தாய்மொழி பேசு…

குயில்கள் இரண்டு சந்திக்கையில் குக்கூவென்று கூவக்கேட்டேன்
காகம் இரண்டு சந்திக்கையில் காக்காவென்று கரையக்கேட்டேன்
எந்நாளும் அவை இந்நிலை மாறாதிருக்கக் கண்டேன்
எத்தேசம் சென்றிடினும் எந்நாளும் இதையே கண்டேன்.

நீமட்டும் உன்னியல்பு எங்கனம் மறந்தாய் தமிழா?!…
தாய் மொழியை துச்சமென்றா துறந்தாய் தமிழா?!…
சென்னையிலே இருதமிழன் சந்தித்தால் “ஹவ் ஆர் யூ”, என்றாய்
மும்பையிலே இருதமிழன் சந்தித்தால் “ஹைசே ஹை”, என்றாய்.

தாய் மொழி பேசுவது தவறென்றா நினைத்தாய்?…
உன் தாய்க்கே இழிநிலையை ஏன் கொடுத்தாய்?…
இரவல் சட்டை அணிவதை பெருமையென்றா நினைத்தாய்
கந்தலானாலும் சொந்தச்சட்டை பெருமை யென்பதெப்படி மறந்தாய்.

உப்பிட்டாரை மறப்பதுவே தவறென்று எண்ணும் போது
உயிராய் உணர்வுதந்த தாய்மொழி மறப்பது சூது
உணர்வின்றி உயிர் இருப்பதில் என்ன மேன்மை
உணராது தாய்மொழி மறந்திட்டால், தமிழாநீ பொய்மை.

ஃஃஃ
இவன்: மா. கலை அரசன்.

தமிழ்த்தாய் வாழ்த்து.


தமிழ்த்தாயே! தரணி யெல்லாம்
புகழ் பரப்பும் பெருந்தாயே!!
தற்கரீதியில் யானுனை அறியேன்
என்றாலும் உள்ள எண்ணமதை
தாய் உந்தன் பாதத்தில்
சாற்ற நெஞ்சமதில் நினைக்கின்றேன்
தனையன் பிழை பொருப்பாய்!
தன்னலமின்றி நீ செழிப்பாய்!!
ஃஃஃஃ

இவன்: மா.கலை அரசன்.

மழையின் இசை…

வானில் கரு முகில் இடித்து
மின்னல் விட்டு விட்டு கண்சிமிட்ட
பண்ணோடு மழை பாரில் பொழிய
விண்ணென்று தமிழிசை பாடிற்று.

தமிழுக்கு நீ தாழ்ச்சியடி!….

வான வீதியில் வட்டமிட்டு நடம்புரியும் வெண்ணிலாவே
போன தலைமுறையும் நீ கண்டனையோ வெண்ணிலாவே
தரங்கெட்ட மனிதர் அப்போது வாழ்ந்தனரோ வெண்ணிலாவே
தரமான மாந்தர்களே வாழ்ந்தனரென்று சொல் வெண்ணிலாவே.

பூமியில் உனக்கு நிகர் ஏதுமில்லையடி வெண்ணிலாவே-எம்
தமிழுக்கு நீ தாழ்ச்சியென்று உணர்வாய் வெண்ணிலாவே
கவிபாடும் எனக்கு காவியத் தலைவியடி வெண்ணிலாவே
புவி உள்ளமட்டும் உன்னெழில் பாடும் வெண்ணிலாவே

பெண்ணுக்கு உனை உவமை சொல்வார் வெண்ணிலாவே
தண்டாமரையின் எழில் உன்னெழிலுக்கு நிகராமோ வெண்ணிலாவே
பண்பட்ட பெண்மையும் உன்னெழிலுக்கு அடிமையடி வெண்ணிலாவே
பண்பாடும் தமிழுக்கு நீ தாழ்ச்சியடி வெண்ணிலாவே.
****************************
எழுதிய நாள்: 13.07.1989.