இலையின் பயணம் – இன்னொரு ஜனனம்.

இரவின் பனியை உண்டு
இன்புற்றிருந்தது இறுதி நாளின்
பயணத்தை எண்ணி;
உதிரப்போகும் சருகொன்று…
இன்பம் தானா உதிர்வதில்?!…

துளிர்த்ததுமுதல்
உதிரும் நாள் வரை உழைத்தாகிவிட்டது…
உயிர்கள் சுவாசிக்க ஆக்சிஸனை
கொடுத்தாகிவிட்டது…

உதிர்தலென்பது உயிர்விடலா?!…
இல்லையில்லை…
இலையின் வாழ்க்கை சுழற்சின்
இன்னொறு பக்கம்…

கிளையொடு ஒட்டிய உறவுகள் முடிந்து…
ஊட்டம் கொடுத்த
பூமியோடு உறவாட
இனிப் புதுப்பயணம்…
இன்னொறு ஜனனம்…

பயணத்தின் பாதை தீர்மானிக்க
இலைக்கு ஆசைதான்…
முடிக்கும் வல்லமை காற்றின் கைகளில்!…

உதிரும் வேளை..
இதமாய் வருடிச்செல்கின்றது தென்றல்…
பழகியநாட்களின் பரிவு
தென்றலின் குளிர்ச்சியில்…
இனியிருவரும் தொடுதல் சாத்தியமோ?!…

தாயின் கருவறைவிட்டகலும் சேயாய்
காம்பைவிட்டகலும் முதிர்ந்த இலை…
இது இன்னொரு ஜனனம்…
பாதை தீர்மானித்து
மெல்ல பறக்கின்றது
மரத்தின் பாதம்தொட்டு
புதுப்பயணம் தொடங்க…

விதியின் கைகள் வலியது…
இதுவரை வருடிச்சென்ற காற்றின் கைகள்
இப்போது வலியதாய்…
திசைமாற்றி தூக்கியெறியப்படும் இலை…
இலையின் திசையை காற்றே தீர்மானிக்க
இலையின் பயணம் இனி எங்கெங்கென்று
யார் அறிவார்?!…

ஃஃஃ

தூக்கணாங்குருவி கூடு…

வீடு கட்ட மரம் வெட்டினார்
வேறுமரம் தேடி பறந்தது பறவை
கூடு கட்டி குடியிருக்க.

அனாதையாக தெருவில், உதிர்ந்த முடிகள்;
தத்தெடுத்துக் கொண்டன பறவைகள்
மெத்தையாய் கூடுகளில்.

எதிர்பார்ப்பில்லாத தாய்மை உணர்வு
அலகோடு அலகுவைத்து உணவூட்டியது பறவை
கூடுவிட்டு என்று பறக்குமோ குஞ்சு.

சேமிப்பை கற்றறியவில்லை இன்னும்
மழைநேரம் இரைதேடி தவிப்போடு
பறக்கும் குருவி.

இது சாத்தியமில்லாதது!….
எந்தக்கல்லூரியில் பொறியியல் பயின்றது?…
தொங்கும் தூக்கணாங்குருவி கூடு.

ஃஃஃ

மின்னல்.

வெண்பஞ்சுக்களின் உரசல்
பற்றி ஒளிர்ந்தது வானம்,
மின்னல்.

சத்தம் காதைக்கிழிக்கின்றது;
மேகக்காதலர்க்குள் என்ன ஊடலோ?!…
இடியோசை.

உருமாறிச் செல்கின்றது,
தடுக்க சட்டமில்லையோ?…
நீராவி.

பிரிந்தவர் சேர்ந்தால் இன்பம்தான்,
மேகம் சிந்தும் ஆனந்தக்கண்ணீர்
மழைத் தூறல்.

ஊடலில் அழுகின்றது!..
காற்றோடு மேகத்திற்கென்ன பிணக்கு?
கொட்டும் மழை.

ஃஃஃ

வாழ்க்கை ஒருமுறைதான்…

வாழும் நாட்களை நாமறியோம்.
வாழும் வாழ்க்கை
ஒருமுறை தானென்பதறிவோம்
அதில் வாடி வாடி வதங்கி
வாழ்வை துன்பத்தில் தொலைப்பது சரியா?…
நீயுமறிவாய்…
நானுமறிவேன்…
மரித்துப்போவது உறுதியென்று.

உந்தன் நாளை நீயறியாய்
எந்தன் நாளை நானறியேன்
அது வரும்போது வரட்டும்
மகிழ்வாய் மரித்துப்போகலாம்.

பசித்தபோது சாப்பிட
உணவை சேமித்து வைப்போம்
சமைத்தும் வைப்போம்…
பசி வரட்டுமென்று
காத்திருப்பதில்லை…

மரணமும் ஒருநாள் வரும்…
வரும்போது வரட்டும்…

அதுவரை
வாழும் நாட்களில்
வாழ்வை மகிழ்வாய் வாழ்ந்துவிடு
வரும் துன்பங்களை
மனதின்
வியர்வைத் துளியென நினைத்து
வரவர துடைத்துவிடு…

வாழ்வின்
துன்பங்கள் மறைந்தோடும்
இன்பங்கள் உன்னில்
குடிகொள்ள இடம் தேடும்…

வாழ்வோம் வா…
வாழ்க்கை ஒருமுறைதான்.

ஃஃஃ

இளமை (அ, ஆ…கவிதைகள் – 15).

அன்புக்கு எப்போதும் இளமை
ஆசைக்கு எந்நாளும் இளமை
இளங்காலைச் சூரியன் இளமை
ஈகைகுணத்தான் புகழ் இளமை
உருவமில்லா உருவகம் இளமை
ஊடல்கொண்ட காதல் இளமை
எழில்கொஞ்சும் வாவிக்கு இளமை
ஏக்கமில்லாத மனதிற்கு இளமை
ஐயமற்ற கருத்திற்கு இளமை
ஒற்றுமை சமூகத்திற்கு இளமை
ஓடஓட உடலுக்கு இளமை
ஔபத்தியம் உலகிற்கு இளமை.

* * *

மழை.

வானக்காதலன் வருடிய சுகத்தில்
மேகக்காதலி வடித்த
ஆனந்தக் கண்ணீரோ?!…
மழை.

இசையாத பூமிக்காதலிக்கு
வானக்காதலன் அனுப்பிய
கண்ணீர்ப் பூக்களோ?!…
மழை.

பிறந்த பூமிவிட்டகன்று
வெப்பக்காதலனை தேடிச்சென்று
பிறந்தகம் திரும்பும் பெண்ணோ?!…
மழை.

வசந்த வீட்டின் வாசலில் நின்று
வானம் தெளிக்கும்
வரவேற்பு பன்னீர்துளியோ?!…
மழை.

தாகம் தணிக்க
தண்ணீர் வழங்கிய பூமிக்கு
வானத்தின் நன்றி நவில்தலோ?!…
மழை.
* * *

விடியல்


கிழக்கு வானம் புலரும் முன்பே
கிழச்சேவல் சக்தி கொண்டே கூவும்


தொல்லை கண்டு கதிரவனும் தன்
தொன்மை முகம் ஒளியுமிழச் சிவக்கும்


நடுக்கத்திலே நன்மலரும் இதழ் விரிக்கும்
நடுவானில் புள்ளினமும் நால்திசையும் பறக்கும்

தென்றலது தேன்மணம்கலந்து இன்னிசை பாடும்
தேன்தேடி வண்டினங்கள் சிறகடித்து பறக்கும்

உழவர் பாதம் கழனியிலே மிதிக்கும்
உலகுக்கே உணவு கொடுக்குமினம் என்றுறைக்கும்

சிறுஎறும்பு சுறுசுறுப்பாய் இறைதேடி கூடும்
சிறப்புடனே ஒற்றுமையின் உயர்வுதனை உரைக்கும்.

ஃஃஃ

களவு போவது சுகமானது !…

வியப்புகளுக்கு இங்கே
எல்லையில்லை…
களவு போவது சுகமானதென்பது
விந்தையல்லவா?!…
இருந்தும், விரும்பியே நாம்
நம்மை களவு கொடுக்கத்தான் செய்கின்றோம்.

அதிகாலை நேரப் பனித்துளி
புல்லின் மணிமகுடமாய் நின்று
பூரித்துச் சிரிக்கையில்
மனதை களவு கொடுத்த
மயக்க நிலையில் தான்
பூரித்துச் சிரிக்கின்றோம்.
புத்துணர்வைப் பெறுகின்றோம்.

காதலன் காதலியிடத்தும்
காதலி காதலனிடத்தும்
இதயத்தை முழுவதுமாய்
களவு கொடுத்ததாலேயே காதலில் உருகி
அன்னை தந்தை கூட மறக்கின்றோம்.

அர்த்தமற்ற அனர்த்தங்கள் ஆனபோதும்
தொண்டர்கள் கட்சித்தலைவர்களிடம்
தங்களின் மனங்களை முற்றும்
களவு கொடுத்ததாலேயே
முழுமையற்றவர்களின் ஆட்சியில்
ஆண்டாண்டு காலமாய் மூழ்கித்தவிக்கின்றோம்.

சின்னச்சிறு குழந்தையின்
கள்ளங் கபடமற்றச் செல்லச்சிரிப்பில்
நம்மை நாமே, தெரிந்தே
களவு கொடுத்ததால் தான்
சிரிது நேரமாவது
சுத்தர்களாக மாறிச் சிரிக்கின்றோம்.

இனிய இசைக்கு
செவிகளை களவு கொடுத்தே
மனதின் ரணங்களை மறக்கின்றோம்.

பூக்களின் மலர்தலில் – மனதை
களவு கொடுத்தே
புத்துணர்வைப் பலனாய் பெறுகின்றோம்.

அறிந்தே நம்மை நாமே
களவு கொடுப்பது
அழகான ஆச்சரியங்கள் மட்டுமல்ல
சுகமானதும் தான்.
ஃஃஃ

தூறல் – (ஹைகூ)

தண்ணீரில் சலங்கை ஒலி
யாரது கடந்து செல்வது?!…
தூறல்.

விழியின் மொழி.

உன்
ஓர் அசைவில்
உலகத்து மொழியனைத்தும்
பேசுகின்றாய்.

சத்தமற்ற
உன் மௌனத் தவத்திலேயே
மொழிகள் அத்தனையும்
வெல்கின்றாய்.

பரிவான
உன் பார்வை காட்டும்
பாசத்தைச் சொல்ல
எந்த மொழியிலும்
வார்த்தையில்லை.

ஓர் அசைவில்
விழி சொல்லும் காதலை
அதைவிடச் சிறப்பாய் சொல்ல
எந்த மொழியிலும்
கவிஞனும் காதலனும்
பிறக்கவில்லை.

கோபத்தில்
விழி சிந்தும் வெம்மையைச் சொல்ல
சூடான சொற்கள்
எந்த மொழிக்கும் இன்னும்
கிடைக்கவில்லை.

நீ பிறருக்காக கசிந்துருகும்
இரக்கத்தைச் சொல்ல
இனிய மொழிகள் எவற்றிலும்
இன்சொற்கள் இல்லை.

மொத்தத்தில்
விழியின் மொழியில் மட்டுமே
கருப்பு வெள்ளை
தமிழன் கன்னடன்
இந்து முஸ்லீம்
என்ற வேற்றுமையில்லை.

மனிதற்கு மட்டுமன்று
உயிர்களுக்கெல்லாம் பொதுமொழி
அது விழிபேசும் மொழி.
ஃஃஃ
[Valid RSS]

« Older entries