வாழ்வில் பெருமை காண்போம்.

பாரதம் செழிக்கக் கண்டேன்
பாட்டாளி உயரக் கண்டேன்
பண்பொன்றே நிலைக்கக் கண்டேன்
பலம்வந்து சேரக் கண்டேன்.

அன்பு அரங்கேறக் கண்டேன்
ஆசை ஒழியக் கண்டேன்
அறிவு வளரக் கண்டேன்
ஆணவம் மாயக் கண்டேன்

பசுமை தழைக்கக் கண்டேன்
பசிநோய் தீரக் கண்டேன்
பயமெல்லாம் நீங்கக் கண்டேன்
பாரில்பாரதம் உயரக் கண்டேன்

ஆட்சியது சிறக்கக் கண்டேன்
அல்லவை ஒழியக் கண்டேன்
நல்லவை பரவக் கண்டேன்
ஆத்திரம் மழுங்கக் கண்டேன்

மட்டிவீடு மறையக் கண்டேன்
மாடிவீடு நிறையக் கண்டேன்
மாநிலம் சிறக்கக் கண்டேன்
மாற்றங்கள் மனதில் கண்டேன்

இவையாவும் கனவில் கண்டேன்
இனி சிந்தித்தே செயலாற்றின்
வாழ்வில் சிறுமை நீங்கியே
நாளும் பெருமை காண்போமே.
*********
எழுதிய நாள்: 18.08.1988
By மா.கலை அரசன்.

பாப்பா! பாப்பா! பாரம்மா!…

பாப்பா! பாப்பா! பாரம் மா!
பச்சைப் பசுங்கொடி பாரம்மா.

ஆடும் மயிலை பாரம்மா – நீ
அழகு தமிழில் பாடம்மா.

கூவும் குயிலை பாரம்மா – தினம்
பூப்போல் நீயும் சிரித்திடம்மா.

அழகு அன்னம் பாரம்மா – நீ
அன்பாய் என்றும் பழகிடம்மா.

பச்சை பசுங்கிளி பாரம்மா – அது
பிள்ளை மொழி பேசுதம்மா.

தாவும் கௌரிமான் பாரம்மா – நீ
தன் மானம் காத்திடம்மா.
*********
எழுதிய நாள்: 23.08.1988
*********
By மா.கலை அரசன்.