விழியின் மொழி.

உன்
ஓர் அசைவில்
உலகத்து மொழியனைத்தும்
பேசுகின்றாய்.

சத்தமற்ற
உன் மௌனத் தவத்திலேயே
மொழிகள் அத்தனையும்
வெல்கின்றாய்.

பரிவான
உன் பார்வை காட்டும்
பாசத்தைச் சொல்ல
எந்த மொழியிலும்
வார்த்தையில்லை.

ஓர் அசைவில்
விழி சொல்லும் காதலை
அதைவிடச் சிறப்பாய் சொல்ல
எந்த மொழியிலும்
கவிஞனும் காதலனும்
பிறக்கவில்லை.

கோபத்தில்
விழி சிந்தும் வெம்மையைச் சொல்ல
சூடான சொற்கள்
எந்த மொழிக்கும் இன்னும்
கிடைக்கவில்லை.

நீ பிறருக்காக கசிந்துருகும்
இரக்கத்தைச் சொல்ல
இனிய மொழிகள் எவற்றிலும்
இன்சொற்கள் இல்லை.

மொத்தத்தில்
விழியின் மொழியில் மட்டுமே
கருப்பு வெள்ளை
தமிழன் கன்னடன்
இந்து முஸ்லீம்
என்ற வேற்றுமையில்லை.

மனிதற்கு மட்டுமன்று
உயிர்களுக்கெல்லாம் பொதுமொழி
அது விழிபேசும் மொழி.
ஃஃஃ
[Valid RSS]

ஹைகூ – காதல்


மனச் சிறகுகள் கனத்தது
உள்ளுக்குள் அழுத்தும் பாரமாய்
துயரநினைவுகள்.

ஃஃஃ


பட்டாம் பூச்சியாய் பறக்கின்றேன்
என் மன வானில்
இளவயது ஞாபகச் சிறகுகள்.

ஃஃஃ


அங்கங்கள் பழுதின்றி முழுதாகவே இருக்கின்றது
அசைக்க முடியாத மூட்டு வலிகளோடு
சிக்குன் குனியா.

ஃஃஃ

குழம்பொலி கேட்கின்றது
நகரத்திலேது குதிரைகள்?!…
காவலர் அணிவகுப்பு

ஃஃஃ


1+1=2 என்பது பொதுக்கணக்கு
எங்களின் கணக்கில் 1+1=1
காதல்.

ஃஃஃ