மணமக்கள் வாழ்த்து.

மணமகன் அந்தக் குலமகன் வான்பொழியும் நீராகட்டும்
மணமகள் அந்தக் குலமகள் பொறுமையில் பூமகளாகட்டும்
இருவரும் இணையும் இல்லறமெனும் நல்லறம் இனி
இருவரையும் இணைத்து பிரிவறியா செம்புல நீராகட்டும்
இருவரும் இணைந்த ஒருமன சிந்தனையால் இனிவரும்
சந்ததியும் உய்த்து நலம்காணட்டும் நாட்டின்நலன் பேணட்டும்.

ஃஃஃ

Advertisements

அதே இடத்தில்….

நீயும் நானும்
அமர்ந்து பேசிய ஆற்றுப்பாலம்
இன்றும் இருக்கின்றது,
சில சிதிலங்களோடு
அதே இடத்தில்…

நீயும் நானும்
ஓடிப்பிடித்து விளையாடிய தெருக்களும்
விரிந்து கிடக்கின்றது
மெருகேற்றிக் கொண்ட சிமிண்ட் பூச்சோடு
அதே இடத்தில்…

நீயும் நானும்
குரங்கு தாவி விளையாடிய மரங்களும்
வானம் பார்த்து நிற்கின்றது,
காய்ந்து போன சில கிளைகளோடு
அதே இடத்தில்…

நீயும் நானும்
நீந்திவிளையாடி நண்டுபிடித்த குளமும்
பரந்து கிடக்கின்றது,
உலர்ந்து போன செம்மண்ணோடு
அதே இடத்தில்…

நண்பனே
நீயும் நானும்
மாறாத நட்போடு இன்றும்
ஆனால்
நீ எங்கோ ஒரு மூலையில்
நானும் இங்கொரு மூலையில்.

ஃஃஃ