பாரதி!…

ஓ…
பாரதி!…
உன்னைப் பற்றி
நான்
என்ன எழுத முடியும்?!

நீ
ஆகாயச் சூரியன்.
நானோ…
மிகச்சிறு மின் மினி!…

ஒன்று மட்டும் நிச்சயம்
நான் மட்டுமல்ல
வரும் சந்ததியும்
உன்
கவிதைச்சூட்டில்
குளிர்காய்வோம்.

உன் பெயரையும்
உச்சரிப்போம்…
தமிழ் உச்சரிக்கப்படும் வரை.
ஃஃஃ

By மா.கலை அரசன்.

மௌனம் வெறுக்கிறேன் !…

மலர் மலர்தல்
சுகந்த மணம் தவழ
மெல்ல
மொட்டவிழும்
மலரின் மௌனம் ரசிப்பேன்.

அலைகள் வீசி ஓய்ந்து
அயர்வாய்
அலைகளின்றி தூங்கும்
நீர்நிலையின் மௌனம் ரசிப்பேன்.

பள்ளி சென்று படித்து – பின்
விளையாடி ஓய்ந்து
என் மேல் கொடியாய்
கால்பரப்பி கண்ணயரும்
என் செல்ல மகளின்
மௌனமான தூக்கம் ரசிப்பேன்.

நீ
சில நேரம்
சிடு சிடுத்து சிணுங்கி – பின்
அமைதியாய்
என் கைகளுக்குள் அடைக்கலமாகும்
மௌன அழகை ரசிப்பேன்.

பகலுக்கு
கருமை பூசி
கண்மூடிக் கிடக்கும்
இரவின்
ஏகாந்த மௌனம் ரசிப்பேன்.

புயலின் அபாயமின்றி
பூப்போல
மெல்ல வருடிச்செல்லும்
தென்றல் கைற்றின்
மெல்லிய மௌனம் ரசிப்பேன்.

அந்தரத்தில்
தொங்கி
அழகாய் ஜொலிஜொலிக்கும்
நட்சத்திரக் கூட்டத்தின்
ஒப்பில்லா மௌனம் ரசிப்பேன்.

மௌனம் ரசிக்கும் நானே
என்
மௌனம் வெறுக்கின்றேன்.

உன்னோடு
ஊடல் கொண்டு
நான் மௌனம் காக்கும்
சில மணித்துளிகளில்
நீ
மரணவேதனையை
அனுபவித்த கணங்களை
நான் ரசிக்கவா முடியும்?!…

என்
மௌனம் வெறுக்கின்றேன்
நீ
என்வோடு இருக்கும் போது
மட்டும்!…
ஃஃஃஃ

By மா.கலை அரசன்.

ஆதவன் காதல்…

ஏன் அறியாள்?…
அவள் மீது
யான் கொண்ட காதல்…
எனைக் கண்டு
அஞ்சி மறைகின்றாளே!…

ஓ…
ஆதவன் காதல்
காரிருள் அறியுமோ?!…

-o0o-

By மா.கலை அரசன்.

சின்னக் குழந்தாய்…

சின்னக் குழந்தாய் சின்னக் குழந்தாய்
………ஒரு சொல் கேட்டிடம்மா
கதிரவன் எழும் முன்னே – தினம்
………நீ காலையில் எழுந்திடம்மா
புறத்தூய்மை பேண நன்றாய் நீயும்
………குளிர் நீரில் குளித்திடம்மா
அகத்தூய்மை பேண அனுதினமும்
………இறைவனை மனதில் நினைத்திடம்மா.

நொடிப் பொழுதும் தாமதமின்றி – தினம்
………பள்ளி சென்று சேர்ந்திடவேண்டும்
நல்ல நண்பர் குழாம் உனைச்சுற்றி
………பள்ளியில் நீ அமைத்திட வேண்டும்.
கற்றுத்தரும் ஆசானை ஆண்டவன் போல்
………நாளும் மனதில் நினைத்திடவேண்டும்.
கற்ற கல்வி வழிநின்று – தினம்
………நி வாழ்வில் உயர்ந்திடவேண்டும்.

வளர்ந்து வரும் உலகில் சிறந்திட
………கணினியைக் கற்று தேர்ந்திடவேண்டும்
உலகத்தின் நடப்பை எல்லாம் – நீ
………வலைத்தளத்தில் அறிந்திட வேண்டும்
எவ்வுயரம் வளர்ந்திட்ட போதும் – நீ
………பழமையை போற்றி பேணிடவேண்டும்
அன்னை தந்தை ஆசான் பேணி
………தாய் மொழியை வளர்த்திடவேண்டும்.

******************************
Already Posted In காணியாறு
By மா.கலை அரசன்
******************************

நிலமகள் விண்ணப்பம்.

கடலகம் பிறந்து
வானகம் வளர்ந்து
மலையது தழுவி
கானகம் திரியும் முகில் காதலா!…
உன் முகவரி கூறு.

உன்
கருணை மழை
என் மீது பொழிய
காதல் கடிதம் எழுதுகிறேன்.
***************************
எழுதிய நாள்: 29.07.1988
By மா.கலை அரசன்.
***************************