை ஒழிக்க ஏதாவது திட்டம் உண்டா? இல்லை புதுப் புது சாதிகளையே ஜனனம் செய்கின்றது.

சாதியை ஒழிப்போம் சாதியை ஒழிப்போம் என பெட்டைப் புலம்பல் புலம்பிவிட்டு பள்ளியிலும் கல்லூரிகளிலும் நீ என்ன சாதி? நீ என்ன சாதி? என கேட்டு மாணவர் மனதில் விச வித்துக்களை விதைக்கின்றது.

சாதிதேவையில்லையென்று நீ சாதியைச் சொல்ல மறுத்தால் உனக்கு வேலை தேவையில்லையென்று சொல்லாமல் சொல்கின்றது.

கலப்பு மணத்தை ஆதரிப்பதைபோல வெளிவேசம் காட்டிவிட்டு கலப்பு மணம் புரிந்த ஒருவனுக்கு பிறக்கும் குழந்தையை வைத்து புது சாதியையே உருவாக்குகின்றது அரசு.

உங்களால் இன்னுமொரு புது சாதி ஜனனம் ஆகவேண்டுமா என்பதை எண்ணிப்பாருங்கள். நான் கலப்பு மணத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றேன் என எண்ணி விடாதீர்கள்.

நான் இதுவரை சொன்னவை அரசாங்க உதவியை நாடவிரும்பிய, விரும்புவோருக்காகத்தான். ஏனென்றால் நம்சமுதாயம் நலிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.

உன்னால் முடியுமா?

ஆம், இந்த சமுதாயத்தை எதிர்த்து எதிர்நீச்சல் போடமுடியுமா? மூன்றாவதாக இன்னுமொரு சாதியை உருவாக்க வழிவகுக்காமலேயே உன்னால் கலப்பு மணம் புரிந்து சாதிகளுக்கு அப்பாற்பட்டவனாக வாழ்ந்து காட்டமுடியுமா?

இப்போதே துணிந்துவிடு….
….
….
துணிந்துவிட்டாயா?

அவ்வாறு துணிந்தவர்களுக்கு எந் மனமார்ந்த பாராட்டுக்கள். நான் விரும்புவதும் நல்லவர்கள் விரும்புவதும் சாதியற்ற சமதர்ம சமுதாயம் தான். ஆனால், நம் அரசியல் வாதிகள் இதை விரும்பவில்லை. அவர்கள் நடத்தும் அரசும் இதை விரும்பவில்லை. ஓட்டுக்காக நம் வாழ்கை ஏட்டையே மாற்றத்துணிந்த எந்தர்களல்லவா அவர்கள். சிந்தித்து நடந்து கொள் சீர் பெறலாம்”, என்று முடித்துக்கொண்டார்.

அப்பாவின் பேச்சு விவேக்கை சிந்திக்கவே தூண்டியது.

“நான் ஐ.ஏ.எஸ் ஆகவேண்டுடாமா?…

ஆக வேண்டும், ஆகவேண்டும்….

அப்படியானால் கீதா? கீதாவும் வேண்டும். கீதா எனக்கு கண்டிப்பாக வேண்டும். அப்பா சொன்னாரே, ‘துணிவுள்ளவர்கள் துணிந்துவிடலாமென்று’.

நான் துணிவில்லாதவனா? உண்மையான காதல் இல்லாதவனா?…

துணிவில்லாதவனா?…..துணிவில்லாதவனா?…. நான்”.

விவேக்கின் மனதில் பலப்பல கேள்விகள்.

சத்தியசிவம் விவேக்கின் எண்ணங்களை எடைபோட முதலும் கடைசியுமாகக் கொடுத்த சந்தர்ப்பமோ?

அவர் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார். முடிவெடுக்கும் உரிமை இவன் கைகளில் அல்லவா இப்போது?…

விவேக் திடமான எண்ணம் கொண்டவனாய் மேடையை நோக்கினான். தந்தையைக் காணவில்லை. அவரை அவன் பக்கத்தில் வந்து நின்றார். மற்ற ஜனங்கள் கூட்டம் கலைந்து சென்று கொண்டிருந்தார்கள்.

விவேக் மெதுவாக, ஆனால் திடமான ஆண்மகனாய் சொன்னான், “அப்பா, எனக்கு கீதா தான் வேண்டும்”.
ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

நாங்கள் கேட்பது.

நாங்கள்
மரத்தடி ராஜாக்கள் – வாடிய
ரோஜாக்கள்.

எங்களின்
உடலை மூடி
மறைப்பதோ
சிலந்தி வலைகளே!…

நிதம் நிதம்
கண்ணீர்த் துளிகள்
இதுவே
எங்களின் உடல் கழுவும்
ஆறுகள்!.

நாங்கள்
கைகளில் ஏந்துவது
திருவோடுகளா? – இல்லை
எங்கள் முன்னோரின்
மண்டையோடுகளே!

நாங்கள் கேட்பது
மாடிகள் அல்ல…
எங்களின் கட்டைசாய
ஒட்டுத் திண்ணைகளே!!…

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

அழகாக பொங்கலிடு…(அ,ஆ…கவிதை-30)

அதிகாலைச் சுபவேளை அழகாக பொங்கலிடு
ஆணவ அழுக்குகளைப் பழையதோடு தீயிலிடு
இனிதான குரல்கொண்டே இனத்தோடுக் குலவையிடு
ஈசுவரனாய் உழவனையும் மதித்தின்று போற்றிவிடு
உலகமக்கள் யாவருமே நலமாக வாழ்ந்துவிட
ஊர்கூடி இந்நன்னாளில் தமிழன்னை தொழுதுவிடு
எல்லோரும் ஏற்றம் பெற்றுத் திகழ்ந்திடவே
ஏழ்மையிங் கில்லாது சாம்பெலன பொசுங்கிடவே
ஐயமின்றி உயிர்க்கும் வரை உழைத்துவிடு
ஒருத்தோடு நாமெல்லாம் இருந்து விட்டால்
ஓவுதலில்லை தமிழனுக்கு உலகினிலே;
ஔசித்தியம் மிகுந்தேத் தெரிவோம் பாரினிலே.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

மழை நீர்(ஹைகூ)

சின்னச் சின்னக் குளங்கள்
சந்தோசமாய்க் குளிக்கும் சிட்டுக்குருவிகள்
சாலைக்குழிகளில் தேங்கும் மழைநீர்.

தூக்கம்கலைந்த சோகமான இரவுகள்
இனிமையாய் தரையில் ஜலதரங்கம் வாசித்தது,
பொத்தலில் வழிந்த மழைநீர்.

இயற்கையின் இன்னிசைக் கச்சேரி
இசையமைக்கக் கற்றுத்தந்தது யார்?…
குளத்தில் பட்டுத்தெரிக்கும் மழைநீர்.

வானம்பார்த்து ஏரோட்டும் கோடைகாலம்
நம்பிக்கையின் ஆசிர்வாதமாய் அமிர்தமாய் ருசித்தது
உதட்டில் விழுந்த ஒருதுளி மழைநீர்.

வழிமேல் விழிவைத்து காத்திருந்தது;
சிந்தும் துளிகளில் எந்தத்துளி முத்தாகுமோ?…
மழைநீரை எதிர்நோக்கும் சிப்பி.

ஃஃஃ

பூக்களில் உறங்கும் மௌனம் – 2.

உதயநேரத்திற்கு முன்பே
உதித்து
வியர்வைத்துளிகள் உதிர
ஆக்கள் கழனிக்கு கொண்டு சேர்த்தும்…

உண்ணும் உணவு
உழுத்துப்போன நியாயவிலைக் கடை
அரிசிக் கஞ்சான போதும்
உச்சிவெயில்
மண்டை பிழப்பதையும் பொறுத்து
உலகம் உண்ண
உழுது பயிராக்கியும்…

பயிர் ஊடாடும் களையறிந்து
கை வலிக்க மனையோடு அது களைந்து,
ஏரோடும் மாட்டிற்கும்,
பாழும் வயிறு
ஒரு பொழுதேனும் உணவுண்ண
பால் கரக்கும் பசுவிற்கும்
வரப்போரம் புல்பரித்து ஒய்ந்தும்…

செய்த பயிர் விட்டகல மனமின்றி
சுமந்த புல்சுமையோடு வீடு சேர்ந்து
கழனிநீர் ஒத்த
பழம்கஞ்சினை அமிழ்தமாய் உண்டு இரசித்தும்…

இயற்கைவிட்ட வழியில் தான் ஈன்ற
மழலைச் செல்வங்கள் செய்யும்
குறும்பை உச்சி மோந்து இரசித்தும்,
உதைக்கும் பிச்சிக்கால்களில்
பாறை உதடுகளால் வலிக்காது முத்தமிட்டும்…

நாளைய பொழுதாவது
நன்மை பயக்குமென்று நம்பி
நிம்மதியாய் தூங்குகையில்…
ஏழை உழவனின் முகத்தில் தெரியும்
பூக்களில் உறங்கும் மொனம்.

ஃஃஃ

வாகனம்-பிரசவத்திற்கு இலவசம் (ஹைகூ)

சாலையில் மிதந்துசென்றது சுமையுந்து (லாரி)
ஓட்டுநரும் மிதந்துகொண்டுதான் இருந்தார்;
மிதக்கவைக்கும் உற்சாகப்பானம்.

உயிர்பயம் ஒட்டிக்கொண்டது
பின்னால் வந்துகொண்டிருந்தது சுமையுந்து (லாரி);
நவீன எமன் வாகனம்.

மஞ்சள் விளக்கு மிளிர்ந்தது
இதயம் படபடப்பாய் பந்தயமிட்டது இன்ஜினோடு,
எந்தவாகனம் முந்திச்செல்லுமோ?.

குழந்தை சுகப்பிரசவமானது ஆட்டோவில்
மருத்துவர் அறிந்தால் வருத்தப்படுவார்;
ஆட்டோவிலிருந்தது “பிரசவத்திற்கு இலவசம்”.

ஊர்ப்பயணத்திற்கு மட்டுமல்ல வாகனம்,
மறுஉலகிற்கும் மெல்ல அழைத்துச் செல்லும்
உமிழும் புகை.

ஃஃஃ

பூக்களில் உறங்கும் மௌனங்கள்.

அதிகாலைச் சூரியன்
பயத்தில் கண்விழிக்கும் அளவு
காச் மூச் சத்தம்,
படுக்கையில்
கொஞ்சூண்டு மூச்சா போனதால்…

பசித்த வயிற்றுக்கு
பசியாற பால் வேண்டாமா?…
சிணுங்கி மாராப்பு சேலை பற்றி
அம்மாவின் கவனம் கவரும்
செல்லச் சிணுங்கல்கள்…

சிறு சிறு குறுகுறு நடையிட்டு
குடும்பத்தார் உள்ளத்தை
மொத்தமாய் குத்தகைக்கெடுக்கும்
குரங்குச் சேட்டைகள்…

எங்கெங்கோ
ஏகாந்தமாய் நோக்கி
கை கால் ஆகாயத்தில் உதைத்து
கன்னக் குழி மிளிர
மெல்லமாய் சிரித்து
சிந்தை கொள்ளைகொள்ளும் குறும்பு…

முற்றத்தில் சிறு நீர் கழித்து – அதில்
சிறுகை நீட்டி தாளம் தட்டி
மண்ணோடு சேர்த்து மாவு பிசைந்து
பூ உடலெங்கும்
சந்தணம்போல் பூசி மகிழ்ந்தும்…

காணும் பொருள் உடைத்து
பூரித்துப் பொங்கி
பூகம்பம் செய்தும்….

புயல் விட்ட பூமியாய் களைத்து ஓய்ந்து
புன்னகை பூத்து தூங்குகையில்
மழலை அழகு…
பூக்களில் உறங்கும் மௌனங்கள்.

ஃஃஃ

« பழைய வரவுகள்