புத்தாண்டென்னும் புதுத்தளிர்…

உலக விருட்சத்தின்
பழுத்த இலை
உதிர்ந்து
புதிய இலைக்கான
தளிர் துளிர்க்கும் நாள்…

புதிய தளிருக்கு
பன்னீர் தூவி வரவேற்போம்…
விருட்சத்தின்
நிழலில் நாளை இளைப்பாரலாம்…

உதிர்ந்த இலைகள்
விருட்த்தின் வேர்களுக்கு உரமாகட்டும்…
அதன் வீரியம்
புதிய தளிருக்கு தெம்பூட்டலாம்…

தழுவும் தென்றலையும்
வீசும் புயலையும்
முத்தமிடும் மழைத்துளிகளையும்
சுட்டரிக்கும் சூரியக்கதிர்களையும்
நாளும் சந்த்தித்துத்தான்
விருட்சம்
ஞாலத்தில் காலத்தை நகர்த்துகின்றது…

பழகிக்கொள்வோம் நாமும்…
சத்தோசத் தென்றல் தழுவுகையில்
மலராய் மணம் வீசவும்…
துயரப் புயலில் சிக்கும் போது
நாணலாய் நிலைத்து நிற்கவும்…
இன்ப மழையில் நனைகையில்
ஏங்கித்தவிப் போரின் தாகம் தணிக்கவும்…
துக்கத்தின் தீயில் வேகும் தருணத்தில்
தங்கமாய் மெருகேற்றிக்கொள்ளவும்…

நாளைய விடியல் நமக்காகத்தான்…
நாமும் நாலுபேருக்கு நிழல் தரலாம்
விருட்சமாய்…
ஃஃஃ

Next Sunday!…அடுத்த ஞாயிறு!…


ஒவ்வொரு
ஞாயிறு கடக்கும் போதும்
“வரும் ஞாயிற்றுக் கிழமை கண்டிப்பாக”…என்று
இதையே கிளிப்பிள்லையாய் சொல்லுகின்றாய்
வேறு வழியின்றி வேதனையோடு சிறுபிள்ளையாய்
நானுமதை ஏற்கின்றேன்.

திங்கள் இன்று கடந்து விட்டது
ஆனாலும் நடக்கவில்லை
நீ மருத்துவமனை அழைத்துச்செல்கின்றேன் என்று
சொன்னது மட்டும்.

கோவில் செல்லலாம் என்று சொல்லியிருந்தாய்
விடியுமுன்னே அவசர அழைப்பென்று சென்றாய்
முடியும் தருவாயில் இன்றைய செவ்வாய்!…
வணங்கிக்கொள்கிளேன் வழக்கம்போல் உன்னையே தெய்வமாய்.

செவ்வாயில் சென்ற நீ
புதனில்தான் என்முன் உதயமானாய்…
பள்ளிக்குச்சென்று குழந்தைகள் படிக்கும் நிலை
பார்த்துவரலாம் என்றேன்
ஏமாற்றத்தையே பரிசாய்த் தந்து
நீயே சென்றுவா என்றாய்…
நீ என்ன செய்வாய்?…

சென்ற வியாழனே கேட்டுவிட்டான் நம்பிள்ளை
“அப்பா என்னை பார்க்கவேயில்லை
என்னோடு சண்டையா?, அம்மா”, என்று
என்ன சொல்லி புரியவைப்பேன் அவனுக்கு
இந்த வியாழனும்
உன்னால் அவனை சந்திக்கமுடியவில்லை எனும்போது!…

வெள்ளி வந்ததில் சின்ன சந்தோசம்
மாதங்கள் பல கடந்த பின்னே
ஆலய தரிசனம் கிடைத்ததின்று.
அதிகப்படியான சந்தோசத்திற்காய்
ஞாயிற்றுக்கிழமைக்கு விடுமுறை கிடைத்துவிட்டதென்றாய்…
நிலைக்குமா பார்ப்போமென் சின்ன சந்தோசம்?!….

வழக்கம் போல்,
பணியென்று
சனியின்றும் சென்றாய்…

ஞாயிறு புலர்ந்து
நீ சொன்ன ஞாயிறு மலர்ந்துவிட்டது
என் ஞாயிறு உனைத்தான் காணவில்லை!…

கணப்பொழுதில் வருவாயென்றே
கண்கொத்திப்பாம்பாய் காத்திருக்கின்றேன்
கண்ணாளா உன் விடுப்பு என்னானது?
விடுப்பு வாங்கி சென்றதோ?!…

இதுவரை எத்தனை ஞாயிறை
எனக்காக இல்லை நமக்காக
ஒதுக்கியிருப்பாய்?…
யோசித்துப்பாரேன்…

ஊருக்காய் பணிசெய்தாய்…
இரவிலும் பகலிலும் காவலென்றாய்…
என்னை இங்கே காக்க விட்டு?!…

மக்களுக்காய் காவல் என்றாய்
மந்திரிக்கும் காவல் நின்றாய்
மாண்டவர்க்கும் காவலிருந்தாய்
என்னை மட்டுமே உனக்காக காக்கவிட்டாய்.

இனியேனும் உறுதியாய்ச் சொல்வாயா
எனக்கான நேரத்தை எப்போது
ஒதுக்கித் தருவாயென்று?
உனக்கான நேரத்தை நீயே அறியாத போது
எனக்காய் உன் நேரத்தைக் கேட்பது மடமைதான்…

நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன்…
உன்மேல் உயிரையும் நம்பிக்கையும் வைத்து…
அடுத்த ஞாயிறுக்காய்…

ஃஃஃ