மீண்டும் ஒரு தீபாவளி

நகர்ந்து கொண்டிருக்கும் நாட்களில் மீண்டும் ஒரு தீபாவளி
அகந்தை அழிந்ததின் அடையாளமாய் நாமெல்லாம் கொண்டாடிடும் தீபாவளி
மகிழ்ந்தே இந்தியரெல்லாம் நாடெங்கும் ஒன்றாய் கொண்டாடிடும் தீபாவளி
தகர்ந்தே போகட்டும் நமைவாட்டும் துன்ப மெல்லாம் இத்தீபாவளி

நரகதுயரில் மக்களை தள்ளிய நரகாசுரன் அழிந்ததால் இத்தீபாவளி
வரம்பல இறைவன்தர தீபமேற்றி பூஜிக்கும் நன்னாள் இத்தீபாவளி
சுரமாய் சந்தோசம் ஒருமித்து எல்லோர்க்கும் தரும் தீபாவளி
சிரம்முதல் அடிவரை எண்ணெய் தேய்த்து குளிப்போம் இத்தீபாவளி

அரக்கன் அழித்து பயத்தை கழைந்ததால் வந்தது இத்தீபாவளி
இரக்கம் மனதில்கொண்டே வாழ்வில் சிறக்க சபதமேற்போம் இத்தீபாவளி
பரணில் ஏற்றி வைப்போம் வீண் பயத்தை இத்தீபாவளி
தரணியெங்கும் புத்தாடை தரித்து பவனி வருவோம் இத்தீபாவளி

தீபஒளியேற்றி தீர்ந்தது அரக்கன் தொல்லையென்று கொண்டாடிடும் தீபாவளி
சாபமாய் வளர்ந்துநிற்கும் சாதி கொடுமைக்கு தீவைப்போம் இத்தீபாவளி
அபத்தமான மூடப் பழக்கங்களை தீயிலிட்டு தீபமேற்றுவோம் இத்தீபாவளி
உபயம்செய்தே இன்னல் தீர்த்து ஏழைவாழ்வில் தீபமேற்றுவோம் இத்தீபாவளி

அரக்கன்தந்த துன்பம் தீர்ந்ததென்று வெடியிட்டு கொண்டாடிடும் தீபாவளி
இரக்கமற்ற கொடியவர் வெடிவைத்து மக்கள் உயிர்குடிக்கும் நிலையறுத்து
கரங்கள் கோர்த்து கொடியோரின் வேரருக்க வெடிவைப்போம் இத்தீபாவளி
தரணியெங்கும் துஷ்டர்கள் ஒளிக்க சபதமேற்று கொண்டாடுவோம் இத்தீபாவளி.

ஃஃஃ

(மாலை முரசு(திருச்சி, தஞ்சை) – தீபாவளி சிறப்பு மலரில் 24.10.2008 பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை)

தீபாவளி

தீபாவளி

கடைகள் பல ஆய்ந்து
புத்தாடை எடுத்தாச்சு…

மளிகை பலவகையும்
பலகாரம் செய்ய வாங்கியாச்சு…

சிவகாசி பட்டாசும்
வகைக்கொன்றாய் வாங்கி நிறைச்சாச்சு…

ஆனாலும்,
தீபாவளி நன்நாளில்
என்றோ இறந்த நரகாசுரனை நினைந்து
சந்தோசித்து புத்தாடை தரித்து
வாய் ருசிக்க பலகாரவகை உண்டு
வெடிவெடித்து மகிழ்வதா?…

தினம் தினம் வெடிவைத்து
ஏதுமறியா அப்பாவிகள் உயிர்குடிக்கும்
பாவிகள் செயல்கண்டு துடிப்பதா?…

மனசெங்கும் ஏக்கங்கள் நிறைஞ்சாச்சு
ஏதுமறியா பேதையைப்போல்
எம்மனசும் திகைச்சுப்போய் நின்னாச்சு.

ஃஃஃ
(மாலை முரசு(திருச்சி, தஞ்சை) – தீபாவளி சிறப்பு மலரில் 24.10.2008 பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை)

பரத்தையர்.

அவளொரு வேடந்தாங்கல்
வந்தவரெல்லாம் பறவைகளாய்
தங்கிச் செல்வதால்.

அவளொரு சுமைதாங்கி
கடந்து செல்வோரெல்லாம்
பாரத்தை இறக்கிவைப்பதால்.

அவளொரு தடாகம்
தாகப்பறவைகளாய் ஆண்கள்
காமம் தணித்து செல்வதால்

அவளொரு பாலைநிலம்
பரிவென்ற தென்றல்
வாழ்வில் வருடிச்செல்லாததால்.

அவளொரு பனிப்பிரதேசம்
வசந்தத்தின் தளிர்கள்
வாழ்வில் துளிர்க்காததால்.

அவளொரு இலையுதிர் காலம்
உற்றார் உறவினர் உதரித்தள்ளி
ஒற்றைக் கொம்பாய் நிற்பதால்.

அவளொரு மத்தளம்
வாழ்வின் எல்லாப் பக்கங்களிலும்
துயரத்தின் அடிகளை தாங்குவதால்.

அவளொரு கந்தல்துணி
தவறை யார்செய்த போதிலும்
முள்ளில்விழுந்த துணியாய் பாதிப்படைவதால்.

அவளொரு மிதியடி
பயன்படுத்தி பின்
தூக்கி யெரியப்படுவதால்.

அவளும் ஓர்
உயிருள்ள உணர்வுகளுள்ள பெண்
எப்போதிதை நாமுணர்ந்து மதிப்பது?!…

ஃஃஃ

புரட்ச்சிப் பூக்கள் மலரட்டும்.

ஆறறிவு மனிதன்
ஓரறிவு குறைந்து
ஆட்டு மந்தையென
ஆகாதார் பின்செல்லும்
மடமை ஒழிந்திட
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

பணத்தில் மோகம்கொண்டு
பாசம் துறந்துநின்று
பகைமை வளர்க்கும்
பாதக உள்ளம் நீங்கி
பசுந்தளிரென பாசம் வளர்க்க
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

உள்ளத்தில் குறுகி
உற்றாரோடு பகைவார்த்து
உறவினரை ஒதுக்கிவாழும்
ஊன உள்ளம் நீக்கி
உலகமதை நேசித்துவாழ
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

சொந்தமற்ற பொருள்
சொந்தமாக்கிக் கொள்ள
சிந்தை பிறழ்ந்து
சீர்கெட்டு வாழும்
சிறுவாழ்வு துறந்து சிறக்க
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

கடமையை மறந்து
கள்வனைப் போல்
கண்டவரிடத்தும் பொருள்பறிக்கும்
கயமை உள்ளம் கனிந்து
கண்ணியமாய் வாழ
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

துன்மதியோர் செயல்கண்டு பயந்து
துன்பத்தில் தோய்ந்து நடுங்கும்
துயரநிலை களைந்து
துணிவாய் தலைநிமிர்ந்து
துலாபாரமாய் நாளும் வாழ
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

பாசத்தை பாலாக்கி
பசிபோக்கி வளர்த்த
பாச தெய்வங்களை வெறுக்கும்
பச்சோந்தி மனதைமாற்றி
பாசப்பிள்ளைகள் நாங்களென்று காட்ட
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

தன்னலம் கொண்டு
தரணி நலன்மறந்து கருமியாய் வாழும்
தற்குறி எண்ணம் மாற்றி
தாயாய் எல்லோர்க்கும்
தந்துவாழும் வாழ்வு வாழ
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

உயர்வு தாழ்வு பேதமை
உள்ளத்தில் வளர்த்து
உலகமக்களை பிரித்துப் பார்க்கும்
உதவாத எண்ணமகற்றி
உத்தமராய் யாவரையும் ஒன்றாய்ப்பார்க்க
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

சாதிகள் பலபேசி
சண்டைசெய்து சிறுத்துமாயும்
சாக்கடை வாழ்வு அகற்றிட
சபதம் மனதில் ஏற்று
சான்றோராய் சிறக்க
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

மதங்கள் கூறும்
மாட்சிமை மறந்து
மானிடம் துறந்து
மதம்பிடித்து சண்டையிட்டு மாயும்
மனங்கள் மாற
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்..

ஃஃஃ

கண்கள் – ஹைகூ

வலைகளில் விழுவதற்கு மட்டுமல்ல
வலைவீசவும் தெரியும் மீன்களுக்கு!…
பெண்களின் கண்கள்.

ஃஃஃ

இலையின் பயணம் – இன்னொரு ஜனனம்.

இரவின் பனியை உண்டு
இன்புற்றிருந்தது இறுதி நாளின்
பயணத்தை எண்ணி;
உதிரப்போகும் சருகொன்று…
இன்பம் தானா உதிர்வதில்?!…

துளிர்த்ததுமுதல்
உதிரும் நாள் வரை உழைத்தாகிவிட்டது…
உயிர்கள் சுவாசிக்க ஆக்சிஸனை
கொடுத்தாகிவிட்டது…

உதிர்தலென்பது உயிர்விடலா?!…
இல்லையில்லை…
இலையின் வாழ்க்கை சுழற்சின்
இன்னொறு பக்கம்…

கிளையொடு ஒட்டிய உறவுகள் முடிந்து…
ஊட்டம் கொடுத்த
பூமியோடு உறவாட
இனிப் புதுப்பயணம்…
இன்னொறு ஜனனம்…

பயணத்தின் பாதை தீர்மானிக்க
இலைக்கு ஆசைதான்…
முடிக்கும் வல்லமை காற்றின் கைகளில்!…

உதிரும் வேளை..
இதமாய் வருடிச்செல்கின்றது தென்றல்…
பழகியநாட்களின் பரிவு
தென்றலின் குளிர்ச்சியில்…
இனியிருவரும் தொடுதல் சாத்தியமோ?!…

தாயின் கருவறைவிட்டகலும் சேயாய்
காம்பைவிட்டகலும் முதிர்ந்த இலை…
இது இன்னொரு ஜனனம்…
பாதை தீர்மானித்து
மெல்ல பறக்கின்றது
மரத்தின் பாதம்தொட்டு
புதுப்பயணம் தொடங்க…

விதியின் கைகள் வலியது…
இதுவரை வருடிச்சென்ற காற்றின் கைகள்
இப்போது வலியதாய்…
திசைமாற்றி தூக்கியெறியப்படும் இலை…
இலையின் திசையை காற்றே தீர்மானிக்க
இலையின் பயணம் இனி எங்கெங்கென்று
யார் அறிவார்?!…

ஃஃஃ

Follow

Get every new post delivered to your Inbox.