தீபாவளி

தீபாவளி

கடைகள் பல ஆய்ந்து
புத்தாடை எடுத்தாச்சு…

மளிகை பலவகையும்
பலகாரம் செய்ய வாங்கியாச்சு…

சிவகாசி பட்டாசும்
வகைக்கொன்றாய் வாங்கி நிறைச்சாச்சு…

ஆனாலும்,
தீபாவளி நன்நாளில்
என்றோ இறந்த நரகாசுரனை நினைந்து
சந்தோசித்து புத்தாடை தரித்து
வாய் ருசிக்க பலகாரவகை உண்டு
வெடிவெடித்து மகிழ்வதா?…

தினம் தினம் வெடிவைத்து
ஏதுமறியா அப்பாவிகள் உயிர்குடிக்கும்
பாவிகள் செயல்கண்டு துடிப்பதா?…

மனசெங்கும் ஏக்கங்கள் நிறைஞ்சாச்சு
ஏதுமறியா பேதையைப்போல்
எம்மனசும் திகைச்சுப்போய் நின்னாச்சு.

ஃஃஃ
(மாலை முரசு(திருச்சி, தஞ்சை) – தீபாவளி சிறப்பு மலரில் 24.10.2008 பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை)

பரத்தையர்.

அவளொரு வேடந்தாங்கல்
வந்தவரெல்லாம் பறவைகளாய்
தங்கிச் செல்வதால்.

அவளொரு சுமைதாங்கி
கடந்து செல்வோரெல்லாம்
பாரத்தை இறக்கிவைப்பதால்.

அவளொரு தடாகம்
தாகப்பறவைகளாய் ஆண்கள்
காமம் தணித்து செல்வதால்

அவளொரு பாலைநிலம்
பரிவென்ற தென்றல்
வாழ்வில் வருடிச்செல்லாததால்.

அவளொரு பனிப்பிரதேசம்
வசந்தத்தின் தளிர்கள்
வாழ்வில் துளிர்க்காததால்.

அவளொரு இலையுதிர் காலம்
உற்றார் உறவினர் உதரித்தள்ளி
ஒற்றைக் கொம்பாய் நிற்பதால்.

அவளொரு மத்தளம்
வாழ்வின் எல்லாப் பக்கங்களிலும்
துயரத்தின் அடிகளை தாங்குவதால்.

அவளொரு கந்தல்துணி
தவறை யார்செய்த போதிலும்
முள்ளில்விழுந்த துணியாய் பாதிப்படைவதால்.

அவளொரு மிதியடி
பயன்படுத்தி பின்
தூக்கி யெரியப்படுவதால்.

அவளும் ஓர்
உயிருள்ள உணர்வுகளுள்ள பெண்
எப்போதிதை நாமுணர்ந்து மதிப்பது?!…

ஃஃஃ

புரட்ச்சிப் பூக்கள் மலரட்டும்.

ஆறறிவு மனிதன்
ஓரறிவு குறைந்து
ஆட்டு மந்தையென
ஆகாதார் பின்செல்லும்
மடமை ஒழிந்திட
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

பணத்தில் மோகம்கொண்டு
பாசம் துறந்துநின்று
பகைமை வளர்க்கும்
பாதக உள்ளம் நீங்கி
பசுந்தளிரென பாசம் வளர்க்க
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

உள்ளத்தில் குறுகி
உற்றாரோடு பகைவார்த்து
உறவினரை ஒதுக்கிவாழும்
ஊன உள்ளம் நீக்கி
உலகமதை நேசித்துவாழ
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

சொந்தமற்ற பொருள்
சொந்தமாக்கிக் கொள்ள
சிந்தை பிறழ்ந்து
சீர்கெட்டு வாழும்
சிறுவாழ்வு துறந்து சிறக்க
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

கடமையை மறந்து
கள்வனைப் போல்
கண்டவரிடத்தும் பொருள்பறிக்கும்
கயமை உள்ளம் கனிந்து
கண்ணியமாய் வாழ
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

துன்மதியோர் செயல்கண்டு பயந்து
துன்பத்தில் தோய்ந்து நடுங்கும்
துயரநிலை களைந்து
துணிவாய் தலைநிமிர்ந்து
துலாபாரமாய் நாளும் வாழ
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

பாசத்தை பாலாக்கி
பசிபோக்கி வளர்த்த
பாச தெய்வங்களை வெறுக்கும்
பச்சோந்தி மனதைமாற்றி
பாசப்பிள்ளைகள் நாங்களென்று காட்ட
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

தன்னலம் கொண்டு
தரணி நலன்மறந்து கருமியாய் வாழும்
தற்குறி எண்ணம் மாற்றி
தாயாய் எல்லோர்க்கும்
தந்துவாழும் வாழ்வு வாழ
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

உயர்வு தாழ்வு பேதமை
உள்ளத்தில் வளர்த்து
உலகமக்களை பிரித்துப் பார்க்கும்
உதவாத எண்ணமகற்றி
உத்தமராய் யாவரையும் ஒன்றாய்ப்பார்க்க
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

சாதிகள் பலபேசி
சண்டைசெய்து சிறுத்துமாயும்
சாக்கடை வாழ்வு அகற்றிட
சபதம் மனதில் ஏற்று
சான்றோராய் சிறக்க
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

மதங்கள் கூறும்
மாட்சிமை மறந்து
மானிடம் துறந்து
மதம்பிடித்து சண்டையிட்டு மாயும்
மனங்கள் மாற
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்..

ஃஃஃ

இலையின் பயணம் – இன்னொரு ஜனனம்.

இரவின் பனியை உண்டு
இன்புற்றிருந்தது இறுதி நாளின்
பயணத்தை எண்ணி;
உதிரப்போகும் சருகொன்று…
இன்பம் தானா உதிர்வதில்?!…

துளிர்த்ததுமுதல்
உதிரும் நாள் வரை உழைத்தாகிவிட்டது…
உயிர்கள் சுவாசிக்க ஆக்சிஸனை
கொடுத்தாகிவிட்டது…

உதிர்தலென்பது உயிர்விடலா?!…
இல்லையில்லை…
இலையின் வாழ்க்கை சுழற்சின்
இன்னொறு பக்கம்…

கிளையொடு ஒட்டிய உறவுகள் முடிந்து…
ஊட்டம் கொடுத்த
பூமியோடு உறவாட
இனிப் புதுப்பயணம்…
இன்னொறு ஜனனம்…

பயணத்தின் பாதை தீர்மானிக்க
இலைக்கு ஆசைதான்…
முடிக்கும் வல்லமை காற்றின் கைகளில்!…

உதிரும் வேளை..
இதமாய் வருடிச்செல்கின்றது தென்றல்…
பழகியநாட்களின் பரிவு
தென்றலின் குளிர்ச்சியில்…
இனியிருவரும் தொடுதல் சாத்தியமோ?!…

தாயின் கருவறைவிட்டகலும் சேயாய்
காம்பைவிட்டகலும் முதிர்ந்த இலை…
இது இன்னொரு ஜனனம்…
பாதை தீர்மானித்து
மெல்ல பறக்கின்றது
மரத்தின் பாதம்தொட்டு
புதுப்பயணம் தொடங்க…

விதியின் கைகள் வலியது…
இதுவரை வருடிச்சென்ற காற்றின் கைகள்
இப்போது வலியதாய்…
திசைமாற்றி தூக்கியெறியப்படும் இலை…
இலையின் திசையை காற்றே தீர்மானிக்க
இலையின் பயணம் இனி எங்கெங்கென்று
யார் அறிவார்?!…

ஃஃஃ

இளம் சூரியன்…

இளம்சூரியன் நீ உனைமறந்து வீணே சுழல்கின்றாய்
வளம்நிறைந்த நின்சிந்தனையை வீணே சிறகொடிக்கின்றாய்
களம்காண போலிப் பயம்கொண்டு சுணங்கித் திரிகின்றாய்
இளையபாரதத்தின் மணிமகுடம் நீயென்பதை ஏனே மறக்கின்றாய்

திரைகளுக்கு முன்னே மண்டியிட்டு பிறைநிலவாய் குறைகின்றாய்
கரைபட்ட மனிதனையும் தலைவனென்று போற்றி ஏற்றுகின்றாய்
மரைகழன்ற அறைகுரைக்கும் அரசியல் சாயம் பூசுகின்றாய்
அரசாள அர்ப்பனுக்கு வாக்களித்து அரியணை ஏற்றுகின்றாய்.

தினவெடுத்த தோள்கள் இருந்தும் கனவுகளோடு உழல்கின்றாய்
மனவழுக்கில் தோய்ந்து சிரம் தாழ்ந்து வாழ்கின்றாய்
இனமக்கள் நேசம்கூட பண மதிப்பில் பார்க்கின்றாய்
கனவுகள் காலத்தைவெல்ல உதவாதென்பதை ஏன் மறக்கின்றாய்?

இனி மறைந்து போகட்டுமுன் சிறுமைகள் அத்தனையும்
நனி சிறந்து தழைக்கட்டுமுன் பன்முக திறமைகள்
கனியென நல்லோர்க்கு பயனாகட்டுமுன் நல் வினைகள்
கனலென கனன்று துகளாக்கட்டும் தீயோரை உன்செயல்கள்.

ஃஃஃ

அப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.

அப்பா

அப்பா!
சிறுவயதில் உல்லாசமாய்
உன் தோள்மீது அமர்ந்து
ஊர் சுற்றிப் பார்த்ததும்

எங்களுக்கு காய்ச்சல் கண்டபோது
உடல் சூடு தணிய
உன் மார்பை
மெத்தையாக்கிய தருணங்களும்

வாலிப வயதில்
உலகவிசயங்களை தர்க்கம் செய்து
வாதிட்ட தினங்களும்

உன் வயோதிக காலத்திலும்
உற்றாருக்காகவும்
ஊருக்காகவும் ஏங்கித்தவித்த
உன்னோடு இனி
தர்க்கம் செய்யமுடியாத இடத்திற்கு
நீ சென்றிருந்தாலும்

நீ விட்டுச்சென்ற நினைவுகளும்
எழுதிவைத்து அச்சில் ஏற்றாமல்
விட்டுச் சென்ற கவிதைகளும்
உன்னை நினைவு படுத்தமட்டுமல்ல
உன் நினைவோடு
விவாதம் செய்யவும் செய்கின்றது.

இரண்டாண்டு மட்டுமல்ல
இரண்டாயிரமாண்டு ஆனாலும்
நினைக்கப்படுவாய்.
நீ மனிதன் மட்டுமல்ல கவிஞனுமல்லவா?…
உன் கவிதைகள்
உன்னை வாழவைக்கும் என்றும் உலகில்.

ஃஃஃ

பார்வைக் கணை…

இராமன் எரிந்த கணையோ
மெய்தனை துளைத்து
வாலியை வதம் செய்தது.

ஏந்திழையே!…

உன் பார்வைக் கணையோ
உளஉறுதியை தகர்த்து
எனை காதலால் வதைக்கின்றது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

நடுத்தரவர்க்கத்தின் தவிப்பு.

பகலைத் சுமந்தே தூக்கத்தில் அமிழ்கின்றேன்
இரவைச் சுமந்தே துயிலினின்று விழிக்கின்றேன்.
இன்றைச் சுமந்தே நேற்றைக் கழித்தேன்
நாளையைச் சுமந்தே இன்று வாழ்கின்றேன்.

உணவைக் காண்கையில் பசியை துறக்கின்றேன்
பசியைச் சுமந்தே தினம்உணவை முடிக்கின்றேன்
வாழ்வில் உயர அயராது உழைக்கின்றேன்
வறுமையைச் சுமந்தே வாழ்வைக் கழிக்கின்றேன்

கனவுகளோடு உயரத்தில் பறந்து மகிழ்கின்றேன்
கண்விழித்து கல்முள்ளில் நடந்து தவிக்கின்றேன்
உள்ளுணர்வோடு சமரசம் செய்ய முயல்கின்றேன்
கள்ளில்விழுந்த தேன்வண்டாக தினம் தவிக்கின்றேன்.

****

எந்நாளும் காதல் தினம்.

தென்றலின் நேசம்
பூவிடத்தில்
வான்நிலவின் நேசம்
இரவிடத்தில்
வானவில்லின் நேசம்
மழையிடத்தில்
என்நேசமோ உயிரே
உன்னிடத்தில்.

நிரம்பிய குளம் ஒருநாள்
வற்றிப்போகலாம்
நியமனங்கள் ஒருநாள்
மாற்றப்படலாம்
காதலுக்கான நியமனநாளும்
மாறிப்போகலாம்
தமிழ் வருடப்பிறப்பு
நாள் போல.

காதலுணர்வு நியமனமற்ற
இதயத்தின் கீதம்
காதல் இயற்கையானது
பகலும் இரவும்போல;
மனதில் கவலைமறந்து
நாளும் கழிப்போம்
மலரும் நாளனைத்தும்
காதலுக்கான நாளென்று.

ஃஃஃ

இறைவனின் மறதி.

உலகத்தின் மாந்தர்காள்- ஓர்
உண்மை கேளீரோ!…

உலகம் மக்கள் மற்று
உயிர் அனைத்தும்
இறைவன் படைத்தானாம்!…

ஓங்கி உயர்ந்த குன்றம்;
உள்ளம் கொள்ளைகொள் அருவி;
அன்னமென அசையும் பெண்டீர்;
காலை இளம் பரிதி, தென்றல்
யாவும் இறைவனே படைத்தானாம்!…

அழகனைத்தும், அறிவும்
படைத்த இறைவன்
துன்புற்று மாயும்
கூன், குருடு, நொண்டி, முடம்
யாவரையும் ஏன் படைத்தானாம்?…

பள்ளி பாடமதை
பரிட்சை நேரம் மறந்து போம்
மாணாக்கன் போல்
பிரணவத்தை அடிக்கடி மறப்பானோ
மனிதரை படைக்கும் போது…
இறைவன்?!…

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

« Older entries