பார்வைக் கணை…

இராமன் எரிந்த கணையோ
மெய்தனை துளைத்து
வாலியை வதம் செய்தது.

ஏந்திழையே!…

உன் பார்வைக் கணையோ
உளஉறுதியை தகர்த்து
எனை காதலால் வதைக்கின்றது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கடவுள் நீதானா?.

மஞ்சள் வெயில் மாலையெலாம் நீதானா?
பஞ்சத்தில் வாடுவோர்க்கு சோலை நீதானா?
பிஞ்சுமனக் குழந்தையிடம் அன்பும் நீதானா?
வஞ்சக மனத்தின் வன்செயலும் நீதானா?

பாதி பேரை தினம் சிரிக்கவிட்டு
மீதி பேரை கண்ணீரில் மிதக்கவிட்டு
விதி யென்று உலகி லிருக்கும்
சதி காரன் இங்கே நீதானா?

கோயில் குளமெல்லாம் நீயிருப் பாயென்று
வாயில் உனையெப்போதும் பாடும் மனிதனையும்
பொய்யில் புரண்டெழுந்து உனையறியா ஊன
மெய்யரென இருவேறுமானிடம் படைத்தது நீதானா?

உண்மைக்கு இருளெனும் விலங்கிட்டு; வன்மைக்கு
வணங்கி வாழ்த்து கூறும் – இந்த
வேண்டா கலிகாலம் படைத்து – எனை
காண விட்ட கடவுள் நீதானா?.

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

இறைவனின் மறதி.

உலகத்தின் மாந்தர்காள்- ஓர்
உண்மை கேளீரோ!…

உலகம் மக்கள் மற்று
உயிர் அனைத்தும்
இறைவன் படைத்தானாம்!…

ஓங்கி உயர்ந்த குன்றம்;
உள்ளம் கொள்ளைகொள் அருவி;
அன்னமென அசையும் பெண்டீர்;
காலை இளம் பரிதி, தென்றல்
யாவும் இறைவனே படைத்தானாம்!…

அழகனைத்தும், அறிவும்
படைத்த இறைவன்
துன்புற்று மாயும்
கூன், குருடு, நொண்டி, முடம்
யாவரையும் ஏன் படைத்தானாம்?…

பள்ளி பாடமதை
பரிட்சை நேரம் மறந்து போம்
மாணாக்கன் போல்
பிரணவத்தை அடிக்கடி மறப்பானோ
மனிதரை படைக்கும் போது…
இறைவன்?!…

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஆசை.


ஆசைக்கு அளவுண்டோ அளக்க புதுக் கோலுண்டோ
ஆசை பொன்மேற் கொண்டு ஆண்டவன்சிலைத் திருடுகின்றார்
பணம்மேல் ஆசை கொண்டே பச்சோந்தி ஆகின்றார்
பிணம் தின்னும் கழுகாக உலவித் திரிகின்றார்

நாகரீக ஆசை கொண்டே நஞ்சைக் கலக்கின்றார்
நகர்வலம் திரியும்போது காணும் பொருளுக்கு ஏங்குகின்றார்
பெண்மேல் ஆசை கொண்டே பித்தராகி அலைகின்றார்
பண்புகெட்டே கால மெல்லாம் பாரில் உலவுகின்றார்

காணும் பொருளுக்கு ஆசைகொண்டு அலையும் மாந்தரே
கணநேர ஆசை யகற்றி மலையென உயருங்கள்
அஞ்ஞான ஆசைதனை ஆண்டவன் அருள்கொண்டு ஒழித்து
மெஞ்ஞான அருள்பெற்றே மேன்மை எய்துங்கள்.

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

நாங்கள் ஜந்துக்கள் அல்ல…

காவியங்களைக்
கடலில் போட்டு விட்டு
ஓவியங்களை
உடைத்தெறிந்து விட்டு
ஏ!… சமுதாயமே!!…
எரிந்து போன
ஏடுகளில் இருந்து
எழுத்துக்களைத் தேடாதே!…

மனமுடைந்தே சொல்லுகின்றேன்…
ஏய்க்கப்படும் எங்களில்
இரக்கத்தைத் தேடாதே!…

ஏ! சமுதாயமே!!…
நாங்கள்
வரண்ட நாவிற்கு
தண்ணீர் கிடைக்காமல்
உடைந்து விட்ட பானைகள்…
பாழடைந்த சிதிலங்களில்
பாம்புகள் தான் குடியிருக்கும்
அங்கே நீ
அமுதத்தைத் தேடி அலையாதே,
அருகிப்போய் விடுவாய்…

வன்முறை
பிறப்பிலே வருவதில்லை…
வறுமையில் – அது
வாய்மூடி நிற்பதில்லை…
பசியில்
வெந்து மடிந்துபோக
நாங்கள் ஜந்துக்களும் அல்ல…

ஏ! சமுதாயமே!!…
நீதியென்று ஒன்றைச் சொல்லி
எங்களை நிற்கதியாய் நிற்க விடாதே…
சட்டமென்று ஒன்றைச் சொல்லி
எங்களை சடலங்களாய்க் கிடக்கச் செய்யாதே…

அரசியல்வாதி வீட்டு
படி நுழையாத நீதி
எங்களின் செவிகளில் நுழைந்தா விடும்.
வஞ்சகர் வீட்டு
படிக்கட்டை கடக்க முடியாத சட்டம்
வரண்டுபோன எங்களை வதைத்தா விடும்?…

இன்று எரிவதோ
எங்களின் பட்டினி வயிறுதான்..
நாளை எரியப்போவதோ
சமத்துவம் இல்லா இச்சமூகம்!…

இனி
எரிமலை வெடிக்கும் போதுதான்
எங்களின்
இதயமே துடிக்கும்!!…

ஏ! வஞ்சக சமுதாயமே!!
நீ வெந்து துடிப்பாய்…
நாங்கள்
நாளையதை
கண்டு கழிப்போம்!!!…

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

புண்ணியமே ஓடு…

புண்ணியமே ஓடு….

கேடு கெட்ட சமுதாயம்!…

யாரோ ஓலமிடும் சத்தம் கேட்டு
அன்னாந்து பார்த்தேன் – அதற்குள்
அரைஞாண் கயிற்றைக் காணவில்லை.

குனிந்து பார்த்தேன் அரையை
அதோ!…
குல்லாவையும் பரித்துவிட்டு ஓடுகின்றான்.

கேடு கெட்ட சமுதாயம்!!…

தன்னந்தனியே தவித்து நின்றாள்
அண்ணா உதவியென்றாள்
பாசவார்த்தையின்
அதிர்வலை மறைவதற்குள்
நாலுபேர் மத்தியில் நின்று
அத்தான் என்னை கைவிட்டுவிடாதீர் என்றாள்…
அடடா!
பகல்வேசமிடும் பரத்தையர் கூட்டம்.

கேடு கெட்ட சமுதாயம்!!!…

“கருப்பு மலையின் அடியில்
தவம் கிடக்கும் சமவெளி உன் நெற்றியடி

வானத்தில் வட்டமிடும்
வெள்ளி நிலா உன் நெற்றிப் பொட்டடி

பூமயிலே உன் புன்னகையோ,
ஜாலமிடும் அருவி ஓசையடி

இணைந்த புல்லாங்குழல் – உன்
எடுப்பான நாசி துவாரமடி

ஒருமித்துப் பார்த்தால் – நீ
கந்தர்வக் கன்னியடி…”, என்றான்.

சொன்னானே கந்தர்வக் கன்னியென்று…
நின்றானா நிலையாக…
விட்டானா அவளையாவது
கன்னியாக!….

அட, பெண்ணே!…
நீ கோழையடி!!…
அவனோ சுத்த பரத்தையனடி!!!…

கேடுகெட்ட சமுதாயம்!…

கெட்டதோ சமுதாயம்?
கெடுத்தோமே ஜனநாயகம்…
தடுத்தோமா கொடுமை?

படித்தோமே பாரதியை
விடுத்தோமா பெண்ணடிமை?

உழுத்துப்போன சமுதாயம்…
உழைப்பை விட்டோம்,
உண்மையை விட்டோம்,
உயர்வோ நம்மை விட்டோடியது.

பாரதியை மட்டுமென்ன விட்டா வைப்போம்?!…

கேடுகெட்ட சமுதாயம்!!…

கெட்டுப் போக படித்தா தரவேண்டும்
எங்களுக்கு….
பண்டிதர்களாயிற்றே நாங்கள்!…
புழுதிகள் வந்தா
எங்களை அழித்துவிடப்போகின்றது
நாங்கள் பூகம்ப மாயிற்றே…

புண்ணியமே ஓடு – நீ
கண் ணிமைக்காமல் ஓடு
கண்ணை இருக மூடிக்கொண்டே ஓடு…
ஆம்,
கண்ணைத் திறந்தால் ஒட்டிக்கொள்வோம்
நாங்கள் கேட்காமலேயே கெடுக்கும்
புதுப் புயல்கள், புழுதிப் புயல்கள்
புண்ணிய தேசத்தின்
புழுதிபடிந்த புதுத்தூண்கள்
எங்கள் புழுதியில் கலந்துவிடாதே

ஏ புண்ணியமே ஓடு! ஓடு!!…

நண்பன் சொன்னான்
அவனுடன் பழகாதே
அவன் குள்ள நரி குணத்தவனென்று…

குதர்க்கமாக சொன்னேன்
குள்ள நரி என்றால் என்ன?
குறுக்கே போனால்
நல்ல சகுணம் தானே!…

நாய்போல் நன்றியோடு பழகுகின்றானே
இவனா நரியென்றேன்…
நண்பனையும் திட்டினேன், செல்லமாக…

நண்பனே!
நீ தீர்க்க தரிசி…

நீ நரியென்றவன்
செல்லாமல் செய்துவிட்டுப் போனதை
அறிவாயா?…

நாயனையன் அல்ல நான்…
நல்ல பாம்பனையன் என்று
என்னையும் விசமாக்கிச் சென்று விட்டான்….

நண்பனே!
நீ திர்க்க தரிசி!!…

நண்பனே!
கெட்டுப்போன கேடுகெட்ட சமுதாயம்
இதில் கெட்டுப்போகாமல் இருக்கும்
பட்டுப்பூச்சி நீ.

ஓய்ந்து விடாதே…
நாளைய மலர்கள்
உனக்காகவே மலரும்.

உயரே… உயரே… பறந்து செல்.
அதோ!
இன்றே மொட்டுக்கள் தயாராகிவிட்டது;
நாளைய மலர்கள் உனக்காகவே!!!.

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

நாங்கள் கேட்பது.

நாங்கள்
மரத்தடி ராஜாக்கள் – வாடிய
ரோஜாக்கள்.

எங்களின்
உடலை மூடி
மறைப்பதோ
சிலந்தி வலைகளே!…

நிதம் நிதம்
கண்ணீர்த் துளிகள்
இதுவே
எங்களின் உடல் கழுவும்
ஆறுகள்!.

நாங்கள்
கைகளில் ஏந்துவது
திருவோடுகளா? – இல்லை
எங்கள் முன்னோரின்
மண்டையோடுகளே!

நாங்கள் கேட்பது
மாடிகள் அல்ல…
எங்களின் கட்டைசாய
ஒட்டுத் திண்ணைகளே!!…

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

புரியாத நிலையில்…

மௌனம்…
எங்கும் மௌனம்;
மலையைப் பார்க்கின்றேன்,
அங்கும் மௌனம்;
கற்களில் அசைவில்லை
காட்சிகளில் மாற்றமில்லை…
மௌனம்!…எங்கும் மௌனம்!!…

வானத்தை நோக்குகின்றேன்
வட்ட நிலா,
சுற்றி வளையவரும் நட்சத்திரங்கள்
நிலா முகத்தை
வருடிச்செல்லும் மேகக்கூட்டம்,
அமைதி!…எங்கும் அமைதி!!…

என்னைப் பார்க்கின்றேன்
என்னில் எத்தனை வளர்ச்சி
மனதினில் எத்தனை கிளர்ச்சி
மனதை வாட்டும் தளர்ச்சி…
தினம் தினம் வாழ்க்கையில்
புதுப்புது சுழற்சி…

காரணம் புரியவில்லை,
சிந்திக்க சிந்திக்க,
சிந்தனைக்கோ முடிவில்லை…

அமைதியாய் அமர்கின்றேன் சுரத்தின்றி..
என் மௌன
மணித்துளிகள் மரணிக்கின்றன…
இப்போதும்
ஏதும் புரியவில்லை…

ஓ மானிடத்தில்
எத்தனை மகிமை
அதுவும் புரியாத நிலையில்…

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Paper Piece – துண்டுக் காகிதம்

காற்றில் பறந்து சிரிக்கின்றது
எந்தக் கிளையில் அமரும்?
துண்டுக் காகிதம்.

பெண்ணே! புறப்படு!!.


பெண்ணே!
இராகத்தில் சோக
முகாரியை மட்டும் தான்
அறிவாயா நீ?!…

உன் இராகத்தை
நீயே
தவறுதலாய் வாசிக்கின்றாயா?
வாசிக்க
நிர்ப்பந்திக்கப்படுகின்றாயா?

கவிஞன்
நிலவுக்கு ஒப்புமையாக்குவான் உன்னை.
குளிர்ந்துவிடாதே!.
சூது வாதை சுட்டெரிக்கும்
சூரியனும் நீ என்பதை
செயலில் காட்டு.

பாவங்களே
பவனிவரும் போது
ஞாயங்கள்
நாணிக்கோணுவதேன்?!…
நாணம் வேண்டும் நெஞ்சத்துள்.
வீரம் வேண்டும் செயலில்…

வேசங்கள்
விலைபோகும் நேரமிது
நேர்மை
ஏன் கலங்க வேண்டும்?!…

சாக்கடை
உன்மேல் தெரித்ததில்
தவறில்லை!…

ஆனால் நீ…
சாக்கடையை
பூசிக்கொள்வதென்பது?…

மணமேடை தேவையே
அதற்காக
தூக்குக் கயிற்றை
வாங்க வேண்டியவன் கையால்
தாலிக் கயிற்றை
வாங்க விளைவதில்
ஞாயம் என்ன?…

வெட்கம் கெட்ட சமுதாயமிது
வறுமையுற்றால் வாட்டும்
உயர்ந்துவிட்டால் போற்றும்
ஏவல் செய்தே!…

பேசிப்பேசியே
பொன்னான பூமியை
கெடுத்துவிட்ட சமுதாயமிது
இவர்களின்
வார்த்தைக் கணைகளை
கண்டு கொள்ளாதே.

வரண்டுவிட்ட சமுதாயமிது
உன்னை
வக்கணைப் பேசும்
வருத்தப்படாதே.
நாய் குறைக்க
நாமும் குறைப்பதில்லை.

வரதட்சணையை
ஒளிப்பார்கள் என்றா
கனவு காண்கின்றாய்…
அட பேதையே!
கதிரவன்
மேற்கில் உதிப்பதில்லை…

ஆண்வர்க்கத்திற்கு… நீ
அடிமை என்றெண்ணினால்
வாழ்க்கை முழுதும்
வெந்து நொந்து
சாம்பலாக வேண்டியது தான்
சாராயத்திற்கு தொட்டுக்கொள்ள
சுட்டுக்கடித்தாலும் கடிப்பார்கள்.

ஆலம் விழுதுகள் என்றா நினைத்தாய்
ஆண் வர்க்கத்தை…
இவர்கள் சாதகக் காற்றடித்தால்
முறிந்து விழும்
முருங்கை மரங்கள்…

குற்றமில்லை
அவர்கள் மீதும்…
படகைச் செலுத்தும் பாய்மரங்கள்
உன் போல்
பெண்ணல்லவா?!..

மௌன ஆடைகளையே
நீ போர்த்திக்கொண்டிருந்தால்
பெண்ணுரிமை பேசும்
ஆடவன் கூட
துணை வரமாட்டான்.

ஏ!… பெண்ணே!…
எத்தனை நாள் தான்
ஊன்று கோல்களின்
துணைகொண்டு நடப்பாய்?…
உதறியெறிந்து விட்டு
நீயாய் தவழ்ந்து பழகு…
நாளைய மராத்தானின்
மணிமகுடம் உனக்காகவே…
களங்களும்
காவியங்களும் கூட…

ஃஃஃ
இவன் : மா. கலை அரசன்.
ஃஃஃ

« Older entries