ஆட்டுக்குட்டி


ஆட்டுக்குட்டி நல்ல ஆட்டுக்குட்டி அழகான ஆட்டுக்குட்டி
துள்ளித் திரியும் ஆட்டுக்குட்டி இலைதளைகள் தின்னும்குட்டி
சின்னச் சின்ன கால்களாலே குதித்தோடும் ஆட்டுக்குட்டி
பயமரியாச் சின்னக்குட்டி சிறுசேட்டைச் செய்யும் குட்டி.

எங்கஊரு மலைக்கு தினம் சென்று வரும்
முள்மீதும் தாவியேறி சிறு இலையை கடித்துத்தின்னும்
குளம் தேடி ஓடிச்சென்று நன்நீரைப் பருகிவரும்
நிழல் பார்த்து சாய்ந்துகொண்டு மெல்லமாய் அசைபோடும்

அம்மாவை தவிக்கவிட்டே சிலநேரம் மறைந்து கொள்ளும்
அண்டைவீட்டு பிள்ளைகளை ஓட்டம் காட்டி தளரவைக்கும்
மேய்ச்சலுக்கு செல்கையிலே நரியினை கண்டு விட்டால்
மேய்ப்பனிடம் வந்து விடும் ஆபத்தை வென்றுவிடும்
ஃஃஃ

இவன்: மா.கலை அரசன்.

பெண்ணே! புறப்படு!!.


பெண்ணே!
இராகத்தில் சோக
முகாரியை மட்டும் தான்
அறிவாயா நீ?!…

உன் இராகத்தை
நீயே
தவறுதலாய் வாசிக்கின்றாயா?
வாசிக்க
நிர்ப்பந்திக்கப்படுகின்றாயா?

கவிஞன்
நிலவுக்கு ஒப்புமையாக்குவான் உன்னை.
குளிர்ந்துவிடாதே!.
சூது வாதை சுட்டெரிக்கும்
சூரியனும் நீ என்பதை
செயலில் காட்டு.

பாவங்களே
பவனிவரும் போது
ஞாயங்கள்
நாணிக்கோணுவதேன்?!…
நாணம் வேண்டும் நெஞ்சத்துள்.
வீரம் வேண்டும் செயலில்…

வேசங்கள்
விலைபோகும் நேரமிது
நேர்மை
ஏன் கலங்க வேண்டும்?!…

சாக்கடை
உன்மேல் தெரித்ததில்
தவறில்லை!…

ஆனால் நீ…
சாக்கடையை
பூசிக்கொள்வதென்பது?…

மணமேடை தேவையே
அதற்காக
தூக்குக் கயிற்றை
வாங்க வேண்டியவன் கையால்
தாலிக் கயிற்றை
வாங்க விளைவதில்
ஞாயம் என்ன?…

வெட்கம் கெட்ட சமுதாயமிது
வறுமையுற்றால் வாட்டும்
உயர்ந்துவிட்டால் போற்றும்
ஏவல் செய்தே!…

பேசிப்பேசியே
பொன்னான பூமியை
கெடுத்துவிட்ட சமுதாயமிது
இவர்களின்
வார்த்தைக் கணைகளை
கண்டு கொள்ளாதே.

வரண்டுவிட்ட சமுதாயமிது
உன்னை
வக்கணைப் பேசும்
வருத்தப்படாதே.
நாய் குறைக்க
நாமும் குறைப்பதில்லை.

வரதட்சணையை
ஒளிப்பார்கள் என்றா
கனவு காண்கின்றாய்…
அட பேதையே!
கதிரவன்
மேற்கில் உதிப்பதில்லை…

ஆண்வர்க்கத்திற்கு… நீ
அடிமை என்றெண்ணினால்
வாழ்க்கை முழுதும்
வெந்து நொந்து
சாம்பலாக வேண்டியது தான்
சாராயத்திற்கு தொட்டுக்கொள்ள
சுட்டுக்கடித்தாலும் கடிப்பார்கள்.

ஆலம் விழுதுகள் என்றா நினைத்தாய்
ஆண் வர்க்கத்தை…
இவர்கள் சாதகக் காற்றடித்தால்
முறிந்து விழும்
முருங்கை மரங்கள்…

குற்றமில்லை
அவர்கள் மீதும்…
படகைச் செலுத்தும் பாய்மரங்கள்
உன் போல்
பெண்ணல்லவா?!..

மௌன ஆடைகளையே
நீ போர்த்திக்கொண்டிருந்தால்
பெண்ணுரிமை பேசும்
ஆடவன் கூட
துணை வரமாட்டான்.

ஏ!… பெண்ணே!…
எத்தனை நாள் தான்
ஊன்று கோல்களின்
துணைகொண்டு நடப்பாய்?…
உதறியெறிந்து விட்டு
நீயாய் தவழ்ந்து பழகு…
நாளைய மராத்தானின்
மணிமகுடம் உனக்காகவே…
களங்களும்
காவியங்களும் கூட…

ஃஃஃ
இவன் : மா. கலை அரசன்.
ஃஃஃ