தீபாவளி

தீபாவளி

கடைகள் பல ஆய்ந்து
புத்தாடை எடுத்தாச்சு…

மளிகை பலவகையும்
பலகாரம் செய்ய வாங்கியாச்சு…

சிவகாசி பட்டாசும்
வகைக்கொன்றாய் வாங்கி நிறைச்சாச்சு…

ஆனாலும்,
தீபாவளி நன்நாளில்
என்றோ இறந்த நரகாசுரனை நினைந்து
சந்தோசித்து புத்தாடை தரித்து
வாய் ருசிக்க பலகாரவகை உண்டு
வெடிவெடித்து மகிழ்வதா?…

தினம் தினம் வெடிவைத்து
ஏதுமறியா அப்பாவிகள் உயிர்குடிக்கும்
பாவிகள் செயல்கண்டு துடிப்பதா?…

மனசெங்கும் ஏக்கங்கள் நிறைஞ்சாச்சு
ஏதுமறியா பேதையைப்போல்
எம்மனசும் திகைச்சுப்போய் நின்னாச்சு.

ஃஃஃ
(மாலை முரசு(திருச்சி, தஞ்சை) – தீபாவளி சிறப்பு மலரில் 24.10.2008 பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை)

மாண்டுவிட்டது மாநகராட்சி?!…ஹைகூ.

அசோகர் மட்டுமா குளங்களை வெட்டினார்?!
நாங்கள் வீடுதோரும் குட்டைகளை பராமரிக்கின்றோம்!…
கொசு வளர்க்க…மின் மட்டையோடு தான் சுற்றுகின்றேன்;
எந்த பக்கமிருந்தும் தாக்க வரலாம்…
கொசுக்கள்.தினமும் தீபாவளி வேட்டுத்தான்
மின் மட்டையில் பட்டுவெடிக்கும்
கொசுக்கள்.அழிக்க அழிக்க வருகின்றது…
எமன் தேசத்து படைகளோ?!…
கொசுக்கள்.ரீங்காரமிட்டு வரும் கொசுக்கள்
இராகத்தோடு சொல்லிவிட்டுப் போகும்!…
மாண்டுவிட்டது மாநகராட்சியென்று…

ஃஃஃ

முரண்.

சோம்பலான ஞாயிற்றுக் கிழமை…
மணி பத்தைக்கடந்த பின்னும்
முகச்சவரத்திற்கும் குளியலுக்கும்
சோம்பி அலுத்தது மனம்…

தெருவில் புழுதி பறக்க
சிறுசுகளின் ஆர்ப்பரிப்பு…
சின்னதும் பெரிதுமாய் குதூகலக் கூவல்கள்…
மகிழச்சியின் எல்லை தொடும் தருணங்கள் மழலையர்க்கு…

எரிச்சலின் உச்சியில் நின்று
தங்களின் இளமைக்குறும்பை மறந்து…
எச்சரிக்கும் சிலபெரிசுகள்
காலங்கள் மாறும் போது
நியதிகளும் மாறித்தான் போகின்றது ஆளாளுக்கு…

மான் குட்டியாய் துள்ளி விளையாடிய
செல்ல மகளை மெல்ல அழைத்தேன்…
“கொஞ்சம் இங்க வாங்க…”
அருகில் வந்து கட்டளையாய் கூறிநின்றாள்,
“வா”-ண்ணு கூப்பிடுங்கப்பா…
நான் சின்ன பாப்பா தானே?!…
நல்லொழுக்கம் கற்பிக்கும் நோக்கிலே
மீண்டும் மீண்டும்
“வாங்க…போங்க…” என்றே அழைத்திட்டேன்…

மாலையில் தேனீர் பருகும் நேரம்…
ஒலித்திட்ட கைபேசி எடுத்து அளவளாவினேன்…
பேசியது பாலிய காலத்து நண்பன்…
அவன் சொல்லும் வாடா..போடா..வில்
எங்களின் அன்னியோனியத்தை
நட்பின் நெருக்கத்தை உணர்வேன்…
அகம் குளிர்ந்து மகிழ்வேன்…

பண்பில் சிறந்தவன்…
பேச்சின் போது
“நீங்கள், நீங்கள்…” என வார்த்தையாடல்கள்…
பண்பான வார்த்தைகள் தான்..
பழகிய பாலிய நண்பன் சொன்னதால்
முள்ளாய் தைத்தது நெஞ்சில்…
“டேய்…ஏண்டா அன்னியன் போல் பேசுகின்றாய்…”
தவிப்பாய் நான் வினவ,
“நீங்க பெரிய அதிகாரி இப்போ…நான் எப்படி…”
மெல்ல இழுத்தான் பேச்சை…
அழைப்பதானால் இளமையில் அழைத்தது போல்
“வா…போ…” என்று அழை… இல்லையெனில்…
பேசியை டக்கென்று வைத்தேன்…

அருகில் வந்து மெல்லக் கேட்டாள்
என் செல்ல மகள்
“அப்பா…
நான் உங்களுக்கு அன்னியமா?!…”

ஃஃஃ

வட்டத்தின் அளவு….

வட்டங்களுக்குள்ளே தான் எல்லோரும்
வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
தெரிந்தோ தெரியாமலோ
எல்லோருமே
கூட்டுப் புழுக்களைப் போல்
நம்மைச் சுற்றி
கூடுகளைப் பின்னிக்கொண்டுதான்
வாழ்ந்து கொண்டுடிருக்கின்றோம்.

வட்டங்களின் அளவுகளும்
கூடுகளின் அளவுகளும் தான்
மனிதருக்கு மனிதர் வேறுபடுகின்றது.

சாமான்யனின்
வட்டத்தின் அளவு
குடும்பம் உறவுகள் வரையிலும்…

மொழி அபிமானியின்
வட்டத்தின் அளவு
அதை பேசுவோன் வரையிலும்…

ஜாதி விரும்பிகளின்
வட்டத்தின் அளவு
இனத்தினன் வரையிலும்…

மதம் தழுவுவோனின்
வட்டத்தின் அளவு
அதை தொழுவோன் வரையிலும்…

காதலர் காதலின்
வட்டத்தின் அளவு
தியாகத்தின் எல்லை வரையிலும்…
அரசியல்வாதியின் ஆசையின்
வட்டத்தின் அளவு
எதுவரை?!…
ஃஃஃ

நிலையின்மை உன்கொள்கையா?!…

ஒரு நொடி பாடும்
………..மறுநொடி ஓடும்

உச்ச மகிழ்ச்சியில் திளைக்கும்
………..ஓவென்று கதறியளும்

ஒன்று உயர்வென்று எண்ணும்
………..பிறகதை மாட்சியென்றெண்ணும்

உள்ளமே ஏன் இந்நிலை?
………..நிலையின்மை உன்கொள்கையா?!…
………………….ஃஃஃ

தற்கொலை!…

ஏனிந்த மடமை
எதற்கிந்த சிறுமை
இழி பிறப்பே நீ இறந்த பின்னும்
உனைத் தூற்றித்திரிவேன்.

தெருவோர நாய்க்கு நீ தாழ்ந்தா போனாய்
அன்னை உனக்கு பாலாய் ஊட்டியது
தன் உதிரம் தானே.

தந்தை நீ வளர்கையில்
வளர்த்தது தன்னம்பிக்கைத்தானே.
மூடனே எங்கு தொலைத்தாய்
உன் நம்பிக்கையை!…

எப்படி மறந்தாய் நன்றி பகர்தலை
இனி என்றடைப்பாய் பெற்ற கடனை
பாதகனே கடன்வைத்து
பரிதவிக்க விட்டு விட்டு நீ சென்றதேன்?

எந்த மிருகமும்
தன்னைத்தானே மாய்ப்பதில்லை
கோழையாய்.
மானிடனே உனக்கு மட்டும்
ஏனிந்த மடமை
எதற்கிந்த சிறுமை.
ஃஃஃ

என்னுடன் வேலை செய்து ஓய்வு பெற்ற நண்பரின் மகன் இன்று(22.11.06) கோழையாய் தற்கொலை செய்து கொண்டான். மனது பொருக்கவில்லை. எழுதிவிட்டேன்.

என்றகல்வாய் எனைவிட்டு?…


ஒரு துயர நாளில் தான்
நீ என்னை
தழுவிக்கொண்டாய்…
உந்தன் பயிர்வளர
எம்மில் வித்திட்டாய்…

ஐந்தாறு நாட்கள்
வெம்மையாய் பரவி
எம்மை
வெப்ப ஆற்றில்
குளிக்கவிட்டாய்…

உன்னை நான் விரும்பாமல்
எடுத்த எதிர் செய்கையில்
உன் தழுவலின் தாகம் தணிந்து
எம்மை விட்டுச் சென்று விட்டாய்
என்றே நினைத்தேன்…
என் சுண்டுவிரலை மீண்டும்
நீ தீண்டும் வரையில்…

உன் பாசிச விரல்களை
என் உடலெங்கும் பரப்பி
எந்நேரமும் உன்னையே
நினைக்கச் செய்கின்றாய்
என் அன்றாட அலுவலை
மறக்கச் செய்கின்றாய்…

மாதம் இரண்டை கடந்தபின்னும்
வேதனை பொருக்கவில்லை…
வேண்டாத விருந்தாளி
நீ கொடுக்கும் துயரங்கள்
எதுவரை?…

இன்றா?…
நாளையா?…
என்று செல்வாய்
எனைவிட்டு!.

நீயாக செல்லமாட்டாய்
என்பதறிவேன்.
அதனால் தான்
மருத்துவரைக்கூட
மறக்காமல் சென்று பார்த்தேன்
அவர் கூட
உனைப்பற்றி அறியவில்லையாம்!…
உனைப்போக்க வழியொன்று தெரியவில்லையாம்!!…

அரசாங்கம் கூட சொல்கின்றது
என்னிலிருக்கும் நீ,
நீ இல்லையாம்!…

அட
எனை வருத்தும்
சிக்குன் குனியாவே!…
என்றகல்வாய் எனைவிட்டு?…
ஃஃஃ

இவன்: மா. கலை அரசன்.

யாரது புகைப்பது.

அச்சச்சோ அச்சச்சோ
………யாரது புகைத்து புகைவது
அவர்விட்ட புகையாலே

………எந்தன் மூச்சும் திணருது
அவதிப்பட்டே கதறுது

………அல்லல்ப்பட்ட என் இதயம்
அவசியமென்றால் புகைத்திடு

………புகையை முழுதாய் குடித்திடு.
ஃஃஃ

இவன்: மா. கலை அரசன்.

நம்பிக்கை

தத்தல் நடைபயிலும்
குழந்தையின்
சறுக்கல்கள்.

பறக்கத்துடிக்கும்
பறவைக் குஞ்சின்
சிறகடிப்பு.

கறையைத்தொட்டு விட துடிக்கும்
அலையின்
ஓயாத துடிதுடிப்பு.

ஃஃஃ

நட்புடன்,
இவன்: கலை அரசன்.