கருவிலேயே கலைக்காதிருந்திருந்தால்…


அம்மா அம்மா என்றே
அம்மா உன்னை அழைக்கின்றேன்
ஆசையாய்த் தொட்டுப் பார்க்கின்றைன்
ஓடிவந்து உன்கை பற்றுகின்றேன்.

முந்தாணை நிணலிலேதான் நடக்கின்றேன்
மூச்சுக்காற்றாய் உன்னை தொடர்கின்றேன்
உன் முகச்சிரிப்பில் மலர்கின்றேன்
உலகே நீயென்று சுழல்கின்றேன்.

நீ என்னை அறியாது
தினம் இதையே செய்கின்றேன்
பாவி!… நீயென்னை – பெண்சிசுவென்று
கருவிலேயே கலையாதிருந்திருந்தால் – நீயறிய

கட்டி உன்னை அணைத்திடவும்
என்சுட்டி முத்தம் பதித்திடவும்
முலைபற்றி பால் குடித்திடவும்
உயிராய் உன்னோடு இருந்திருப்பேன்.

ஃஃஃ
இவன் : மா. கலை அரசன்.

பெண்ணே! புறப்படு!!.


பெண்ணே!
இராகத்தில் சோக
முகாரியை மட்டும் தான்
அறிவாயா நீ?!…

உன் இராகத்தை
நீயே
தவறுதலாய் வாசிக்கின்றாயா?
வாசிக்க
நிர்ப்பந்திக்கப்படுகின்றாயா?

கவிஞன்
நிலவுக்கு ஒப்புமையாக்குவான் உன்னை.
குளிர்ந்துவிடாதே!.
சூது வாதை சுட்டெரிக்கும்
சூரியனும் நீ என்பதை
செயலில் காட்டு.

பாவங்களே
பவனிவரும் போது
ஞாயங்கள்
நாணிக்கோணுவதேன்?!…
நாணம் வேண்டும் நெஞ்சத்துள்.
வீரம் வேண்டும் செயலில்…

வேசங்கள்
விலைபோகும் நேரமிது
நேர்மை
ஏன் கலங்க வேண்டும்?!…

சாக்கடை
உன்மேல் தெரித்ததில்
தவறில்லை!…

ஆனால் நீ…
சாக்கடையை
பூசிக்கொள்வதென்பது?…

மணமேடை தேவையே
அதற்காக
தூக்குக் கயிற்றை
வாங்க வேண்டியவன் கையால்
தாலிக் கயிற்றை
வாங்க விளைவதில்
ஞாயம் என்ன?…

வெட்கம் கெட்ட சமுதாயமிது
வறுமையுற்றால் வாட்டும்
உயர்ந்துவிட்டால் போற்றும்
ஏவல் செய்தே!…

பேசிப்பேசியே
பொன்னான பூமியை
கெடுத்துவிட்ட சமுதாயமிது
இவர்களின்
வார்த்தைக் கணைகளை
கண்டு கொள்ளாதே.

வரண்டுவிட்ட சமுதாயமிது
உன்னை
வக்கணைப் பேசும்
வருத்தப்படாதே.
நாய் குறைக்க
நாமும் குறைப்பதில்லை.

வரதட்சணையை
ஒளிப்பார்கள் என்றா
கனவு காண்கின்றாய்…
அட பேதையே!
கதிரவன்
மேற்கில் உதிப்பதில்லை…

ஆண்வர்க்கத்திற்கு… நீ
அடிமை என்றெண்ணினால்
வாழ்க்கை முழுதும்
வெந்து நொந்து
சாம்பலாக வேண்டியது தான்
சாராயத்திற்கு தொட்டுக்கொள்ள
சுட்டுக்கடித்தாலும் கடிப்பார்கள்.

ஆலம் விழுதுகள் என்றா நினைத்தாய்
ஆண் வர்க்கத்தை…
இவர்கள் சாதகக் காற்றடித்தால்
முறிந்து விழும்
முருங்கை மரங்கள்…

குற்றமில்லை
அவர்கள் மீதும்…
படகைச் செலுத்தும் பாய்மரங்கள்
உன் போல்
பெண்ணல்லவா?!..

மௌன ஆடைகளையே
நீ போர்த்திக்கொண்டிருந்தால்
பெண்ணுரிமை பேசும்
ஆடவன் கூட
துணை வரமாட்டான்.

ஏ!… பெண்ணே!…
எத்தனை நாள் தான்
ஊன்று கோல்களின்
துணைகொண்டு நடப்பாய்?…
உதறியெறிந்து விட்டு
நீயாய் தவழ்ந்து பழகு…
நாளைய மராத்தானின்
மணிமகுடம் உனக்காகவே…
களங்களும்
காவியங்களும் கூட…

ஃஃஃ
இவன் : மா. கலை அரசன்.
ஃஃஃ

திருவிளக்கு…


பெண்ணே நீ அர்த்த சாமத்தின் அறைவிளக்கல்ல
வண்ண ஒளிவீசும் கோவிலின் திருவிளக்கு
எண்ணங்களில் உனக்கு எழுச்சி வேண்டும்
கண்களிலோ என்றுமில்லா ஒளிபெற வேண்டும்.

அர்த்தமில்லா சடங்குகளின் ஆணிவேர் ஆகாதே
அருகப்போகும் மடமைகளின் சாவுக்கு ஆலயமணியாகு
கர்பத்தின் விளைச்சலில் கணவனுக்கே உரிமைகொடு
வர்க்கங்கள் தோன்றும் போததன் தலைவியாகு.

உன்னாலும் முடியுமென்றே சுந்தரக்கவி பாடு
கனிசுதந்திரத்தை பெற்றிடவே பரணி பாடு
பனிகூட மூடவரும் என்பதுணர்ந்து நடைபோடு
கனியானாலும் துணிவுண்டென்று ஆனந்தக்களி பாடு.

ஒற்றுமைக்கு என்றும் நீ பாடுபடு
பற்றறுத்த ஞானியையும் அறிவாலே எடைபோடு
கற்றறிந்த சொல்லுக்கு பொருள் தேடு
வெற்றிக்கு வழியெதுவோ அதை நாடு.

நன்மைக்கும் தீமைக்கும் பெறும் வேறுபாடு
கனி இனித்தால் நன்மையின் விளைகாடு
க(ன்)னி புளித்தால் குப்பைமேடு – என்றும்
பொன்மகளே நீயிதையுணர்ந்தால் உலகம் இன்பக்காடு.

ஃஃஃ
எழுதிய நாள் : 12.07.1989.
இவன் : மா. கலை அரசன்.
ஃஃஃ

கன்னியின் புலம்பல்?!…


நிலவு உலவாத வானம்
யாரும் சூடாத மல்லிகை
ஒளி காணாத விளக்கு
விடியலை தரிசிக்காத இரவு
பாடப் படாத பாட்டு
மீட்டப் படாத வீணை
வண்டு உலவாத சோலை
பனி பொழியாத காலை
நான்
திருமணமாகாத எழை.

ஃஃஃ
எழுதிய நாள் : 15.07.1989.

rose-dance.gif
இவன் : மா. கலை அரசன்.
ஃஃஃ

கண்களின் ஏக்கம்!….


பூவுக்கும் சோகமுண்டு பூவை
அதை சூடுவதாலே!
பூமியும் சுடுவதுண்டு பூவையுடல்
வெம்மை பரவுவதாலே!
கடல்நீரும் கரிப்பதுண்டு கன்னியின்
கண்ணீரும் சேர்வதாலே!
கண்களில் ஏக்கமுண்டு வில்லொடிக்க
வருவானா ராமனென்றே?!.

ஃஃஃ

இவன்: மா.கலை அரசன்.

Newer entries »