அழகின் அளவுகோல்

அழகின் அளவுகோல்

அகவை என்ன அழகின் அளவு கோலா?!
ஆண்டுகள் கடந்து அகவை அதிகமானால்
இழந்து போகும் அழகென்பதும்;
ஈடற்ற மனதுகூட தளர்ந்துபோகும்
உடலின் உணர்வுகள் வற்றிப்போகும்
ஊன் உணவும் குறைந்துபோகும்
எறும்பென நகர்ந்த கால்கள்
ஏகமாய் சோர்ந்து போகும்
ஐயமுற்று மனது அல்லலுறும் – எதனோடும்
ஒப்புநோக்கி ஏக்கமுறு மென்பதும்;
ஓங்கிய குணத்தார்க்கும் மனத்தாற்கும் பொறுந்தாது;
ஔரவமாவள் உன் அழகிலும் மனதிலும்
அஃதே கண்டேன் யான்.

நிகழ்வின் உண்மைகள்…(அகரக் கவிதை-31)

அசுணம் அறியும் இசையின் தன்மை
ஆண்மா அறியும் உயிரின் மெய்மை
இரவுக்குத் தெரியும் இழி செய்து
ஈனமாய் உடல்வார்க்கும் ஊனர் கயமை
உதிரம் உரையும் குளிரில் உறக்கமின்றி
ஊனின்றி காப்பவன் அறிவான் நாட்டினருமை
எறும்புக்குத் தெரியும் உழைப்பின் பெருமை
ஏர்உழவனுக்குத் தெரியும் வியர்வையின் அருமை
ஐயுணர்வு மிக்கார் உள நிலைமை
ஒரு போதும் தாழாத வளமை
ஓர்பு குறைக்கும் சிறுமை
ஔடதம் அழிக்கும் உடலின் நோய்மை.

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

அழகாக பொங்கலிடு…(அ,ஆ…கவிதை-30)

அதிகாலைச் சுபவேளை அழகாக பொங்கலிடு
ஆணவ அழுக்குகளைப் பழையதோடு தீயிலிடு
இனிதான குரல்கொண்டே இனத்தோடுக் குலவையிடு
ஈசுவரனாய் உழவனையும் மதித்தின்று போற்றிவிடு
உலகமக்கள் யாவருமே நலமாக வாழ்ந்துவிட
ஊர்கூடி இந்நன்னாளில் தமிழன்னை தொழுதுவிடு
எல்லோரும் ஏற்றம் பெற்றுத் திகழ்ந்திடவே
ஏழ்மையிங் கில்லாது சாம்பெலன பொசுங்கிடவே
ஐயமின்றி உயிர்க்கும் வரை உழைத்துவிடு
ஒருத்தோடு நாமெல்லாம் இருந்து விட்டால்
ஓவுதலில்லை தமிழனுக்கு உலகினிலே;
ஔசித்தியம் மிகுந்தேத் தெரிவோம் பாரினிலே.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கிராம வாழ்க்கை.(அ,ஆ…கவிதை-29).

அல்புலர்ந்து அரும்பு மலரும் அதிகாலை
ஆலிலைமீது தூங்கியப் பனித்துளி தூர்ந்திடும்
இசையோடு புள்ளினம் ஏகிடும் ஆகாயம்
ஈடற்ற ஓவியமாய் ஒளிர்ந்திடும் கீழ்வானம்
உழுபடை தோளேந்தி உழுநர்படை காடேகும்
ஊழைச்சதை கூட்டமொன்று ஊர்மன்றம் கூடும்
எட்டுத்திக்கு கதைகளையும் ஏகமாய் பேசும்
ஏதியமாய் சிறார்படை தெருவெங்கும் ஓடிவிளையாடும்
ஐரேயம் குடித்துமீழும் ஒரு கூட்டம்
ஒப்புமையில்லா கிராம வாழ்க்கை மனதில்
ஓசனித்தல் செய்யும் போது
ஔவியம் கொள்ளும் நரகநகர வாழ்கை.

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

புதுப் பிறப்பெடுப்போம் புத்தாண்டில்…. (அ,ஆ…கவிதை-28).

அஞ்சதியாய் வந்தயுனை முழுதாய் உணர்வதற்குள்
ஆடிக்கழித்தேன் யானென்று புயலாய் செல்கின்றாய்
இன்புற்றிருந்து உன் தினங்கள் சுவைப்பதற்குள்
ஈசுரலீலை நடத்தி நடவாதுபோல் நகர்கின்றாய்
உழன்று சுழன்று உய்வது துணிந்தோம்
ஊசலாடல் வாழ்விலும் மனதிலும் மாறக்காணோம்
எதிரும் புதிருமான கால ஓட்டத்தில்
ஏகத்துக்கும் கனவுகளை வளர்த்தோம் – என்னே,
ஐதென ஐதுபடல் மனதினின்று துறந்தோம்
ஒரித்தல் செய்து இன்புற்று வாழ்வதென்பது
ஓர்குலத்துள்ளும் மறந்தோம் – வாதோழா
ஔவித்தலொழித்து புதுப்பிறப் பெடுப்போம் புத்தாண்டில்.

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சேராயோ உன்தாள்?!…

aranganathar.jpg


அரங்கனே அழகனே பாற்கடலில் பள்ளிகொண்டு
ஆனந்தமாய் அடியாற்கு நற்கதியை அருள்வோனே
இம்மையும் மறுமையும் இல்லாது ஏழுலகாளும்
ஈடில்லா ஈகையனே குசேலரின் ஒட்டினனே
உலகனைத்தும் வாமனனாய் மூவடியுள் அளந்தவனே
ஊழிகள் தோறும் ஊழிமுதல்வனாய் திகழ்பவனே
எஞ்ஞான்றும் எஞ்சலின்றி எளிஞர் எழுதற்கு
ஏமாப்பு செய்து காத்தருளும் எம்மானே
ஐக்கியநாதனே உன் அடிமுதல் முடிபார்த்து
ஒக்கயென் ஐம்புலனடக்கி உன்வாசல் கடக்கின்றேன்
ஓணப்பிரானே பாபம் ஒரிஇ
ஔலியா யென்னை சேராயோ உன்தாள்?!…

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

திரும்புமா இளமை.(அ,ஆ…கவிதைகள்-26.)

அளகம் நெற்றி விளையாட, சுற்றம்
ஆர்கவலையும் அறியாது துள்ளி மயில்போலாடி
இடக்கு மடக்கே தொழிலாய்க் கொண்டு
ஈட்டுக்கீடு பெரியோர்முன் வாய்ச்சொல் வீசி
உபாதேயம் மறுத்து, தாம்செய் உபாயமே
ஊக்கம் என்றுரைத்து, உற்சாகக் குரலெழுப்பி
எண்ணுதல் செய்து சந்தோசித்து, பறவையாய்
ஏக்கங்கள் ஏதுமற்று ஊக்கமாய் நாள்கழித்து
ஐதுநொய்தாக ஐந்துண்டி ருசித்து – நாளும்
ஒக்கலோடு ஊர்சுற்றி, பகை இழுத்து,
ஓதுதல் ஒதுக்கிவைத்த இளமை
ஔதசிய நாட்களை இனியென்று காண்போம்.

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஒருமுறை தான் வாழ்வு (அ,ஆ…கவிதைகள் – 25).


அற்றம் பல்கிப் பெருகுகின்றது – நம்
ஆசையின் எல்லைகள் பரந்து விரிந்ததால்
இழிகுணம் உடும்பாய் ஒட்டிக் கொண்டிருக்க
ஈனமாய் கொடுமை பல்லிழித்து சிரிக்கின்றது
உயர்வான எண்ணம் துறக்கத் துறக்க
ஊனமாகிப் போகின்றது நின் உள்ளுணர்வு
எறும்பொத்த ஒற்றுமை இற்றுப் போனதால்
ஏற்றமற்றுப் போனது என்றுமான வாழ்வு
ஐயம் சூல்கொண்டதால் உய்வின்றி மனது;
ஒருமுறை தான் வாழ்வென்பது உணர்ந்து
ஓம்பா குணம் தவிர்த்து
ஔதாரியனாய் நாளும் வாழ்வோம் வா.

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பெற்றோர் சொல் கீதை (அ,ஆ…கவிதைகள்-24)

அன்னை தந்தை நலன் மறந்தாய் ஏனடா
ஆசான் கற்றுத்தந்த பாடம் இதுதானா சொல்லடா
இனியசொல் உன் நாவும் மறந்து போனதேனடா
ஈனமன்றோ தாய் தந்தை வெறுப்பது, அறிவாயடா
உடன்பிறந்தார் நலனில் நாட்டம் இல்லை ஏனடா
ஊன உள்ளம் உயர்ந்ததில்லை உன்னில்நீயும் உணரடா
எண்சாண் உடம்பில் ஒரு சாண்தான் உதரமடா
ஏன்தான் இதற்காய் பேய்போல் வாழ்வில் ஆட்டமடா
ஐம்புலன் அடக்காதானை இழிநிலை தேடி வருமடா
ஒருத்து இல்லான் எம்மையிலும் தாழ்வது திண்ணமடா
ஓருயிரில் ஈருயிர் சுமந்தாள் வார்த்தை நினக்கு
ஔடதமாய் கசந்தாலும் உயர்த்தும் கீதையென்று கொள்ளடா.

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

தகுதியற்ற தலைமை வெறுப்பாய்…(அ,ஆ…கவிதை-23)

அடிமாடு போல் செல்கின்றாய்
ஆணவத் திமிலை சுமக்கின்றாய்
இடிபட்டு ஏன்தான் நோகின்றாய்
ஈனமிது என்பதை உணர்வாயா?.
உன்சுற்றம் வெறுக்கத் துணிகின்றாய்
ஊரான் சொல்பேச்சு கேட்கின்றாய்
எதிர்மறை செயல்கள் புரிகின்றாய்
ஏமாற்றும் தலைமையை ஏற்கின்றாய்
ஐயமற்ற அன்பினை மறுக்கின்றாய்
ஒப்பற்ற நின்ஆற்றலை மறக்கின்றாய்
ஓரற்றிலார் இனியேனும் மறுப்பாய்
ஔரசனாய் தேசத்திற்கு இருப்பாய்.

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

« Older entries