பரத்தையர்.

அவளொரு வேடந்தாங்கல்
வந்தவரெல்லாம் பறவைகளாய்
தங்கிச் செல்வதால்.

அவளொரு சுமைதாங்கி
கடந்து செல்வோரெல்லாம்
பாரத்தை இறக்கிவைப்பதால்.

அவளொரு தடாகம்
தாகப்பறவைகளாய் ஆண்கள்
காமம் தணித்து செல்வதால்

அவளொரு பாலைநிலம்
பரிவென்ற தென்றல்
வாழ்வில் வருடிச்செல்லாததால்.

அவளொரு பனிப்பிரதேசம்
வசந்தத்தின் தளிர்கள்
வாழ்வில் துளிர்க்காததால்.

அவளொரு இலையுதிர் காலம்
உற்றார் உறவினர் உதரித்தள்ளி
ஒற்றைக் கொம்பாய் நிற்பதால்.

அவளொரு மத்தளம்
வாழ்வின் எல்லாப் பக்கங்களிலும்
துயரத்தின் அடிகளை தாங்குவதால்.

அவளொரு கந்தல்துணி
தவறை யார்செய்த போதிலும்
முள்ளில்விழுந்த துணியாய் பாதிப்படைவதால்.

அவளொரு மிதியடி
பயன்படுத்தி பின்
தூக்கி யெரியப்படுவதால்.

அவளும் ஓர்
உயிருள்ள உணர்வுகளுள்ள பெண்
எப்போதிதை நாமுணர்ந்து மதிப்பது?!…

ஃஃஃ

நட்சத்திரங்களே என் நகையாகுங்கள்.

நட்சத்திரங்களை நகையாக்க வெகுநாளாய் நான் நினைக்கின்றேன்
நட்டநடு இராத்திரியில் எனைப்பார்த்து ஏளனமாயது சிரிக்கின்றது
பண்பில்லா பாதகர்தாம் பெண்பிள்ளை எம்மை வதைக்கின்றார்
வெண்ணிலவின் தங்கைகளே நீங்களுமா எள்ளி நகையாடுகின்றீர்!..

பெண்ணிலவு எம்மை கண்சிமிட்டி நகைக்க வேண்டாம்
வெண்ணிலவை இரசிப்பதுபோல் எமை இரசிக்க இரசிகருண்டு
கண்ணடித்து கண்ணடித்து காதலிக்க காளையர் கூட்டமுண்டு
வீணே சுற்றித்திரியும் உதவாத எண்ணம் கொண்டு.

கல்யாணப் பேச்செடுத்தால் காணாமல்ப்போன கூட்டம் கண்டு
அல்லல்பட்டு வெம்மையில் வெளுப்பேரிப்போன இதயம் உண்டு
சொல்லொண்ணா துயரத்தில் வாடி வதங்கி நின்று
சொல் நிலவே ஆணினத்திற்கிது தகுமா வென்று.

வறுமையில் வாடினால் உணவுக்கு வழிதேடி உழைக்கலாம்
வரதட்சனையால் வாடுகின்றேன் விடுபட வழியேது சொல்நிலவே.
நட்சத்திரங்களே வாருங்கள் நகையாகி என்கழுத்தில் சேருங்கள்
கிடைக்குமா திருமண பந்தம் கனவிலாவதெனறு பார்ப்போம்.

ஃஃஃ

பெண்ணென்று பூமியில் பிறந்தோம்…

பெண்ணென்று பூமியில் பிறந்தோம் – மிகு
புண்பட்டு புழுவாய் துயரில் துடிக்கின்றோம்

பிறப்பொன்றாய் மண் மீதில் உதித்தோம்
பின்னேன் தாழ்வுற்று தனித்தீவாய் தவிக்கின்றோம்

உயிர் ஒன்றாய் இருந்த போதும்
உடற்கூறால் கீழென்றாகி குறுகித் தவிக்கின்றோம்

தாயென்றும் தெய்வமென்றும் சீர்பெற்று சிறந்தோம்
தரணி வாழ்வில் எவ்வகையில் தாழ்ந்தோம்

பிறந்த இடத்திலும் புறந்தள்ளி தவிப்பு
பிறத்தி யாரிடத்தும் சொல்லொண்னா முறைப்பு

நித்தமும் செத்து செத்து பிறப்பு
நித்திய வாழ்வில் ஏனிந்த பரிதவிப்பு

நீதியற்ற செயல்கள் ஒழித்திட விழித்திடுவோம்
நிகர்தான் நாமென்று இனி உரைத்திடுவோம்

நடுங்கி அஞ்சும் நிலையை அகற்றிடுவோம்
நடை பிணங்களல்ல நாங்களென்று உயர்ந்திடுவோம்

நம்மினமே நமை தாழ்த்தாமல் தடுத்திடுவோம்
நயவஞ்சகரை இனம்பிரித்து வேர றுத்திடுவோம்

நெஞ்சத்தில் நேர்நின்று நடந்திடுவோம்
நாளைய உலகம் நாமென்று உணர்த்திடுவோம்.

ஃஃஃ

திருமணச் சந்தை – ஹைகூ.

வாங்கிய பொருளுக்கு விலை கொடுதாள் கடையில்…
அவளையும் கேட்டு பொன்பொருளும் கேட்கின்றார்கள்…
திருமணச் சந்தையில்.

இணை கோடுகளின் பயணம்
ஒரு கோட்டிற்கு மட்டும் சுமை…
வாழ்க்கை.

விடைதெரிந்தால் சொல்லுங்களேன்?…
பெண் எப்போது தாழ்ந்து போனாள்?!…
சமனற்ற உலகம்.

தெய்வமென்று வணங்குவோம்…
தீட்டென்றும் ஒதுக்கிவைப்போம்…
முரண்பாடுகள்.

காலத்தின் கொடுமை வலியது….
தென்றல்கூட அடைபட்டுக் கிடக்கின்றது…
குடும்பச் சிறை.

ஃஃஃ

காத்திருப்பு…


காத்திருக்கின்றேன் இன்றளவும்
காத்திருக்கின்றேன்…
காத்திருப்பின் வேதனைகள்
அறிந்தபோதும்…

காத்திருப்பின் வேதனைகள்
காலங்காலமாய் பெண்களுக்கென்பது
காலம் எழுதிவிட்ட கோலமா?!…

சிறுபிள்ளை பருவத்தில் விளையாட
துணை வேண்டுமென்று
உடன்பிறப்புக்களுக்காக காத்திருப்பு…

வாலிப பருவத்தில் பாதுகாப்பாய்
வழித்துணைக்கு அம்மா அக்காள்
வரவிற்காய் காத்திருப்பு…

காதலுற்ற பருவத்தில்
காதலனின் வரவுநோக்கி
கணம்கணமாய் காத்திருப்பு…

மணம் கொண்ட பின்னே
மன்னவனின் வரவிற்காய்
வாயிற்படியிலேயே காத்திருப்பு…

வயிற்றில் சூல்கொண்ட பின்னர்
சிசுவை பெற்றெடுக்க தவமாய்
பத்துமாதம் காத்திருப்பு…

பள்ளி சென்ற பிள்ளை
படித்து திரும்பும் வரை
பாசமோடு காத்திருப்பு…

வளர்ந்த மகள் வெளிசென்றால்
வரும்வரையில் அக்கினிமேல்
தவம்போல் காத்திருப்பு…

காத்திருப்புக்கள் ஏனோ…
கரையற்ற கடல்போல்தான்
கண்முன்னே விரிகின்றது…

காத்திருப்பின் வேதனைகள் புரிந்தாலும்
என் காத்திருப்புக்களும்…
எனக்காக காத்திருப்புக்கள்
நிகழாத என்ற ஏக்கமும்
அதனதன் வழியில்
தொடரத்தான் செய்கின்றது….

* * *

நீயும்… நானும்?!…

நீயும், நானும்?!
உனக்கும் எனக்குமான
உறவுகளும் பிணக்குகளும்
தொடர்கதை தான் போலும்…

உனக்கும் எனக்குமான உறவுகள்
இயற்கையின் விதிகள், நியதிகள்.
அது சுயமானது!…
பிணக்குகளுக்கு வித்திட்டது
எது? யார்? ஏன்?!..
எப்போது?…
இன்றா? நேற்றா? ஆதியிலா?!…

உன்னைச் சுமப்பதும்
என்னைச் சுமப்பதும்
அன்னை வயிறுதான்
அதுவும் பத்து மாதந்தான்…

பின்னெப்படி நீ
என்னிலும் உயர்வென்றெண்ணினாய்?!…

உனக்கான ஐம்புலனும்
எனக்கான ஐம்புலனும்
ஒன்றுபோல்தான்!…
உனக்கான எல்லா பசியும்
எனக்கும்…

பிறகெப்படி நீ
என்னிலும் உயர்வென்றெண்ணினாய்?!…

உனக்கான மனது தான்
எனக்கும்…
உனக்கான வலிகள் தான்
எனக்கும்…
பிறகெப்படி எம்மை
தாழ்வென்று எண்ணத்துணிந்தாய்?!

காடு கழனி முதல்
கணனி வரை
பணிகளை பகிர்ந்து செய்ய
எம்மைத்தேடுகின்றாய்.
ஏன்
சமையலரைப் பணியென்றால்
மட்டும் ஓடுகின்றாய்?!…

சுகமென்பது இருவருக்கும்
பொதுவுடமையான போது…
துக்கங்களும் துயரங்களும் மட்டும்
எனக்கென்று தனியுடமையானது?!…

இயற்கையின் விதிகளை
இன்முகத்துடன் ஏற்கின்றேன்…
அதனால் சுமப்பதில்
உன்னை பங்கேற்கச் சொல்லவில்லை!…
வளர்ப்பதில் உன் பங்களிப்பை
சமமாய் எதிர்நோக்குகிறேன்.

பறவைக்கும் விலங்குங்கும்
நீ குறைந்தவனில்லையென்று
நினைக்கின்றேன்!…
பிறகெப்படி
பறவையின் பங்களிப்பு கூட
உன்னிடம் இல்லாமல் போனது!!…

எந்த விலங்கும்
எந்த பறவையும்
தன் இணையை தாழ்த்துவதில்லை…
மனிதா!
சற்றேனும் எண்ணிப்பார்!!…
உன் நிலை
என்னவென்று!!!…
* * * * *

நீயும்… நானும்?!…

உனக்கும் எனக்குமான
உறவுகளும் பிணக்குகளும்
தொடர்கதை தான் போலும்…

உனக்கும் எனக்குமான உறவுகள்
இயற்கையின் விதிகள், நியதிகள்.
அது சுயமானது!…
பிணக்குகளுக்கு வித்திட்டது
எது? யார்? ஏன்?!..
எப்போது?…
இன்றா? நேற்றா? ஆதியிலா?!…

உன்னைச் சுமப்பதும்
என்னைச் சுமப்பதும்
அன்னை வயிறுதான்
அதுவும் பத்து மாதந்தான்…

பின்னெப்படி நீ
என்னிலும் உயர்வென்றெண்ணினாய்?!…

உனக்கான ஐம்புலனும்
எனக்கான ஐம்புலனும்
ஒன்றுபோல்தான்!…
உனக்கான எல்லா பசியும்
எனக்கும்…

பிறகெப்படி நீ
என்னிலும் உயர்வென்றெண்ணினாய்?!…

உனக்கான மனது தான்
எனக்கும்…
உனக்கான வலிகள் தான்
எனக்கும்…
பிறகெப்படி எம்மை
தாழ்வென்று எண்ணத்துணிந்தாய்?!

காடு கழனி முதல்
கணனி வரை
பணிகளை பகிர்ந்து செய்ய
எம்மைத்தேடுகின்றாய்.
ஏன்
சமையலரைப் பணியென்றால்
மட்டும் ஓடுகின்றாய்?!…

சுகமென்பது இருவருக்கும்
பொதுவுடமையான போது…
துக்கங்களும் துயரங்களும் மட்டும்
எனக்கென்று தனியுடமையானது?!…

இயற்கையின் விதிகளை
இன்முகத்துடன் ஏற்கின்றேன்…
அதனால் சுமப்பதில்
உன்னை பங்கேற்கச் சொல்லவில்லை!…
வளர்ப்பதில் உன் பங்களிப்பை
சமமாய் எதிர்நோக்குகிறேன்.

பறவைக்கும் விலங்குங்கும்
நீ குறைந்தவனில்லையென்று
நினைக்கின்றேன்!…
பிறகெப்படி
பறவையின் பங்களிப்பு கூட
உன்னிடம் இல்லாமல் போனது!!…

எந்த விலங்கும்
எந்த பறவையும்
தன் இணையை தாழ்த்துவதில்லை…
மனிதா!
சற்றேனும் எண்ணிப்பார்!!…
உன் நிலை
என்னவென்று!!!…
* * * * *

இளைஞனே!…எப்போதிருந்து?!…..

இளைஞனே!…
குரூரத்தின் எல்லையில் நின்று
உன்னால் மட்டும்
எப்படி குதூகலிக்க முடிகின்றது?!…

இதழ்களை நசுக்கி விட்டு
ரோஜாவை
எப்படி நுகர முடிகின்றது?!…

தோகையை அறுத்து விட்டு
மயிலை
எப்போதிருந்து ரசிக்கக் கற்றுக்கொண்டாய்?!…

சுவாசத்தில்
நறுமணத்தை நுகராமல் – கெட்ட
நாற்றத்தை
ஏன் நுகரத்துடிக்கின்றாய்?!…

அழகிய உன் மனதில்
அழுக்குகளை
எப்போதிருந்து சுமக்கத்தொடங்கினாய்?!…

பேருந்து பயண நெரிசலில்
உன்
நயவஞ்சக உரசல்கள்
நாற்றமடிக்கும் செயல் அல்லவா?…

முச்சந்தியில் நின்று
முழுநேர வேலையாய்
கடந்து போவோரை
கண்களாலேயே கலவரப்படுத்துவது
எந்த விதத்தில் நியாயம்?…

பூக்களை
ரசிப்பதில் தவறில்லைதான்
பார்வையால்
எரிப்பதும் முறையோ?…

உன் கண்ணோட்டத்துடனேயே
மாற்றானொருவன்
உன்
தாயையோ, சகோதரியையோ, மனைவியையோ
தரிசிக்க நினைத்தால்
தாங்கிக் கொள்வாயா?!…

சுய பரிசோதனை செய்துகொள்
உன்னை நீயே.
மதிக்க வேண்டியவர்களை
முறையற்று மிதிப்பதும் முறைதானோ?…

ஒவ்வொரு முறையும்
பெண்களை கடக்கும் போதும்
உன் தாயையோ,
சகோதரியையோ நினைத்துக்கொள்
அழகான பூ மலரும் மனதிற்குள்
உன் மாசுகள் கூட மறைந்துபோகும்.

இளைஞனே!…
உனக்கான எல்லைகள் எங்கோ உள்ளது…
துணையாக கைப்பற்றி நடக்க வேண்டியவர்களுக்கு
துஷ்டனாய் தரிசனம் காட்டாதே…
உன் எல்லைகள்
எட்டப்படாமலேயே போய்விடும்.

நந்தவனத்திற்குள் செல்கையில்
நாசிக்கு சுவாசிக்கச் சொல்லிக்கொடு
நறுமணத்தை நுகர்வாய்
நாளும் நல்ல மனதைப்பெறுவாய்.

மங்கையரைக் காணும் போது
இதழ்ப் பூவில்
புன்னகையை மலரவிடு
நறுமணமாய் நட்பை நீ பெறலாம்
நாளும் நல்லவராய் வலம் வரலாம்.
ஃஃஃ

இவன் : மா. கலை அரசன்.

வரதட்சனை!…

வரதட்சனை வடம் இல்லாத
அழகிய தேராய்
நாங்கள்…
இழுப்பதற்கங்கே யார்?…

அழகாய் உருவும்
குன்றாய் குணமும்
உள்ள தேருக்கோ
வரதட்சனை வடமில்லை!…

பணமிருந்தால் அழகில்லை
அழகிருந்தால் பணமில்லை
ஆனால்
குணத்திற்கு மட்டும்
எப்போதும் குறைவில்லை.

வரதட்சனை வடமிருக்கும்
சில தேர்கள் மட்டும்
கல்யாணவீதியில்…

கல்யாணச்சந்தையின்
தராசுத்தட்டுக்களை
அழியும் தேகமும்
குறையும் பணமுமே
ஆக்கிரமிக்க
குணத்தின் மதிப்போ
குப்பைக்காகிதமாய்!…

இயற்கையின் லீலை தான்
இன்னும்
புரியவில்லை என்றால்…
அட! மனிதமே
நீயுமா?!…

ஃஃஃ
இவன் : மா. கலை அரசன்.

விதவை

நிலவு சூடாத
நீல வானம்.

மீன்கள் நீந்தாத
நீலக் கடல்.

பூக்கள் இல்லாத
ரோஜாச் செடி.

விண்மீன் இல்லாத
இரவு வானம்.

பல்லவி எழுதாத
இசைப் பாடல்

பெண்ணே
நினைத்துப் பார்க்க
நெஞ்சம் கனக்கிறது.

வானம் எப்போதும்
வெறுமையாய் இருப்பதில்லை.
நீ
நிலவாய் நெற்றிப் பொட்டிடு.

மீன்கள் நீந்தாது
நீலக்கடல் இருப்பதில்லை.
உன்னுள் துள்ளும் மீனாய்
உற்சாகத்தை வளர்த்துக்கொள்.

செடிகள்
பூக்காமல் இருப்பதில்லை.
நீயும்
பூவாய் சிரித்திரு.

விண்மீன் இல்லாது
இரவு வானம் ஜொலிப்பதில்லை.
பல்லவி இல்லாது
பாடலும் ரசிப்பதில்லை.

ஏன்
நீ மட்டும் தனிமரமாய்.?!.
ஃஃஃ
By: கலை அரசன்.

« Older entries