விட்டில்பூச்சி

அந்தி சாயும் வேளையிலே
………அமைதிமாய்க்கும் நோக்கத்திலே
வந்து வந்து விட்டில்பூச்சி
………தன்னிசை பாடும்

இரவு வரும் வேளையிலே
………அழகு சட்டையிலே
வரவு நோக்கும் கண்போலே
………வண்ணஓட்டைகளை தீட்டும்

தூக்கம் கொள்ளும் நம்மேலே
………துள்ளிதுள்ளி ஓடும்
பக்கம்வந்து தன்கால் முள்கொண்டு
………முத்தமொன்று பதிக்கும்.

சட்டிபானை அனைத்திலும் சென்று
………உணவுசுவை பார்க்கும்
பெட்டியுள்ளே இருக்கும் பொருள்
………அனைத்தும் கெடுக்கும்

தீ கண்டு மகிழ்ச்சியிலே
………துள்ளிதுள்ளி குதிக்கும்
தீயின் பசிக்கு இறையாக
………தன்னையோ கொடுக்கும்.

ஃஃஃ

நேரு மாமா – சிறுவர் பாடல்

நேரு மாமா எனை கண்டார்
நெருங்கி வந்தை முத்தம் தந்தார்
நேர்மையாக எல்லோரிடமும் பழகு என்றார்
நல்லதையே எப்போதும் நினை என்றார்
நாட்டின் நிலை என்னிடம் கேட்டறிந்தார்
பாட்டுப் பாட எனை விளைந்தார்
பரிவோடு பின் நாளை வருவேனென்றார்
கரும்பாய் மனதில் நிலைத்திட்டார்
கனாவிலிருந்தே நொடியில் கலைந்து சென்றார்.
ஃஃஃ

பூச் செடி.

பூச்செடியாம் பூச்செடி – இது
அப்பா வாங்கித்தந்த பூச்செடி

புத்தம் புதுப் பூச்செடி
பூவை சுமக்கும் பூச்செடி

நட்டு வைத்தேன் நானுமே
நன்றாய் வளர வேண்டுமே

காலையிலே எழுந்த உடன்
நானதற்கு நீர் கொடுப்பேன்

நன்றியோடு முகமலரந்து – அது
நல்வாசமுள்ள பூ கொடுக்குமே….

ஃஃஃ

ரோஜாச் செடி.

ரோஜாச்செடியே ரோஜாச் செடியே
……..நீ என்னப் பேசுகின்றாய்
நீ நித்தம் பூத்தே
……..சுவாசத்தில் வாசம் வீசுகின்றாய்
இரவில் வந்தே பனியும்
……..உன்னை முத்திச் சென்றதுவோ
அதிகாலைத் தென்றல் தினமும்
……..மெல்லத் தழுவிச் சென்றதுவோ

மலரைச் சுமக்கும் நீயே
……..ஏன் முள்ளைச் சுமந்தனையோ
மானம் காக்க முள்
……..கொண்டு உன்னைக் காத்தனையோ
மென்மையின் இலக்கணம் உந்தன்
……..பூவிதழ் நீஇதை அறிவாயோ
பெண்மையின் மென்மை உந்தன்
……..இதழால் அறிவோம் தெரிவாயா?…

ஃஃஃ

இவன்: மா. கலை அரசன்.

அ..ஆ..கவிதை – 3 (நீதி நெறி)


அன்பு பெருக்கு
ஆசை சுருக்கு
இன்னல் ஒடுக்கு
ஈகை பெருக்கு
உழைத்து வாழ்
ஊழ்வினை நீக்கு
எளிமை பேண்
ஏமாற்றம் தவிர்
ஐயம் அகற்று
ஒற்றுமை வளர்
ஓர்குலம் என்றாக்கு
ஔவை போற்று
அஃதே நன்று.

ஃஃஃ

பட்டுப் பூச்சி


பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி – நீ
எங்கிருந்து வந்தாயோ
நல் மழை நாளில்
வானிருந்து வீழ்ந்தாயோ
வீழ்ந்ததாலே சிவந்து – ரோஜா
இதழ்போல் ஆனாயோ
சிறார் எங்களோடு மகிழ்ந்து
விளையாடிச் செல்வாயோ.

-o0o-
நட்புடன்,
இவன்: மா. கலை அரசன்.

ஆட்டுக்குட்டி


ஆட்டுக்குட்டி நல்ல ஆட்டுக்குட்டி அழகான ஆட்டுக்குட்டி
துள்ளித் திரியும் ஆட்டுக்குட்டி இலைதளைகள் தின்னும்குட்டி
சின்னச் சின்ன கால்களாலே குதித்தோடும் ஆட்டுக்குட்டி
பயமரியாச் சின்னக்குட்டி சிறுசேட்டைச் செய்யும் குட்டி.

எங்கஊரு மலைக்கு தினம் சென்று வரும்
முள்மீதும் தாவியேறி சிறு இலையை கடித்துத்தின்னும்
குளம் தேடி ஓடிச்சென்று நன்நீரைப் பருகிவரும்
நிழல் பார்த்து சாய்ந்துகொண்டு மெல்லமாய் அசைபோடும்

அம்மாவை தவிக்கவிட்டே சிலநேரம் மறைந்து கொள்ளும்
அண்டைவீட்டு பிள்ளைகளை ஓட்டம் காட்டி தளரவைக்கும்
மேய்ச்சலுக்கு செல்கையிலே நரியினை கண்டு விட்டால்
மேய்ப்பனிடம் வந்து விடும் ஆபத்தை வென்றுவிடும்
ஃஃஃ

இவன்: மா.கலை அரசன்.

பொன்னன் வந்தான் தெருவினிலே..

rose-dance.gif
பொன்னன் வந்தான் தெருவினிலே
பொசுக்கும் ஒளிதான் விழியினிலே
வஞ்சம் கலந்த நெஞ்சினனே
வன்முறை செய்வதில் வல்லவனே!.

கண்டனன் நாயை தெருவினிலே
கல்லை எடுக்க குனிந்தனனே
கண்ட நாயும் ஓடியதே
கடமையென்றே ஓடினன் பின்னே!!.

கல்முள் தாண்டி ஓடினரே
கல்தடுக்கி விழுந்தனன் பொன்னனுமே
பல்லொன்று வீழ எழுந்தனனே
கல்லும்பார்த்து சிரித்தது அவன்முகமே!!!.

ஃஃஃ
எழுதிய நாள் : 25.09.1989.
இவன் : மா. கலை அரசன்.
ஃஃஃ

சின்னக் குழந்தாய்…

சின்னக் குழந்தாய் சின்னக் குழந்தாய்
………ஒரு சொல் கேட்டிடம்மா
கதிரவன் எழும் முன்னே – தினம்
………நீ காலையில் எழுந்திடம்மா
புறத்தூய்மை பேண நன்றாய் நீயும்
………குளிர் நீரில் குளித்திடம்மா
அகத்தூய்மை பேண அனுதினமும்
………இறைவனை மனதில் நினைத்திடம்மா.

நொடிப் பொழுதும் தாமதமின்றி – தினம்
………பள்ளி சென்று சேர்ந்திடவேண்டும்
நல்ல நண்பர் குழாம் உனைச்சுற்றி
………பள்ளியில் நீ அமைத்திட வேண்டும்.
கற்றுத்தரும் ஆசானை ஆண்டவன் போல்
………நாளும் மனதில் நினைத்திடவேண்டும்.
கற்ற கல்வி வழிநின்று – தினம்
………நி வாழ்வில் உயர்ந்திடவேண்டும்.

வளர்ந்து வரும் உலகில் சிறந்திட
………கணினியைக் கற்று தேர்ந்திடவேண்டும்
உலகத்தின் நடப்பை எல்லாம் – நீ
………வலைத்தளத்தில் அறிந்திட வேண்டும்
எவ்வுயரம் வளர்ந்திட்ட போதும் – நீ
………பழமையை போற்றி பேணிடவேண்டும்
அன்னை தந்தை ஆசான் பேணி
………தாய் மொழியை வளர்த்திடவேண்டும்.

******************************
Already Posted In காணியாறு
By மா.கலை அரசன்
******************************

பாப்பா! பாப்பா! பாரம்மா!…

பாப்பா! பாப்பா! பாரம் மா!
பச்சைப் பசுங்கொடி பாரம்மா.

ஆடும் மயிலை பாரம்மா – நீ
அழகு தமிழில் பாடம்மா.

கூவும் குயிலை பாரம்மா – தினம்
பூப்போல் நீயும் சிரித்திடம்மா.

அழகு அன்னம் பாரம்மா – நீ
அன்பாய் என்றும் பழகிடம்மா.

பச்சை பசுங்கிளி பாரம்மா – அது
பிள்ளை மொழி பேசுதம்மா.

தாவும் கௌரிமான் பாரம்மா – நீ
தன் மானம் காத்திடம்மா.
*********
எழுதிய நாள்: 23.08.1988
*********
By மா.கலை அரசன்.