பார்வைக் கணை…

இராமன் எரிந்த கணையோ
மெய்தனை துளைத்து
வாலியை வதம் செய்தது.

ஏந்திழையே!…

உன் பார்வைக் கணையோ
உளஉறுதியை தகர்த்து
எனை காதலால் வதைக்கின்றது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

எந்நாளும் காதல் தினம்.

தென்றலின் நேசம்
பூவிடத்தில்
வான்நிலவின் நேசம்
இரவிடத்தில்
வானவில்லின் நேசம்
மழையிடத்தில்
என்நேசமோ உயிரே
உன்னிடத்தில்.

நிரம்பிய குளம் ஒருநாள்
வற்றிப்போகலாம்
நியமனங்கள் ஒருநாள்
மாற்றப்படலாம்
காதலுக்கான நியமனநாளும்
மாறிப்போகலாம்
தமிழ் வருடப்பிறப்பு
நாள் போல.

காதலுணர்வு நியமனமற்ற
இதயத்தின் கீதம்
காதல் இயற்கையானது
பகலும் இரவும்போல;
மனதில் கவலைமறந்து
நாளும் கழிப்போம்
மலரும் நாளனைத்தும்
காதலுக்கான நாளென்று.

ஃஃஃ

செல்ல சிணுங்கல்கள்…

தாமரைக்கண் விரித்து
ஓரக்கண்ணால் பார்த்து
பூவாய்ச் சிரிக்கின்றாய்…

முகம் கோணி
முறுவல் செய்து
சாடை பேசுகின்றாய்…

சில நேரம்
நா கடித்து
உன்கோபம் காட்டுகின்றாய்…

தென்றலாய் நெருங்குமுன்னை
தீண்ட நினைக்கையில்
புயலாய் ஒதுங்குகின்றாய்…

ஆண்டுகள் கடக்கின்றது…
உன்செல்ல சேட்டைகள்
குறையவே இல்லை…

இளமையோடு தொடரட்டும்
உன் செல்லச் சிணுங்கல்கள்
ஆண்டுகள் அறுபதை கடக்கும்போதும்…

ஃஃஃ

ஊடல்…

குச்சிமிட்டாய் தரவில்லை என்பதற்காய்
பள்ளிக்குச் செல்ல மாட்டேனென்று
அடம்பிடிக்கும்
சிறுமியின் ஞாபகம் தான் வருகின்றது….
நம் ஊடலின் போது
நான் அம்மாவீட்டிற்குப் போகப்போகிறேனென்று
நீ அப்பாவித்தனமாக கூறும்போது….

சிலவேளை நானும் உரைப்பதுண்டு
போயேன்… போனால் எனக்கென்னவென்று…
ஆனாலும்
அப்போதெல்லாம்
எனக்குள்ளே நான் கேட்பதுண்டு…

அலுவலகம் செல்ல
வாசல் படி கடக்கும்போது
திரும்பிப்பார்த்து வாசலில்
உன் தரிசனம் தேடும் கண்களுக்கும்…..

உன் விரல் தொட்டு
வெட்டுண்டு மடிவதற்காகவே
வளரும் நகங்களுக்கும்….

உன் கைகளில் சிக்கி கசங்கி
எண்ணெய் தடவிக்கொள்ள
தவம்கிடக்கும்
என் வரண்ட கேசத்திற்கும்….

உன் கைபேசியிலுருந்து
அழைப்பு வராதா என்று
எதிர்பார்த்திருக்கும்
என் காதுகளுக்கும்….
இரவுநேர சிறு நடையின் போது
உன் கரம் பற்றிட
காற்றினில் துளாவும்
என் விரல்களுக்கும்….

குறும்பு செய்யும் உற்சாகத்தில்
உன்னோடு ஊடல் கொள்ள நினைக்கும்
என் மனதிற்கும்….

என்ன பதில் சொல்வதென்று…

ஃஃஃ

உயிரே உயிரே நீயே என் உயிரோட்டம்

கல்லொன்று போட்டால் குளத்து நீரில் வட்டம்
நீயென்னை தொட்டால் மனதில் இன்பம் சுற்றும்
மழைத்துளியை எதிர்நின்று சூரியன் தொட்டால்
நடுவானில் வானவில்லின் வண்ணம் அரைவட்டம்.

காதல் என்பது வானில் பறக்கும் பட்டம்
காதல் கொண்ட இருவர் அன்பில் இணைந்தாலே
காதல் பட்டம் விண்ணின் எல்லை முட்டும்
காதல் உலகத்தை பறந்து பறந்து சுற்றும்

உண்மை காதலில் எந்நாளும் இருவர் மட்டும்
உதிராதிருக்க பொய்களுக்கு வேண்டும் தடைச் சட்டம்
உண்மை அன்பே காதலுக்கு எந்நாளும் ஊட்டம்
உயிரே உயிரே நீயே என் உயிரோட்டம்

உன்னைப்பார்க்க நெஞ்சம் நாளும் ஏங்கித் துடிக்கும்
உன்முகம் காண்கையில் மனம் எங்கெங்கோ பறக்கும்
உதிரம் உரையும் குளிர்கூட சில்லென்று சிலிர்க்கும்
உன்முகம்தான் நிலவில் தெரிவதாய் என்னுள் கிரக்கம்

பொய்யான புழுகல் இனி குறைப்போம்
மெய் யொன்றே காதலில் உரைப்போம்
மெய் ஒன்றாய் தினம் கூடிக் கழிப்போம்
பிரிவில்லை இனி வாழ்விலென்று நிரூபிப்போம்.

ஃஃஃ

தூண்டில் கண்கள்…ஹைகூ.

பூக்களோ பூச்செடியோ அருகில் இல்லை
தென்றலோ பூ வாசம் சுமந்து….
தூரத்தில் பூவையவள்.

கூச்சலும் குழப்பமுமான சந்தைச் சூழல்
அவன் காதில் அமுத இசைமட்டுமே கேட்டது
காற்றோடு அவளனுப்பிய முத்தம்.

தூண்டிலில் மீன்கள் அகப்படுவதே வழக்கம்
மீன்களும் தூண்டிலானது ஆச்சர்யம்!…
பெண்களின் கண்கள்.

ஃஃஃ

நீ அருகில்லாத நாட்களில்!…

காலைக் கதிரொளி மெல்ல விரிந்து
கிழக்கு வானம் புத்தொளியாய் புலரும்போது
உன் புன்முறுவல் பூத்த இன்முகம்
என் கண்ணில் விரிகின்றது…

இயற்கை இரவெல்லாம் மெல்லத் தெளித்த
பன்னீர்த் துளிகள் பட்டு பரிணமிக்கும்
ரோஜா இதழ் பார்க்கையில் சிவந்த
உன்னிதழ்கள் கண்ணில் மிளிர்கின்றது…

கூடுவிட்டு இரை தேடி பறக்கும்
சிறுசிறு பறவைகளின் குரல் கேட்கையில்
சின்னப்பெண்ணாய் நீ குழந்தைகளோடு கொஞ்சிக்குலாவும்
மழலைமொழி காதில் இனிக்கின்றது…

குறும்பு செய்யும் குஞ்சுள் குளிருக்கஞ்சி
தாய்பறவை சிறகுக்குள் அடைக்கலமாவதை காண்கையில்
மார்போடு மடிசாய்ந்துன் கைகளின் இறுக்கத்தில்
குளிர்காய்ந்த தருணங்கள் நெஞ்சோடு உறவாடுகின்றது…

செல்லமாய் சண்டையிட்டு களைத்தோய்ந்து, முகத்தோடு
முகமுரசி மூச்சிரைக்கும் நாய்க்குட்டி காண்கையில்
காரணமற்ற காரணங்களுக்காய் ஊடல் கொண்டு
என்தோள்சேரும் நிமிடங்கள் நெஞ்சில் மலர்கின்றது…

ஒவ்வென்றாய் மனதில் ஒளிப்படம்போல் தெரிந்தாலும்
ஏன் தான் இவையெல்லாம் நடக்கின்றதென்று
வெறுப்பாய் தான் உணர்கின்றது மனது….
நீ அருகில்லாத நாட்களில்!…
* * *

காதல் சுவரம்…

என் அன்பே!
உன் பெயரை தினம் தினம்
ஓராயிரம் முறை
உச்சரிக்கவே செய்கின்றேன் – ஏன்
ஒவ்வோரு முறையும்
முதல் முறையாய் உணர்கின்றேன்…

நீ மட்டுமல்ல எனக்கு பரவசம்
உன் பெயர் தாங்கிய
ஒவ்வொரு பொருளும்…

யாரோ யாரையோ அழைக்கும் பெயர்
உனதாகிவிட்டால்
நின்று நிதானித்து
அவர் முகம் பார்த்து செல்கின்றேன்
என்னவளின் பெயர் தாங்கிவரும்
அதிசயமென்று…

காற்றின் மீது கூட
கோபம் வருகின்றது
அது உன் கேசம் கலைத்து செல்வதால்…

தென்றலின் மீது
பாசமும் வருகின்றது
அது உனை வருடி
மகிழ்வித்துச்செல்வதால்…

நீ சுகவீனப்பட்டு
உடல் தளரும் போது
துவண்டு போவது
என் மனமும் தான்…

பிரிய சகி!
எந்த கணத்தில் எதனால்
எப்படி ஈர்க்கப்பட்டேன் உன்வசம்…
விடைதெரியாமல் தான்
தத்தளிக்கின்றேன்…
காதல் வயப்பட்ட
எண்ணில்லா உயிர்களில்
நானும் ஒருவனாக…
–o0o–

காதலின் வேதம்…


காதலின் வேதம் தினம் மெருகேரும்
கனவுகள் தோறும் கற்பனை மாறும்
காவியம் போலே தினம்தினம் வளரும்
கதவுகள் ஏது தடை போடக்கூடும்

காதல் கண்ணால் பார்த்து வருவதுமுண்டு
காதால் கேட்டு நாளும் வளர்வதுமுண்டு
கனவில் கூட இணையை கண்டவருண்டு
கற்பனையாக சிலர் வளர்ப்பதும் உண்டு

நெஞ்சில் நுளைந்து நினைவில் வளர்ந்தால்
நிலையான காதலென்பேன் நாளும் வளருமென்பேன்
நித்தியயௌவநமாய் பார் புகழ மிளிருமென்பேன்
நிதியம் இதுவே வாழ்வில் என்பேன்

* * *

அருஞ்சொற்பொருள்:

நித்தியயௌவநம் – என்றும் இளமை.
நிதியம் – திரவியம், செல்வம்

நீ முத்தமிட்ட சத்தம்…

நீ முத்தமிட்ட சத்தம் என்னில்
…….. உன் காதல் சொல்லி தாலாட்டுது
உன் இமைகள் இரண்டும் பறந்து
…….. தூதாய் வந்து காதல் சொல்லுது
உன் வதனம் பேசும் பாஷை
…….. என்னெஞ்சில் இன்பத்தீயை மூட்டுது
நீ தொட்டு பேசும் போது
…….. என் நெஞ்சில் பூக்கள் மலர்கிறது.

நீ கொஞ்சி பேசி சிரித்தால்
…….. நான் என்னை மறக்கிறேன்
நீ கோவம் கொண்டு சிவந்தால்
…….. நான் என்னை மறக்கிறேன்
நீ எங்கோ நடந்து செல்கையில்
…….. என் பாதை ஆகிறாய்
நீ அமரும் வேளையில்
…….. எனை பக்தனாய் சுற்றச்செய்கிறாய்

சண்டைசெய்யும் போது அதிர்ந்து
…….. உதிராத உன் வார்த்தை
மண்டைகுடைந்து என்னுள்
…….. எரிமலை தாக்கத்தைக் கொடுக்கின்றது
உன் மவுனவிசும்பலின் சோகம்
…….. கூர்கொண்ட உழியாய் மாறி
என் மன இருக்கத்தை
…….. உடைத்து தூள்தூளாய் சிதைக்கின்றது.

உன் மவுனத்தின் பாஷை கொடிது
வன்மமின்றி வன்முறை செய்யுது கடிது
என் நெஞ்சம் எப்படி தாங்குமதை நெடிது
நன்றாய் உணர்ந்ததால் சிரிக்கின்றாய் சிரிது.

நாட்கள் நகரும் போது
…….. இலைகள் சருகாய் மாறும்
என்ன விந்தை செய்தாய் என்னுள்
…….. புதுத்தளிராய் துளிர்க்கின்றாய்
மலர்ந்த பூவின் வாசம்
…….. நாளும் குறைந்தே தேயும்
மர்மமென்ன சொல்வாய் நாளும்
…….. புதுமலராய் வாசம் வீசுகின்றாய்.
* * * * *

« Older entries