உன்னத சுதந்திரம்.

உன்னத சுதந்திரம்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

வலி அனுபவிக்காது பெற்ற

சுதந்திரம்- அதனால்

வக்கணை பேசுகின்றோம்

சுதந்திரம் பற்றி சுரத்தின்றி.

உழுபவனுக்கே  புரியும்

உணவாகும் ஒரு பிடி

நெல்மணியின் மகிமை…

உழைக்காத ஊதாரிகளுக்கு தெரியாது

உணவின் அருமை.

சுதந்திரம் பற்றி புரியாததால்

அதீத சுதந்திரம் அனுபவித்தும்

சுதந்திரமில்லை சுதந்திரமில்லை என்று

கூப்பாடு போடுகின்றோம்.

உரிமை சொல்லி

போர்க்கொடி உயர்த்துகின்றோம்

கடமை செய்ய மறுக்கின்றோம்.

சுதந்திரமென்று சொல்லி- பிறர்

அந்தரங்கம் அறிய விளைகின்றோம்

தனதென்று வரும்போதே

வலி உணர்கின்றோம்.

தன் சுதந்திரம் அனுபவிக்கையில்

பிறர் சுதந்திரம் எண்ணிப்பார்த்தால்

அப்போது தெரியும்

உன்னத சுதந்திரம்.

*** மா.க.

கைகளை துவைக்கின்றேன்.

முன்னால் சென்றவன்

முதுகின் அழுக்கை சுட்டிக்காட்ட எத்தணித்தேன்.

என் மனிதம்

என்னை தட்டிக்கேட்டது. ..

உன் கையின் கரைகளை துடைத்துவிட்டாயா?

தூவைத்துக் கொண்டிருக்கின்றேன்

கைகளை!…

***மா.க.

பிரிவின் நினைவில்…..

அமாவாசை இரவின் வானம் போலவே
ஒளியற்று நகர்கிறது என் நாட்கள்
முழுமதி நீ என்னருகில் இல்லாததால்.

நான் கண்ணுராத தொலைவில்
நீ நடந்த போதும்
உனது காலடி ஓசை
என் இதய அரங்கில்
சிம்பனி இசைக்கின்றது.

அதிகாலை கைபேசி உரையாடலின் ஊடேவெளிப்படும்
உன் மூச்சுக் காற்று
நாள் முழுவதும் என்னில்
புல்லாங்குழல் மீட்டுகின்றது.

உன்னிலிருந்து
தொலைவில் இருக்கின்றேனோ என எண்ணும் போதெல்லாம் உணர்கிறேன்….
என் வாழக்கை சக்கரத்தின்
அச்சாக நின்று ஆரத்தின் அளவை
நீயே தீர்மானிக்கின்றாய் என்பதை.

வெளியில் சாப்பிடும்
ஒவ்வொரு உணவும்
மூளைக்கு சமிக்ஞையிட்டுச்
செல்லும்
தாங்கள் இணையில்லை
உன் கைப்பக்குவத்திற்கு என்று.

முற்றத்து பூக்கள் எல்லாம்
எனைப்பார்த்து நாணம் கொள்கின்றது…
அவையாவும்
உன் புன்னகைக்கு ஈடில்லையென்று.

தென்றல் கூட
எனை தழுவிச்செல்ல
தயங்கத்தான் செய்கின்றது. ..
உந்தன் மென்மை
அதனிடம் இல்லாததால்.

பூமித்தாயும் மென்மையாகவே
எனை தாங்குகின்றாள்
எந்தன் மீதான
உந்தன் பாசம் புரிந்ததால்.
****

அழகின் அளவுகோல்

அழகின் அளவுகோல்

அகவை என்ன அழகின் அளவு கோலா?!
ஆண்டுகள் கடந்து அகவை அதிகமானால்
இழந்து போகும் அழகென்பதும்;
ஈடற்ற மனதுகூட தளர்ந்துபோகும்
உடலின் உணர்வுகள் வற்றிப்போகும்
ஊன் உணவும் குறைந்துபோகும்
எறும்பென நகர்ந்த கால்கள்
ஏகமாய் சோர்ந்து போகும்
ஐயமுற்று மனது அல்லலுறும் – எதனோடும்
ஒப்புநோக்கி ஏக்கமுறு மென்பதும்;
ஓங்கிய குணத்தார்க்கும் மனத்தாற்கும் பொறுந்தாது;
ஔரவமாவள் உன் அழகிலும் மனதிலும்
அஃதே கண்டேன் யான்.

மனம்

மனது

புயல் இல்லாத போதும்
திசையறியாது பறந்து கொண்டிருக்கின்றது…
கட்டுக்கடங்கா மனது.

கரைசேர்ந்திருக்குமோ கட்டுமரம்?
துடுப்பெய்த துணிந்திருந்தால்!…
துவண்ட மனம்.

காற்றிலலைந்து சலசலத்தது;
காய்ந்த பனையோலையாய்…
பயந்த மனது.

நினைத்ததெல்லாம் இனித்தது
வானவில்லாய் மறைந்தது
கற்பனை மனது.

மழையில் குடைபிடித்தது
நீரின் போக்கில் துடுப்பிட்டது
பண்பட்ட மனது.
<<>>

அப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.

அப்பா

    அப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.

அப்பா!…
ஆண்டுகள் நான்கை கடக்கின்றது…
உங்கள் நினைவுகள் நெருங்கியே வருகின்றது;
உங்கள் நினைவு நாட்கள் மட்டுமே நீனைவுட்டுகின்றது
நீங்கள் மரித்துப்போனதை!…
நாட்கள் தினம் நகர்ந்து போகும்
காணியாற்றில் நீங்கள் நட்ட மரம்கூட
ஒருநாள் பட்டுப்போகும்
எங்கள் இளமையும் முதுமையாய் வளர்ந்து போகும்
ஆனால்….
உங்கள் நினைவுகள் மட்டும் எப்போதும் எங்களில்
இளமையாய் செழித்திருக்கும்…
என் நினைவில் நிற்கும் முதல் பதிவே
உங்களின் தோழ்மீது அமர்ந்து
காணியாற்று விளையை உற்றுநோக்கியது தான்;
இப்போதும் அதே தோழ்களில் அமர்ந்தே
உலகை வலம் வருவதாய் உணர்கின்றேன்.

இலவசம்

தொட்டியில் விழும் எச்சில்இலைக்காக ஏங்கிநிற்கும்
ஐந்தறிவு ஜீவன் போல தெரிகின்றது;
இலவசங்களுக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டம்.

மீண்டும் ஒரு தீபாவளி

நகர்ந்து கொண்டிருக்கும் நாட்களில் மீண்டும் ஒரு தீபாவளி
அகந்தை அழிந்ததின் அடையாளமாய் நாமெல்லாம் கொண்டாடிடும் தீபாவளி
மகிழ்ந்தே இந்தியரெல்லாம் நாடெங்கும் ஒன்றாய் கொண்டாடிடும் தீபாவளி
தகர்ந்தே போகட்டும் நமைவாட்டும் துன்ப மெல்லாம் இத்தீபாவளி

நரகதுயரில் மக்களை தள்ளிய நரகாசுரன் அழிந்ததால் இத்தீபாவளி
வரம்பல இறைவன்தர தீபமேற்றி பூஜிக்கும் நன்னாள் இத்தீபாவளி
சுரமாய் சந்தோசம் ஒருமித்து எல்லோர்க்கும் தரும் தீபாவளி
சிரம்முதல் அடிவரை எண்ணெய் தேய்த்து குளிப்போம் இத்தீபாவளி

அரக்கன் அழித்து பயத்தை கழைந்ததால் வந்தது இத்தீபாவளி
இரக்கம் மனதில்கொண்டே வாழ்வில் சிறக்க சபதமேற்போம் இத்தீபாவளி
பரணில் ஏற்றி வைப்போம் வீண் பயத்தை இத்தீபாவளி
தரணியெங்கும் புத்தாடை தரித்து பவனி வருவோம் இத்தீபாவளி

தீபஒளியேற்றி தீர்ந்தது அரக்கன் தொல்லையென்று கொண்டாடிடும் தீபாவளி
சாபமாய் வளர்ந்துநிற்கும் சாதி கொடுமைக்கு தீவைப்போம் இத்தீபாவளி
அபத்தமான மூடப் பழக்கங்களை தீயிலிட்டு தீபமேற்றுவோம் இத்தீபாவளி
உபயம்செய்தே இன்னல் தீர்த்து ஏழைவாழ்வில் தீபமேற்றுவோம் இத்தீபாவளி

அரக்கன்தந்த துன்பம் தீர்ந்ததென்று வெடியிட்டு கொண்டாடிடும் தீபாவளி
இரக்கமற்ற கொடியவர் வெடிவைத்து மக்கள் உயிர்குடிக்கும் நிலையறுத்து
கரங்கள் கோர்த்து கொடியோரின் வேரருக்க வெடிவைப்போம் இத்தீபாவளி
தரணியெங்கும் துஷ்டர்கள் ஒளிக்க சபதமேற்று கொண்டாடுவோம் இத்தீபாவளி.

ஃஃஃ

(மாலை முரசு(திருச்சி, தஞ்சை) – தீபாவளி சிறப்பு மலரில் 24.10.2008 பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை)

தீபாவளி

தீபாவளி

கடைகள் பல ஆய்ந்து
புத்தாடை எடுத்தாச்சு…

மளிகை பலவகையும்
பலகாரம் செய்ய வாங்கியாச்சு…

சிவகாசி பட்டாசும்
வகைக்கொன்றாய் வாங்கி நிறைச்சாச்சு…

ஆனாலும்,
தீபாவளி நன்நாளில்
என்றோ இறந்த நரகாசுரனை நினைந்து
சந்தோசித்து புத்தாடை தரித்து
வாய் ருசிக்க பலகாரவகை உண்டு
வெடிவெடித்து மகிழ்வதா?…

தினம் தினம் வெடிவைத்து
ஏதுமறியா அப்பாவிகள் உயிர்குடிக்கும்
பாவிகள் செயல்கண்டு துடிப்பதா?…

மனசெங்கும் ஏக்கங்கள் நிறைஞ்சாச்சு
ஏதுமறியா பேதையைப்போல்
எம்மனசும் திகைச்சுப்போய் நின்னாச்சு.

ஃஃஃ
(மாலை முரசு(திருச்சி, தஞ்சை) – தீபாவளி சிறப்பு மலரில் 24.10.2008 பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை)

பரத்தையர்.

அவளொரு வேடந்தாங்கல்
வந்தவரெல்லாம் பறவைகளாய்
தங்கிச் செல்வதால்.

அவளொரு சுமைதாங்கி
கடந்து செல்வோரெல்லாம்
பாரத்தை இறக்கிவைப்பதால்.

அவளொரு தடாகம்
தாகப்பறவைகளாய் ஆண்கள்
காமம் தணித்து செல்வதால்

அவளொரு பாலைநிலம்
பரிவென்ற தென்றல்
வாழ்வில் வருடிச்செல்லாததால்.

அவளொரு பனிப்பிரதேசம்
வசந்தத்தின் தளிர்கள்
வாழ்வில் துளிர்க்காததால்.

அவளொரு இலையுதிர் காலம்
உற்றார் உறவினர் உதரித்தள்ளி
ஒற்றைக் கொம்பாய் நிற்பதால்.

அவளொரு மத்தளம்
வாழ்வின் எல்லாப் பக்கங்களிலும்
துயரத்தின் அடிகளை தாங்குவதால்.

அவளொரு கந்தல்துணி
தவறை யார்செய்த போதிலும்
முள்ளில்விழுந்த துணியாய் பாதிப்படைவதால்.

அவளொரு மிதியடி
பயன்படுத்தி பின்
தூக்கி யெரியப்படுவதால்.

அவளும் ஓர்
உயிருள்ள உணர்வுகளுள்ள பெண்
எப்போதிதை நாமுணர்ந்து மதிப்பது?!…

ஃஃஃ

« Older entries