சேராயோ உன்தாள்?!…

aranganathar.jpg


அரங்கனே அழகனே பாற்கடலில் பள்ளிகொண்டு
ஆனந்தமாய் அடியாற்கு நற்கதியை அருள்வோனே
இம்மையும் மறுமையும் இல்லாது ஏழுலகாளும்
ஈடில்லா ஈகையனே குசேலரின் ஒட்டினனே
உலகனைத்தும் வாமனனாய் மூவடியுள் அளந்தவனே
ஊழிகள் தோறும் ஊழிமுதல்வனாய் திகழ்பவனே
எஞ்ஞான்றும் எஞ்சலின்றி எளிஞர் எழுதற்கு
ஏமாப்பு செய்து காத்தருளும் எம்மானே
ஐக்கியநாதனே உன் அடிமுதல் முடிபார்த்து
ஒக்கயென் ஐம்புலனடக்கி உன்வாசல் கடக்கின்றேன்
ஓணப்பிரானே பாபம் ஒரிஇ
ஔலியா யென்னை சேராயோ உன்தாள்?!…

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

நானென்பதை மறக்க வேண்டும்….

வித்தகனே வேதத்தின் உருவே சத்துவமே
தத்துவ தருவே அடியார்க்கு நிழலே
பித்தரை காக்கும் பிறை ஒளியே
இத்தரை காக்க போற்றுவேன் உனையே.

நாய்போல் நாளும் நன்றியோடு உலவ
……..நல்லருள் நீயெனக்கு புரிதல் வேண்டும்
பேயாய் நான் பூஉலகில் அலைந்தாலும்
……..புழுவிற்கும் துன்பமின்றி இருந்திடல் வேண்டும்
சேயாய் இனியொருமுறை பிறந்தாலும் என்
……..அன்னையின் மடியிலேயே தவழ வேண்டும்
காயாய் உரு நீயெனக்கு கொடுத்தாலும்
……..நெல்லிக்காயாய் உரு கொடுத்திடல் வேண்டும்

பூவாய் எனைபடைத்தால் உன்னடி வரவேண்டாம்
……..வண்டிற்கு தேன்கொடுத்து மகிழ்தல் வேண்டும்
தேவா இன்பவாழ்வு எனக்கு வேண்டாம்
……..உழன்றுமாயும் ஏழையின் துன்பமுணர வேண்டும்
நோவா உடல்வேண்டாம் நோயில் வாடும்
……..ஏழையின் துன்பமுணரும் மனம் வேண்டும்
கோயிலில் உன்பணிசெய்ய வரம் வேண்டாம்
……..வாடிடும் உயிர்க்கு வழங்கும் கை வேண்டும்

பாடிபாடி உனைத்தொழுதிட நல்குரல் வேண்டாம்
……..வாடிடும்ஏழைக்காக வாதிடும் திறம் வேண்டும்
கூடிடும்கூட்டத்தில் கைதட்ட கரம் வேண்டாம்
……..கேடுகெட்டோர் எலும்பொடிக்க கரம் வேண்டும்
வேடிக்கை பார்த்துநிற்க விழி வேண்டாம்
……..தீயவரை சுட்டெரிக்க சுடரொளிவிழி வேண்டும்
பேடியாய் அலைந்திட உடல் வேண்டாம்
……..ஓடிஆடி உழைத்துயர்ந்திட உடல் வேண்டும்.

வேலவனே வெம்மை என்நெஞ்சிற்கு வேண்டாம்
……..அதுவஞ்சத்தை விதைக்கும் களமாக வேண்டாம்
காலவெள்ளத்தில் உழலும் சிறுதுரும்பாக வேண்டும்
……..உன்ஞான வெள்ளத்தில் மூழ்கும் மலையாகட்டும்
ஞாலத்தை உணர்ந்தது போலது நடிக்கவேண்டாம்
……..உண்மையைக் கூறி உன்னைவந்து அடையட்டும்
பாலமுருகனே பெருமொழி நீயெனக்கு உரைக்கவேண்டும்
……..நானென்பதை நான் மறக்க வேண்டும்.

……..ஃஃஃ

வந்தருள்வாய் பால முருகனே…

வித்தகனே வேதப் பொருளோனே
சித்தம்தெளி நல் நாயகனே
பந்தமின்றி உல காள்பவனே
வந்தருள்வாய் பால முருகனே

அருக வடிவு உருவோனே
பருக அருள் தருவோனே
முருக நாமத் திருவோனே
வருக உலக கருவோனே

செவ் வேல் உடையோனே
அவ்வைக்கு கனி கொடுத்தோனே
சவ்வை உடல்மூட படைத்தோனே
இவ்வையம் கா புரிவோனே

தந்தைக்கும் உபதேசம் செய்தோனே
எந்தையே அழகுக்கு இலக்கணமானோனே
விந்தைக் குண வேலவனே
பந்தத்தை பழத்திற்காய் துறந்தோனே

உடல் தரு வேலவனே
குடமலை திரு வேந்தனே
திடல் நெஞ்சு படைவீரனே
கடலொப்ப அன்பின் நாயகனே

போற்றிபோற்றி உன்னடி போற்றி
ஏற்றிஏற்றி உன்னெழில் ஏற்றி
முற்றிய பக்தியால் உனையேதூற்றி
ஏற்றுவேன் திருநீரு நெற்றி.

ஃஃஃ

எல்லாம் நீயல்லவா?

அருள் பாடல் நானியற்றி உனைப்பாடவா
முருகா! அன்பர் பணிசெய்து உனைகூடவா
அருகா! அன்பால் உனையெங்கும் நான்தேடவா
திருவான மேனியெங்கும் திரு நீராடவா

உலகத்தின் பொரு ளெல்லாம் நீயல்லவா
கலகத்தின் கரு கூட நீயல்லவா
பலப்பல உயிர்க்கும் நீயே இறையல்லவா
புலனாகா சக்திக்கு நீ கருவல்லவா

விண்ணுக்கும் மண்ணுக்கும் நீ உருவல்லவா
கண்ணுக்கு ஒளியும் உன் அருளல்லவா
பண்ணுக்கு ஒலியின் மூலம் நீயல்லவா
உண்ணாத ஏழைக்கு நீ உணவல்லவா

அன்பு உணராத நெஞ்சுக்கு இரும்பல்லவா
வன்மை சொல்லுக்கு நீ பொருளல்லவா
உன்னை உணராத மனிதற்கும் – நீ
அன்பு காட்டும் இறைவ னல்லவா.
ஃஃஃ

வஞ்சகனே என் இறைவா.

ஓடும் நதியில் உனைக்கண்டேன்
ஓங்கும் மலையில் உனைக்கண்டேன்
பவுர்ணமி நிலவில் உனைக்கண்டேன்
பட்டப் பகலில் உனைக்கண்டேன்
அண்ட வெளியில் உனைக்கண்டேன்
தென்றல் காற்றில் உனைக்கண்டேன்
வீசும் புயலில் உனைக்கண்டேன்
வீணர்களின் பேச்சில் உனைக்கண்டேன்
கொட்டும் மழையில் உனைக்கண்டேன்
குழந்தையின் சிரிப்பில் உனைக்கண்டேன்
துள்ளும் இளமையில் உனைக்கண்டேன்
துவளும் முதுமையில் உனைக்கண்டேன்
நன்மை தீமையிலும் உனைக்கண்டேன்
ஏழையில் கண்ணீர் துளிகளில்மட்டும்
உனைக் காணவிலேலையே
வஞ்சகனே என் இறைவா.
ஃஃஃ

உன் சக்தி! முருகா!! பெரும் சக்தியே!!!


பூட்டனின் பூட்டனும் வணங்கினார்
பூட்டனும் வழங்கினார்-என்
பாட்டனும் வழங்கினார்.

தந்தையும் வணங்கினார் தாயும் வணங்கினார்
தனையனும் வணங்குதல் தான் முறையோ?
எந்தையே! சொல் முருகா!!

எப்பொருளால் உனை யான் வணங்க?
அருளோ வேண்டும்? பொருளோ வேண்டும்?
அறியேன்! புண்ணியனே, நீயுரைப்பாய்!…

நொண்டி நொடம் கூன் குருடு
செவிடு ஊமை படைத்த உனை
எதனால் யான் வணங்க?!…

படைப்பிலேயே உயர்ச்சி தாழ்ச்சி – உலக
வாழ்விலோ ஏற்ற தாழ்வு வைத்த
உனை எம்மொழியால் வணங்க?!…

நயவஞ்சகரை நன்றே வேடம்புனையவைத்து
நல்லவரை பொல்லாராய் ஆக்கிவிட்ட உனை
எங்ஙனம் அழைப்பதென்று செப்பாயோ?!…

வஞ்சகனே! பொய் வடிவே! போக்கிறியே!
பித்தா! பண்பில்லா பாதகனே! என்றே
நான் அழைத்திடவா?! கூறாய்!!

எதுஎது எவ்வாறு நீ படைத்தாலும்
உன்சக்தி என்றும் பெரும் சக்தியே!
முருகா!! பெரும் சக்தியே!!!
ஃஃஃ

இவன்: மா.கலை அரசன்.

நெஞ்சே காண்.

செஞ்சாறு குருதி படையல் வைத்தாலும்
தஞ்சமென இறையடி பணிந்தாலும்-என்றும்
வஞ்சகர்க்கு வையத்தில் அவனருள் கிட்டாது
நன் நெஞ்சே காண்.

ஓர் இறைவன்.

உள்ளம் வேண்டுவது அன்பொன்றே
உலகத்தை வாழ்விக்கும் தெய்வமொன்றே.
உள்ளுணர்வு கொண்டோர்க்கு அருளுண்டாம்
உண்மைக்கு என்றும் உயர்வுண்டாம்.
முருகனென்றும் ஏசுவென்றும் அல்லாவென்றும்
கூறுசெய்வோர் உலகில் பித்தர்களே!
அருளுடையோர் அறிவர் எப்போதும்
இவையாவும் ஓரிறைவன் வடிவென்றே.
—————————————–
எழுதிய நாள்: 11.07.1989