விடியல்


கிழக்கு வானம் புலரும் முன்பே
கிழச்சேவல் சக்தி கொண்டே கூவும்


தொல்லை கண்டு கதிரவனும் தன்
தொன்மை முகம் ஒளியுமிழச் சிவக்கும்


நடுக்கத்திலே நன்மலரும் இதழ் விரிக்கும்
நடுவானில் புள்ளினமும் நால்திசையும் பறக்கும்

தென்றலது தேன்மணம்கலந்து இன்னிசை பாடும்
தேன்தேடி வண்டினங்கள் சிறகடித்து பறக்கும்

உழவர் பாதம் கழனியிலே மிதிக்கும்
உலகுக்கே உணவு கொடுக்குமினம் என்றுறைக்கும்

சிறுஎறும்பு சுறுசுறுப்பாய் இறைதேடி கூடும்
சிறப்புடனே ஒற்றுமையின் உயர்வுதனை உரைக்கும்.

ஃஃஃ

விட்டில்பூச்சி

அந்தி சாயும் வேளையிலே
………அமைதிமாய்க்கும் நோக்கத்திலே
வந்து வந்து விட்டில்பூச்சி
………தன்னிசை பாடும்

இரவு வரும் வேளையிலே
………அழகு சட்டையிலே
வரவு நோக்கும் கண்போலே
………வண்ணஓட்டைகளை தீட்டும்

தூக்கம் கொள்ளும் நம்மேலே
………துள்ளிதுள்ளி ஓடும்
பக்கம்வந்து தன்கால் முள்கொண்டு
………முத்தமொன்று பதிக்கும்.

சட்டிபானை அனைத்திலும் சென்று
………உணவுசுவை பார்க்கும்
பெட்டியுள்ளே இருக்கும் பொருள்
………அனைத்தும் கெடுக்கும்

தீ கண்டு மகிழ்ச்சியிலே
………துள்ளிதுள்ளி குதிக்கும்
தீயின் பசிக்கு இறையாக
………தன்னையோ கொடுக்கும்.

ஃஃஃ