காலம்.

மரணித்த என் நிமிடங்கள்
வரலாறு.
நகரும் நிமிடங்கள்
வாழ்க்கை.
வரும் நிமிடங்களோ
எதிர்பார்ப்பு-நான்
காலம்.

நான்
நகர்த்தும் நிமிடங்களில்
நடப்பவைப் பலப்பல.
நகர்ந்த பின் திரும்புவதில்லை.
யாருக்காகவும் எதற்காகவும்-என்
நகர்தலை நிருத்துவதுமில்லை.

எனக்கு
எதிர்பார்ப்புகளில்லை
ஏக்கங்களுமில்லை
விருப்பு வெருப்பு-என்
அகராதியிலில்லை.

மனிதன் என்னில் சித்து செய்கின்றான்
தன்னில் இனம் பிரித்த- மனிதன்
என்னையும் வகைப்படுத்திவிட்டான்
நல்ல நேரம் கெட்டநேரமென்று.

எது நல்ல நேரம்
எது கெட்ட நேரம்
என்னைப் பற்றி
நான் பறைசாற்றாத ஒன்றை
எங்கனம் உணர்ந்தான் மனிதன்

காலை மாலை இரவு
ஆதவன் ஒளியுணர்ந்து
வகை செய்தான் நன்று.

எங்கனம்
எனை பிரித்தான்
நல்ல காலம்
கெட்ட காலமென்று.

நல்ல காலத்தில்
மாண்டவரில்லையா?
மாழ்வதுமில்லையா?

கெட்ட காலத்தில்
பிறந்தவரில்லையா?-இனி
பிறப்பதுமில்லையா?

நான்
யாரையும்
தாழ்த்துவதுமில்லை
உயர்த்துவதுமில்லை.

உயர்வும் தாழ்வும்
வாழ்வும் வீழ்வும்
அவரவர் கையில்.

நான்
எப்போதும் நானாக.
மனிதா நீ?!…
ஃஃஃ

ஹைகூ-மூன்று

யாரை நோக்கி – இந்த
தலைகிழ் தவம்,
வவ்வால்.

உன்னில் சுத்தம் செய்து
என்னில் அழுக்கை சுமக்கிறேன்,
குளம்.

தன்னில் குறைத்து – தினமும்
என்னில் ஏற்றுவான்,
நாட்காட்டி.

ஃஃஃ

Already Posted in காணியாறு on 01.09.2006
By மா.கலை அரசன்

ஹைகூ – ஆறு

வானக் காதலனுக்காய்
மழைக்காதலி எழுதிய கவிதை
வானவில்.

தன்னிறைவு பெற்றவர்கள்
மின் உற்பத்தியில்,
மின்மினிப் பூச்சிகள்.


உற்சாகத்தில் பறந்து சிரிக்கின்றது
வாழ்வு முடிந்தது அறியாமல்,
கிளைவிட்டு பிரியும் இலை.

பழக்கமில்லா புதியவன் என்பதால்
கடிக்கின்றதோ?!
செருப்பு.

புகைந்து அழியும் போதும்
அஸ்திவாரமிட்டுச் செல்கிறது அழிவிற்கு,
சிகரெட்.

உருகி அழும்போதும்
இருள் விலக்கி ஒளிர்கின்றது
மெழுகுவர்த்தி

ஃஃஃ

posted at காணியாறு on 30.08.2006
By மா.கலை அரசன்.

ஹைகூ…ஐம்புலன்

உடலெங்கும் சிலிர்க்கிறது
பனியாய் – அவள்
பார்வை.

காதில் சிற்றோடையின்
இனிய சலசலப்பு – அவள்
பேச்சு.

மனதெல்லாம் பூவாசம்
காற்றில் கலந்து – அவள்
வாசம்.

தேகமெங்கும் பூவின் மலர்ச்சி
என் மீது – அவள்
தீண்டல்.

காதலுலகின் கதவு திறந்தது
அவள் தந்த
முதல் முத்தம்.
ஃஃஃ
(Already posted in காணியாறு on 09.07.06)
By மா.கலை அரசன்.

உணர்வுகளால் பிரியாமல் இருக்க…

நீ
பார்த்த முதல் பார்வையில்
என்னில் தோன்றிய
மின்னல் பொறியை சேமிக்கின்றேன்.

உன்
முதல் பரிசத்தில்
மயிர்க்கால்கள் குத்திட்ட சிலிர்ப்பை
என்னில் சேமிக்கிறேன்.

நீ
என்னோடு பேசிய
முதல் வார்த்தையை
கவிதையாய்
என்னில் சேமிக்கிறேன்.

நீ
செல்லமாய் சண்டையிட
நான் மௌனியாய் இருந்த போது
உன்னில் ஏற்பட்ட
ஏக்கத்தை சேமிக்கிறேன்.

என்னவளே!
நீயே என்னோடு இருக்கும் போது
இது ஏன் என வினவுகின்றாய்?!

உனை பிரிய நேரும்
ஓரிரு நாளும்
உணர்வுகளால் பிரியாதிருக்கவே
உன் அசைவுகளை
நான் சேமிக்கிறேன்.
**********
(Already Posted in காணியாறு on 15.06.2006)
By மா.கலை அரசன்.

நான்….நீ

ascent.jpg
நான்
நீல வானம்.
நீ என்னில்
பகலில் சூரியன்
இரவில் குளிர் நிலா.

நான்
ஆழ்ந்த அலை கடல்.
நீ என்னில்
வெளிப்பரப்பில் காதல் அலை
உள் மனதில்
நீந்தி குதூகலிக்கும் வண்ண மீன்.

நான்
அழகிய மரம்.
நீ என்னில்
கண்ணுக்குத்தெரியாத ஆணிவேர்
கண்டுகளிகக அழகிய பூ.

நான்
கம்பீரமான மலை.
நீ என்னில்
அழகிய பசுமரக்காடு
எழில் நீரோடை

நான்
வரண்ட பாலைவனம்.
நீ என்னில்
வெயிலில் கானல் நீர்
காற்றில் பாலைவனப் புயல்.

நான்….நீ
எப்போதும் இணைந்தே
நாம்.
ஃஃஃ
(Already Posted in காணியாறு on 15.06.2006)

காற்று.

பவுர்ணமி நிலவு கண்டு
நான்
சந்தோசித்து இருந்ததால்
மெல்ல இதமாய் தவழ்ந்து வந்தேன்.
மனிதன் என்னை
இனிய தென்றல் என்றான்.

அவன்
வார்த்தையில் குளிர்ந்த நான்
விடியலின் போது
இன்னும் குளிர்ச்சியாய் வீசினேன்
நடுங்கிப்போன மனிதன்
என்னை
ச்ச…வாடைக்காற்று
வாட்டுகின்றதே என்றான்.

மனிதனின்
சலிப்பைப்பார்த்து வருந்தி
பகலின் போது
அமைதியாய் இருந்தேன்
வெயிலின் வெம்மை தாங்காது
இப்போதும் மனிதன்
ச்ச… காற்றே இல்லை என்று
சலித்துக்கொண்டான்.

அவன்
சலிப்பைப் பார்த்து
வெயிலின் வெம்மை தணிக்க
சற்று பலமாய் வீசினேன்.
இப்போதும்
கேசம் கலைந்த மனிதன்
ச்சே… இழவு காற்று
பேய் போல் வீசுகின்றதே என்று
திட்டித்தீர்த்தான்.

வருந்திய பெண்
தாய் வீடு செல்வது போல்
கலங்கிய நான்
கடலைப்பார்த்துச் சென்றேன்
இயற்கையின் சுழற்சியால்
புயலாய் மாறி
மீண்டும்
மனிதனிடம் வந்தேன்.
அந்தோ!
என் சீற்றம் தாழாமல்
அவனோ வீடிழந்தும்
உற்றார் உறவினர் இழந்தும்
சிலர் எனை சுவாசிக்க மறந்தும்!

சீண்டாதே எனை.
மனிதா!
உனக்கு எல்லாம் நானே.

* * * * *
(Already Posted in காணியாறு on 15.06.2006)

அரசு உதவிகள்!…

உரைவிடம் விட்டு
புறப்படும் போது
முழு நிலவெனவே வநதாள்.

என்னிடம் வந்த போது…
இலஞ்சத்தின் ஆதிக்கத்தால்
தன்
பிறை முகத்தையே
தந்தாள்.
ஃஃஃ

எழுதிய நாள்: 03.01.1989
By மா.கலை அரசன்.