“அய்யா!, கொஞ்சம் கருணை காட்டுங்கய்யா!!”, (தேன் கூடு போட்டிச் சிறுகதை)

“அய்யா, கொஞ்சம் கருணைகாட்டுங்கய்யா, ஒங்களுக்கு புண்ணியமா போகும் இந்த ஏழைக்கும் ஒரு வயிறு கஞ்சி கிடைச்ச மாதி இருக்கும், கொஞ்சம் கருணை காட்டுங்கய்யா”…

ரயில் நிலைய நடைபாதையில் ஒரு அம்மா ஒரு பயணியை கெஞ்சிக்கொண்டே துரத்திக்கொண்டிருப்பது கேட்டது.

நான், திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த நாகர்கோவில் மும்பை விரைவு ரயிலில் மும்பை செல்லும் அத்தையின் இருக்கையை சரிபார்த்து அவரது பெட்டிகளை இருக்கைக்கு அடியில் உள்ள இடத்தில் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தேன்.

“போம்மா வேறு யாரையாவது போய் கேளு. என்ன தொந்தரவு பண்ணாதே”… பயணி அவசர கதியில் சொல்லிக்கொண்டே சென்றுகொண்டிருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

ச்ச… நம்ம நாட்டுல எண்ணைக்குத்தான் இந்த பிச்சைக்காரர்கள் தொந்தரவு தீருமோ!… ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். எத்தனை அரசுகள் வந்தாலும் எவ்வளவு மானியங்களை அள்ளி இரைத்தாலும் இவர்களை திருத்தவே முடியாது.

உழைப்பதற்கே மனமில்லாம அடுத்தவர்களை அண்டியே ஒட்டுண்ணிகளாக வாழ நினைக்கும் உலொபிகள். இவர்களை திருத்துவதென்பதும், இவர்கள் திருந்துவதென்பதும் பகல் கனவு…பலவாறு எண்ண ஓட்டங்கள் என்னில்.

மகளின் கையை மடியில் எடுத்து தன் கைகளுக்குள் வைத்து தடவிக்கொண்டே “மருமகன்…மகள நல்லா பார்த்துக்கோங்க…” பொங்கிவந்த கண்ணீரைத்துடைத்துத்கொண்டே அத்தை வார்த்தைகளை உதிர்த்தார்கள்.

கண்ணீரை கட்டுபடுத்திக்கொண்டே என் மனைவியும் “அவங்க எங்க என்ன பாக்கரது…நான் தான் அவங்கள பார்கணும்..”

அத்தை லேசாக சிரித்து வைத்தார்கள்.

இரயில் புறப்பட கண்ணீரோடு சன்னலுக்கு வெளியே கைநீட்டி கையசைத்துக்கொண்டே இருந்தார்கள்… ரயில் ஒற்றைப் புள்ளியைய் மறையும் வரை.

மூன்று மாதங்களாக எங்களோடு இருந்த அத்தை மும்பை செல்வதில் எனக்கும் கஷ்டமாத்தான் இருந்தது. அம்மா போலவே நல்லா பாசமா இருப்பாங்க…

இரயில் ஒரு மணி நேரம் தாமதமாகவே வந்திருந்தது. புறப்பட்டு சென்றதும் மேலும் கால் மணிநேரம் தாமதமாகவே சென்றது. என்றுதான் நம்மவர்கள் நேரத்தின் மதிப்பறிந்து செயல் படப்போகின்றார்களோ தெரியவில்லை. இவர்களின் தாமதத்தால் எத்தனை வேலைகள் பாதிக்கப்படுகின்றது. என்று தான் திருந்துவார்களோ!…

அலுவலகத்தில் ஒரு மணி நேரம் தான் அனுமதி வாங்கியிருந்தேன். இப்போது இரண்டரை மணிநேரம் ஆகிவிட்டது. மேலதிகாரி என்ன சொல்லப்போகின்றாரோ…

வேக வேகமாக என்னவளின் கையை பற்றி இழுத்துக்கொண்டே, சட்டை பையில் கைவிட்டு நடைமேடை அனுமதிச்சீட்டு இருக்கின்றதா என சோதித்துக்கொண்டே வாசல் நோக்கி விரைந்தேன்.

“அய்யா, கொஞ்சம் நில்லுங்கய்யா…” நடைமேடையில் ஏற்கனவே ஒரு பயணியை துரத்திய அதே குரல்.

எரிச்சலின் உச்சத்தில் நான். நல்லா நாலுவார்த்தை திட்டவேண்டும் என்ற எண்ணத்தில் திரும்பினேன்.

சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கையில் கொஞ்சம் புத்தக அடுக்குகளோடு மீண்டும் “அய்யா…” என்று வாய்திறந்தார்.

தொண்டை வரை வந்து வார்த்தையாக வெளிப்பட இருந்த என் கோபத்தை ஒரு நொடியில் என்னுள்ளே புதைத்துக்கொண்டேன்.

கையிலிருந்த புத்தகங்களில் சிலவற்றை எடுத்து நீட்டிக்கொண்டே, “அய்யா ஒரு புஸ்த்தகமாவது எடுத்துக்கங்கய்யா உங்களுக்கு புண்ணியமா போகும்”

புத்தபங்களை புரட்டிக்கொண்டே “இல்லம்மா ஏற்கனவே எங்கிட்ட இந்த புஸ்த்தகமெல்லாம் இருக்கு. வேண்டாம்மா” என்றேன்.

“அய்யா ஒரு புஸ்த்தகமாவது எடுத்துக்குங்கய்யா…எனக்கும் ஏதோ கொஞ்சம் லாபம் கிடைக்கும் அதவச்சித்தான்யா என் பொளப்பு ஓடுது… ஒண்ணாவது எடுத்துக்கங்கய்யா 10 ரூபாதாங்கய்யா…”

அந்த பாட்டியைப் பார்க்க பாவமாக இருந்தது. ஆனால் அவள் வைத்திருந்த புத்தகங்களோ ஏற்கனவே என்னிடம் இருப்பவை. இந்த தள்ளாத வயதிலும் பிச்சை எடுக்காமல் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வியாபாரம் செய்த பாட்டிக்கு உதவவேண்டும் போல் இருந்தது.

“பாட்டி எங்கிட்ட இந்த புஸ்த்தகம்லாம் இருக்கு. அதனால எனக்கு வேண்டாம் பாட்டி”

பரிதாபமானவர்களின் மொத்த உருவாய்த்தெரிந்தது அவள் முகம். “அய்யா ஒரு புஸ்த்தகமாவது எடுங்கய்யா ஒங்களுக்கு புண்ணியமா போகும்”.

சட்டைப்பையிலிருந்து ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து பாட்டி கையில் வைத்து, “பாட்டி எனக்கு புஸ்த்தகம் வேண்டாம். இந்த ஐந்து ரூபாயை வைத்துக்கொள்ளுங்கள்” என்றேன்.

பாட்டி என்னை என்னவோ போல் பார்த்தாள். எனக்கு கூச்சமாக இருந்தது.

“தம்பி, முன்னால நான் பிச்சைத்தான் எடுத்துட்டு இருந்தேன். ஆனா இப்ப ஒழைச்சு கிடைக்கிறதுல இருக்குர சந்தோசம் அதுல இல்ல.”

என்னை மீண்டும் பார்த்துக்கொண்டே, “பார்த்தா நல்லவங்களா இருக்கீங்க. முடிஞ்சா என்னப்போல ரெண்டு பேருக்கு உழைச்சுப் பிழைக்க ஏதாவது வழி பண்ணி அவங்கள வாழ்க்கையில கைதூக்கி விடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்…” சொல்லிக்கொண்டே ஐந்து ரூபாய் நாணயத்தை என்கையில் திணித்துவிட்டு நகர்ந்தாள்.

ஒரு தீர்மானத்தோடு இரயில் நிலையம் விட்டு புறப்பட்டேன். அவளின் வார்த்தைகள் மட்டும், இரயில் தண்டவாளத்தில் விட்டுச்சென்ற அதிரவுகளாய் என் மனதில் தடதடத்துக் கொண்டே இருந்தது.

-o0o-

இவன் : மா. கலை அரசன்.