உன் நினைவுகள்…


ஐந்து வயதில்
நாயை கல்லெரிந்தபோது
தவறென்று சுட்டித் திருத்தி
பிற உயிர்மீதும்
அன்புகொள்ளச்செய்து
உன் ஜீவகாருண்ய முகம் காட்டினாய்.

அருவாள் கொண்டு
மரம் வெட்டியபோது
உடல் கிள்ளி
மரத்திற்கும் வலிக்குமென்றாய்.
மரங்களை நட்டு
வளர்க்கச் செய்தாய்
பசுமைக்கு தோழனானாய்.

பாதையில் கிடந்த
முள் விலக்காது நடந்த போது
அதை நீயே விலக்கிவிட்டு
இனிவரும் காலம்
அதைச்செய்ய அறிவு தந்தாய்
எதிரிக்கும் நன்மை செய்யச்சொல்லி
மனிதம் வளர்த்தாய்.

இரட்டை வனவாசங்களை
அரேபியாவில் கழித்த போதும்
பாலைவனத்திலும் – என்றும்
உன் பெயர் சொல்ல
சோலைவனத்தை
உருவாக்கிவிட்டே வந்தாய்.

அப்பா!…
அறுபதாண்டுகளுக்கு முன்
காணியாறு விளையில்
நீ வைத்த மரங்கள்
சந்ததிகளுக்கும்
உன் பெயர் சொல்லும்…

நீ
பாறையில் செதுக்கிய
உன் பெயர் போலவே…
உன் நினைவுகளும் – என்றும்
எங்களோடு நிலையாக.

ஃஃஃ
Already posted in காணியாறு on FRIDAY, AUGUST 11, 2006
இவன்: மா.கலை அரசன்
ஃஃஃ

ஹைகூ-கதம்பம்.


வரவிற்காய் ஏங்குகின்றார்
வந்தால் ஏசுகின்றார்
சோகத்தில் மழை.

வளர்ந்தால் நிழல்
மடிந்தால் விறகு
மரம்.

ஓடிக்கொண்டே இருக்கின்றான்
கழைப்பறிய மாட்டானோ?
கடிகாரம்.

ஆற்றுவிக்கப்பட்ட பின்னும்
பீனிக்ஸாய் வருவதேன்?
பசி.

நகரும் உயிர்ச்சக்கரம்
தகர்க்கும் ஒற்றன்
மரணம்.

சமுதாயச் சந்தையில்
அவனுக்கும் அவளைக்குமான பண்டமாற்று
திருமணம்.

இன்று வீழ்ந்தால்
நாளை எழுவான்
சூரியன்.

எழுவதற்காகவே
வீழ்கின்றதோ?!…
அலை.

கரையேரத்துடித்த அலையின்
ஆவேச முயற்சியோ?!…
சுனாமி.

ஃஃஃ
Already Posted in காணியாறு on SUNDAY, JULY 23, 2006
By மா.கலை அரசன்.
ஃஃஃ

கன்னியின் புலம்பல்?!…


நிலவு உலவாத வானம்
யாரும் சூடாத மல்லிகை
ஒளி காணாத விளக்கு
விடியலை தரிசிக்காத இரவு
பாடப் படாத பாட்டு
மீட்டப் படாத வீணை
வண்டு உலவாத சோலை
பனி பொழியாத காலை
நான்
திருமணமாகாத எழை.

ஃஃஃ
எழுதிய நாள் : 15.07.1989.

rose-dance.gif
இவன் : மா. கலை அரசன்.
ஃஃஃ