ஜூலை 26, 2008 இல் 6:48 பிற்பகல் (உணர்வுகள்)
Tags: அப்பா, கவிதை, நினைவுகள், மார்த்தாண்டம்

அப்பா!
சிறுவயதில் உல்லாசமாய்
உன் தோள்மீது அமர்ந்து
ஊர் சுற்றிப் பார்த்ததும்
எங்களுக்கு காய்ச்சல் கண்டபோது
உடல் சூடு தணிய
உன் மார்பை
மெத்தையாக்கிய தருணங்களும்
வாலிப வயதில்
உலகவிசயங்களை தர்க்கம் செய்து
வாதிட்ட தினங்களும்
உன் வயோதிக காலத்திலும்
உற்றாருக்காகவும்
ஊருக்காகவும் ஏங்கித்தவித்த
உன்னோடு இனி
தர்க்கம் செய்யமுடியாத இடத்திற்கு
நீ சென்றிருந்தாலும்
நீ விட்டுச்சென்ற நினைவுகளும்
எழுதிவைத்து அச்சில் ஏற்றாமல்
விட்டுச் சென்ற கவிதைகளும்
உன்னை நினைவு படுத்தமட்டுமல்ல
உன் நினைவோடு
விவாதம் செய்யவும் செய்கின்றது.
இரண்டாண்டு மட்டுமல்ல
இரண்டாயிரமாண்டு ஆனாலும்
நினைக்கப்படுவாய்.
நீ மனிதன் மட்டுமல்ல கவிஞனுமல்லவா?…
உன் கவிதைகள்
உன்னை வாழவைக்கும் என்றும் உலகில்.
ஃஃஃ
8 மறுமொழிகள்
ஜூலை 7, 2008 இல் 7:19 மு.பகல் (உணர்வுகள், சமுதாயம்)
பகலைத் சுமந்தே தூக்கத்தில் அமிழ்கின்றேன்
இரவைச் சுமந்தே துயிலினின்று விழிக்கின்றேன்.
இன்றைச் சுமந்தே நேற்றைக் கழித்தேன்
நாளையைச் சுமந்தே இன்று வாழ்கின்றேன்.
உணவைக் காண்கையில் பசியை துறக்கின்றேன்
பசியைச் சுமந்தே தினம்உணவை முடிக்கின்றேன்
வாழ்வில் உயர அயராது உழைக்கின்றேன்
வறுமையைச் சுமந்தே வாழ்வைக் கழிக்கின்றேன்
கனவுகளோடு உயரத்தில் பறந்து மகிழ்கின்றேன்
கண்விழித்து கல்முள்ளில் நடந்து தவிக்கின்றேன்
உள்ளுணர்வோடு சமரசம் செய்ய முயல்கின்றேன்
கள்ளில்விழுந்த தேன்வண்டாக தினம் தவிக்கின்றேன்.
****
3 மறுமொழிகள்
பெப்ரவரி 13, 2008 இல் 11:23 பிற்பகல் (உணர்வுகள், கல்லூரி நாட்களில்)
உலகத்தின் மாந்தர்காள்- ஓர்
உண்மை கேளீரோ!…
உலகம் மக்கள் மற்று
உயிர் அனைத்தும்
இறைவன் படைத்தானாம்!…
ஓங்கி உயர்ந்த குன்றம்;
உள்ளம் கொள்ளைகொள் அருவி;
அன்னமென அசையும் பெண்டீர்;
காலை இளம் பரிதி, தென்றல்
யாவும் இறைவனே படைத்தானாம்!…
அழகனைத்தும், அறிவும்
படைத்த இறைவன்
துன்புற்று மாயும்
கூன், குருடு, நொண்டி, முடம்
யாவரையும் ஏன் படைத்தானாம்?…
பள்ளி பாடமதை
பரிட்சை நேரம் மறந்து போம்
மாணாக்கன் போல்
பிரணவத்தை அடிக்கடி மறப்பானோ
மனிதரை படைக்கும் போது…
இறைவன்?!…
ஃஃஃ
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கருத்துத் தெரிவிக்கவும்
பெப்ரவரி 2, 2008 இல் 8:11 மு.பகல் (உணர்வுகள், சமுதாயம்)
Tags: கவிதை, சுதந்திரம், Independence, Kavithai
எரிமலை வெடிக்கட்டும் இதயம் துடிக்கட்டும்
சுதந்திர தாகம் பிறக்கட்டுமே…
சூழ்ச்சிகள் அழியட்டும் துன்மதி ஒழியட்டும்
சுதந்திரம் இன்றே விடியட்டுமே…
மனிதராய்ப் பிறந்தோம் மதியுடன் வளர்ந்தோம்
மதம் கொண்ட இன வெறிகொண்ட
மனிதன் அடக்கிட நினைப்பது சரிதானோ…
மண்புழுவென நாமும்மடிதல் முறைதானோ…
சுகம்பெற வாழ்வினில் இன்பம் துய்த்திட
சுரத்தினை இழப்பதும் சரியோ?…
சிரத்தினை தாழ்த்தி சீருடல் குறுக்கி
சீர்கெட வாழ்வது தகுமோ?…
பிறப்பது ஒருமுறை இறப்பதும் ஒருமுறை
பசலையாய் வாழ்வதுவா நிறை
பறவையாய் பறந்து சுதந்திரக் காற்றை
பழகிடல் தானே முறை.
வா…வா… தோழா வா…வா…
தீப்பந்தம் எடுத்து வீணே சுணங்கும்
உளத் திரியினை கொழுத்து…
சுதந்திரதீபம் ஒளிரட்டும் தீமைகள் எரியட்டும்
நாளையப்பொழுது நமதாய் விடியட்டும்.
ஃஃஃ
2 மறுமொழிகள்
ஜனவரி 31, 2008 இல் 7:46 மு.பகல் (உணர்வுகள்)
வாசம் வாசம் வாசம் வயசுப் பொண்ணு நேசம்
வீசும் தென்றல் காற்றும் பேசும் எங்களின் நேசம்
காசுப் பார்க்கா நேசம் வளர்க்கும் எங்கும் பாசம்
வேசம் இல்லா பாசம், வேலிகள் அறுக்கும் தேசம்
காசு பார்த்து வந்தால் பாசம் என்பது மோசம்
பாசம் குறைந்து போனால் நேசம் எல்லாம் வேசம்
நேசம் வரண்டு போனால் தேசம் குலைந்து நாசம்
தேசம் என்பது தாயானால் பாசத்தால் வளர்போம் நேசம்.
பேசும் பொய்கள் குறைப்போம் வீசும் தென்றலாய் இருப்போம்
தூசுபடிந்த நெஞ்சை துடைப்போம் கூசும் வார்த்தையை தவிர்ப்போம்
மாசுபட்ட மனதைக் கலைப்போம் மோசத்தை முற்றாய் அழிப்போம்
பூசுமஞ்சளாய் இனி ஜொலிப்போம் வீசுசந்தணமாய் நாளும் மணப்போம்.
ஃஃஃ
கருத்துத் தெரிவிக்கவும்
ஜனவரி 12, 2008 இல் 6:06 பிற்பகல் (உணர்வுகள்)
Tags: கவிதை, பூ, மவுனம், மௌனம், Flower, Kavithai, Silence
உதயநேரத்திற்கு முன்பே
உதித்து
வியர்வைத்துளிகள் உதிர
ஆக்கள் கழனிக்கு கொண்டு சேர்த்தும்…
உண்ணும் உணவு
உழுத்துப்போன நியாயவிலைக் கடை
அரிசிக் கஞ்சான போதும்
உச்சிவெயில்
மண்டை பிழப்பதையும் பொறுத்து
உலகம் உண்ண
உழுது பயிராக்கியும்…
பயிர் ஊடாடும் களையறிந்து
கை வலிக்க மனையோடு அது களைந்து,
ஏரோடும் மாட்டிற்கும்,
பாழும் வயிறு
ஒரு பொழுதேனும் உணவுண்ண
பால் கரக்கும் பசுவிற்கும்
வரப்போரம் புல்பரித்து ஒய்ந்தும்…
செய்த பயிர் விட்டகல மனமின்றி
சுமந்த புல்சுமையோடு வீடு சேர்ந்து
கழனிநீர் ஒத்த
பழம்கஞ்சினை அமிழ்தமாய் உண்டு இரசித்தும்…
இயற்கைவிட்ட வழியில் தான் ஈன்ற
மழலைச் செல்வங்கள் செய்யும்
குறும்பை உச்சி மோந்து இரசித்தும்,
உதைக்கும் பிச்சிக்கால்களில்
பாறை உதடுகளால் வலிக்காது முத்தமிட்டும்…
நாளைய பொழுதாவது
நன்மை பயக்குமென்று நம்பி
நிம்மதியாய் தூங்குகையில்…
ஏழை உழவனின் முகத்தில் தெரியும்
பூக்களில் உறங்கும் மொனம்.
ஃஃஃ
1 மறுமொழி
ஜனவரி 10, 2008 இல் 11:08 பிற்பகல் (உணர்வுகள்)
Tags: கவிதை, பூ, போட்டி, மவுனம், மௌனம், Flower, Kavithai, Silence
அதிகாலைச் சூரியன்
பயத்தில் கண்விழிக்கும் அளவு
காச் மூச் சத்தம்,
படுக்கையில்
கொஞ்சூண்டு மூச்சா போனதால்…
பசித்த வயிற்றுக்கு
பசியாற பால் வேண்டாமா?…
சிணுங்கி மாராப்பு சேலை பற்றி
அம்மாவின் கவனம் கவரும்
செல்லச் சிணுங்கல்கள்…
சிறு சிறு குறுகுறு நடையிட்டு
குடும்பத்தார் உள்ளத்தை
மொத்தமாய் குத்தகைக்கெடுக்கும்
குரங்குச் சேட்டைகள்…
எங்கெங்கோ
ஏகாந்தமாய் நோக்கி
கை கால் ஆகாயத்தில் உதைத்து
கன்னக் குழி மிளிர
மெல்லமாய் சிரித்து
சிந்தை கொள்ளைகொள்ளும் குறும்பு…
முற்றத்தில் சிறு நீர் கழித்து – அதில்
சிறுகை நீட்டி தாளம் தட்டி
மண்ணோடு சேர்த்து மாவு பிசைந்து
பூ உடலெங்கும்
சந்தணம்போல் பூசி மகிழ்ந்தும்…
காணும் பொருள் உடைத்து
பூரித்துப் பொங்கி
பூகம்பம் செய்தும்….
புயல் விட்ட பூமியாய் களைத்து ஓய்ந்து
புன்னகை பூத்து தூங்குகையில்
மழலை அழகு…
பூக்களில் உறங்கும் மௌனங்கள்.
ஃஃஃ
8 மறுமொழிகள்
ஜனவரி 10, 2008 இல் 7:18 மு.பகல் (உணர்வுகள், ஹைகூ)
Tags: கலை அரசன், கவிதை, ஹைகூ, Haiku, Kalaiarasan, Kavithai
உன்னை நேசித்தது மனது
இருவர் வயதும் பொருந்தாத போதும்;
நட்பு.
ஃ
சந்தித்து நாட்களாகிவிட்டது
வேறு வேறு திசைகளும் சென்றாகிவிட்டது
குறையாமலேயே இருக்கின்றது நட்பு.
ஃ
குளம் வற்றிப் போனது,
வண்டலோடு ஒட்டிக்காய்ந்தது கருவாடுகள்;
மீனுக்கும் நீருக்குமான நட்பு.
ஃ
நாணல் கரையைக் காத்தது
ஓடைநீர் நாணலை தழுவிச்சென்றது;
பரஸ்பர நட்பு.
ஃ
எங்கும் வியாபித்திருந்தனர் என் உறவுகள்
உடன் பிறந்தோர் அதிகமில்லாத போதும்
நட்பின் வட்டம்.
ஃஃஃ
5 மறுமொழிகள்
டிசம்பர் 14, 2007 இல் 11:13 பிற்பகல் (உணர்வுகள், கல்லூரி நாட்களில்)
Tags: உணர்வுகள், கலை அரசன், கவிதை, Kalaiarasan
மௌனம்…
எங்கும் மௌனம்;
மலையைப் பார்க்கின்றேன்,
அங்கும் மௌனம்;
கற்களில் அசைவில்லை
காட்சிகளில் மாற்றமில்லை…
மௌனம்!…எங்கும் மௌனம்!!…
வானத்தை நோக்குகின்றேன்
வட்ட நிலா,
சுற்றி வளையவரும் நட்சத்திரங்கள்
நிலா முகத்தை
வருடிச்செல்லும் மேகக்கூட்டம்,
அமைதி!…எங்கும் அமைதி!!…
என்னைப் பார்க்கின்றேன்
என்னில் எத்தனை வளர்ச்சி
மனதினில் எத்தனை கிளர்ச்சி
மனதை வாட்டும் தளர்ச்சி…
தினம் தினம் வாழ்க்கையில்
புதுப்புது சுழற்சி…
காரணம் புரியவில்லை,
சிந்திக்க சிந்திக்க,
சிந்தனைக்கோ முடிவில்லை…
அமைதியாய் அமர்கின்றேன் சுரத்தின்றி..
என் மௌன
மணித்துளிகள் மரணிக்கின்றன…
இப்போதும்
ஏதும் புரியவில்லை…
ஓ மானிடத்தில்
எத்தனை மகிமை
அதுவும் புரியாத நிலையில்…
ஃஃஃ
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
6 மறுமொழிகள்
டிசம்பர் 14, 2007 இல் 10:49 மு.பகல் (உணர்வுகள்)
பறக்க ஆசை…
எனக்கொரு வானம்
வேண்டும்!
சிந்திக்க ஆசை…
ஈர்க்கும் கரு
வேண்டும்!!
வானம்தொட ஆசை
ஆராதிக்கும் இரசிகன்
வேண்டும!!!.
ஃஃஃ
கருத்துத் தெரிவிக்கவும்