ஓடை மணல்…

மணலற்று எலும்புகளாய்…
பாறை துருத்தி நிற்கும்
என் கிராமத்து
பழகிய ஓடையில்
கால் பதித்து நடக்கின்றேன்
முட்களாய் கற்கள் குத்திய போதும்…
பஞ்சு மெத்தையாய்
இதம் தந்தது
என் பழைய நினைவுகள்.

அன்று
மழை ஓய்ந்து
நீர் ஓடி வடிந்த பின்னும்
சிறு பள்ளம் தோண்டி
என் நீர்த்தாகம் தீர்த்ததுண்டு
விளையாடிக் களித்த
கழைப்பை மறந்ததுண்டு…
இன்று எங்கே மறைந்தது?
அந்த ஓடை மணல்…

பள்ளி விட்டு திரும்புகையில்
சொல்லி வைத்து நண்பர்குழாம்
நாளும் கூடி
கபடி ஆடி சாயும் போது
எங்கள் உடல் தாங்கி காத்ததுண்டு…
இன்று எங்கே காணாமல் போனது?
அந்த ஓடை மணல்…

பவுர்ணமிப் பொழுதில்
சிறார்கள் நாங்கள் ஒன்று கூடி
பழங்கதை கூறிச் சிரிக்கவும்
மல்லாக்கப் படுத்து
வான்முகம் பார்க்கவும்
எங்கள் முதுகைத் தாங்கியதுண்டு
இன்று எங்கே கவர்ந்து செல்லப்பட்டது
அந்த ஓடை மணல்?…

தவறி விழுந்தாலும்
காயம் படாதென்பதற்காய்
எருமை சவாரி செய்து பழக
நான் நேசத்தோடு
அன்று தேர்ந்தெடுத்தது…
இன்று எங்கே மறைந்து போனதுய
அந்த ஓடை மணல்…

என் வெற்றுப்பாதம்
நடந்த போது…
பஞ்சுப்பொதியாய்
கம்பளம் விரித்தது அன்று…
காலணி அணிந்த பாதம் கூட
பரிதவிக்கும் வண்ணம் விட்டு விட்டு
இன்று எங்கே சென்றது?
அந்த ஓடை மணல்…

இன்று
காட்டு வெள்ளத்தில்
அடித்துப் போயிருக்கலாம்…
காற்றில் கூட
பறந்து போயிருக்கலாம்!…
காசுக்காக
களவாடப்பட்டிருக்கலாம்…
அந்த ஓடை மணல்!…

ஆனால் யார் உளர்?..
அந்த ஓடை மணல் தந்த
என் பழைய நினைவுகளைக்
களவாட?!…

ஃஃஃ

வட்டத்தின் அளவு….

வட்டங்களுக்குள்ளே தான் எல்லோரும்
வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
தெரிந்தோ தெரியாமலோ
எல்லோருமே
கூட்டுப் புழுக்களைப் போல்
நம்மைச் சுற்றி
கூடுகளைப் பின்னிக்கொண்டுதான்
வாழ்ந்து கொண்டுடிருக்கின்றோம்.

வட்டங்களின் அளவுகளும்
கூடுகளின் அளவுகளும் தான்
மனிதருக்கு மனிதர் வேறுபடுகின்றது.

சாமான்யனின்
வட்டத்தின் அளவு
குடும்பம் உறவுகள் வரையிலும்…

மொழி அபிமானியின்
வட்டத்தின் அளவு
அதை பேசுவோன் வரையிலும்…

ஜாதி விரும்பிகளின்
வட்டத்தின் அளவு
இனத்தினன் வரையிலும்…

மதம் தழுவுவோனின்
வட்டத்தின் அளவு
அதை தொழுவோன் வரையிலும்…

காதலர் காதலின்
வட்டத்தின் அளவு
தியாகத்தின் எல்லை வரையிலும்…
அரசியல்வாதியின் ஆசையின்
வட்டத்தின் அளவு
எதுவரை?!…
ஃஃஃ

காதலின் உதயம்.

ஒரு முறையல்ல…
இரு முறையல்ல…
உன் தரிசனத்திற்காய்
நான் தவம் இருப்பது.

விழிப்பிலும்…
ஏன் தூக்கத்திலும் கூட
உன் பெயரை உச்சரித்தே
யாகம் செய்கின்றேன்…

என் சுவாசத்தில் நறுமணமாக
உன்னையே நுகர்கின்றேன்
என் தாகம்தீர்க்கும் நீராக
உன் நினைவுகளையே பருகுகின்றேன்
என் சிந்தனைக்கு புத்தகமாக
உன் முகத்தையே வாசிக்கின்றேன்
என் ஞாபகத்தை சோதிக்க
உன் வசவுகளையே சொல்லிப்பார்க்கின்றேன்.

உன்னால் நிராகரிக்கப்படும்
ஒவ்வொரு முறையும்
என்னை சுத்திகரித்துக்கொள்கின்றேன்
நம்பிக்கையோடு…

ஒவ்வொரு அஸ்த்தமனத்திற்கு பின்னும்
ஓர் உதயம் இருக்கும் போது
அத்தனை நிராகரிப்பிற்கு பின்னும்
ஒரே ஒரு விரும்பப்படுதல்
இல்லாமலா போகும் !….
ஃஃஃ

உலகம் என்பது…

உலகமென்பது பரந்து விரிந்த வாவியடா
அலையடிக்கும் நீரதுவே கால வெள்ளமடா

வாவியின் கரையெல்லாம் நாட்டிற்கு சமமடா
ஆவிகொண்ட மனிதரங்கே வாழும் மீனடா

பேரினம் சிற்றினத்தை அடிமைகொண்டு வாழுதடா
பேரிழப்பு வந்தபின்னும் உணர்வுகள் இல்லையடா

நலிந்த புழுவினமே இங்கு ஏழையடா
வலுவிழந்த அவனுக்கிங்கே எந்நாளும் தொல்லையடா

இதையறிந்தபின்னும் உதவுவார் யாருமில்லையடா
வதையன்றறிந்த பின்னும் ஆண்டவனிதை பொறுப்பதேனடா

நம்மினமே வெருக்கும்போது அவனென்ன செய்வானடா
நீஅறி மனிதமெல்லாம் ஓரினம் என்றடா.

ஃஃஃ

நிலையின்மை உன்கொள்கையா?!…

ஒரு நொடி பாடும்
………..மறுநொடி ஓடும்

உச்ச மகிழ்ச்சியில் திளைக்கும்
………..ஓவென்று கதறியளும்

ஒன்று உயர்வென்று எண்ணும்
………..பிறகதை மாட்சியென்றெண்ணும்

உள்ளமே ஏன் இந்நிலை?
………..நிலையின்மை உன்கொள்கையா?!…
………………….ஃஃஃ

தற்கொலை!…

ஏனிந்த மடமை
எதற்கிந்த சிறுமை
இழி பிறப்பே நீ இறந்த பின்னும்
உனைத் தூற்றித்திரிவேன்.

தெருவோர நாய்க்கு நீ தாழ்ந்தா போனாய்
அன்னை உனக்கு பாலாய் ஊட்டியது
தன் உதிரம் தானே.

தந்தை நீ வளர்கையில்
வளர்த்தது தன்னம்பிக்கைத்தானே.
மூடனே எங்கு தொலைத்தாய்
உன் நம்பிக்கையை!…

எப்படி மறந்தாய் நன்றி பகர்தலை
இனி என்றடைப்பாய் பெற்ற கடனை
பாதகனே கடன்வைத்து
பரிதவிக்க விட்டு விட்டு நீ சென்றதேன்?

எந்த மிருகமும்
தன்னைத்தானே மாய்ப்பதில்லை
கோழையாய்.
மானிடனே உனக்கு மட்டும்
ஏனிந்த மடமை
எதற்கிந்த சிறுமை.
ஃஃஃ

என்னுடன் வேலை செய்து ஓய்வு பெற்ற நண்பரின் மகன் இன்று(22.11.06) கோழையாய் தற்கொலை செய்து கொண்டான். மனது பொருக்கவில்லை. எழுதிவிட்டேன்.

காதல் மட்டும் அல்ல வாழ்க்கை

எந்த கணம் என்ன வரும் யார் அறிவாரோ
எந்த பெண்ணும் இவ்வுலகில் நிலைத்த மனம் கொண்டிருப்பாளோ
காற்றின் திசை எந்த நாளும் நிலைத்து நிற்குமோ
கன்னியரின் மனது மட்டும் இயற்கையை வென்று நிற்குமோ. (எந்த…)

காதல் வந்துதான் மனம் கனிந்து நின்றது
பெண்பூவைச் சுற்றியே மனம் வண்டாய் பறந்தது
தேகம் ஒன்றியே தினம் சுகத்தை தின்றது
போதை விட்டபின்னும் காதல் புலம்பல் நீண்டது

இரவைவென்ற பின்னும் காதல் பகலைத் தின்றது
இணைத்த உள்ளம் இரண்டும் உயிரில் கலந்தது
இதயத்தோடு இதயம் மலரின் மணமாய் நின்றது
இருக்கும் திசையெங்கும் காதல் பரவிச் சென்றது (எந்த…)

காதல் மட்டும் அல்ல வாழ்க்கை என்பது
மோகம் விட்ட பின்னே ஞானம் வந்தது
தூறல் விட்டபின்னே வானில் உதயம் வந்தது
வைய வாழ்வில் சிந்தை தெளிவு கண்டது (எந்த…)
ஃஃஃ

காகிதங்கள்

பறக்கும் உயிரற்ற வண்ணத்துப்பூச்சிகள்
சிறுவர்கள் கைகளில் கிழியும்
காகிதங்கள்.
ஃஃஃ

வஞ்சகனே என் இறைவா.

ஓடும் நதியில் உனைக்கண்டேன்
ஓங்கும் மலையில் உனைக்கண்டேன்
பவுர்ணமி நிலவில் உனைக்கண்டேன்
பட்டப் பகலில் உனைக்கண்டேன்
அண்ட வெளியில் உனைக்கண்டேன்
தென்றல் காற்றில் உனைக்கண்டேன்
வீசும் புயலில் உனைக்கண்டேன்
வீணர்களின் பேச்சில் உனைக்கண்டேன்
கொட்டும் மழையில் உனைக்கண்டேன்
குழந்தையின் சிரிப்பில் உனைக்கண்டேன்
துள்ளும் இளமையில் உனைக்கண்டேன்
துவளும் முதுமையில் உனைக்கண்டேன்
நன்மை தீமையிலும் உனைக்கண்டேன்
ஏழையில் கண்ணீர் துளிகளில்மட்டும்
உனைக் காணவிலேலையே
வஞ்சகனே என் இறைவா.
ஃஃஃ

தவழ்ந்த நினைவுகள்.

வருடங்கள் பல கடந்து விட்டன…
வாசல் கதவு எந்த பக்கம் என்பது
மறந்து விடவில்லை இன்னும்.
என் மழலைக்காலத்தில்
என்னை தாங்கிநின்ற தாய் நீயும்தான்
மண்ணில் மரித்துப்போகும் வரை
உன் எண்ணங்கள் நிலாடிக்கொண்டிருக்கும்…

கார்கால மயிலாக மழைக்காலங்களில்
ஊர் பிள்ளைகள் குதூகலிக்க
வீட்டில் சிறைபட்ட நானும்
சிறுதோகை விரித்து என்னுள்ளே ரசிக்க
பொத்தல் கூரை வழி
சிறுதூரல் பன்னீராய் தெளித்ததை
எந்த கணத்தில் மறப்பேன்?…

கீற்றே கூரையாய் நின்ற போதும்
ஊர்போற்ற வாழ்ந்தோம்.
மாற்றான் கண்பட்டதாலா
நீ தீயில் தேகம் வெந்தாய்?…
பிரிய மனமின்றிதான் பிரிந்து வந்தோம்
வாழும் இடம் வளமை என்றாலும்
தவழ்ந்த பருவம் உன்னிலன்றோ?…

கைவிட்டு உன்னை கழுவிட நினைத்ததில்லை
விதி செய்த கொடுமை
உன்னை கைமாற்றி விட்டது தான்.
விலை செய்தபோதும்
என் கதைமுடியும் மட்டும்
மனதில் மணம் வீசிக்கொண்டே இருக்கும்
உன்னில் நான்
தவழ்ந்து விளையாடிய தருணங்கள்.
ஃஃஃ

« Older entries