பரத்தையர்….2

கொக்கென திரியும் – மனிதர்
மோகத்தின்
தாகம் தீர்க்கும்
தடாகங்கள்.

கரைபுரண்டோடும்
மோக வெள்ளத்தின்
வேகம் தணிக்கும்
அணைக்கட்டுக்கள்.

பருவ காலத்தின்
தவறான தாளங்களுக்கு
மீட்பளிக்கும்
புனிதர்கள்.

இங்கே…
சிலர்
தவறான வழிகாட்டலில்
திசைமாறிப் போன
பறவைகள்.

சிலர்
வாழ வழியின்றி
வாழும் வாழ்விக்கும்
வழியென
வகுத்துக்கொண்டவர்கள்.

சிலர்
வஞ்சகரின் நெஞ்சரியாது
வலையில்
மாட்டிக்கொண்டவர்கள்.

இன்னும் சிலரோ
தேகத்தின் தாகம் போக்கும்
வழி இதுவென
தப்பாய்
தாளம் கோர்த்தவர்கள்.

இவர்கள்
பாராட்டப்பட வேண்டியவர்கள்
பாதகமானது என்பதறிந்து
பறைசாற்றிச்செய்வதால்.

பரத்தையாய் இருந்துகொண்டு
பத்தினி வேசம் போடுவோரை
பார்க்கின் – இவர்கள்
பாராட்டபாபட வேண்டியவர்கள்.

சீதையாய் மனைவியிருக்க
ஊரெல்லாம் சிற்றாள் தேடுவோரைப்
பார்க்கின் – இவர்கள்
பாராட்டபாபட வேண்டியவர்கள்.

ஊரையே விலைபேசும்
எத்தர் கூட்டத்தைப் பார்க்கின்
தன்னையே
விலை பொருளாக்கும் – இவர்கள்
பாராட்டப்பட வேண்டியவர்கள்.

பிறன் உழைப்பைச் சுரண்டி
எலிகளாய்
வாழ்வோரை ஒப்பிடின் – இவர்கள்
பாராட்டப்பட வேண்டியவர்கள்.

வாக்குறுதிகளை அள்ளி வீசி
கடமை மறந்தும் துறந்தும்
மக்களுக்கு
வாய்க்கரிசி போடும்
அரசியல்வாதியை நோக்கின் – இவர்கள்
பாராட்டப்பட வேண்டியவர்கள்.

பாரத பூமியில்
பாதபர்கள்
ஒழியும் வரை – இவர்கள்
பாராட்டப்பட வேண்டியவர்கள்.
********

எழுதிய நாள்: 19.03.1990