என் கவிச்சூரியனே…
உன்
கவி வீச்சின்
கதிர்கள் என்னையும் தீண்டி ஆசிர்வதிக்க
நீ மண்ணில் அவதரித்த இந்நாளில்
உன் பாதமலர்களில்
மானசீகமாய் யாசித்து நிற்கின்றேன்.
சிறுவயதில் சுமக்க ஆரம்பித்தவன்
உன்னை சுமந்து செல்லும் வரை
சுமைகளைமட்டுமே
சுகங்களாய் சுமந்தவன் நீ…
பள்ளியில் வகுப்பு மூன்றைக்
கடக்க வழியில்லாத வறுமையில்,
புத்தகத்தை இறக்கி வைத்துவிட்டு
குடும்பத்தை தோளில் சுமந்தவன் நீ…
இறக்கும் வரை சுமையை
இறக்காமலேயே இறுமாப்போடு வலம் வந்தவன்.
உன் பாதம் பட்ட
காணியாற்று மலையின் அடிவாரத்தின்
ஒவ்வொரு திசையிலும்
உன் பெயர் சொல்லி
சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றது…
நீ நட்டு வளர்த்த மரங்கள்…
துயரங்களை துரத்தியே பழக்கப்பட்ட உன்னையும்
வறுமையின் கொடுமை
அரேபியாவிற்கு துரத்தியதென்ன புதுமை!…
பாலைவனத்தின் அனல் காற்று
உன் பாதம் பட்டதால்
தளிர்த்த மரங்களில் பட்டு குளிர்ந்தது உண்மை…
பாலைவனத்தில் பூத்ததால் தான்
உன் கவிமலர்கள்
உலகிற்கு தெரியாமல் போனதோ?!…
என் கவிச்சூரியனின் கதிர்களை
உலகில் ஒளிரச்செய்யாமல் செய்த
மேகம் எது?…
சூரியனின் மறைவிலும்
சந்திரன் அதன் ஒளியை பிரதிபலிக்கும்…
என் சூரியனே…
நீ மறைந்திருக்கலாம்
நீ தந்த கவிதைச் செல்வம் மறையாது…
சந்திரனாய் நின்று
உலகிற்கு புகல்வேன் நன்றே…
* * *