உதயநேரத்திற்கு முன்பே
உதித்து
வியர்வைத்துளிகள் உதிர
ஆக்கள் கழனிக்கு கொண்டு சேர்த்தும்…
உண்ணும் உணவு
உழுத்துப்போன நியாயவிலைக் கடை
அரிசிக் கஞ்சான போதும்
உச்சிவெயில்
மண்டை பிழப்பதையும் பொறுத்து
உலகம் உண்ண
உழுது பயிராக்கியும்…
பயிர் ஊடாடும் களையறிந்து
கை வலிக்க மனையோடு அது களைந்து,
ஏரோடும் மாட்டிற்கும்,
பாழும் வயிறு
ஒரு பொழுதேனும் உணவுண்ண
பால் கரக்கும் பசுவிற்கும்
வரப்போரம் புல்பரித்து ஒய்ந்தும்…
செய்த பயிர் விட்டகல மனமின்றி
சுமந்த புல்சுமையோடு வீடு சேர்ந்து
கழனிநீர் ஒத்த
பழம்கஞ்சினை அமிழ்தமாய் உண்டு இரசித்தும்…
இயற்கைவிட்ட வழியில் தான் ஈன்ற
மழலைச் செல்வங்கள் செய்யும்
குறும்பை உச்சி மோந்து இரசித்தும்,
உதைக்கும் பிச்சிக்கால்களில்
பாறை உதடுகளால் வலிக்காது முத்தமிட்டும்…
நாளைய பொழுதாவது
நன்மை பயக்குமென்று நம்பி
நிம்மதியாய் தூங்குகையில்…
ஏழை உழவனின் முகத்தில் தெரியும்
பூக்களில் உறங்கும் மொனம்.
ஃஃஃ
இனியவன் சொன்னது,
ஜனவரி 13, 2008 இல் 8:38 மு.பகல்
இரெண்டே வார்த்தைகளில் சொல்லணும்னா ஆகா அருமை...