மரணம்.

சிசுவின் ஜனனம்
விதையின் துளிர்
பூவின் மலர்தல்
அப்போதே
மரணத்தின் விதையும்
விதைக்கப்பட்டுவிடுகின்றது.
இன்றோ
நாளையோ
மரணம் துளிர்விடலாம்.

மரணத்தில்
பலர் மரித்துப்போகையில்
சிலரோ துளிர்க்கின்றனர்.
மரணத்தில் துளிர்ப்பவன்-என்றுமே
மரித்துப்போவதில்லை.
நிலையாய் நினைவில் வாழ்கின்றான்.

வாழும் போது
நீ வாழ்ந்தாயா என்பதை
மரணமே
பறையடித்துச் சாற்றும்.

சாவைக்கண்டு
அனுதினமும் அஞ்சியவர் உண்டு-அவர்க்கு
நித்திய மரணம்.

மரணத்தை
மண்டியிடச்செய்தவர்கள் உண்டு
மார்க்கண்டேயர்கள்.

மரணம்,
மரண சிந்தனை,
மரண பயம்-இவை தந்த
சித்தாந்தங்கள் பலப்பல.

ஜனனம்
தீர்மானிக்கப்படும் போதே
மரணமும்
முடிவு செய்யப்படுகின்றது.

ஆரம்பமாகும்
விளையாட்டிற்கு முடிவு உண்டு.
வாழ்க்கை விளையாட்டும் அவ்விதமே.

பிறப்பின் வெற்றி தோல்வியே
வாழும் போதே சாகின்றாயா?
மாண்ட பின்னும் வாழ்கின்றாயா?
என்பதில் தான்.

மரணத்தை எதிர்கொள்ளும்
மனம் பெற்றால்
மரணமும் உன்னிடம் மவுனியாகும்.
*********

Technorati Profile

விடியலை நோக்கி…

சுதந்திர ஆதவன் உதித்த பின்னும்
ஆதிக்க மேகக்கூட்டமா?
அறிவை ஆயுதமாக்கு
எழுதுகோலை ஈட்டியாக்கு
ஏடுகளை எரிமலையாக்கு
விடியல் தானே
உனை தேடிவரும்.
*****
எழுதிய தேதி:12.03.1989.

விபச்சாரிகள்…

சமத்துவம் பேசி
சண்டை செய்யும்
இந்த நவயுகத்தின்
சமத்துவ தூதுவர்கள்.

இரவில் கடைவிரிக்கும்
கற்பு
விற்பனை வியாபாரிகள்.

காமத்தீ அணைக்கும்
கதம்ப
மாலைகள்.

மன்மதப் பறவைகள்
இளைப்பாற
இடம் தரும்
கற்பகத் தருக்கள்.

******
எழுதிய தேதி:20.04.1989.

இளைஞர்கள்…

திருமணச் சந்தையில்
வரதட்சணை வில்லை
வழைக்க வலுவின்றி
ஏலப்பொருளாய் விலைபோகும்
விற்பனைக் காளைகள்.

********************
எழுதிய நாள்: 22.10.1988

கிழம்

சிறு பிள்ளையென சிந்தையில் எண்ணி
சிறு நடையிட்டு சீற்றம் கொண்டு
பின் சிந்தையில் மகிழச்சிக் கொண்டு
பன்னெடும் காலவாழ்வை நினைந்து ஏங்கி
பழமை பேசி இளையோரை பரிகசித்து
ஓடக் காண ஓட வலுவின்றி
பாடக் காண பாட குரலின்றி
ஏங்கிபின் தூக்கம் துறக்கும்
வாழ்வின் மறு இளம் பிள்ளை.

********************
எழுதிய நாள்: 22.10.1988

முல்லை…

காத்து நின்ற காதலன்
கதிரவனுக்கு வலிப்பு காட்டி
காரிருள் கணவன் வர
பூத்து நின்றாள் முல்லைப்பெண்.

********************
எழுதிய நாள்: 22.10.1988

ஏழைகள்.

வாழ்க்கை எனும்
சூதாட்டக் களத்தில்
எப்போதும்
தோல்வியையே தழுவும்
துர்பாக்கியசாலிகள்.

********************
எழுதிய நாள்: 22.10.1988

சண்டை செய்வது ஏனப்பா?!….

பழநியிலே முருகனப்பா
கயிலயிலே சிவனப்பா
கயாவிலே புத்தனப்பா
ஜெருசலேமில் ஏசுவப்பா
மெக்காவில் அல்லாவப்பா
எல்லாம் உன் உருவப்பா
அப்பப்பா இறைவா…
இதை உணராது
மாக்கள் போல் மானிடர்கள்
சண்டை செய்வது ஏனப்பா?!….

********************
எழுதிய நாள்: 12.10.1988

தமிழுக்கு நீ தாழ்ச்சியடி!….

வான வீதியில் வட்டமிட்டு நடம்புரியும் வெண்ணிலாவே
போன தலைமுறையும் நீ கண்டனையோ வெண்ணிலாவே
தரங்கெட்ட மனிதர் அப்போது வாழ்ந்தனரோ வெண்ணிலாவே
தரமான மாந்தர்களே வாழ்ந்தனரென்று சொல் வெண்ணிலாவே.

பூமியில் உனக்கு நிகர் ஏதுமில்லையடி வெண்ணிலாவே-எம்
தமிழுக்கு நீ தாழ்ச்சியென்று உணர்வாய் வெண்ணிலாவே
கவிபாடும் எனக்கு காவியத் தலைவியடி வெண்ணிலாவே
புவி உள்ளமட்டும் உன்னெழில் பாடும் வெண்ணிலாவே

பெண்ணுக்கு உனை உவமை சொல்வார் வெண்ணிலாவே
தண்டாமரையின் எழில் உன்னெழிலுக்கு நிகராமோ வெண்ணிலாவே
பண்பட்ட பெண்மையும் உன்னெழிலுக்கு அடிமையடி வெண்ணிலாவே
பண்பாடும் தமிழுக்கு நீ தாழ்ச்சியடி வெண்ணிலாவே.
****************************
எழுதிய நாள்: 13.07.1989.

நதி போல…

பூவாக நீ இருந்தாலும்
. பகட்டாக பணம் இருந்தாலும்
மணமாக குணம் இல்லையென்றால்
. மதியாது உனை உலகமம்மா.

சேயாக நீ இருந்தாலும்
. செங்கதிராய் நீ ஒளிர்ந்தாலும்
காயாக நீ கசந்தால்
. கனியாது பிறருள்ளம் உன்னிடத்தில்.

பாய்கின்ற நதி போல
. நயமாக நன்மை பல
ஓயாது செய்து வந்தால்
. மாயாது உன்புகழ் உலகினிலே.

********************
எழுதிய நாள்: 03.09.1989

« Older entries