பிரிவின் நினைவில்…..

அமாவாசை இரவின் வானம் போலவே
ஒளியற்று நகர்கிறது என் நாட்கள்
முழுமதி நீ என்னருகில் இல்லாததால்.

நான் கண்ணுராத தொலைவில்
நீ நடந்த போதும்
உனது காலடி ஓசை
என் இதய அரங்கில்
சிம்பனி இசைக்கின்றது.

அதிகாலை கைபேசி உரையாடலின் ஊடேவெளிப்படும்
உன் மூச்சுக் காற்று
நாள் முழுவதும் என்னில்
புல்லாங்குழல் மீட்டுகின்றது.

உன்னிலிருந்து
தொலைவில் இருக்கின்றேனோ என எண்ணும் போதெல்லாம் உணர்கிறேன்….
என் வாழக்கை சக்கரத்தின்
அச்சாக நின்று ஆரத்தின் அளவை
நீயே தீர்மானிக்கின்றாய் என்பதை.

வெளியில் சாப்பிடும்
ஒவ்வொரு உணவும்
மூளைக்கு சமிக்ஞையிட்டுச்
செல்லும்
தாங்கள் இணையில்லை
உன் கைப்பக்குவத்திற்கு என்று.

முற்றத்து பூக்கள் எல்லாம்
எனைப்பார்த்து நாணம் கொள்கின்றது…
அவையாவும்
உன் புன்னகைக்கு ஈடில்லையென்று.

தென்றல் கூட
எனை தழுவிச்செல்ல
தயங்கத்தான் செய்கின்றது. ..
உந்தன் மென்மை
அதனிடம் இல்லாததால்.

பூமித்தாயும் மென்மையாகவே
எனை தாங்குகின்றாள்
எந்தன் மீதான
உந்தன் பாசம் புரிந்ததால்.
****