மழை நாளில்…

தூறல் விட்ட வானம்
துடைத்து வைத்த சிலேட்டாய்…
திரவம் தோய்ந்த உடலாய்
தரையெங்கும் செம்புலம் கலந்தநீர்.

வானம் ஓய்ந்த பின்னும்
வடியும் துளிகளோடு மரஇலைகள்;
வரண்ட பூமிக்கு சொட்டுச்சொட்டாய்
வதனம் குளிர வடிக்கும்நீர்.

நனைந்த உடலை உலர்த்த
நளினமாய் உடல்சிலிர்க்கும் காகம்;
நண்டுகள் சுறுசுறு குறுநடையிட்டு
நல்லதோர் வளை தேடும்.

மழைமுன் வெயில்காய்ந்த – எருமை
மாடுகள் சொற்கமென குட்டைபுகும்;
மத்தள ஓசையெழ தொளி
மண்ணில் புரண்டு ஆனந்திக்கும்.

எங்கிருந்தோ முளைத்திட்ட ஈசல்கள்
ஏகபோகமாய் பறந்து களிக்கும்
ஏங்கி சிறகுகள் உதிர்த்து
ஏதுமற்றதாய் மண்ணில் கிடக்கும்.

தூறலில் குளித்தெழுந்த காற்று
துவைத்து வைத்த வெண்துணியாய்
தூசுநீக்கி மண்ணின் மணம்சுமந்து
தூயவனாய் வருடிச் செல்லும்.

வடிந்தோடும் தெரு நீரை
வாவியாய் பாவித்து மகிழ்ந்து
வடிவாய்செய்த காகிதக் கப்பலை
வாண்டுகள் மிதக்கவிட்டு இரசிக்கும்.

ஓடையில் மலைவெள்ளம் வரவுநோக்கி
ஓடிவோடி கால்கள் சோர்ந்திருக்கும்
ஓடிவெள்ளம் வரும்போது – உற்றுப்பார்க்க
ஓய்தலின்றி கண்கள்மட்டும் பூத்திருக்கும்.

நனைந்து போன மண்சுவர்கள்
நமத்துப்போய் இப்போதா, எப்போது?
நிலம் பார்த்து வீழ்வதென்று
நாதியற்ற ஏழைபார்த்து கேட்கும்.

பொத்தல் ஓலைக் குடிசையில்
பாத்திரமேந்தி நீர்பிடித்த ஞாபகம்
பட்டணத்து தட்டுவீட்டு ஜன்னலோரம்
படுத்திருக்கும் மழைநாளில் வந்துபோகும்.

ஃஃஃ

கிராம வாழ்க்கை.(அ,ஆ…கவிதை-29).

அல்புலர்ந்து அரும்பு மலரும் அதிகாலை
ஆலிலைமீது தூங்கியப் பனித்துளி தூர்ந்திடும்
இசையோடு புள்ளினம் ஏகிடும் ஆகாயம்
ஈடற்ற ஓவியமாய் ஒளிர்ந்திடும் கீழ்வானம்
உழுபடை தோளேந்தி உழுநர்படை காடேகும்
ஊழைச்சதை கூட்டமொன்று ஊர்மன்றம் கூடும்
எட்டுத்திக்கு கதைகளையும் ஏகமாய் பேசும்
ஏதியமாய் சிறார்படை தெருவெங்கும் ஓடிவிளையாடும்
ஐரேயம் குடித்துமீழும் ஒரு கூட்டம்
ஒப்புமையில்லா கிராம வாழ்க்கை மனதில்
ஓசனித்தல் செய்யும் போது
ஔவியம் கொள்ளும் நரகநகர வாழ்கை.

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஓடை மணல்…

மணலற்று எலும்புகளாய்…
பாறை துருத்தி நிற்கும்
என் கிராமத்து
பழகிய ஓடையில்
கால் பதித்து நடக்கின்றேன்
முட்களாய் கற்கள் குத்திய போதும்…
பஞ்சு மெத்தையாய்
இதம் தந்தது
என் பழைய நினைவுகள்.

அன்று
மழை ஓய்ந்து
நீர் ஓடி வடிந்த பின்னும்
சிறு பள்ளம் தோண்டி
என் நீர்த்தாகம் தீர்த்ததுண்டு
விளையாடிக் களித்த
கழைப்பை மறந்ததுண்டு…
இன்று எங்கே மறைந்தது?
அந்த ஓடை மணல்…

பள்ளி விட்டு திரும்புகையில்
சொல்லி வைத்து நண்பர்குழாம்
நாளும் கூடி
கபடி ஆடி சாயும் போது
எங்கள் உடல் தாங்கி காத்ததுண்டு…
இன்று எங்கே காணாமல் போனது?
அந்த ஓடை மணல்…

பவுர்ணமிப் பொழுதில்
சிறார்கள் நாங்கள் ஒன்று கூடி
பழங்கதை கூறிச் சிரிக்கவும்
மல்லாக்கப் படுத்து
வான்முகம் பார்க்கவும்
எங்கள் முதுகைத் தாங்கியதுண்டு
இன்று எங்கே கவர்ந்து செல்லப்பட்டது
அந்த ஓடை மணல்?…

தவறி விழுந்தாலும்
காயம் படாதென்பதற்காய்
எருமை சவாரி செய்து பழக
நான் நேசத்தோடு
அன்று தேர்ந்தெடுத்தது…
இன்று எங்கே மறைந்து போனதுய
அந்த ஓடை மணல்…

என் வெற்றுப்பாதம்
நடந்த போது…
பஞ்சுப்பொதியாய்
கம்பளம் விரித்தது அன்று…
காலணி அணிந்த பாதம் கூட
பரிதவிக்கும் வண்ணம் விட்டு விட்டு
இன்று எங்கே சென்றது?
அந்த ஓடை மணல்…

இன்று
காட்டு வெள்ளத்தில்
அடித்துப் போயிருக்கலாம்…
காற்றில் கூட
பறந்து போயிருக்கலாம்!…
காசுக்காக
களவாடப்பட்டிருக்கலாம்…
அந்த ஓடை மணல்!…

ஆனால் யார் உளர்?..
அந்த ஓடை மணல் தந்த
என் பழைய நினைவுகளைக்
களவாட?!…

ஃஃஃ

தவழ்ந்த நினைவுகள்.

வருடங்கள் பல கடந்து விட்டன…
வாசல் கதவு எந்த பக்கம் என்பது
மறந்து விடவில்லை இன்னும்.
என் மழலைக்காலத்தில்
என்னை தாங்கிநின்ற தாய் நீயும்தான்
மண்ணில் மரித்துப்போகும் வரை
உன் எண்ணங்கள் நிலாடிக்கொண்டிருக்கும்…

கார்கால மயிலாக மழைக்காலங்களில்
ஊர் பிள்ளைகள் குதூகலிக்க
வீட்டில் சிறைபட்ட நானும்
சிறுதோகை விரித்து என்னுள்ளே ரசிக்க
பொத்தல் கூரை வழி
சிறுதூரல் பன்னீராய் தெளித்ததை
எந்த கணத்தில் மறப்பேன்?…

கீற்றே கூரையாய் நின்ற போதும்
ஊர்போற்ற வாழ்ந்தோம்.
மாற்றான் கண்பட்டதாலா
நீ தீயில் தேகம் வெந்தாய்?…
பிரிய மனமின்றிதான் பிரிந்து வந்தோம்
வாழும் இடம் வளமை என்றாலும்
தவழ்ந்த பருவம் உன்னிலன்றோ?…

கைவிட்டு உன்னை கழுவிட நினைத்ததில்லை
விதி செய்த கொடுமை
உன்னை கைமாற்றி விட்டது தான்.
விலை செய்தபோதும்
என் கதைமுடியும் மட்டும்
மனதில் மணம் வீசிக்கொண்டே இருக்கும்
உன்னில் நான்
தவழ்ந்து விளையாடிய தருணங்கள்.
ஃஃஃ