சோம்பலான ஞாயிற்றுக் கிழமை…
மணி பத்தைக்கடந்த பின்னும்
முகச்சவரத்திற்கும் குளியலுக்கும்
சோம்பி அலுத்தது மனம்…
தெருவில் புழுதி பறக்க
சிறுசுகளின் ஆர்ப்பரிப்பு…
சின்னதும் பெரிதுமாய் குதூகலக் கூவல்கள்…
மகிழச்சியின் எல்லை தொடும் தருணங்கள் மழலையர்க்கு…
எரிச்சலின் உச்சியில் நின்று
தங்களின் இளமைக்குறும்பை மறந்து…
எச்சரிக்கும் சிலபெரிசுகள்
காலங்கள் மாறும் போது
நியதிகளும் மாறித்தான் போகின்றது ஆளாளுக்கு…
மான் குட்டியாய் துள்ளி விளையாடிய
செல்ல மகளை மெல்ல அழைத்தேன்…
“கொஞ்சம் இங்க வாங்க…”
அருகில் வந்து கட்டளையாய் கூறிநின்றாள்,
“வா”-ண்ணு கூப்பிடுங்கப்பா…
நான் சின்ன பாப்பா தானே?!…
நல்லொழுக்கம் கற்பிக்கும் நோக்கிலே
மீண்டும் மீண்டும்
“வாங்க…போங்க…” என்றே அழைத்திட்டேன்…
மாலையில் தேனீர் பருகும் நேரம்…
ஒலித்திட்ட கைபேசி எடுத்து அளவளாவினேன்…
பேசியது பாலிய காலத்து நண்பன்…
அவன் சொல்லும் வாடா..போடா..வில்
எங்களின் அன்னியோனியத்தை
நட்பின் நெருக்கத்தை உணர்வேன்…
அகம் குளிர்ந்து மகிழ்வேன்…
பண்பில் சிறந்தவன்…
பேச்சின் போது
“நீங்கள், நீங்கள்…” என வார்த்தையாடல்கள்…
பண்பான வார்த்தைகள் தான்..
பழகிய பாலிய நண்பன் சொன்னதால்
முள்ளாய் தைத்தது நெஞ்சில்…
“டேய்…ஏண்டா அன்னியன் போல் பேசுகின்றாய்…”
தவிப்பாய் நான் வினவ,
“நீங்க பெரிய அதிகாரி இப்போ…நான் எப்படி…”
மெல்ல இழுத்தான் பேச்சை…
அழைப்பதானால் இளமையில் அழைத்தது போல்
“வா…போ…” என்று அழை… இல்லையெனில்…
பேசியை டக்கென்று வைத்தேன்…
அருகில் வந்து மெல்லக் கேட்டாள்
என் செல்ல மகள்
“அப்பா…
நான் உங்களுக்கு அன்னியமா?!…”
ஃஃஃ