அ, ஆ…கவிதை – 11 (காதல்)

அன்பென்று சொல்வதா
ஆசையென்று கொள்வதா
இன்பம் தரவல்லதா
ஈடில்லாதது என்பதா
உயிரில் கலந்ததா
ஊக்கம் தருவதா
எல்லோருக்கும் வருவதா
ஏங்கச் செய்வதா
ஐயம்கொள்ள வைப்பதா
ஒன்றாய் இணைப்பதா
ஓவியம் போன்றதா
ஔசித்தியம் பார்ப்பதா
இஃதே காதலுணர்வா?.

ஃஃஃ

காதல் மலர்ந்தது – ஹைகூ

விடைதெரியாமல் தான் இன்னும் தவிக்கின்றேன்
எந்த கணத்தில் எந்த விதத்தில்
உன்னை கவர்ந்தேனென்று!…

அரிதான சில தருணங்களில் மட்டுமே
நான் அளவளாவியது
உன்னோடு.

ஞாபகமில்லை எனக்கு இப்போது
சம்பவங்கள் ஏதும் நடந்ததுண்டா?
நீ என்னை நினைவில்கொள்ள!…

ஞாபகம் செய்து பாரேன்,
முறைசொல்லி பழகியதுண்டா உன்னோடு
நீ மாமன் மகளென்றபோதும்.

எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை
உன் குறுகுறு பார்வையும் துறுதுறு செய்கையும் தவிர்த்து
வேரெதுவும்.

என்னால் நம்ப முடியவில்லை
எப்போது எதற்காக விட்டுவிட்டாய்
உன் அலட்சியங்களை.

எந்த பெண்ணாலும் ரசிக்கவா முடியும்
ஒட்டிய கண்ணத்தையும் முள் தாடியையும்
உன்னை தவிர்த்து.

முதல்சந்திப்பையே ஏமாற்றமாக்கிய பின்னும்
எப்படி எந்த நம்பிக்கையில் தொடங்கினாய்
காதலை.

ஞாபகப்படுத்தி வேடிக்கைசெய்து சிரிக்கின்றாய்
முதல்சந்திப்பை தவிர்த்தது குறித்து
கோபத்தை உள் பொதிந்து.

வெற்றி கிடைத்தது காதலில்
உனக்கு மட்டுமல்ல எனக்கும்
நீயே மனைவியானதால்.

ஃஃஃ

காதலின் பரவசம்.

பாறையென உரைந்தே என்னில் நானிருந்தேன்
பாசத்தை ஆலம்விதையாய் என்னில் விதைத்தாய்
பாறையில் விரிசலை செய்திடும் ஆலினைப்போல்
பாசத்தில் என்மன உறுதியை உடைத்தாய்.

பற்றிட கிளைதேடி கொடியாய் தவிக்கின்றேன்
பாசத்தைத் தொடர உனை யாசிக்கின்றேன்
பரவசம் நெஞ்சில் கொள்கின்றேன் – உனை
பார்க்கையில் மட்டும் உயிர் வாழ்கின்றேன்.

பயிராய் நான் உயிர் வளர்த்திடவே
பாசத்தை நீராய் கொடுத்திடு நீ
படபடக்கும் நெஞ்சம் சாந்தி பெற
பச்சைக்கிளி வந்தமர்ந்திடு என்கிளை, நீ.

ஃஃஃ