விடியலின் குரல்.


உண்ணப்பட்ட விதைகள் எல்லாம்
மாண்டு போவதில்லை.
எச்சங்களாய் வெளிப்பட்டும்
முளைவிடுவோம்.

எங்கள்
கிளைகள் வெட்டப்படுவதால்
நாங்கள் காய்ந்து போவதில்லை
பல கிளையாய் துளிர் விடுவோம்.

சருகுகளாய்
எங்கள் உணர்வுகளை
மண்ணில் புதைத்தாலும்
உரமாய்
மற்றோர் உயிர்க்கு
ஊக்கம் தருவோம்.

பாறைகளை உடைப்பது போல்
எங்களை சிதைத்தாலும்
நாங்கள் அழிவதில்லை
துகள்களாய் எங்கும் வியாபிப்போம்.

தணலிடை இட்டு
எங்களை பொசுக்கிடிலும்
சாம்பலாய் உயிர்த்தெழுவோம்.

மாலைப்பொழுதின் இருளாய்
துஷ்டர்கள்
எங்களை துயர்படுத்திடினும்
நாளைய விடியலில்
ஆதவனாய் எழுவோம்.
ஃஃஃ
இவன்: மா. கலை அரசன்

உற்ற நண்பன்!…


என்
வரவிற்காக வாசலில்
தினமும் காத்திருப்பான்.

வழிப்பயணத்தில்
பாதம் முத்தமிட்டு நடப்பான்.
கற்களும் முற்களும்
கழிவுகளும் தாங்கி சகித்திருப்பான்.

தான்
தேய்ந்த போதும்
நான் நோகாது
காத்து நிற்பான்.

தெய்வம்
தொழச்சென்றால்
நான் புண்ணியம் பெற
வாயிலில் தவம் இருப்பான்.

நான்
விழித்திருக்கும் வேளையெல்லாம்
எனக்காய் உழைதத
என் பாத அணியே!
நான் துயில்கையில்
உனை
யார் கவர்ந்து சென்றார்?

பாத அணி
தொலைந்து போனால்
நல்ல சகுணமாம்.
சேதி கேட்ட
அத்தை சொன்னார்.

சகுணம் பணம் பற்றி
நினைக்கத்தோன்ற வில்லை.
உன் இழப்பில்
மனதில் ஏதோ நெருடல்.

எங்கிருப்பினும்
உன் பணி
சிறப்புறச்செய் நண்பனே!
ஃஃஃ
மும்பையிலிருந்து 13.06.06 அன்று இரயிலில் ஊர் திரும்பும் போது யாரோ ஒரு முகம் தெரியாத அன்பர் என் பாத அணியை கவர்ந்து சென்றுவிட்டார். அதன் தாக்கத்தில் எழுதியது.
ஃஃஃ

இவன்: மா. கலை அரசன்

கருவிலேயே கலைக்காதிருந்திருந்தால்…


அம்மா அம்மா என்றே
அம்மா உன்னை அழைக்கின்றேன்
ஆசையாய்த் தொட்டுப் பார்க்கின்றைன்
ஓடிவந்து உன்கை பற்றுகின்றேன்.

முந்தாணை நிணலிலேதான் நடக்கின்றேன்
மூச்சுக்காற்றாய் உன்னை தொடர்கின்றேன்
உன் முகச்சிரிப்பில் மலர்கின்றேன்
உலகே நீயென்று சுழல்கின்றேன்.

நீ என்னை அறியாது
தினம் இதையே செய்கின்றேன்
பாவி!… நீயென்னை – பெண்சிசுவென்று
கருவிலேயே கலையாதிருந்திருந்தால் – நீயறிய

கட்டி உன்னை அணைத்திடவும்
என்சுட்டி முத்தம் பதித்திடவும்
முலைபற்றி பால் குடித்திடவும்
உயிராய் உன்னோடு இருந்திருப்பேன்.

ஃஃஃ
இவன் : மா. கலை அரசன்.