என்றகல்வாய் எனைவிட்டு?…


ஒரு துயர நாளில் தான்
நீ என்னை
தழுவிக்கொண்டாய்…
உந்தன் பயிர்வளர
எம்மில் வித்திட்டாய்…

ஐந்தாறு நாட்கள்
வெம்மையாய் பரவி
எம்மை
வெப்ப ஆற்றில்
குளிக்கவிட்டாய்…

உன்னை நான் விரும்பாமல்
எடுத்த எதிர் செய்கையில்
உன் தழுவலின் தாகம் தணிந்து
எம்மை விட்டுச் சென்று விட்டாய்
என்றே நினைத்தேன்…
என் சுண்டுவிரலை மீண்டும்
நீ தீண்டும் வரையில்…

உன் பாசிச விரல்களை
என் உடலெங்கும் பரப்பி
எந்நேரமும் உன்னையே
நினைக்கச் செய்கின்றாய்
என் அன்றாட அலுவலை
மறக்கச் செய்கின்றாய்…

மாதம் இரண்டை கடந்தபின்னும்
வேதனை பொருக்கவில்லை…
வேண்டாத விருந்தாளி
நீ கொடுக்கும் துயரங்கள்
எதுவரை?…

இன்றா?…
நாளையா?…
என்று செல்வாய்
எனைவிட்டு!.

நீயாக செல்லமாட்டாய்
என்பதறிவேன்.
அதனால் தான்
மருத்துவரைக்கூட
மறக்காமல் சென்று பார்த்தேன்
அவர் கூட
உனைப்பற்றி அறியவில்லையாம்!…
உனைப்போக்க வழியொன்று தெரியவில்லையாம்!!…

அரசாங்கம் கூட சொல்கின்றது
என்னிலிருக்கும் நீ,
நீ இல்லையாம்!…

அட
எனை வருத்தும்
சிக்குன் குனியாவே!…
என்றகல்வாய் எனைவிட்டு?…
ஃஃஃ

இவன்: மா. கலை அரசன்.