திசைகள் – சிறுகதை.

‘பாட்டி உனக்கு தான் வயசாகிப்போச்சே, இந்த வயசுல உனக்கு என்ன இனிப்புல இவ்வளவு ஆசை. என்னை தொந்தரவு செய்யாம சீக்கிரம் செத்து தொலையேன். ஒரு சனியன் ஒழிஞ்சதா நினைச்சு நிம்மதியா இருப்பேன்’, அக்கினி பிளம்புகளாக துவேசம் கலந்து வார்த்தைகளை அள்ளி வீசிய நீலாவுக்கு பதினெட்டு வயது. கல்லூரியில் முதலாமாண்டு தன் மாமா வீட்டிலிருந்து படித்துக்கொண்டிருநதாள்.

‘நீ என்னை மட்டுமா வளர்த்த, புனிதாவையும் சேர்த்து தானே வளர்த்த. அப்புறமேன் என்கிட்ட மட்டும் அத கொண்டா, இதக் கொண்டாண்ணு நச்சரிக்கிற…’

கட்டிலில் படுத்திருந்த பாட்டிக்கு நீலாவின் பேச்சு தேள் கொட்டியது போல் இதயத்தில் வலித்த்து. ‘இந்த வார்த்தையை முடியாத காலத்தில் கேட்பதற்காகவா உங்களையெல்லாம் பொத்திப் பொத்தி வளர்த்தேன்’, பாட்டி மனதிற்குள் புழுங்கினாள்.

பாட்டி எதையோ சொல்ல வாயெடுக்க அதைக்கேட்காமலேயே நீலா அடுத்த அறைக்குள் புகுந்து கதவை ‘பட்’ டென்று சாத்தினாள்.

நீலாவின் வார்த்தைகள் பாட்டியின் தலைக்குள் மேகக் கூட்டமாய் சூழந்து வட்டமிட்டு பாரமேற்ற பழைய நினைவுகள் அமில மழைத்துளியாய் மனதில் விழத்தொடங்கின.

நீலா, பாட்டியின் மகள் வயிற்று பேத்தி. புனிதா, மகன் வயிற்று பேத்தி. மகன் வீட்டிலேயே பாட்டியும் நீலாவும் இருந்தனர். புனிதாவிற்கும் நீலாவிற்கும் வயது அப்போது பன்னிரெண்டு இருக்கும். நீலாதான் மூத்தவள். இருவரும் ஓரிரு மாத இடைவெளியில் பிறந்தவர்கள். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் தான் படித்துவந்தனர்.

புனிதாவின் அம்மா சுகவீனமுற்று மருத்துவமனையில் படுத்தப் படுக்கையாகிவிட, வீட்டுப் பொறுப்பு முழுவதுமாக பாட்டியிடம் வந்தது.

அது ஒரு புதன்கிழமை. பாட்டி கறிச்சோறு ஆக்கி இருந்தாள்.

பாட்டியின் கைப்பக்குவம் மிக அருமையாக இருக்கும். அதுவும் முந்திரி அண்டிப் பருப்பு போட்டு பாட்டி சமைக்கும் கௌதாரி கறிக்குழம்பிற்கு தனிச்சுவையே உண்டு.

பாட்டியின் கைப்பக்குவத்தில் சமையல் ருசியாக இருப்பதற்கு பாட்டி தனிக்கதையே சொல்வாள். தான் பச்சைப் பாம்பை உயிருடன் பிடித்து தலைமுதல் வால் வரை கைகளால் தடவிவிடுவதாகவும், அதனால் தான் தனது சமையில் பதார்த்தங்கள் மிக சுவையாக இருப்பதாகவும் கூறியிருக்கின்றாள்.

பள்ளிவிட்டு வந்த புனிதாவிற்கு பாட்டியின் கறிக்குழம்பு நாக்கில் எச்சிலை ஊறவைத்தது.

ஆனால் பாட்டி நீலாவிற்கு கறிச்சோறும் தனக்கு பழைய சோழக் காடியும் மாங்காய் தொக்கும் தட்டில் கொண்டு வைத்தபோது புனிதாவிற்கு எல்லாமே சூனியமாக தெரிந்தது.

மனம் பொறுக்காது புனிதா, ‘பாட்டி எனக்கும் கறிச்சோறு தாயேன்’ என்றாள்.

‘உன்னை பெத்த மவராசி சாவக்கிடக்கா, உன் நாக்கு கறிச்சோறு கேட்குதாக்கும். இன்னும் ரெண்டு நாளுல அவபோயிருவா, அதுக்கு பின்னாடி உனக்கு இந்த காடி கூட கெடைக்காது. இப்பவே நல்லா கொட்டிக்க’, பாட்டியின் நாவிலிருந்து முள்ளாய் வார்த்தைகள் வந்து சின்னப்பெண் புனிதாவைத் தைத்தது.

பாவம் புனிதா, தன் தகப்பனின் உழைப்பில் வந்த பலனை அனுபவிக்க முடியவில்லை. அது புரியும் வயதும் அவளுக்கில்லை. வாய்விட்டு அழுவதற்குக்கூட தைரியமின்றி வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே மனதிற்குள்ளேயே அம்மாவை நினைத்துக்கொண்டாள், ‘அம்மா இப்போது பக்கத்தில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எலும்பில்லாத கறியாக எடுத்துத் தருவாளே’, புனிதாவின் மனம் ஏங்கியது.

புனிதாவின் வடியும் கண்ணீரைப்பார்த்த பாட்டி,’அழுதழுது வீட்ட உருப்படாம ஆக்கிடாத’, வெடித்தாள்.

கதவு தட்டப்படும் ஓசை கேட்டு பாட்டி பழைய நினைவிலிருந்து கலைந்தாள்.

கதவருகே புனிதா ஏதோப் பொட்டலத்துடன் நின்றிருந்தாள்.

பாட்டியின் அருகில் ஆதரவாய் வந்து, ‘பாட்டி, நீலா சொன்னதெல்லாம் நானும் கேட்டேன். கவலைப்படாதே. நான் இனிப்பு கொண்டாந்திருக்கேன். ஊட்டிவிடவா’ கேட்டுக் கொண்டே ஒரு விள்ளல் எடுத்து பாட்டியின் வாயில் ஊட்டினாள்.

பொட்டலத்தையும் பாட்டியிடம் நீட்டி, ‘இந்தா பாட்டி, இது உனக்கு தான். அம்மா செலவுக்கு தந்த காசுல உனக்கு தான் வாங்கி வந்தேன்’, என்றாள்.

பாட்டியின் முகத்தில் பழைய நினைவுகளின் ரேகைகள் இழையோடுவது தெரிந்தது. தயக்கத்தோடு புனிதா நீட்டிய இனிப்பு பொட்டலத்தை வாங்கிக்கொண்டாள்.

பாட்டியின் கண்களில் நீர் கரைபுரண்டோடியது. பழைய பாவமும் கரைந்தோடியிருக்க வேண்டும்.

* * *

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

கீதா நீ எனக்கு வேண்டும்.

‘அப்பா’, விவேக்கிற்கு புரியாத புதிராகவே இருந்தார்.

இப்போது என்ன செய்கின்றார், அடுத்து என்ன செய்வார் என்பதே புரியவில்லை. அவர் என்ன செய்தாலும் ஒரு புதிராகவே இருந்தது விவேக்கிற்கு.

“ச்ச…அஸ்ட்ரானமில ஒரு கணக்கு போட்டார்னா கூட இப்படி சர்வ குழப்பமா இருக்காது. உண்டு அல்லது இல்லைண்ணு சட்டுண்ணு சொல்லிவிடலாம்.

சுத்தமோசம். இந்த மார்டர் அல்ஜிப்ராபோல புரியும் படியாகவும் நடந்துக்க மாட்டார். புரிஞ்சுக்கலாம் என நினைத்தாலும் முடியல்ல, மனசுக்குள்ளே அலுத்துக்கொள்வான் விவேக் அடிக்கடி.

சத்தியசிவம்.

ஐம்பதைத் தாண்டிய வயது. அடர்த்தி குறைய ஆரம்பித்திருக்கும் தலை. நெற்றியிலோ படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலுக்குறிய பிரம்மா, விஷ்ணு, சிவனை நினைத்து தீட்டப்பட்ட திருநீருப்பட்டை. வெண்பஞ்சு மேகமாய் வெள்ளுடை. பார்ப்பதற்கு தீர்க்க தரிசி போல் இருந்தார்.

நாற்பத்து ஏழைக் கடந்தபோது நாயகியை இழந்துவிட்டிருந்தார். ஒரு வகையில் துவண்டுபோன அவர் மனதுக்கு அவள் நினைவே தூண்டுகோலாகவும் இருந்து மீதிவாழ்வை ஓட்ட துணைபுரிந்தது என்றால் மறுபுறம் விவேக். அவன் மீது பாசம் முழுவதும் வைத்திருந்தார். ஆனால் எந்த சமயத்திலும் தன் கண்டிப்பை மீறி இளகியமனதை வெளிக்காட்டியது இல்லை. மனைவியின் நினைவுகளை மனதில் சுமந்து வருவதை வரவேற்கும் மனப்பக்குவம் பெற்றிருந்தார்.

உழைத்து உழைத்து உடல் உரமேறியிருந்தது. உண்மை நேர்மையினால் ஊரில் அவருக்கு புகழும் கூடியிருந்தது. அவரை தர்மகர்த்தாவாக ஊர் முத்தாரம்மன் ஆலயம் கூட தத்தெடுத்திருந்தது.

ஊருக்கெல்லாம் தெரிந்த அவரை அவர் மகன் விவேக்கால் மட்டும் எப்படித்தான் புரிந்துகொள்ள முடியாமல் இருந்ததோ?….

விவேக் இருபதுவயதைக் கடக்கும் கட்டழகன். அறிவு முப்பதைத் தாண்டி வேக நடையிட்டது. படிப்பில் கெட்டி. இந்த வருடம் தான் இளங்கலை கணிதவியல் முடித்திருந்தான்.

இருந்தும் என்ன பயன் அப்பாவைப் பற்றி நன்றாக புரிந்துகொள்ள முடியவில்லையே?

விவேக்கின் ஆசிரியர்கள் அடிக்கடி அவனைப் புகழ்ந்தது உண்டு. சுடலைமணி ஆசிரியர் அடிக்கடி சொல்வார் “விவேக் நீ வருங்காலத்தில் பெரிய ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வரவேணும். அப்பத்தான் எங்களுக்கெல்லாம் பெறுமை. உன்னுடைய அறிவுக்கு நீ கண்டிப்பா வருவே. வரணும்”.

சொல்லும் போது அவர் உள்ளம் பூரிக்கும். விவேக்கோ கூச்சத்தால் உள்ளம் குளிர்ந்து போவான். புகழ்ச்சி தாங்காமல் கைகால்களில் உள்ள மெல்லிய மயிர்க்கால்கள் சில்லிட்டு நிற்க, நெளிந்து நெளிந்து பதில் சொல்வான், “உங்க விருப்பப்படியே வர முயற்சி செய்யறேன் சார்.”

வரும் டிசம்பரில் நடக்க இருக்கும் ஐ.ஏ.எஸ் முதல்நிலைத் தேர்விர்க்காக தயாராகவும் இருந்தான்.

எதற்கு தயாராக இருந்து என்ன பிரயோஜனம். எத்தனை ஆசிரியர்கள் பாராட்டி என்ன பயன். ஒரு சிறு விசயத்தில்கூட அப்பாவைப் பிரிந்துகொள்ள முடியவில்லையே என அடிக்கடி மனதிற்குள் புழுங்கிக்கொள்வான்.
எப்போதும் முகத்தில் ஒரு அமைதி. நாம் தப்பு செய்தாலும் அமைதியாக கவனிப்பார். ஏதாவது சாதனை செய்துவிட்டு வந்து, “அப்பா, நான் அதில் இந்த சாதனை செய்து இருக்கின்றேன்” என்றாலும் அதே அமைதியான புன்முருவல்.

“ஒருவேளை நம் மகன் சிந்திக்கத் தெரிந்தவன். நல்லது கெட்டது அறிந்தவன். நல்லது கெட்டது தெரிந்து நடந்து கொள்வான் என நினைத்து என்னை என் வழியிலிலேயே விட்டு விட்டாரா? அல்லது இவன் எக்கேடு கொட்டால் நமக்கென்ன என நினைத்து விட்டாரா?”, விவேக் தனக்குள்ளேயை அடிக்கடி கோட்டுக்கொள்வான்.

“என் அப்பா என்னை கெட்டுப்போகட்டும் என்று நினைப்பாரா? எப்படியெல்லாம் என்னை சீராட்டி வளர்த்தார். அம்மாவின் மடியில் இருந்து விளையாடிய நாட்களை விடவும் அப்பாவின் மார்பில் சாய்ந்து தூங்கிய நாட்கள் அதிகமல்லவா?
தன் உயிரின்மேல் வைத்த அன்பைவிடவும் அப்பாவிற்கு என்மேல் உள்ள அன்பு அதிகமல்லவா? அப்படிப்பட்ட அப்பா நான் எக்கேடு கெட்டாலும் கெட்டுப்போகட்டும் என்று நினைப்பாரா?
சீ…சீ.. அப்படியெல்லாம் நினைக்க மாட்டார்”, தனக்குத்தானே சமாதானமும் சொல்லிக் கொள்வான்.

அப்படியானால் கீதாவுடன் பழகுவது தெரிந்தபின்னும் அதுபற்றி என்னிடமேன் கேட்கவில்லை.

உலகத்தில் நடக்காததையா நம்மகன் செய்துவிட்டான் என்று நினைத்துவிட்டாரோ?

ஒருவேளை கீதா சேரி குப்பனின் மகள் என்று அப்பாவிற்கு தெரிந்திருக்காதோ? அதெப்படி தெரியாமல் இருக்கும். போன வருட பொங்கலுக்குக் புதுத்துணி அப்பாவிடம் வாங்கும்போது கூட குப்பன் கீதாவையும் அழைத்து வந்து ‘ஐயா, இதாங்க எம்பொண்ணு, பேரு கீதா. அவ மாமா வீட்டுல நின்னு பனிரெண்டாம் வகுப்பு படிக்குதுங்க’, என்று சொன்னாரே.

படத்துல வர்ர வில்லன்க மாதிரி அமைதியா இருந்து சதிபண்ணி எங்களை பிரிக்கப் பார்க்கிறாரோ?…

அதெப்படி இந்த இளம் பறவைகளை சிறகொடிக்கப் பார்ப்பார் என் அப்பா? அவர் அவ்வளவு கொடிய குணம் படைத்தவரல்லவே… தெரியாமல் காலில் மிதி பட்டு இறந்துபோகும் எரும்புக்காக அனுதாபப்படுபவரல்லாவா?!… அவர் எங்களை பிரிக்க நினைக்க மாட்டார்.
அப்பாவிடமே கேட்டு விடலாமா? இந்த மன சஞ்சலமாவது நீங்குமல்லவா? ‘அவளை மறந்துவிடு, இல்லையென்றால்…’ என்று ஏதாவது சினிமா வசனம் பேசினாரென்றால் அதற்குப்பின் நம்பாதையை வகுத்துக் கொள்வது.

காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாரென்றால் அவர்வழியில் செல்வது.

ஒருவேளை என்னிடமே வந்து உன் நிலைகளை விளக்குகின்றாயா எனக் கேட்டுவிட்டால் என்ன செய்வது.

அப்பாவை நினைத்து காதல் போயின்….”, விவேக்கின் எண்ண ஓட்டத்தை கதவு தட்டப்படும் ஓசை கலைத்தது.

அப்பா தான் கதவைத்தட்டி அவனை அழைத்தார்.

“விவேக் கோயில்ல இருந்து ஆள்வந்திருக்காங்க என்ன கூட்டிப்போறதுக்கு. நிகழ்ச்சி தொடங்க இன்னும் அரைமணி நேரம் தான் இருக்கு. நான் கோயிலுக்கு புறப்பட்டு போறேன். நீயும் வர்றியா? இங்க தனியாத்தானே இருக்கணும். அதைவிட கோயிலுக்கு போயிட்டு வரலாம் வா”.

விவேக்கால் அப்பாவின் வார்த்தைகளை தட்டமுடியவில்லை. வீட்டிலும் வேறு வேலையில்லை. அப்பாவுடனேயே சென்றான்.

ஆனாலும், மனதில் சிறு பொறி தட்டியது, “தனியாத விட்டுச் சென்றால் கீதாவைப் பார்க்கச் சென்றுவிடுவேனென்று தான் உடன் அழைத்துச் செல்கின்றாரோ?…”

கோவிலில் இன்று எட்டாவது நாள் திருவிழா. சித்திரை மாதத்து காற்று தன் கை வரிசையைக் காட்டிக்கொண்டிருந்தது.
அப்பா மேடையில் சென்று அமர்ந்து கொண்டார். விவேக் மேடையின் முன்னால் மணலில் அமர்ந்திருந்த மக்கள் வெள்ளத்தில் தானும் ஐக்கியமாகிக் கொண்டான்.

கூட்டத்தில் பெண்கள் பகுதில் கீதா இருக்கின்றாளா என நோட்டம் விட்டான். ம்கூம்…பார்த்து பார்த்து கழுத்து வலித்ததுதான் மிச்சம். கீதாவை காணமுடியவில்லை.

மேடையில் பெண்ணுரிமை பற்றியும், சாதிக்கொடுமைகள் பற்றியும், சாதிக்கொடுமைகள் நம் புராணங்களில் உள்ளனவா?,பெண்ணுரிமை பற்றி இந்துமதம் என்ன சொல்கின்றது என்பது பற்றியெல்லாம் யார் யாரோ பெரியவர்கள் பேசியதில் ஒன்று கூட விவேக்கின் செவியினுள் நுழையவில்லை.

அவன் கண்கள் அவன் மனதைக்கொள்ளை கொண்ட கீதாவையல்லவா தேடிக்கொண்டிருந்தது. அவன் செவிகளை பறிகொடுக்க நினைத்தது கீதாவின் காதல் மொழிகளுக்கல்லவா? பிறகெப்படி சொற்பொழிவை கேட்கும் அவன் செவிகள்.

ஆனாலும் அடுத்து அவனது அப்பா பேசப் போகின்றார் என்ற அறிவிப்பு காதில் விழுந்ததும் கண்களும் காதும் மனதும் ஒருசேர கீதாவின் நினைவை தற்செயலாக ஒதுக்கிவைக்கத்தான் செய்தது.

ஊரிலேயே மதிப்புமிக்கவர் என்பதாலா இனிமையாகப் பேசக்கூடியவர் என்பதாலா என்பது தெரியவில்லை, அவர் பேச எழுந்தவுடன் கூட்டத்தில் கைதட்டலும், விசிலடியடிதலும் கோவில் வழாகத்தை அதிரத்தான் செய்தது.

ஆரவாரத்தை விரும்பாதவராய் அனாவசிய ஒலிகளை அடக்கிவிட்டு பேச ஆரம்பித்தார் சத்தியசிவம். அவரது வார்த்தைகளும் ‘சத்திய’ மாகவே விழுந்தது, சத்தமாகவும் இருந்தது.

“நம் புராணங்கள் பெண்ணுரிமையையும், சாதிக்கொடுமைகளையும் எந்த கண்ணோட்டத்தில் நோக்குகின்றன என்பதைப் பற்றி எனக்கு முன் பேசிய அன்பர்கள் அழகாக எடுத்துக் கூறினார்கள்.

நானும் அரைத்த மாவையே மீண்டும் அரைப்பது போல அவர்கள் கூறியதைத்தான் கூறப்போகின்றேன். ஆனால், என் மொழியில் கூறப்போகின்றேன்.

யாராவது நம்ம எல்லோருடைய மொழியும் தமிழ்தானே நாம தமிழன்தானே என குதர்க்கம் பேச வேண்டாம். நான் கூறும் மொழி என்பது எனது பாங்கில் சொல்லப்போகின்றேன்.

எனக்குத்தெரிந்து நம் புராணங்களில் எந்த ஓர் இடத்திலும் பெண்களை இழிவாக நடத்தியதாக என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஆண்களை விடபெண்களுக்குத்தான் முக்கியத்துவம் அதிகமாக இருந்தது இருக்கின்றது. கல்விக்கும், செல்வத்திற்கும், வீரத்திற்கும் பெண் தெய்வங்களைத்தானே கும்பிடுகின்றோம்.

நான்….

இன்னும் பலப் பலப் பேசினார். ஆனால் அவர் பேச்சை முடிக்கும்முன் கடைசியாக கூறிய வார்த்தைகள் விவேக்கை சிந்திக்கத் தூண்டியது. அவர் அத்தனையும் சத்தியமானவை.

“நான் ஏதோ ஜாதியற்ற சமுதாயம் மலருவதை தடைசெய்யப் பேசுவதுபோல பேசுகின்றேன் என நினைத்து விடாதீர்கள். நான் எதார்த்தத்தைப் பேசுகின்றேன். இதற்கு முன்பும் இதைத்தான் ஏதார்த்தத்தோடு ஒப்பிட்டு பேசினேன். இதில் சிறுவேறுபாடு அவ்வளவே…

நான் பேசுவதைக் கேட்டு நான் காதலுக்கு எதிரானவன், கலப்பு மணத்திற்கு ஏதிரானவன் என்று நினைக்க வேண்டாம்.

காதல் புனிதமானது தான். கலப்புத் திருமணங்கள் வரவேற்கப்பட வேண்டியதுதான். நானும் காதலை மதிக்கின்றேன். கலப்பு திருமணத்தை ஆதரிக்கின்றேன். ஆனால் இன்னொன்றையும் சிந்தித்தாக வேண்டும். நானும் நீயும் வரவேற்கின்றோம். இந்த அரசாங்கம் வரவேற்கின்ரதா? சாதியை ஒழிக்க ஏதாவது திட்டம் உண்டா? இல்லை புதுப் புது சாதிகளையே ஜனனம் செய்கின்றது.

சாதியை ஒழிப்போம் சாதியை ஒழிப்போம் என பெட்டைப் புலம்பல் புலம்பிவிட்டு பள்ளியிலும் கல்லூரிகளிலும் நீ என்ன சாதி? நீ என்ன சாதி? என கேட்டு மாணவர் மனதில் விச வித்துக்களை விதைக்கின்றது.

சாதிதேவையில்லையென்று நீ சாதியைச் சொல்ல மறுத்தால் உனக்கு வேலை தேவையில்லையென்று சொல்லாமல் சொல்கின்றது.

கலப்பு மணத்தை ஆதரிப்பதைபோல வெளிவேசம் காட்டிவிட்டு கலப்பு மணம் புரிந்த ஒருவனுக்கு பிறக்கும் குழந்தையை வைத்து புது சாதியையே உருவாக்குகின்றது அரசு.

உங்களால் இன்னுமொரு புது சாதி ஜனனம் ஆகவேண்டுமா என்பதை எண்ணிப்பாருங்கள். நான் கலப்பு மணத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றேன் என எண்ணி விடாதீர்கள்.

நான் இதுவரை சொன்னவை அரசாங்க உதவியை நாடவிரும்பிய, விரும்புவோருக்காகத்தான். ஏனென்றால் நம்சமுதாயம் நலிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.

உன்னால் முடியுமா?

ஆம், இந்த சமுதாயத்தை எதிர்த்து எதிர்நீச்சல் போடமுடியுமா? மூன்றாவதாக இன்னுமொரு சாதியை உருவாக்க வழிவகுக்காமலேயே உன்னால் கலப்பு மணம் புரிந்து சாதிகளுக்கு அப்பாற்பட்டவனாக வாழ்ந்து காட்டமுடியுமா?

இப்போதே துணிந்துவிடு….
….
….
துணிந்துவிட்டாயா?

அவ்வாறு துணிந்தவர்களுக்கு எந் மனமார்ந்த பாராட்டுக்கள். நான் விரும்புவதும் நல்லவர்கள் விரும்புவதும் சாதியற்ற சமதர்ம சமுதாயம் தான். ஆனால், நம் அரசியல் வாதிகள் இதை விரும்பவில்லை. அவர்கள் நடத்தும் அரசும் இதை விரும்பவில்லை. ஓட்டுக்காக நம் வாழ்கை ஏட்டையே மாற்றத்துணிந்த எந்தர்களல்லவா அவர்கள். சிந்தித்து நடந்து கொள் சீர் பெறலாம்”, என்று முடித்துக்கொண்டார்.

அப்பாவின் பேச்சு விவேக்கை சிந்திக்கவே தூண்டியது.

“நான் ஐ.ஏ.எஸ் ஆகவேண்டுடாமா?…

ஆக வேண்டும், ஆகவேண்டும்….

அப்படியானால் கீதா? கீதாவும் வேண்டும். கீதா எனக்கு கண்டிப்பாக வேண்டும். அப்பா சொன்னாரே, ‘துணிவுள்ளவர்கள் துணிந்துவிடலாமென்று’.

நான் துணிவில்லாதவனா? உண்மையான காதல் இல்லாதவனா?…

துணிவில்லாதவனா?…..துணிவில்லாதவனா?…. நான்”.

விவேக்கின் மனதில் பலப்பல கேள்விகள்.

சத்தியசிவம் விவேக்கின் எண்ணங்களை எடைபோட முதலும் கடைசியுமாகக் கொடுத்த சந்தர்ப்பமோ?

அவர் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார். முடிவெடுக்கும் உரிமை இவன் கைகளில் அல்லவா இப்போது?…

விவேக் திடமான எண்ணம் கொண்டவனாய் மேடையை நோக்கினான். தந்தையைக் காணவில்லை. அவரை அவன் பக்கத்தில் வந்து நின்றார். மற்ற ஜனங்கள் கூட்டம் கலைந்து சென்று கொண்டிருந்தார்கள்.

விவேக் மெதுவாக, ஆனால் திடமான ஆண்மகனாய் சொன்னான், “அப்பா, எனக்கு கீதா தான் வேண்டும்”.
ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

மொழி


வேலையெல்லாம் முடித்து ஆசுவாசமாக மின்விசியின் கீழ் இருந்த சாய்வு நாற்காலியில் ஆசுவாசமாக அமர்ந்து மெல்லிய பூப்போன்ற துண்டால் முகத்தையும் கழுத்தையும் துடைத்துக் கொண்டாள் சரோஜா.

தன்னிச்சையாக விழிகள் தனக்கு இடப்பக்கம் இருந்த சுவரில் தொங்கிய கடிகாரத்தில் படர்ந்தது.

இன்னும் சிறிது நேரம் தான். இப்போதே மணி 11.30-யைக் கடக்கின்றது. 12.30-மணிக்கெல்லாம் பள்ளியில் இருக்க வேண்டும்.

நினைக்கும் போதே சரோஜாவிற்கு மனதிற்குள் திக் திக் என்றது. “அந்த தலைமை ஆசிரியை இன்று என்ன சொல்லப் போகின்றாளோ?…” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

அவரிடம் பேசி தப்பித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பிள்ளைகளைப் படிக்க வைத்து இருக்கின்றோமா அல்லது தான் தான் படிக்க சேர்ந்து இருக்கின்றோமா? என்று சில நேரங்களில் சரோஜாவிற்கு குழப்பமே வந்து விடும்.

அதிலும், அவர் சொல்வதாவது புரியுமா? ம்ம்..கூம்… இங்கிலாந்திலிருந்து இப்போது தான் வந்து இறங்கியவர் போல ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே இருப்பார்.

சரோஜா தமிழில் பேசினாலும் தொடர்ந்து ஆங்கிலத்தில் தொணதொணத்துக் கொண்டே இருப்பார். அவர் பேசுவது அனைத்தும் புரிந்தாலும் மும்பையில் அரசுப்பள்ளியில் படித்து வந்ததால் ஆங்கிலத்தில் சரளமாக பேச சரோஜாவிற்கு சற்றே சிரமமாக இருக்கும். அதனால் தமிழில் பேசுவது தான் வழக்கம். அப்போதெல்லாம் சுற்றி நிற்பவர்கள் சாதாரணமாகப் பார்த்தாலும் தன்னை அற்பமாகப் பார்க்கின்றார்களோ என்று தனக்குள்ளே வாடிய ரோஜா இதழ்களாகிப்போவாள்.

ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவளை கடிகாரத்தின் மணி நான் பன்னிரெண்டாகிவிட்டேன் என சிணுங்கிச் சொன்னது.

அவசர அவசரமாக பிள்ளைகளுக்கான மதிய சாப்பாட்டை எடுத்துக்கொண்டு, வீட்டின் கதவையும் வெளிக்கம்பி தடுப்பையும் பூட்டு போட்டு பூட்டிக்கொண்டு குடையை விரித்து தலைக்குமேல் பிடித்து சூரியனுக்கு மறைப்புக்காட்டி, பள்ளியை நோக்கி ஒரு தீர்மானத்தோடு நடந்தாள். தினசரி பழக்கத்தால் மனது சொன்னது, 15 நிமிடத்தில் பள்ளிக்கு சென்று சேர்ந்து விடலாம் என்று.

பிள்ளைகளுக்கு சாப்பாடு கூடையை கொடுத்துவிட்டு தலைமைய ஆசிரியையின் அறைக்கு முன்னால் மற்ற பெற்றோர்களோடு கலந்து நின்றாள். மனம் மட்டும் திக்திக் என்று அடித்துக்கொண்டது. தலைமையாசிரியை என்ன சொல்லப் போகின்றார்களோ என்று நினைத்து.

தலைமை ஆசிரியை எப்போதும் போல் எல்லா பெற்றோரையும் உள்ளே அழைத்தார்.

போதுமான இருக்கைகள் இல்லாத அந்த அறையில் முதலில் சென்ற ஓரிருவர் மட்டும் உட்காரமுடிந்தது. மீதம் உள்ளவர்களில் சரோஜாவோடு சேர்ந்து பாதிக்கு மேற்பட்டவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

சரோஜாவிற்கு உள்ளூர என்னவோ போல் இருந்தது. தனக்கு மற்றவர்கள் கொடுக்கும் மரியாதையை எல்லாம் உதிர்த்துவிட்டு இங்கு பள்ளிக்கு வரும்போது மட்டும் இலை உதிர்த்து மொட்டை கிளையாய் நிற்பதுபோல் தோன்றியது.

தலைமை ஆசிரியை பொதுப்படையாக எல்லா பெற்றோர்களுக்குமாக ஆங்கிலத்தில் சொன்னார், “உங்கள் பிள்ளைகள் சுமாராகத்தான் படிக்கின்றார்கள். சிலர் மட்டுமே நன்றாக படிக்கின்றார்கள். வீட்டில் பாடம் ஒன்றும் சொல்லிக் கொடுக்க மாட்டீர்களா?…”

பொதுவான தகவல்களை சொல்லிவிட்டு தன் மேசைமேல் இருந்த பிள்ளைகளின் தேர்ச்சி குறிப்பு அட்டையை எடுத்து கையில் வைத்துக்கொண்டு சாரோஜா நினைத்தது போல் அவளைத்தான் நோக்கி போசலானார்.

“Your son did this exam so poor in some subject. But in some subjects like Maths and Science he did well. Don’t you take care on his progress?…” இன்னும் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றார்.

சரோஜா ஒரு முடிவோட பேச ஆரம்பித்தாள், “க்யா மேடம் ஆப்கோ சமஜ் மே நேகி ஆரஹா க்யா?. க்யா கோயி அப்னே பச்சோக்கே பாரேமே கேர் நேகி கரேங்கேக் கியா? (என்ன மேடம் புரியாம பேசரீங்க. யாராவது பிள்ளைங்க மேல அக்கரை இல்லாம இருப்பாங்களா?.)” என்றாள்.

தலைமை ஆசிரியர் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை உள்ள குழந்தைகளுக்கு இந்தி பாடம் எடுத்துக்கொண்டிருந்ததால் சரோஜா பேசியது பாதி புரிந்தும் பாதி பிரியாமலும் இருந்தது.

சரோஜாவின் கேள்விக்கு அவரால் சரியாக என்ன சொல்லவேண்டும் என்று தெரியவில்லை. அதனால் “I Can’t understand what you say”, என்றார்.
தலைமை ஆசிரியர் சொல்வதைப் பெருட்படுத்தாமல் தொடர்ந்து, “அப்னே பச்சோக்கே பாரேமே ஃபிக்கர் ஹே ஸ்லியே அச்சே ஸ்கூல்மே தாக்கீலா கராயா. பைசாக்கோபி படாசம்ஜா நெகி. நெஹிதோ கார்ப்பரேசன் ஸ்கூல்மே படாத்தே (அக்கரை இருப்பதால் தான் நல்ல பள்ளில பிள்ளைங்களை படிக்க வைக்கணும்னு பணத்தைப்பற்றிக் கூட பார்க்காம இங்க கொண்டு பிள்ளைங்களை படிக்க வச்சிருக்கிறோம். இல்லைண்ணா அரசாங்க பள்ளிக் கூடத்துல படிக்க வச்சிருப்போம்.), எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே தலைமை அசிரியர் இடைமரித்தார்.

“மேடம், நீங்க சொல்ரது ஒண்ணுமே புரியல்ல. கொஞ்சம் தமிழில் பேசுங்களேன்”, என்றார்.

சுற்றி நின்ற பெற்றொர் தலைமை ஆசிரியையும் சரோஜைவையும் மாரி மாரிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“மேடம், மொழி ஒருத்தருக்கு ஒருத்தர் கருத்துக்களை பரிமாரிக் கொள்வதற்குத்தான். உங்களுக்கும் தமிழ் தெரியும் எனக்கும் தமிழ் தெரியும். ஆனாலும் நாங்க தமிழ்ல பேசினாலும் எங்ககிட்ட நீங்க ஆங்கிலத்தில தான் பேசியிருக்கீங்க. ஏன் எங்களுக்கும் ஆங்கிலத்தில சரளமா போச வந்திருந்தால் உங்க கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் தந்திருக்க மாட்டோமா?

ஏன் இதெல்லாம் உங்களுக்கு புரியமாட்டேங்குது. இப்பப் பாருங்க நீங்க இந்தி பாடம் நடத்தரீங்க. ஆனால் நான் பேசின இந்திய உங்களால் புரிஞ்சுக்கவும் முடியல்ல, திருப்பி பதிலும் சொல்ல முடியல்ல.

விளைவு, என்னை தமிழில் பேசச் சொல்ரீங்க.

இதையே முதல்ல நீங்க உணர்ந்து தமிழில் பேசரவங்க கூட தமிழிலும் ஆங்கிலத்தில் பேசரவங்க கூட ஆங்கிலத்திலும் பேசி இருக்கலாமே. ஏன் செய்யல்ல?.

புரிச்சுக்கோங்க… நாங்க உங்க கிட்ட ஆங்கிலம் படிக்க வரல்ல. பிள்ளைங்களத்தான் படிக்க அனுப்பிச்சிருக்கோம். ஏதாவது நாங்க வந்து குறைகள சொன்னா ஆங்கிலத்தில பேசி எங்க வாயை அடைச்சிருவீங்க.

எங்க கிட்ட ஆங்கிலத்தில பீலா காட்டுர நீங்க எத்தனை பிள்ளைங்களுக்கு ஒழுங்கா ஆங்கிலத்தில பேச சொல்லிக் கொடுத்துருக்கீங்க.

அதுவும் இல்லாம, நீங்க சொல்லிக் கொடுப்பீங்க என்கிறதால தான் கட்டணம் கட்டி பிள்ளைங்களை இங்க படிக்க அனுப்பரோம். நாங்க முழுவதும் சொல்லிக் கொடுக்கிறதா இருந்தா உங்களுக்கு எதுக்கு பீஸ் கொடுத்து இங்க படிக்க அனுப்பணும். அதனால, எங்கமேல பழிய போடருதுக்கு பதிலா தவறை உணர்ந்து பிள்ளைங்களுக்கு எல்லா ஆசிரியரும் ஒழுங்கா பாடம் எடுக்கணும் என்கிறத வலியுறுத்துங்க.
பாருங்க… தேர்வு வினாத்தாளில், கம்யூட்டர் டீச்சர் கம்பியூட்டர் ஒரு மின்னனு எந்திரம் என்னும் பதிலுக்கு தப்பு போட்டு இருக்காங்க…”

சரோஜாவிடமிருந்து மழைச்சரமாய் வார்த்தைகள் வந்து விழுந்தன.

தலைமை ஆசிரியைக்கு என்ன சொல்வதென்று தெரியாது சரோஜா பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மற்ற பெற்றோர்களும் சரோஜா போசுவதின் உண்மையைப் புரிந்து மனதிற்குள்ளேயே உவகை செய்தனர்.

அதன் பின் தலைமை ஆசிரியையின் அறையை விட்டு சரோஜா வெளியே வரும் வரை அவள் சொல்வதையே போயரைந்தார் போல் நின்று கவனித்துக் கொண்டிருந்தார் தலைமை ஆசிரியை.

“இனியாவது பெற்றோர்களுக்கு பாடம் நடத்துவதை விட்டு விட்டு பிள்ளைகளுக்கு ஒழுங்காக பாடம் நடத்த வேண்டும் என்பது இந்த மரமண்டைகளுக்கு புரிந்தால் சாரிதான்”, என மனதிற்குள் நினைத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள் சரோஜா.

ஃஃஃ

விபத்து.

தேசிய நெடுஞ்சாலை எண். 7, நேரம் மாலை 5.00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சூரியன் தன் ஒளிச்சிறகினை மெல்ல சுருக்கிக்கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சம் புக ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.

லாரியை ஒட்டிக்கொண்டிருந்த மூர்த்தி தனது பார்வையை சற்று சாலையிலிருந்து அகற்றி கீழிறக்கி தன் டாஸ்போர்டிலிருந்த கடிகாரத்தை நோக்கினான். மணி 5.00-த் தொடப்போகிறேன் என்பது போல் கண்சிமிட்டி விழித்தது. வேகம் 90 கி.மீயைக் கடந்து வண்டி ஒடிக்கொண்டிருந்தது.

சாலையில் கடந்து சென்ற பலகை கன்னியாகுமரிக்கு இன்னும் 7 கி.மீ என்று பறைசாற்றிக் கொண்டிருந்தது.

“இன்னும் 10 அல்லது 15 நிமிசத்துல வீட்டுக்கு போயிரலாம். என் செல்லக்குட்டி அபியையும் அன்பு மனைவி சரோஜாவையும் பார்த்து ஒருமாதம் கடந்து விட்டது. அபிக்குட்டி வீட்டிலிருக்குமா? ஒருவேளை டியூசனுக்கு போயிருக்குமோ?…
சரோஜா என்ன சொல்லுவா…வடநாட்டுக்கு லாரிகொண்டு போகும் போது சின்ன சண்டையோடும் மனவருத்தத்தோடும் போனது. பின்ன எப்பவும் குடிச்சிக்கிட்டே இருந்தா எந்த பொண்டாட்டிக்குத்தான் பிடிக்கும். சண்டைபோடாம கொஞ்சவா செய்வாங்க.

இதுக்குள்ள சரோஜா சமாதானம் ஆயிருப்பா. பாவி வாரத்துக்கு ஒரு போனாவது செய்து பேசியிருக்கலாம். இப்ப நினைச்சி என்ன செய்ய வீடு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும் நேரடியா சமாதானம் செஞ்சிக்க வேண்டியது தான். அபி டியூசன்ல இருந்தாலும் நல்லது தான்”, எண்ண ஒட்டம் பலவாறு ஓடியது மூர்த்திக்கு.

லாரி பால்குளத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. எந்திர யானை தனது வேகத்தைக் குறைக்காமல் சீராக அதே 90 கி.மீ வேகத்தில் அசராமல் சென்றுகொண்டிருந்தது.

இன்னும் ஐந்து நெடியில் கடந்துவிடும் தூரத்திலிருந்தது வட்டக்கோட்டை சந்திப்பு. அது அடிக்கடி விபத்து நடக்கும் பகுதி என்பது மூர்த்திக்கு நன்றாகவே தெரியும். அதனால் காற்று ஒலிப்பானை பலமுறை விட்டு விட்டு அடித்தான் மூர்த்தி.

இன்னும் அரைநெடியில் கடந்து விடும் தொலைவு…

பீம்…பாம்…பீம்…பாம்… என ஒலிப்பானின் சத்தம்.

மூர்த்திக்கு ஏதோ விவகாரம் நடக்கப்போகின்றது என அவன் மூளை எச்சரிக்கும் போதே….

தனது லாரியை பிரேக்கை அழுத்தி தன்னால் முடிந்த அளவு வலப்பக்கமாக லாரியின் வட்டை திருகினான்…

ட்ட்ட்டப்…என வட்டக்கோட்டை உள்ளிருந்து வந்த ஒரு வேனின் முன் பகுதி மூர்த்தியின் லாரியின் பக்கவாட்டில் மோதியது.

சற்று தொலைவில் சென்று லாரி நின்றது. லாரியிலிருந்து குதித்து இறங்கி லாரியின் பின் பக்கம் வந்து பின்னால் எட்டிப்பார்த்தான்.

தன்வண்டியில் வந்து மோதிய வேன் இடித்த வேகத்தில் 90 டிகிரி திரும்பி கன்னியாக்குமரியைப் பார்த்து நின்றதை பார்த்து மூர்த்திக்கு மனம் பதை பதைத்தது. வண்டியில் நிறைய ஆட்கள் இருந்திருப்பார்களே? உயிர்ச்சேதம் ஏதும் ஆகியிருக்குமோ?… பயரேகை மனதில் கவிழத்தொடங்கியது.

வேனின் அருகில் சென்று பார்க்கலாம் என நடக்கையில வேனின் அருகில் ஆட்கள் கூடிவிட்டது தெரிந்தது. வேன் உள்ளிருந்து சிறு குழந்தைகளின் அழுகுரல் வருவது கேட்டது. கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்களில் இரண்டு முன்று இளவட்டங்கள் தன்னை நோக்கி வருவதைக்கண்டான். அவனை கவ்வியிருந்த பயம் மேலும் அதிகமாகியது.

“ஒருவேளை உயிர்சேதம் ஏதும் ஆகியிருந்தால் நம்மை சும்மா விடமாட்டார்கள். முதுகில் டின் கட்டிவிடுவார்கள்” என பலவாறு எண்ணத்தொடங்கினான்.

ஒருநொடி மனப்போராட்டம்…தப்பித்துவிடு தப்பித்துவிடு என உள்ளுணர்வு கூவிக்கொண்டிருந்தது. மின்னல் வேகத்தில் வண்டியில் ஏரினான். சர் என வண்டியை விரைவாக எடுத்துக்கொண்டு கன்னியாகுமரி காவல் நிலையம் சென்று நின்றான்.

வெளியில் மேஜையில் எழுதிக்கொண்டிருந்த எழுத்தரிடம் சென்று “அய்யா, இப்போ வரும்போது வட்டக்கோட்டையில வச்சி ஆக்சிடண்ட் ஆயிடுச்சி. வட்டக்கோட்டையிலிருந்து வந்த வேன் என் வண்டில சைடுல இடுச்சிடுச்சி”, என்றான்.

எழுத்தர் ஏதோ எரிச்சலில் அல்லது மூர்த்தி போன்ற டிரைவர்கள் மேல் எரிச்சலில் இருந்தார் என்பது அவரது பேச்சிலேயே வெளிப்பட்டது, “வாடா வா…இப்படியே நாளுக்கொருத்தனா ஆக்சிடண்ட் பண்ணிட்டு மாமியார் வீட்டுக்குப்போறது போல இங்க வந்துடுங்க. கொஞ்ச நேரத்துல நாங்களும் கேஸப்போட்டு உங்கள ஜாமின்ல விட்டுடரோம். சட்டம் அப்படி நாங்க என்ன பண்ணுரது.
உங்களுக்கென்ன எவன் செத்தாலும் ரெண்டாயிரமோ நாலாயிரமோ கட்டிட்டு கேஸ முடிச்சிட்டுப் போயிடுவீங்க. உயிர பரிகொடுத்தவன் வீடு அம்போதான். கோர்ட் கேஸுண்ணு அலைச்சு இப்போ இருக்குற நிலையில கெடைக்கிற இன்சூரன்ஸ் பணம் கூட கிடைக்காம அல்லாட வேண்டியது தான். நீங்க என்னடாண்ணா அடுத்த ஆக்சிடண்டுக்கு தயாராயிடுவீங்க. சாவுரது உங்கவீட்டு ஆளாயிருந்தால்லா உங்களுக்கு அதோட வலி தெரியும். போடா போயி அந்த மூலைல இரு இப்ப சப்-இன்ஸ்பெக்டர் வந்துடுவார். அதுக்கு அப்புறமா ஜாமின்ல விடுரோம். அதுக்குள்ள உன் ஓணருக்கு போன் செஞ்சு, உனக்கு ஜாமின் கொடுக்குறதுக்கு ஆள ரெடிபண்ண சொல்லு”, என்றார்.

விபத்து பற்றி காவல் கட்டுப்பாட்டு அரைக்கு தகவல் கொடுத்துவிட்டு எழுதிக்கொண்டிருந்த கேஸ் கட்டை மூடிவைத்துவிட்டு சப்-இன்ஸ்பெக்டருக்கு தகவல் சொன்னர். நிலையத்தில் இருந்த இரண்டு ஏட்டுக்களை விபத்து நடந்த இடத்திற்கு செல்லப் பணித்தார்.

இரவு 10.00 மணி சப்-இன்ஸ்பெக்டரும் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற இரண்டு காவலர்களும் அவரவர் இரண்டு சக்கர வண்டியில் வந்து இறங்கினர்.

சப்-இன்ஸ்பெக்டர் வந்த போது மூர்த்தியை ஜாமீனில் எடுக்க லாரி ஒணரும் இன்னும் இருவரும் வந்து இருந்தனர்.

எழுத்தர் “அய்யா, FIR போடனும், ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு வந்தீங்களா?… உயிர்ச் சேதம் ஏதும் உண்டா?” , பவ்வியமாக.

“நல்ல காலம் உயிர்ச்சேதம் இல்ல. வேன் டிரைவரும் நல்லா பிரேக் பிடிச்சி வண்டிய ஒடிச்சி திருப்பினதுனால குழந்தைங்க உயிர் பிழைச்சது. ஆனா இருந்த குழந்தைங்க முன் சீட்ல போயி இடிச்சதுல ரெண்டு குழந்தைங்க சீரியஸா நாகர்கோவில் அரசு மருத்துவமனைல ICU-ல இருக்காங்க. உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்ல. நிறைய ரெத்தம் போயிருககு. விபத்து நடந்த உடனே பக்கத்துல இருக்குற ஏதாவது ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருந்தா கூட ரெத்தப்போக்க உடனே கட்டுப்படுத்தியிருக்கலாம். விதி என்ன செய்ரது, நடக்கரது தான் நடக்கும்” என்றவர் தொடர்ந்தார்.

“ராஸ்கல் இவனாவது வண்டிய நிறுத்தி அந்த குழந்தைங்கள மருத்துவமனைக்கு எடுத்துக்கிட்டு போயிருந்தா, குழந்தைங்களுக்கு இவ்வளவு சீரியஸ் ஆகியிருக்காது”.

இவனுங்கள முட்டிக்கு முட்டி தட்டி, பத்து நாள் உள்ளத்தூக்கி வைக்கலாம்னா அதுக்கு சட்டத்துல வழியில்ல. மீறி வைத்தோம்னா நம்ம மேல மனித உரிமை அது இதுண்ணு புகார் பண்ணிகிட்டு இருப்பானுங்க. நாமகிடந்து அலையணும்”, என்றவாறே மனவழுத்தம் தாங்காமல் மூச்சை நன்றாக இழுத்து விட்டார்.

“ஆமா அந்த லாரி டிரைவர் வந்துட்டான்லா, ஜாமீனுக்கு ஆள் வந்திருக்காங்களா?… வந்துட்டாங்கண்ணா அந்த நாயிகிட்டயும் அவனுக்கு ஜாமீன் கொடுக்க வந்திருக்கவங்க கிட்டயும் ஜாமீன் பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டு அனுப்புங்க. இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தேன்னா அந்த நாய அடிச்சே கொன்னுபுடுவேன்.

பாவம் அந்த குழந்தைங்க அடிபட்டு ரெத்தம் வழிய வழிய கோழிக்குஞ்சு மாதிரி கிடந்தது தான் கண்ணுல தெரியுது”, என்றவாறே பைக்கை நோக்கிச் சென்றார்.

அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முட்டம் கடற்கரைக்குத்தான் காற்று வாங்க செல்கின்றார் என எழுத்தர் மனதிற்குள் கணித்துக்கொண்டார்.

மூர்த்தி போலீஸ் நடைமுறைகள் முடித்து வீட்டுக்கு வரும்போது இரவு மணி 12-ஐக் கடந்திருந்தது. வீடு பூட்டியிருந்தது. தட்டிப்பார்த்தான் திறக்கவில்லை.

பக்கத்து வீட்டு திண்ணையில் படுத்திருந்த செல்லம் பாட்டி எழுந்து வந்து, “மூர்த்தி இப்பத்தா வர்ரியா?…

உன் மக படிக்கிற ஸ்கூலுல இருந்து வட்டக்கோட்டைக்கு வேன்ல போயிட்டு வரும்போது எந்த படுபாவியோ லாரில வந்து வேன்ல இடிச்சிட்டானாம். உன் மக சீரியஸா நாகர்கோயிலு பெரிய ஆஸ்பத்திரியில இருக்காம்…

ஆதான் நம்ம தெருவோட பார்க்கப்போயிருக்காங்க”…. என்று சொல்லச் சொல்ல மூர்த்திக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வர தலையில் கைவைத்து வாசல்ப் படியில் உட்கார்ந்தான்.

ஃஃஃ

கந்து வட்டி.

சப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யா உட்கார்ந்திருந்த சேரில் சற்று முன் பக்கம் நகர்ந்து கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

மெல்ல மேலோங்கும் பசியை உணர்ந்தார். 10.00 மணிக்காவது வீட்டுக்போயி சாப்பிட்டு இருக்கணும், இப்ப மணி 12.00 ஆகுது இனி வீட்டுக்கு சாப்பிடப்போனா காலை சாப்பாடு சாப்பிடர நேரமா என கேட்விக்கணைகள் நீளும், பத்தாதக் குறைக்கு வாண்டுகளும் உடன் சேர்ந்து கொண்டு வாட்டும், “அப்பா ஞாயிற்றுக்கிழமையாவது நேரமா வரக்கூடாதா”, என்பதில் ஆரம்பித்து “ஏன் இன்றைக்கு எங்கள வெளிய கூட்டிட்டு போகல்ல?”, என்று நீழும். பேசாமல் மதியம் 2.00 மணிக்கு மேல வீட்டுக்குப் போயி காலைல வெளியில சாப்பிட்டு விட்டேன் என ஏதாவது புழுக வேண்டியது தான். எண்ணவோட்டம் பல வாராக கிளைபரப்பியது.

சரி இப்போதைய பசிக்கு என்ன செய்வது?…

சுற்றியும் தன் எக்ஸ்-ரே பார்வையை பாயவிட்டார். எழுத்தர் ஏதோ அக்கரையாக எழுதிக்கொண்டிருப்பது போல் தெரிந்தது. அவர் முன்பு சற்று நேரத்திற்கு முன் சமரசம் பேசி அனுப்பி வைத்த புகார் தாரர்கள் நின்று கொண்டிருந்தார்கள். வாசலில் முனியாண்டி ஏட்டு துப்பாக்கியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சேரில் உட்கார்ந்திருந்தார். வேறு யாரும் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை.

குறுக்க மறுக்க அங்கும் இங்குமாக தேவையில்லாமல் நடந்து வாங்கிக் கண்டிக்கக் கூடாது என்ற பயமாக இருக்கலாம்.

தன் முன் மேஜையில் இருந்த அழைப்பு மணியை மெல்லமாக அழுத்தினார்.

வாசலில் இருந்த முனியாண்டி இராஜவேலு அய்யா மணியடிக்கிறாறு என்னண்ணு போயி கேளு என்று சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே ஏட்டு இராஜவேலு சப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யா முன் ஆஜராகி கேட்டார்.

“ஐயா மணி பன்னிரெண்டாகுது நீங்க இன்னும் சாப்பிடப்போக வில்லையா. பசிக்கலியா?”

“அதான் இராஜவேலு கூப்பிட்டேன். வெளிய யாராவது இருந்தால் போயி ரெண்டு வாழைப்பழம் வாங்கிட்டு வரச்சொல்லுங்க. கதலி பழம் மட்டும் வேண்டாம். போலீசாரையும் யாரையும் அனுப்ப வேண்டாம். சரியா?”

“சரிங்கய்யா, அய்யா கந்து வட்டி சம்மந்தமா ரெண்டு குரூப் வெளிய நின்னுகிட்டு இருக்காங்கய்யா, வரச்சொல்லவா?”

ஒரு நெடி யோசனைக்குப் பின், “சரி இராஜவேலு, அந்த பார்ட்டிங்கள வரச்சொல்லுங்க”.

அடுத்த இரண்டாவது நிமிடத்திற்குள் இருதரப்பினரும் சப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யா முன் ஆஜரில் இருந்தனர். இரண்டு தரப்பிலும் நான்கு ஐந்து பேருக்கு மேல் இருந்தார்கள். ஒன்றிரண்டு பேர் கரைவேட்டிகளும் கட்டியிருந்தனர்.

இரண்டு தரப்பினரையும் ஆளமாக ஊடுருவிப்பார்த்தார். வந்திருந்தவர்கள் மெல்ல கைகால்களை அங்குமிங்கும் மெல்லமாக சரிசெய்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார்கள். வந்திருந்த கரைவேட்டிகளில் ஒன்று அவரின் பார்வையைப் புரிந்து கொண்டு தன் சட்டையின் மேல் வரிசைப் பொத்தானை மாட்டியது.

மெல்ல செருமியவாரே, “இங்க சுந்தர் யாரு, செல்வம் யாரு” என்றார். இருவரும் சார் என்றார்கள்.

இருதரப்பையும் பார்த்து, “யாரும் தப்பா நினைக்க வேண்டாம், தேவைப்பட்டா உங்களையும் விசாரிக்கும் போது கூப்பிட்டுக்கரேன், இப்போ சுந்தரையும் செல்வத்தையும் தவிர மற்றவங்க வெளியல இருக்குற பென்ஞ்சில போய் உட்காருங்க” என்றார்.

பிரச்சனையில் சம்மந்தப்பட்டவர்களோடு மற்றவர்களையும் கூட்டமாக வைத்து எந்தப்பிரச்சனையை விசாரித்தாலும் தேவையில்லாமல் பிரச்சனை நீளும். முடியவேண்டிய பிரச்சனைகள் கூட முடியாமலேயே இழுத்துக்கொண்டிருக்கும் பிரச்சனையும் முற்றிப்போகும் என்பது சப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யாவின் எண்ணம். அதிலும் அரசியல் கட்சி பிரமுகர்களோ அல்லது வைக்கீல்களே உடன் வந்தால் பிரச்சனை இன்னும் நீளும் என்பதை நன்கே அறிந்து வைத்திருந்தார். அதனால் எப்போதுமே அவர்களின் மனம் கோனாதவாறு பேசி வெளியே இருக்க வைத்துவிடுவது வழக்கம். சில முரண்டு பிடிக்கும் வைக்கீல்கள் என்றால் அவர்களையும் உடன் வைத்துக்கொண்டே பிரச்சனையை சுமூகமாக முடித்துவிடுவார்.

மனுதாரரையும் எதிர்மனுதாரரையும் தன் முன் கிடந்த பென்சில் உட்காரச்சொன்னார்.

“அய்யா இல்லைங்க நிற்கின்றோம்” என்றனர் ஒருமித்து.

“பரவாயில்ல பெரியவர உட்காருங்க”, என்றார்.

இருவரும் பென்ஞ்சின் நுனியில் பவ்வியமாக உட்கார்ந்தனர்.

“இப்ப சொல்லுங்க, உங்கப் பிரச்சனைய”, என்றார்.

சுந்தர் இருக்கையை விட்டு எழுந்து, “அய்யா ரெண்டு வருசத்துக்கு முன்ன தன்னோட மக கல்யாணத்துக்கு பணம் எங்கும் கிடைக்காம எங்கிட்ட வந்து கண்ணீரும் கம்பலையுமா நின்னார். நான் பாவப்பட்டு இரக்கப்பட்டு என் பொண்டாட்டி நகையை அடகு வச்சும் கையில இருந்த காசையும் போட்டு மொத்தமா ஒரு லட்சம் ரூவா குடுத்தேன். ஆனா அந்த நன்றிக்கடனுக்கு இப்ப என்ன உங்க முன்னால கொண்டாந்து நிறுத்திருக்காரு. அதுவும் இல்லாம கந்துவட்டி கேஸ் குடுப்பேண்ணு வேற பயமுறுத்துராறு”.

சுந்தர் சொல்லி முடிக்கிறதுக்கு முன் செல்வம் குறுக்கிட்டு, “அய்யா அவர் ரூவா தந்தது உண்மைதான். ஆனா அதுக்கு வட்டிமட்டுமே மாதம் மூணாயிரம் கொடுத்துட்டு வரேன். இப்ப ரெண்டு மாசமா வட்டி குடுக்கல்ல அதுக்கு வீட்டாண்ட வந்து சத்தம் போடுராறு. பணத்தை உடனே எடுத்துவையின்னு சொல்லுராறு. அதான் நான் இங்க வந்தங்க”, என்றார்.

சுந்தர், “அய்யா, நானே பாதிபணம் போக மீதிப்பணத்த சேட்டுக்கடையில எங்க வீட்டு நகைய ரெண்டு ரூவா வட்டிக்கு வச்சித்தான் கொடுத்து இருக்கேன். இவர் வட்டி ரூவா தராம இருந்தா நா எப்படி சேட்டுக்கு வட்டி கட்டுவேன். அதுவும் இல்லாம எம் பையன் வட்டி ரூவா வாங்கப் போனப்ப உன் அப்பனுக்கு இது பர நாப்பதாயிரம் வட்டி கட்டிட்டேன். அதனால இனி வட்டி தரமுடியாது. ரூவாயும் மெதுவாத்தான் தருவேன்னு சொல்லி விட்டுயிருக்காரு. அதனாலதான்கய்யா நான் போயி வாங்கும் போது இனிச்சில்ல இப்ப தர்ரதுக்கு கசக்குதாக்கும்னு சத்தம் போட்டேன் மற்றபடி ஒண்ணும் சொல்லல்ல”, என்றார்.

“அய்யா ரூவா வாங்குனது வாஸ்தவம் தான். ஆனா அதுக்கு இது வர வட்டி கொடுத்ததும் உண்மைதான. இது வர அறுபதாயிரம் ரூவா வட்டியே கொடுத்து இருக்கேன்”, என்றார் செல்வம்.

“அய்யா, வட்டி இவ்வளவுண்ணு முதலிலேயே சொல்லித்தான் கொடுத்தேன். அவரும் ஒத்துக்கிட்டு தான் வாங்கினார். ஆனா இப்ப இவ்வளவவு வட்டி குடுத்திருக்கேன் என்று சொல்லுரது என்னங்கய்யா ஞாயம்”, என்றார் சுந்தர்.

சப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யா இருதரப்பின் ஞாயத்தையும் கேட்டுக்கொண்டிருந்தவர், “சுந்தர் நீங்க பணம் கொடுத்ததும் உண்மை, செல்வம் நீங்க பணம் வாங்கியதும் உண்மை ரெண்டுபேருமே உண்மைய ஒத்துக்கிறீங்க சந்தோசம்.

அதுவும் இல்லாம செல்வம் நீங்க பணம் வாங்கும் போது மூணுவட்டிக்கு ஒத்துக்கிட்டு தான் பணத்தை வாங்கியிருக்கீங்க. ஆனா இப்ப வட்டி நிறைய குடுத்திட்டேன். அதனால இனி வட்டிக்கொடுக்க மாட்டேன். ரூபாயையும் மெல்லத்தான் கொடுப்பேன் என்பது நியாயம் இல்லாதது.

நான் என் போலீச வச்சு விசாரிச்சதுல எனக்கு தெரிஞ்சது என்னண்ணா செல்வத்துகிட்ட இப்ப நிலம் வித்த பணம் இருக்கு…”

சற்று பேசுவதை நிறுத்தியவர் மீண்டும் தொடர்ந்தார், “அதனால செல்வம் சுந்தரின் பணத்தை குடுப்பதுதான் முறை. வேண்டுமானா இப்ப கடைசியா கொடுக்காம விட்ட இரண்டு மாத வட்டியை சுந்தரிடம் குறைத்துக்கொள்ளச் சொல்லலாம், இதுக்கு இரண்டு தரப்பும் ஒத்துக்கிட்டீங்கண்ணா சொல்லுங்க. இங்கையே பேசி முடிச்சி எழுதி அனுப்பி விடுரேன். மனம் இல்லைண்ணா சொல்லுங்க, நான் உங்க புகார போர்ட்டிற்கு திருப்பி எழுதித்தரிரேன். நீங்க சிவில் கோர்ட்ல பார்த்துக்கங்க. நான் விசாரிச்ச அளவில் மிரட்டல் ஏதும் இல்லைங்கரதால என்னால கேஸ் எல்லாம் போட முடியாது. வேணும்னா ரெண்டு தரப்பும் வெளியில போயி கொஞ்சம் யோசிச்சிட்டு வாங்க”, என்றார்.

வெளியில் சென்று யோசித்தவர்கள் சற்று நேரத்திற்கு பின் உள்ளே வந்தனர்.

“அய்யா நீங்க சொல்ரதும் ஞாயமாத்தான் படுது. அதனால நீங்க சொன்னது மாதிரியே பணத்தை கொடுக்க ஒத்துக்கரேன்” என்றார் செல்வம்.

“நானும் அய்யா சொன்ன மாதிரி ஒத்துக்கரேன்” என்றார் செல்வம்.

இருதரப்பினரும் பரஸ்பரம் எழுதி கையெழுத்துப்போட்டு விட்டு புறப்பட ஆயத்தமானார்கள்.

இருதரப்பிலிருந்தும் வந்திருந்த அனைவரையும் உள்ளே கூப்பிட்டு, “நான் இப்ப சொல்ரது சட்டத்துக்கு அப்பாற்பட்ட உண்மைகள். கடைல எல்லாரும சாமான் வாங்கியிருப்பீங்க, ஒவ்வொறு கடைக்காரரும் ஒவ்வொரு பொருளுக்கு மேலயும் இருபது சதவீதம் வர லாபம் வஞ்சித்தான் விற்கின்றார்கள். ஆனா கேட்டீங்கண்ணா, அண்ணே லாபமே இல்லண்ணே, உங்ககிட்ட போயி லாபம் பார்ப்பேனா என்பார்கள். வியாபாரம்னாலே பொய்தான். ஆனா எந்த பொய்யும சொல்லாம எவ்வளவு வட்டிண்ணு உண்மைய சொல்லித்தான் வட்டிக்கு விடரவங்க விடுராங்க. ஆனா வாங்குன நாம பணமா வாங்கும் போது சந்தோசப்படுரோம். வாங்கிய பணத்தை கொடுக்கும் போது சங்கடப்படரோம். கொடுக்கணுமான்னு யோசனையும் பண்ணுரோம். இது எந்த விதத்துல ஞாயம். ஆனா துரதிருஷ்ட வசமா ஒண்ணு ரெண்டு பேரு பண்ணுர தில்லுமுள்ளு நால அவசரத்துக்கு உதவி பண்ணுர அப்பாவிகளும் பாதிக்கப்படுராங்க. ஆனா சட்டம் இப்போ கொடுக்கரவனுக்கு சாதகமா இல்ல. வாங்கி ஏமாத்தரவங்களுக்குத்தான் சாதகமா இருக்கு. அதனால பணத்தக் குடுக்கும்போது ஆயிரம் தடவ யோசிச்சி கொடுங்க. இப்படி அல்லல் படவேண்டி வராது. பணத்தக் குடுத்து யாமாந்தவங்க மேல எனக்கே பரிதாபம் இருந்தாலும் சட்டத்த மீறி நாங்க ஒண்ணும் பண்ண முடியாது. பண்ணவும் கூடாது. ஞாயம் செத்துக்கிட்டே வர்ர உலகத்துல அவங்க அவங்க தான் தங்களோட பணத்தை பாதுகாத்துக்கணும்.

இப்ப நீங்க ரெண்டு தரப்பும் ஒத்துக்கிட்டதால நான் சமரசம் செய்யமுடிச்சது இல்லண்ணா?… இரண்டு தரப்பும் கோர்ட் கேஸ்ணு இழுத்துக்கிட்டுத்தான் இருக்கணும். பணமும் போயி சந்தோசமும் போயிடும். சரி இப்போ போயிட்டு வாங்க”, என்றார்.

இருதரபபினரும் வெளியே போவதை பார்த்துக்கொண்டிருந்தவர் மனதிற்குள் என்று தான் மக்களுக்கு நியாய உணர்வுகள் மேலோங்குமோ தெரியவில்லை என்று எண்ணியவாரே வீட்டிற்குப்புறப்பட ஆயத்தமானார்.

கடிகாரத்தில் இருந்து இனிய இசை வெளிப்பட்டு மணி நான்கு என்பதை சொல்லாமல் சொன்னது.

ஃஃஃ

பேய் நடமாட்டம்.

“என்ன தான் செய்துவிடும்?
உயிரும் உடலும் சேர்ந்த மனிதத்தை!…
நீ நம்பும் ஆவி”.

காலை மணி 7.00. எப்போதும் கூட்டம் நிறைந்து நிற்கும் தளவாய்புரம் காவல் நிலையத்தில் இன்று பிரச்சனைகளை சுமந்து நிற்கும் மக்கள் கூட்டத்தைக் காணமுடியவில்லை. மாறாக காவலர்கள் வெளியில் நின்று ஏதோ பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

தூரத்தில் பட்…பட்…. என்ற புல்லட் பைக்கின் ஓசை கேட்டு பரபரத்து அவரவர் இடத்திற்கு சென்று நிலைகொண்டார்கள் காவலர்கள்.

மிடுக்காக பைக்கில் இருந்து இறங்கி தன் சிங்கப் பார்வையால் கம்பீரமாக சுற்று வட்டாரத்தை நோட்டம் விட்டபடி தன் விறுவிறு நடையுடன் காவல் நிலையப்படி ஏறிய படியே “இராஜவேல் இங்க வாங்க”, என்று குரல் கொடுத்த எஸ்.ஐ ஆதித்யா முப்பத்து மூன்று வயதைக் கடந்து சில வாரங்கள் தான் இருக்கும். ஐந்தே முக்கால் அடி உயரம். பொதுப்படையான நிறம். துறு துறு கண்கள். ஒட்ட வெட்டிய தலைமுடியில் தான் போலீஸ் என்பதை சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தார்.

வெந்நீரைக் காலில் ஊற்றிக்கொண்ட அவசரத்தில் ஓட்டமும் நடையுமாக எஸ்.ஐ முன் வந்து நின்றார் இராஜவேல். சுமார் நாற்பதைக்கடக்கும் வயதுடன் இன்னும் தொப்பை சரியாத வயிற்றுடன் கம்பீரமாக இருந்தார். தன் மேலதிகாரி நேர்மையானவர் என்பதால் அவர் மீது அபாரமான மரியாதை வைத்திருப்பவர். அவரது ஓட்டமும் நடையுமான வேகத்திற்குக் காரணம் மேலதிகாரி மீதுள்ள பயம் இல்லை. மாறாக அவர் மீது கொண்டிருந்த மரியாதையே காரணம்.

“அய்யா, சொல்லுங்கய்யா, இராஜவேல் பவ்வியமாக வார்த்தைகளை உதிர்த்தார்.

“என்ன இராஜவேலு ஏதாவது விஷேசமா…வெளிய ஒரு ஆளக்கூட காணல்ல… நம்ம ஆட்கள்கிட்டயும் ஏதோ வித்தியாசமா தெரியுது.

இராஜவேலுவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே கேட்டார் எஸ்.ஐ. அவருக்குத் தெரியும் இராஜவேலுவிடம் கேட்டால் தான் ஒளிவு மறைவற்ற உண்மை கிடைக்கும் என்று. எதையும் கூட்டிக் குறைத்துக் கூறமாட்டார். ஆனால் இடம் பொருள் பாரத்து பக்குவமாக உள்ளதை உள்ளபடி பேசுவார். எல்லோரின் நலம் விரும்பி. காசுக்காக எதையும் செய்ய மாட்டார். காரியம் செய்த பின் யாரும் விரும்பி கொடுக்கும் பணத்தையும் வேண்டாம் என்று மறுக்க மாட்டார். யாரிடமும் வாய் திறந்து பணம் கேட்கவும் மாட்டார். எதார்த்த வாதி. அதனாலேயே எஸ்.ஐ-க்கும் அவரை நிரம்பவே பிடிக்கும்.

அய்யா, நேத்து ராத்திரி நம்ம மலை பிள்ளையார் கோவில் அடிவாரத்துல இருக்குற சுடுகாட்டு பக்கமா ரோட்டுல போய்ட்டு இருந்த மேலத்தெரு பெரிய சாமியை பேய் அடிச்சு இறந்துபோனான். காலைல தான் ரோட்டுப்பக்கமா போன ஆட்கள் பார்த்துட்டு வந்து தகவல் சொன்னாங்க. நம்ம பெரிய ஏட்டு இராமச்சந்திரனும் இப்ப அங்கதான் போயிருக்காரு. வீ.ஏ.வும் பார்த்துட்டு வந்து கம்ப்ளைண்ட் தர்ரதா சொல்லிட்டுப் போயிருக்காரு. அதான் ஊர் ஜனங்கள்லாம் அங்க வேடிக்கை பார்க்கப் போயிட்டாங்க. அதப்பத்திதான் நம்ம ஆளுங்களும் பேசிட்டு இருந்தாங்க.

“என்ன இராஜவேலு தமாசு பண்ணுரீங்க…பேயடிச்சு இறந்தான் கீயடிச்சு இறந்தான்னுட்டு…வேடிக்கையா இல்ல இது.

“அய்யா, அப்படில்லாம் சொல்லாதீங்க பேய் பிசாசு எல்லாம் உண்மைதான். நானே அந்த இடத்த கடந்து போகும் போது ஒருமுறை பேயப் பார்த்து இருக்கேன். ஆறு மாதச்த்துக்கு முன்ன நானும் ஏட்டு கலிய பெருமாளும் இராத்திரி ரோந்து போயிட்டு ராத்திரி 12.00 மணிக்கு அந்த இடத்துல வந்துட்டு இருக்கும் போது திடீர்னு எங்க முன்ன ஒரு பனை உயரத்துக்கு பேய் ஒண்ணு புகைமூட்டம் மாதிரி வந்து நின்னுது…”

சொல்லும் போதே மூச்சிரைத்த இராஜவேல் மீண்டும் தொடர்ந்தார்.
“நல்ல வேளையா அந்த நேரம் பார்த்து லாரி ஒண்ணு வந்தது. அத பார்த்துட்டு அந்த பேய் மறைச்சி போயிட்டுது இல்லது அண்ணைக்கே எங்க கதியும் மேலத்தெரு பெரிய சாமி கதிதான். ஆனாலும் கலிய பெருமாள் மூணு மாசம் படுத்தப்படுக்கை ஆகிட்டார். இப்ப கொஞ்ச நாளாத்தான் ஆள் நல்லா இருக்கார்.” பரவசத்தோடு சொல்லி முடித்தார் இராஜவேல்.

எஸ்.ஐ ஆதித்தியாவின் இளம் இரத்தம் இராஜவேலு சொன்னவற்றை நம்ப மறுத்தாலும் அவர் சொன்னவற்றை கவனமாக கேட்டு தலையாட்டி வைத்தார்.

சரி அடுத்த காரியத்த பாருங்க இராஜவேலு தலைக்கு மேல வேலையிருக்கு. சொல்லிக் கொண்டே ஆதித்யா தன்முன் மேஜையில் குவிந்திருந்த கேஸ் கட்டுக்களை எடுத்து வாசிக்கலானார்.

இரண்டுவாரம் கழித்து ஒரு வெள்ளிக்கிழமை. எஸ்.ஐ ஆதித்யாவிற்கு இரவு ரோந்துப் பணி ஒதுக்கியிருந்தார்கள். ஆதித்யா காவல் நிலையத்தில் பேசிக்கொண்ட பேய்க்கதைகள் அத்தனையும் மறந்து விட்டிருந்தார். அன்று இரவு ரோந்திற்கு அவரோடு இராஜவேலுவுக்கும் டூட்டி போட்டு இருந்தார்கள்.

இருவரும் சப்-டிவிசன் எல்லைக்குள் ரோந்து முடித்துவிட்டு நள்ளிரவு சுமார் 2.00 மணிக்கு காவல் நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

சற்று தூரத்தில் மலைப் பிள்ளையார் கோவில் மெர்க்குரி விளக்கை பார்த்த போதே இராஜவேலுவிற்கு வயிற்றை ஏதோ பிசைவது போல உணர ஆரம்பித்தார். கூடவே பிண வாடை வேறு. அனேகமாக அந்த சுடுகாட்டில் தான் பிணம் எரிந்து கொண்டிருக்க வேண்டும். வேறு வழியாக காவல் நிலையத்திற்கு போனால் நன்றாக இருக்கும் என்று இராஜவேலுவிற்கு தோன்றியது. ஆனால் அதை எப்படி எஸ்.ஐ-யிடம் சொல்வதென்று மனதிற்குள் தயங்கிக்கொண்டிருக்கும் போதே எஸ்.ஐ-யின் புல்லட் கோவில் அடிவாரத்தில் இருக்கும் சுடுகாட்டிற்கு சமீபமாக வந்து விட்டது.

“இராஜவேலு பொணம் ஏதும் எரியுதோ?!…”, எஸ்.ஐ-ஏ கேட்டார்.

“அய்யா, ஆமங்கையா…பொணம் எரியுற வாடைதான் இது… அதன்பின் நீண்ட மௌனம் இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.

கீரீச்…. எஸ்.ஐ ஆதித்தியா புல்லட்டை அசுரத்தனமாதக பிரேக்போட்டு நிறுத்தினார். இராஜவேலுவும் ஒரு நிமிடம் பதட்டத்தில் ஆடிப்போனவர் சுதாகரிப்பதற்குள் “இராஜவேலு முன்னப்பாருங்க… பதட்டமாக ஆனால் மிகச் சன்னமாக வார்த்தைகள் வேளிப்பட்டது எஸ்.ஐ ஆதித்தியாவிடம்.

முன்பக்கம் எட்டிப்பார்த்த இராஜவேலு உரைந்தே போனார். அவர் சுமார் ஏட்டு மாதங்களுக்கு முன் இதே இடத்தில்வைத்து பார்த்த அதே உருவம். ஆஜானுபாகுவாக ஒரு பனை உயத்தில் கருகருவென்று வெண்புகை சூழ…. அய்யோ இன்று தொலைந்தோம் யாரும் எஸ்.ஐ ஆதித்யாவையும் தன்னையும் காப்பாற்ற முடியாது. இன்றோடு தொலைந்தோம். அய்யய்யோ பிள்ளை குட்டிகளுக்கு கூட இது வரை ஏதும் சேர்த்து வைக்கவில்லை. நாம இல்லண்ணா எப்படி கஸ்டப்படப்போறாங்களோ…ஏதேதோ எண்ண ஓட்டம் மனதில் ஓட கண்கள் மங்கத்தொடங்கியது…

எஸ்.ஐ ஆதித்யாவிற்கும் மனதிற்குள் லேசான நெருடல். இதே இது மனிதனாக இருந்து எப்பேர்ப்பட்டவனாக இருந்தாலும் எத்தனை பேராக இருந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம். உண்மையிலேயே இது பேயா இருந்தா என்ன செய்யுறது. இடுப்பில் அமைதியாய் நான் எப்போதும் உனக்குத் துணை என்பதுபோல் கம்பீரமாக காத்துக்கொண்டிருந்த பிஸ்டலை தொட்டுப் பார்த்துக்கொண்டார்.

அந்த நெடிய உருவம் மெல்ல மெல்ல நகர்ந்து தங்கள் பக்கம் வருவதைப்பார்த்த எஸ்.ஐ ஆதித்தியாவிற்குள்ளும் பய இருள் மெல்ல படர ஆரம்பித்தது. தன் இஸ்ட தெய்வம் முருகனை மனதிற்குள் வணங்கிக் கொண்டார்.

அவர் அப்பா அடிக்கடி சொல்லும் “பயமில்லாதவனாக நடிப்பது கூட பயத்தை வெல்லும் உபாயம் தான்” என்ற வார்த்தைகளை மனதில் அசைபோட்டுக் கொண்டு மனதை உண்மையிலேயே தைரியப்படுத்திக் கொண்டார். பிறந்த மனிதன் இறப்பது உறுதி என்ற தெளிவு சிறு வயதிலேயே இருந்ததால் வருவது வரட்டும் அந்த உருவத்தை எதிர்கொண்டு ஜெயிக்கலாம் என்று மனதில் துணிந்தார்.

அந்த உருவத்தை கூர்மையாக உற்று நோக்க ஆரம்பித்தார்.

அந்த உருவம் மேலும் மேலும் இருவரையும் நெருங்கியது. சில நேரம் இடது பக்கமும் வலது பக்கமும் சென்று வருவது போல் இருந்தது. பைக்கை திருப்பிக்கொண்டு வந்த வழியோ விரைவாக திரும்பி விடலாமா என்று ஆசையையும் ஒருவேளை அந்த உருவம் பைக்கைவிட வேகமாக நம்மைப்பின் தொடர்ந்தால் என்ன செய்வது என்ற எண்ணம் தடுத்து நிறுத்தியது.

இனம் புரியாத உணர்வோடு செய்வதறியாத நிலையில் உடலெங்கும் வியர்த்து வியர்வையாறு கொட்டியது. பயத்தில் மூர்ச்சையான இராஜவேல் மெல்ல கண்விழித்தவர் அந்த உருவத்தை மிக அருகில் பார்க்க நேர்ந்ததால் மீண்டும் சின்ன முனகலோடு மூர்ச்சையாகி ஆதித்யாவின் முதுகில் சாய்ந்தார்.

ஆதித்யா இடுப்பிலிருந்து பிஸ்டலை உருவி காக் செய்து துப்பாக்கியை தயார் நிலையில் வைத்துக்கொண்டார். வருவது வரட்டும் என்ற துணிவோடு அந்த உருவத்தை அங்குலம் அங்குலமாக ஆராய ஆரம்பித்தார். சுமார் முப்பது அடி உயர கரிய ஒளி ஊடுருவம் தன்மையுள்ள உடல் பருத்து பனைபோல காட்சி தந்தது. தலை என்று எதுவும் தனியாக தெரிய வில்லை. உடலின் உச்சியிலிருந்து சுமார் ஐந்தடி கீழே அகல விரித்த பருத்த கைகள். வாவா என்று அவரை அழைப்பது போலவே அவருக்கு தோன்றியது. கைகழுக்கு கீழே கால்கள் இரண்டாக இல்லாமல் ஒரே தூண்போல இருந்தது. கால்களும் தரையில் தொட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

அந்த உருவம் மேலும் மேலும் அருகில் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆதித்யாவின் பயம் முழுவதும் வடிந்து போய் இப்போது வருவது வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியம் மேலோங்கியிருந்தது. தன் தைரியத்தைப் பற்றி தனக்குள்ளேயே உருவகப்படுத்திக் கொண்டார் ஆதித்யா “அணையப்போகும் விளக்கின் கடைசி பிரகாசமாக இருக்குமோ” என்று.

முதுகில் சாய்ந்திருந்த இராஜவேல் இடது புறமாக சரிவது போல் இருந்தது. அந்த இக்கட்டான நிலையிலும் அவர் கீழை விழுந்து விடக்கூடாது என்பதற்காக பைக்கில் இருந்தபடியே பின் பக்கம் திரும்பி இராஜவேலுவை தூக்கி நிமிர்த்து வைத்து விட்டு திரும்பியவருக்கு தனக்கு பின்னால் இருந்த மரத்தில் தெரிந்த காட்சி மனதில் புது தெம்பை ஊட்ட உற்சாகமாக முன்பக்கம் திரும்பினார்.

அந்த உற்சாக மிகுதியோடு பிஸ்டலை இடுப்பில் செருகிக்கொண்டு அந்த உருவத்தை மீண்டும் கவனமாக உற்றுநோக்கிக் கொண்டே நிம்மதிப் பெருமூச்சு விட்டார். இராஜவேலுவை எழுப்ப நினைத்தவர் அவரை எழுப்பாமலேயே மனதிற்குள் நினைத்துக்கொண்டார் ஒருவேளை எழுந்தால் மீண்டும் மூர்ச்சையாக கூடும் என்று அதனால் தன் இருப்பிலிருந்த பெல்டை கழட்டி அதை தளர்த்தி இராஜவேலுவையும் தன்னையும் ஒரே பெல்டினால் இராஜவேல் கீழே விழாதவாறு பிணைத்துக் கொண்டு அந்த உருவத்தைப்பார்த்து புன்னகைத்துக்கொண்டு புல்லட்டை காவல் நிலையம் நோக்கி நிதானமாக செலுத்தினார்.

மறுநாள் காலை 7.00 மணி ரோல் கால். எஸ்.ஐ ஆதித்யா கம்பீரமாக தன் இருக்கையில் அமர்ந்திருக்க இராஜவேலுவும் மற்ற காவலர்களும் அவரை சுற்றி நின்று கொண்டு இருந்தனர் அன்றைய தங்களது டூட்டியைத் தெரிந்து கொள்வதற்காக.

இராஜவேலு மனதில் அன்றைய டூட்டியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலைவிட எஸ்.ஐ-யும் தானும் இன்று எப்படி உயிரோடு இருக்கின்றோம் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலே அதிகமாக இருந்தது. நேற்றைய சம்பவத்தை இராஜவேலு ஏற்கனவே மற்ற காவலர்களிடமும் சொல்லி இருந்ததால் அவர்களும் ஆவலாகவே இருந்தனர்.

இராஜவேலு தன் ஆவலை அடக்க முடியாமல் கேட்டே விட்டார். “அய்யா, அந்த பேய்கிட்ட இருந்து நீங்களும் தப்பிச்சி என்னையும் எப்படிங்கய்யா காப்பாத்திகிட்டு வந்தீங்க….”.

ஆதித்யா தனக்குள் நமட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டு சுற்றி நின்ற காவலர்களின் முகத்தை ஒருமுறை நோட்டம் விட்டார்.

“அது ஒண்ணும் பேய் இல்லைங்க…நம்மோட பிரமைபும் பயத்தின் வெளிப்பாடும் கலந்து தான் அது நமக்கு பேயா தெரிச்சிருக்கு…எனக்கும் தான்…மற்றப்படி அங்க பேயும் இல்ல பிசாசும் இல்ல…”

“அய்யா, நீங்களும் நானும் தான் கண்கூடாக பார்த்தோமே அந்த பேயை. அப்புறமா எப்படி அது பேய் இல்லைண்ணு சொல்லுரீங்க. அப்ப நான் பார்த்தது பொய்யா…” , என்றார் இராஜவேலு.

“இராஜவேலு நாம ஒரு உருவத்தைப் பார்த்தது உண்மை தான். ஆனா அந்த உருவம் பேயா இருக்க வேண்டிய அவசியம் இல்லையே… நிறைய பேரு இப்படித்தான் ஏதாவது உருவத்தைப்பார்த்து பேய்யிண்ணு நினைச்சி பயந்துகிட்டு மற்றவங்களையும் பேயிருக்குண்ணு பயங்காட்டி பயமுறுத்தி வச்சிடராங்க. உண்மையில உலகத்துல பேயும் இல்ல, பிசாசும் இல்ல எல்லாம் நம் பயத்தின் பிரதிபலிப்பும் பிரம்மையும்தான்”.

“அய்யா, அப்ப உங்க வார்த்தைப்படியே நாம நேற்று பார்த்தது பேயில்லண்ணு ஒத்துக்கிறேன். அப்ப நாம பார்த்த அந்த பனை மரத்தளவு உயரமான உருவம் யாரு அல்லது என்னது”.
“அப்படி கேளுங்க சொல்ரேன். உங்க நிழல நீங்க பார்த்து இருக்கிங்களா?…. பார்த்து இருப்பீங்க. காலைல பார்த்தா எப்படி இருக்கும் உங்க நிழல்?. நீட்டமா நெடு நெடுண்ணு இருக்கும். மதியம் பார்த்தா எப்படி இருக்கும்? குள்ளமா கட்டையா இருக்கும்…”

இராஜவேலு எஸ்.ஐ பேச்சை இடைமரித்து, “அய்யா, நான் பேயைப்பற்றி பேசிகிட்டு இருக்கேன்…நீங்க என்னண்ணா என் நிழலைப்பத்தி பாடம் நடத்திட்டு இருக்கீங்க… அய்யா அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சு போடாதீங்க”, என்றார்.

எஸ்.ஐ சுற்றி நின்ற காவலர்களை ஒருமுறை நோட்டம் விட்டார். எல்லோரின் மனதிலும் இராஜவேலுவின் மனநிலையே ஓடிக்கொண்டிருந்ததை அவர் போலீஸ் பயிற்சின் போது படித்த மனோதத்துத்தின் பயனாய் சிரிதேனும் கணிக்க முடிந்தது.

“இராஜவேலு, அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் தொடர்பு இருக்கா இல்லையாண்ணு எனக்கு தெரியாது. ஆனா நம்மள எல்லாம் பயமுறுத்திகிட்டு இருக்கிற இந்த பேய் சமாச்சாரத்திற்கும் இந்த நிழலுக்கும் ரெம்பவே தொடர்பு இருக்கு”.

ஒரு நிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும், “எனக்கு கிடைத்த அனுபவத்தை வச்சு சொல்லணும்னா எல்லாருமே நிழலைப்பார்த்து தான் பேய்ண்ணு தப்பா நினைச்சிக்கிட்டு பயந்து உயிரை விடராங்க பொழைச்சவங்க மத்தவங்கள பயத்துல சாகடிக்கிறாங்க…”.

“நான் கூட நேற்று இராத்திரி அந்த உருவத்த பேய்தானோண்ணு நினைக்க ஆரம்பிச்சிட்டேன். ஆனால் வண்டியில மயக்கமா இருந்த இராஜவேலுவ சரியா நிமிர்த்தி வைக்க திரும்பினப்பத்தான் உண்மைய புரிஞ்சு கிட்டேன். நானும் இராஜவேலுவும் அதுவரை பார்த்த உருவம் பேயில்ல நிழல்னு…” , ஆதித்யா சற்று நிறுத்தினார் தன் பேச்சை.

அதற்குள் இராஜவேலுவும் மற்ற காவலர்களும், “அய்யா, அது எப்படிங்கய்யா நிழலா இருக்க முடியும்?”, என்றனர்.

“அது ஒண்ணும் பெரிய சமாச்சாரம் இல்ல. அந்த சுடுகாட்டுக்கும் வடக்கு பக்கமா ரோட்டுல இருக்குற மின்சார கம்பத்த எல்லாரும் பார்த்து இருப்பீங்க…”.

எல்லோரும் ஆதித்யா சொல்வதை ஆமோதிப்பது போல் கோரசாக ஆமாம் போட்டனர்.

“ரோட்டுல அந்த மின்கம்பிக்கும் வடக்குப் பக்கம் தாழ்வான பகுதி. அங்க இருந்து காரோ, லாரியோ அல்லது பைக்கோ வந்ததுண்ணா அது நமக்கு தூரத்துல வரும் போது தெரியாது. ஆனால் அந்த வாகனங்களின் ஹெட்லைட்ல இருந்து வர்ர ஒளி அந்த மின்கம்பத்துல படுறதுனால மின்கம்பத்தின் பிம்பம் பெரிசா தெற்குப் புறமாக உள்ள மரத்தில் அல்லது வேறு இடத்தில தெரியும். மற்றபடி அது வித்தியாசமா சாதாரண நாட்கள்ல தெரியிறது இல்ல. ஆனா அந்த சுடுகாட்டுல பிணம் எரியுற நாட்கள்ல மட்டும் பிணம் எரிகிறபோது வரும் புகைக்கு நடுவே அந்த நிழல் தெரியும் போது ஆஜானு பாகுவான உருவமா தெரியுது. வாகனம் நெருங்கி வரவர உருவமும் அசைந்து அசைந்து முன்னால வந்த மாதிரி தெரியுது. வாகனம் மேடான பகுதிக்கு வரும் போது உருவம் மறைந்தும் போகுது. அதப்பாக்கிறவங்களும் அது பேய்தான்னு தப்பா புரிஞ்சிக்கிறாங்க. அப்படித்தான் நம்ம இராஜவேலுவும் முதல் முறையா அந்த உருவத்த பார்த்த போது அது பேயிண்ணு நினைச்சி பயந்தது. மேலும் பக்கத்துல அந்த நேரம் லாரி வந்ததால அந்த உருவம் மறைந்து போனதாக சொன்னது. இப்பப் புரியுதா அந்த இடத்தில பேய் எப்படி வந்ததுண்ணு?…”

எஸ்.ஐ. ஆதியின் அறிவுப்பூர்வமான விளக்கம் பேயைப்பற்றிய அவர்களது தவறான கண்ணோட்டத்திற்கு விடை கூறுவது போல் இருந்தது.

இராஜவேலுவிடம் இருந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது. தான் பார்த்தது பேயில்லையென்று!….

* * *

இலவசமாய் ஒரு இலவசம்.

    இலவசமாய் ஒரு இலவசம்.


“ஏங்க…இன்றைக்காவது மறக்காம வாங்கிட்டு வந்துடுங்க…”

உள் கேட்டைத்தாண்டி யமாஹாவை வெளியில் படிக்கட்டில் இறக்கிக்கொண்டிருந்த என்காதில் மனைவி வாசலில் நின்று முணுமுணுத்தது மெல்லவே கேட்டும் கேட்காதது போல் வண்டியை நகர்த்துவதிலேயே கவனமாக இருந்தேன்.

“ஏங்க…நான் சொல்றது கேட்குதா?…இல்லையா?…தினம் தினம் நான் கிருக்கி மாதிரி புலம்பினாலும் நான் சொல்றது உங்க காதுல விழாதே…”
புலம்பிக்கொண்டே வீட்டினுள் சென்றுவிட்டாள் எனதருமை இல்லாள்.

சட்டை மேல் பாக்கட்டைத்தொட்டுப் பார்த்தேன். அடையாள அட்டைவைக்கும் சிறிய பை இருந்தது, அதனுள்தான் குறிப்புச்சீட்டுக்கள் வைப்பது வழக்கம். அதை எடுத்து பார்த்ததில் மளிகைச்சாமான் வாங்க மனைவி சொல்லச் சொல்ல எழுதிய குறிப்புச்சீட்டும் இருந்தது.

பிரித்துப்பார்த்தேன். லக்ஸ் சோப்பு – 5, சலவை சோப் – 5, ஹார்லிக்ஸ் – 1 கிலோ, மால்ட்டோவா – 1 கிலோ, . …இன்னும் நீண்டது பட்டியல்.

இதை வாங்கிவரச்சொல்லி ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது.

போர்ன்விடா வாங்கி வர மனைவி சொன்னபோது, அம்மாவிடம் சண்டைபிடித்து தனக்கு மால்ட்டோவா தான் வேண்டும் அதைவாங்கி வாருங்கள் என்பது என் ஒன்பது வயது மூத்த மகன் ஆதியின் அன்புக் கட்டளை.

அவன் அம்மா மறுத்த போதும், “அப்பா …அதுல விளையாட்டு துப்பாக்கி ஃபிரி இருக்குப்பா கண்டிப்பா வாங்கிட்டு வாங்கப்பா…” என்றது இன்னும் காதில் ரீங்காரமிடுகின்றது.

பைக்கை வாசலுக்கு வெளியில் சைடு ஸ்டாணாட்டில் நிறுத்திவிட்டு வாசலில் வந்து நின்று கொண்டு தலையை மட்டும் வீட்டினுள் நீட்டி,

“சாரிப்பா…இன்ணைக்கு கண்டிப்பா மறக்காம வாங்கிட்டு வந்துடறேன்”, என்றேன்.

“நீங்க இன்றைக்கு வாங்கிட்டு வாங்க… இல்ல நாலு நாளு கழிச்சி வாங்கிட்டு வாங்க…எனக்கென்ன. உங்க பையன் கிட்ட நீங்களே பதில் சொல்லிருங்க…”

“துப்பாக்கி துப்பாக்கிண்ணு என் உயிரை எடுக்கறான்.” அவளின் ஆதங்கம் சொல்லாய் வெளிப்பட்டது.

மீண்டும் ஒருமுறை, “சாரிப்பா…சாரி. இன்ணைக்கு கண்டிப்பா வாங்கிட்டு வந்துடறேன்”, என்று சொல்லிக்கொண்டே பைக்கை நோக்கிச் சென்றேன்.

“அலுவலகம் விட்டு வரும் போது இன்று கண்டிப்பாக எல்லா சாமானும் வாங்கி வந்துவிட வேண்டும்”. தீர்க்கமாய் நினைத்துக் கொண்டே யமாஹாவை உதைத்தேன்.

அலுவலகத்தினுள் நுழையும் போதே உதவியாளர் செல்வம் பக்கத்தில் வந்து நின்று மெல்ல “அய்யா”, என்று தலையைச் சொரிந்தார்.

“என்ன செல்வம். என்ன காலையிலேயே. எதாவது காரியமா?”

“அய்யா, நேற்றே உங்ககிட்ட பெர்மிசன் கேட்டிருந்தேன். வீட்டுல கடைக்கு கூட்டிட்டு போகனும்”.

“சரி, செல்வம் போயிட்டு சீக்கிறமா வந்துடுங்க. வேலை நிறைய இருக்கு”.

“சரிங்க அய்யா, சீக்கிரம் வந்துடறேன்”, சொல்லிக்கொண்டே வெளியில் புறப்பட்ட செல்வத்தை,

“செல்வம் இங்க கொஞ்சம் வந்துட்டு போங்க…” என்றேன்.

“அய்யா…”.

“ஒண்ணும் இல்ல செல்வம். ஒரு சின்ன உதவி. கடைக்கு தான போறீங்க. எனக்கும் கொஞ்சம் சாமான் வாங்கிட்டு வந்துடறீங்களா?”…

“அய்யா…கொடுங்கய்யா…வாங்கிட்டு வந்துடறேன்” சொல்லிக் கொண்டே என் கையிலிருந்த குறிப்புச்சீட்டையும் பணத்தையும் பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

மதியச் சாப்பாட்டிற்கு நான் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். செல்வம் சாமான்களோடு அலுவலகத்தினுள் நுழைந்தார்.

“அய்யா, எல்லா சாமானும் வாங்கிட்டேன். மீதி பணமும் பில்லும் இதுல இருக்கு சரியா இருக்காண்ணு பார்த்துக்கோங்க…”.

பில்லில் குறிப்பிட்டது போக மீதி பணம் சரியாக இருந்தது.

“செல்வம் சீட்ட வாசிக்கிறேன், பொருள்கள ஒண்ணு ஒண்ணா எடுத்து வெளிய வைக்கிறீங்களா?”

“சரிங்கங்யா…”

“லக்ஸ் சோப் – 5, சலவை சோப் – 5,…..”

“மால்ட்டோவா – 1 கிலோ” சொல்லிவிட்டு செல்வம் எடுத்து வைத்த போது கூடவே ஃபிரியான துப்பாக்கியும் இருக்கின்றதா என்று பார்த்தேன். இருந்தது.

“வீட்டுக்கு போன உடன் ஆதியிடம் துப்பாக்கியைக் கொடுக்க வேண்டும், சந்தோசப்படுவான்…” மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

எல்லா பொருள்களையும் எடுத்து சரிபார்த்த பின், செல்வம் மெல்ல, “அய்யா”, என்றார்.

“அய்யா, தப்பா நினைக்காட்டா ஒண்ணு கேட்கட்டா?…”, செல்வம்.

“சொல்லுங்க செல்வம், தப்பா நினைகல்ல…”.

“அய்யா, கடைக்கு எங்க கூட என் மகனும் வந்து இருந்தான். அவன் அந்த விளையாட்டு துப்பாக்கிய பார்த்துட்டு விரும்பி கேட்டான். நான் அய்யா கிட்ட கேட்டு வாங்கிட்டு வர்றதா சொல்லிருக்கேன்.”

“அய்யா, அந்த விளையாட்டு துப்பாக்கிய மட்டும் எடுத்துக்கட்டுமா?”.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தன்னிச்சையாக “சரிங்க செல்வம் எடுத்துக்கோங்க…” என்றேன்.

வீட்டிற்கு பைக்கில் வரும் போது, ஆதிக்கு என்ன பதில் கூறுவதென்று யோசித்துக் கொண்டே வந்தேன்.

துப்பாக்கி அவனிடம் கொடுக்காததற்கு என்ன காரணம் சொன்னாலும் அவன் அம்மாவிடம் போய் சொல்வான், “பாருங்கம்மா இந்த அப்பாவ, நான் எதைக்கேட்டாலும் வாங்கித்தரமாட்டாங்க. இந்த ஃபிரியா கிடைக்கிற துப்பாக்கியுமா என்பான் !…”

-o0o-

“அய்யா!, கொஞ்சம் கருணை காட்டுங்கய்யா!!”, (தேன் கூடு போட்டிச் சிறுகதை)

“அய்யா, கொஞ்சம் கருணைகாட்டுங்கய்யா, ஒங்களுக்கு புண்ணியமா போகும் இந்த ஏழைக்கும் ஒரு வயிறு கஞ்சி கிடைச்ச மாதி இருக்கும், கொஞ்சம் கருணை காட்டுங்கய்யா”…

ரயில் நிலைய நடைபாதையில் ஒரு அம்மா ஒரு பயணியை கெஞ்சிக்கொண்டே துரத்திக்கொண்டிருப்பது கேட்டது.

நான், திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த நாகர்கோவில் மும்பை விரைவு ரயிலில் மும்பை செல்லும் அத்தையின் இருக்கையை சரிபார்த்து அவரது பெட்டிகளை இருக்கைக்கு அடியில் உள்ள இடத்தில் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தேன்.

“போம்மா வேறு யாரையாவது போய் கேளு. என்ன தொந்தரவு பண்ணாதே”… பயணி அவசர கதியில் சொல்லிக்கொண்டே சென்றுகொண்டிருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

ச்ச… நம்ம நாட்டுல எண்ணைக்குத்தான் இந்த பிச்சைக்காரர்கள் தொந்தரவு தீருமோ!… ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். எத்தனை அரசுகள் வந்தாலும் எவ்வளவு மானியங்களை அள்ளி இரைத்தாலும் இவர்களை திருத்தவே முடியாது.

உழைப்பதற்கே மனமில்லாம அடுத்தவர்களை அண்டியே ஒட்டுண்ணிகளாக வாழ நினைக்கும் உலொபிகள். இவர்களை திருத்துவதென்பதும், இவர்கள் திருந்துவதென்பதும் பகல் கனவு…பலவாறு எண்ண ஓட்டங்கள் என்னில்.

மகளின் கையை மடியில் எடுத்து தன் கைகளுக்குள் வைத்து தடவிக்கொண்டே “மருமகன்…மகள நல்லா பார்த்துக்கோங்க…” பொங்கிவந்த கண்ணீரைத்துடைத்துத்கொண்டே அத்தை வார்த்தைகளை உதிர்த்தார்கள்.

கண்ணீரை கட்டுபடுத்திக்கொண்டே என் மனைவியும் “அவங்க எங்க என்ன பாக்கரது…நான் தான் அவங்கள பார்கணும்..”

அத்தை லேசாக சிரித்து வைத்தார்கள்.

இரயில் புறப்பட கண்ணீரோடு சன்னலுக்கு வெளியே கைநீட்டி கையசைத்துக்கொண்டே இருந்தார்கள்… ரயில் ஒற்றைப் புள்ளியைய் மறையும் வரை.

மூன்று மாதங்களாக எங்களோடு இருந்த அத்தை மும்பை செல்வதில் எனக்கும் கஷ்டமாத்தான் இருந்தது. அம்மா போலவே நல்லா பாசமா இருப்பாங்க…

இரயில் ஒரு மணி நேரம் தாமதமாகவே வந்திருந்தது. புறப்பட்டு சென்றதும் மேலும் கால் மணிநேரம் தாமதமாகவே சென்றது. என்றுதான் நம்மவர்கள் நேரத்தின் மதிப்பறிந்து செயல் படப்போகின்றார்களோ தெரியவில்லை. இவர்களின் தாமதத்தால் எத்தனை வேலைகள் பாதிக்கப்படுகின்றது. என்று தான் திருந்துவார்களோ!…

அலுவலகத்தில் ஒரு மணி நேரம் தான் அனுமதி வாங்கியிருந்தேன். இப்போது இரண்டரை மணிநேரம் ஆகிவிட்டது. மேலதிகாரி என்ன சொல்லப்போகின்றாரோ…

வேக வேகமாக என்னவளின் கையை பற்றி இழுத்துக்கொண்டே, சட்டை பையில் கைவிட்டு நடைமேடை அனுமதிச்சீட்டு இருக்கின்றதா என சோதித்துக்கொண்டே வாசல் நோக்கி விரைந்தேன்.

“அய்யா, கொஞ்சம் நில்லுங்கய்யா…” நடைமேடையில் ஏற்கனவே ஒரு பயணியை துரத்திய அதே குரல்.

எரிச்சலின் உச்சத்தில் நான். நல்லா நாலுவார்த்தை திட்டவேண்டும் என்ற எண்ணத்தில் திரும்பினேன்.

சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கையில் கொஞ்சம் புத்தக அடுக்குகளோடு மீண்டும் “அய்யா…” என்று வாய்திறந்தார்.

தொண்டை வரை வந்து வார்த்தையாக வெளிப்பட இருந்த என் கோபத்தை ஒரு நொடியில் என்னுள்ளே புதைத்துக்கொண்டேன்.

கையிலிருந்த புத்தகங்களில் சிலவற்றை எடுத்து நீட்டிக்கொண்டே, “அய்யா ஒரு புஸ்த்தகமாவது எடுத்துக்கங்கய்யா உங்களுக்கு புண்ணியமா போகும்”

புத்தபங்களை புரட்டிக்கொண்டே “இல்லம்மா ஏற்கனவே எங்கிட்ட இந்த புஸ்த்தகமெல்லாம் இருக்கு. வேண்டாம்மா” என்றேன்.

“அய்யா ஒரு புஸ்த்தகமாவது எடுத்துக்குங்கய்யா…எனக்கும் ஏதோ கொஞ்சம் லாபம் கிடைக்கும் அதவச்சித்தான்யா என் பொளப்பு ஓடுது… ஒண்ணாவது எடுத்துக்கங்கய்யா 10 ரூபாதாங்கய்யா…”

அந்த பாட்டியைப் பார்க்க பாவமாக இருந்தது. ஆனால் அவள் வைத்திருந்த புத்தகங்களோ ஏற்கனவே என்னிடம் இருப்பவை. இந்த தள்ளாத வயதிலும் பிச்சை எடுக்காமல் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வியாபாரம் செய்த பாட்டிக்கு உதவவேண்டும் போல் இருந்தது.

“பாட்டி எங்கிட்ட இந்த புஸ்த்தகம்லாம் இருக்கு. அதனால எனக்கு வேண்டாம் பாட்டி”

பரிதாபமானவர்களின் மொத்த உருவாய்த்தெரிந்தது அவள் முகம். “அய்யா ஒரு புஸ்த்தகமாவது எடுங்கய்யா ஒங்களுக்கு புண்ணியமா போகும்”.

சட்டைப்பையிலிருந்து ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து பாட்டி கையில் வைத்து, “பாட்டி எனக்கு புஸ்த்தகம் வேண்டாம். இந்த ஐந்து ரூபாயை வைத்துக்கொள்ளுங்கள்” என்றேன்.

பாட்டி என்னை என்னவோ போல் பார்த்தாள். எனக்கு கூச்சமாக இருந்தது.

“தம்பி, முன்னால நான் பிச்சைத்தான் எடுத்துட்டு இருந்தேன். ஆனா இப்ப ஒழைச்சு கிடைக்கிறதுல இருக்குர சந்தோசம் அதுல இல்ல.”

என்னை மீண்டும் பார்த்துக்கொண்டே, “பார்த்தா நல்லவங்களா இருக்கீங்க. முடிஞ்சா என்னப்போல ரெண்டு பேருக்கு உழைச்சுப் பிழைக்க ஏதாவது வழி பண்ணி அவங்கள வாழ்க்கையில கைதூக்கி விடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்…” சொல்லிக்கொண்டே ஐந்து ரூபாய் நாணயத்தை என்கையில் திணித்துவிட்டு நகர்ந்தாள்.

ஒரு தீர்மானத்தோடு இரயில் நிலையம் விட்டு புறப்பட்டேன். அவளின் வார்த்தைகள் மட்டும், இரயில் தண்டவாளத்தில் விட்டுச்சென்ற அதிரவுகளாய் என் மனதில் தடதடத்துக் கொண்டே இருந்தது.

-o0o-

இவன் : மா. கலை அரசன்.