சுதந்திரம்


விதையின்
கவசம் உடைத்து
தளிர் துளிர் விடுவது இரவில்.

நட்சத்திரங்கள்
கண் சிமிட்டி
நம்மை களிப்பூட்டுவதும் இரவில்.

பால் நிலா
நீலவான் தோன்றி
காதல் வளர்த்ததும் இரவில்.

காதல் பரிசாய்
சிசு பிறக்க
உறவுகள் வளர்வதும் இரவில்.

எம் முந்தையர்
அடிமை விலங்கொடித்து
சுதந்திரம் மலர்ந்ததும் இரவில்.

இரவில்
துளிர்த்த
விதை மரமானது.

இரவில்
பூத்த
விண்மீன்களால் இன்புற்றாய்.

இரவின்
நிலவில்
காதல் வளர்த்தாய்.

இரவின்
உறவில் பிறந்தவன் மனிதனானாய்.

ஏன்
இரவில் பெற்ற
சுதந்திரத்தை மட்டும்
விடியவே இல்லை என
பழிக்கின்றாய்?

சுதந்திரம்
உன்னிடம் தான் இருக்கின்றது.

நீந்தத்தெரியாத
மீன்கள் இல்லை.
ஏன்
நீ மட்டும்
சுதந்திரத்தை சுவாசிக்கத்தெரியாமல்?!

பறவை பறப்பதற்கு
யாரும் கற்றுத்தருவதில்லை.
உனக்கு மட்டும்
சுதந்திரத்தை சுவாசிக்க
சொல்லித்தர வேண்டுமா?

நீ
நிழலிலேயே
வாழ்ந்து கொண்டு
வெழளிச்சப் புள்ளியை
வெயில் என்கின்றாய்.

ஒற்றை
மர நிழலில் ஒதுங்கும்
ஏர்பிடிக்கும் உழவனைக்கேள்
நிழலின் அருமையும்
வெயிலின் கொடுமையும்
சொல்வான்.

ஆம்
அடிமை தேசத்தில் வாழ்ந்த
உன்
முன்னவனைக் கேள்
முடியாத போது
அவர் தம் வரலாற்றைப் படி.
எப்போதோ
விடிந்துவிட்ட சுதந்திரம்
இப்போதாவது
உன் கண்களுக்கு புலப்படும்.

* * * * *

இவன்: மா.கலை அரசன்.