தவழ்ந்த நினைவுகள்.

வருடங்கள் பல கடந்து விட்டன…
வாசல் கதவு எந்த பக்கம் என்பது
மறந்து விடவில்லை இன்னும்.
என் மழலைக்காலத்தில்
என்னை தாங்கிநின்ற தாய் நீயும்தான்
மண்ணில் மரித்துப்போகும் வரை
உன் எண்ணங்கள் நிலாடிக்கொண்டிருக்கும்…

கார்கால மயிலாக மழைக்காலங்களில்
ஊர் பிள்ளைகள் குதூகலிக்க
வீட்டில் சிறைபட்ட நானும்
சிறுதோகை விரித்து என்னுள்ளே ரசிக்க
பொத்தல் கூரை வழி
சிறுதூரல் பன்னீராய் தெளித்ததை
எந்த கணத்தில் மறப்பேன்?…

கீற்றே கூரையாய் நின்ற போதும்
ஊர்போற்ற வாழ்ந்தோம்.
மாற்றான் கண்பட்டதாலா
நீ தீயில் தேகம் வெந்தாய்?…
பிரிய மனமின்றிதான் பிரிந்து வந்தோம்
வாழும் இடம் வளமை என்றாலும்
தவழ்ந்த பருவம் உன்னிலன்றோ?…

கைவிட்டு உன்னை கழுவிட நினைத்ததில்லை
விதி செய்த கொடுமை
உன்னை கைமாற்றி விட்டது தான்.
விலை செய்தபோதும்
என் கதைமுடியும் மட்டும்
மனதில் மணம் வீசிக்கொண்டே இருக்கும்
உன்னில் நான்
தவழ்ந்து விளையாடிய தருணங்கள்.
ஃஃஃ