கவிச்சூரியனே….

அப்பா:மார்த்தாண்டம்

என் கவிச்சூரியனே…
உன்
கவி வீச்சின்
கதிர்கள் என்னையும் தீண்டி ஆசிர்வதிக்க
நீ மண்ணில் அவதரித்த இந்நாளில்
உன் பாதமலர்களில்
மானசீகமாய் யாசித்து நிற்கின்றேன்.

சிறுவயதில் சுமக்க ஆரம்பித்தவன்
உன்னை சுமந்து செல்லும் வரை
சுமைகளைமட்டுமே
சுகங்களாய் சுமந்தவன் நீ…

பள்ளியில் வகுப்பு மூன்றைக்
கடக்க வழியில்லாத வறுமையில்,
புத்தகத்தை இறக்கி வைத்துவிட்டு
குடும்பத்தை தோளில் சுமந்தவன் நீ…
இறக்கும் வரை சுமையை
இறக்காமலேயே இறுமாப்போடு வலம் வந்தவன்.

உன் பாதம் பட்ட
காணியாற்று மலையின் அடிவாரத்தின்
ஒவ்வொரு திசையிலும்
உன் பெயர் சொல்லி
சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றது…
நீ நட்டு வளர்த்த மரங்கள்…

துயரங்களை துரத்தியே பழக்கப்பட்ட உன்னையும்
வறுமையின் கொடுமை
அரேபியாவிற்கு துரத்தியதென்ன புதுமை!…

பாலைவனத்தின் அனல் காற்று
உன் பாதம் பட்டதால்
தளிர்த்த மரங்களில் பட்டு குளிர்ந்தது உண்மை…

பாலைவனத்தில் பூத்ததால் தான்
உன் கவிமலர்கள்
உலகிற்கு தெரியாமல் போனதோ?!…

என் கவிச்சூரியனின் கதிர்களை
உலகில் ஒளிரச்செய்யாமல் செய்த
மேகம் எது?…

சூரியனின் மறைவிலும்
சந்திரன் அதன் ஒளியை பிரதிபலிக்கும்…
என் சூரியனே…
நீ மறைந்திருக்கலாம்
நீ தந்த கவிதைச் செல்வம் மறையாது…
சந்திரனாய் நின்று
உலகிற்கு புகல்வேன் நன்றே…
* * *

நேரு மாமா – சிறுவர் பாடல்

நேரு மாமா எனை கண்டார்
நெருங்கி வந்தை முத்தம் தந்தார்
நேர்மையாக எல்லோரிடமும் பழகு என்றார்
நல்லதையே எப்போதும் நினை என்றார்
நாட்டின் நிலை என்னிடம் கேட்டறிந்தார்
பாட்டுப் பாட எனை விளைந்தார்
பரிவோடு பின் நாளை வருவேனென்றார்
கரும்பாய் மனதில் நிலைத்திட்டார்
கனாவிலிருந்தே நொடியில் கலைந்து சென்றார்.
ஃஃஃ

மகாத்மா.

மகாத்மா!… மகாத்மாவே இந்த வார்த்தையை நினைக்கும் தோறும்
மனதில் மகிழ்ச்சியும் உள்ளத்தில் எழுச்சியும் தோன்றுகின்றது
மண்ணுலகின் மாந்தனாய் பிறந்து விண்ணுலகின் தேவனாய் விளங்குகின்றாய்
மண்ணுள்ளவரை இனி உனை மறவோம்! மறவோம்! மறவோம்!

இப்புண்ணிய பூமியின் புகழ் மறைத்த பரங்கி யனை
இப்பார் புகழும் அகிம்சை வழிநின்றே விரட்டி விட்டாய்
இப்புவி உள்ளளவும் விந்தியமும் இமயமும் உன்புகழ் சொல்லும்
இயன்ற மட்டும் கங்கையும் காவிரியும் உன்புகழ் பாடும்.

வரிநீக்க தண்டியிலே உரிமை கொண்டே உப்பு செய்தாய்
வான்புகழ் உன் புகழை அங்கே ஏற்றி விட்டாய்
வந்த தொல்லை வென்றே எங்கும் ஏற்றம் கொண்டாய்
வழுவாமல் இன்றும் இப்புவி உன்புகழ் பாட விட்டாய்

அதர்மம் தோன்றும் போது அதையழிக்க நான் பிறப்பேனென்று
அகிலத்தை வாயில் காண்பித்த கண்ணன் மாய மன்னன்
கீதையிலே சொன்னதுபோல் நீ பிறந்தாயென்றே நான் எண்ணுகின்றேன்
இதையே எப்போதும் இயம்புகின்றேன் இனியிங்கு எப்போது நீபிறப்பாயோ?!…
ஃஃஃ
இவன் : மா. கலை அரசன்

உன் நினைவுகள்…


ஐந்து வயதில்
நாயை கல்லெரிந்தபோது
தவறென்று சுட்டித் திருத்தி
பிற உயிர்மீதும்
அன்புகொள்ளச்செய்து
உன் ஜீவகாருண்ய முகம் காட்டினாய்.

அருவாள் கொண்டு
மரம் வெட்டியபோது
உடல் கிள்ளி
மரத்திற்கும் வலிக்குமென்றாய்.
மரங்களை நட்டு
வளர்க்கச் செய்தாய்
பசுமைக்கு தோழனானாய்.

பாதையில் கிடந்த
முள் விலக்காது நடந்த போது
அதை நீயே விலக்கிவிட்டு
இனிவரும் காலம்
அதைச்செய்ய அறிவு தந்தாய்
எதிரிக்கும் நன்மை செய்யச்சொல்லி
மனிதம் வளர்த்தாய்.

இரட்டை வனவாசங்களை
அரேபியாவில் கழித்த போதும்
பாலைவனத்திலும் – என்றும்
உன் பெயர் சொல்ல
சோலைவனத்தை
உருவாக்கிவிட்டே வந்தாய்.

அப்பா!…
அறுபதாண்டுகளுக்கு முன்
காணியாறு விளையில்
நீ வைத்த மரங்கள்
சந்ததிகளுக்கும்
உன் பெயர் சொல்லும்…

நீ
பாறையில் செதுக்கிய
உன் பெயர் போலவே…
உன் நினைவுகளும் – என்றும்
எங்களோடு நிலையாக.

ஃஃஃ
Already posted in காணியாறு on FRIDAY, AUGUST 11, 2006
இவன்: மா.கலை அரசன்
ஃஃஃ

பாரதி!…

ஓ…
பாரதி!…
உன்னைப் பற்றி
நான்
என்ன எழுத முடியும்?!

நீ
ஆகாயச் சூரியன்.
நானோ…
மிகச்சிறு மின் மினி!…

ஒன்று மட்டும் நிச்சயம்
நான் மட்டுமல்ல
வரும் சந்ததியும்
உன்
கவிதைச்சூட்டில்
குளிர்காய்வோம்.

உன் பெயரையும்
உச்சரிப்போம்…
தமிழ் உச்சரிக்கப்படும் வரை.
ஃஃஃ

By மா.கலை அரசன்.