பாட்டாளியின் புலம்பல்…

மழை வருது மழை வருது
மறைய ஒரு மனையில்லையே…

ஆலைகள் தோன்றுது ஆடைகள் தோன்றுது
அணிய முழு ஆடையில்லையே…

ஆலையம் எழுகுது ஆத்தீகம் வளருது
அன்பு அறம் தழைக்கவில்லையே…

விவசாயம் செழிக்குது விளைச்சல் பெருகுது
பசியாற சிறுதுண்டம் உணவில்லையே…

கனவுகள் வருகுது காட்சிகள் மாறுது
நினைவில் ஏதும் நிலைக்கவில்லையே…

வறுமை வாட்டுது வயிறும் சுருங்குது
எங்கள் நினைவுகள் வற்றவில்லையே…

சுதந்திரம் பேசுகின்றார் சுயமாய் சிந்தியென்றார்
அடிமை நிலை மாறவில்லையே…

தீட்டுகின்றார் தீட்டுகின்றார் ஐந்தாண்டு திட்டங்கள்
எங்கள் நிலை உயரவில்லையே…
********

19.11.1988-ல் எழுதியது. சில வார்த்தை மாற்றங்களுடன் இப்போது.
By மா.கலை அரசன்.

பயன்!…

பண்பொன்று இல்லாது பாரினில் பிறந்தோனும்
பக்குவமடையா மாந்தரும் மடமைசெய் குணத்தவரும்
குள்ளநரி வேலை செய் குபுக்திக்காரனும்
பிறந்த மண் பிணைப்பில்லா மாந்தரும்
மயக்கு பேச்சாலே ஏய்ப்போனும்
இப்பாரினில் பிறந்து பயன் இல்.
*********

எழுதியத நாள்: 22.11.1987