இலவசமாய் ஒரு இலவசம்.

    இலவசமாய் ஒரு இலவசம்.


“ஏங்க…இன்றைக்காவது மறக்காம வாங்கிட்டு வந்துடுங்க…”

உள் கேட்டைத்தாண்டி யமாஹாவை வெளியில் படிக்கட்டில் இறக்கிக்கொண்டிருந்த என்காதில் மனைவி வாசலில் நின்று முணுமுணுத்தது மெல்லவே கேட்டும் கேட்காதது போல் வண்டியை நகர்த்துவதிலேயே கவனமாக இருந்தேன்.

“ஏங்க…நான் சொல்றது கேட்குதா?…இல்லையா?…தினம் தினம் நான் கிருக்கி மாதிரி புலம்பினாலும் நான் சொல்றது உங்க காதுல விழாதே…”
புலம்பிக்கொண்டே வீட்டினுள் சென்றுவிட்டாள் எனதருமை இல்லாள்.

சட்டை மேல் பாக்கட்டைத்தொட்டுப் பார்த்தேன். அடையாள அட்டைவைக்கும் சிறிய பை இருந்தது, அதனுள்தான் குறிப்புச்சீட்டுக்கள் வைப்பது வழக்கம். அதை எடுத்து பார்த்ததில் மளிகைச்சாமான் வாங்க மனைவி சொல்லச் சொல்ல எழுதிய குறிப்புச்சீட்டும் இருந்தது.

பிரித்துப்பார்த்தேன். லக்ஸ் சோப்பு – 5, சலவை சோப் – 5, ஹார்லிக்ஸ் – 1 கிலோ, மால்ட்டோவா – 1 கிலோ, . …இன்னும் நீண்டது பட்டியல்.

இதை வாங்கிவரச்சொல்லி ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது.

போர்ன்விடா வாங்கி வர மனைவி சொன்னபோது, அம்மாவிடம் சண்டைபிடித்து தனக்கு மால்ட்டோவா தான் வேண்டும் அதைவாங்கி வாருங்கள் என்பது என் ஒன்பது வயது மூத்த மகன் ஆதியின் அன்புக் கட்டளை.

அவன் அம்மா மறுத்த போதும், “அப்பா …அதுல விளையாட்டு துப்பாக்கி ஃபிரி இருக்குப்பா கண்டிப்பா வாங்கிட்டு வாங்கப்பா…” என்றது இன்னும் காதில் ரீங்காரமிடுகின்றது.

பைக்கை வாசலுக்கு வெளியில் சைடு ஸ்டாணாட்டில் நிறுத்திவிட்டு வாசலில் வந்து நின்று கொண்டு தலையை மட்டும் வீட்டினுள் நீட்டி,

“சாரிப்பா…இன்ணைக்கு கண்டிப்பா மறக்காம வாங்கிட்டு வந்துடறேன்”, என்றேன்.

“நீங்க இன்றைக்கு வாங்கிட்டு வாங்க… இல்ல நாலு நாளு கழிச்சி வாங்கிட்டு வாங்க…எனக்கென்ன. உங்க பையன் கிட்ட நீங்களே பதில் சொல்லிருங்க…”

“துப்பாக்கி துப்பாக்கிண்ணு என் உயிரை எடுக்கறான்.” அவளின் ஆதங்கம் சொல்லாய் வெளிப்பட்டது.

மீண்டும் ஒருமுறை, “சாரிப்பா…சாரி. இன்ணைக்கு கண்டிப்பா வாங்கிட்டு வந்துடறேன்”, என்று சொல்லிக்கொண்டே பைக்கை நோக்கிச் சென்றேன்.

“அலுவலகம் விட்டு வரும் போது இன்று கண்டிப்பாக எல்லா சாமானும் வாங்கி வந்துவிட வேண்டும்”. தீர்க்கமாய் நினைத்துக் கொண்டே யமாஹாவை உதைத்தேன்.

அலுவலகத்தினுள் நுழையும் போதே உதவியாளர் செல்வம் பக்கத்தில் வந்து நின்று மெல்ல “அய்யா”, என்று தலையைச் சொரிந்தார்.

“என்ன செல்வம். என்ன காலையிலேயே. எதாவது காரியமா?”

“அய்யா, நேற்றே உங்ககிட்ட பெர்மிசன் கேட்டிருந்தேன். வீட்டுல கடைக்கு கூட்டிட்டு போகனும்”.

“சரி, செல்வம் போயிட்டு சீக்கிறமா வந்துடுங்க. வேலை நிறைய இருக்கு”.

“சரிங்க அய்யா, சீக்கிரம் வந்துடறேன்”, சொல்லிக்கொண்டே வெளியில் புறப்பட்ட செல்வத்தை,

“செல்வம் இங்க கொஞ்சம் வந்துட்டு போங்க…” என்றேன்.

“அய்யா…”.

“ஒண்ணும் இல்ல செல்வம். ஒரு சின்ன உதவி. கடைக்கு தான போறீங்க. எனக்கும் கொஞ்சம் சாமான் வாங்கிட்டு வந்துடறீங்களா?”…

“அய்யா…கொடுங்கய்யா…வாங்கிட்டு வந்துடறேன்” சொல்லிக் கொண்டே என் கையிலிருந்த குறிப்புச்சீட்டையும் பணத்தையும் பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

மதியச் சாப்பாட்டிற்கு நான் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். செல்வம் சாமான்களோடு அலுவலகத்தினுள் நுழைந்தார்.

“அய்யா, எல்லா சாமானும் வாங்கிட்டேன். மீதி பணமும் பில்லும் இதுல இருக்கு சரியா இருக்காண்ணு பார்த்துக்கோங்க…”.

பில்லில் குறிப்பிட்டது போக மீதி பணம் சரியாக இருந்தது.

“செல்வம் சீட்ட வாசிக்கிறேன், பொருள்கள ஒண்ணு ஒண்ணா எடுத்து வெளிய வைக்கிறீங்களா?”

“சரிங்கங்யா…”

“லக்ஸ் சோப் – 5, சலவை சோப் – 5,…..”

“மால்ட்டோவா – 1 கிலோ” சொல்லிவிட்டு செல்வம் எடுத்து வைத்த போது கூடவே ஃபிரியான துப்பாக்கியும் இருக்கின்றதா என்று பார்த்தேன். இருந்தது.

“வீட்டுக்கு போன உடன் ஆதியிடம் துப்பாக்கியைக் கொடுக்க வேண்டும், சந்தோசப்படுவான்…” மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

எல்லா பொருள்களையும் எடுத்து சரிபார்த்த பின், செல்வம் மெல்ல, “அய்யா”, என்றார்.

“அய்யா, தப்பா நினைக்காட்டா ஒண்ணு கேட்கட்டா?…”, செல்வம்.

“சொல்லுங்க செல்வம், தப்பா நினைகல்ல…”.

“அய்யா, கடைக்கு எங்க கூட என் மகனும் வந்து இருந்தான். அவன் அந்த விளையாட்டு துப்பாக்கிய பார்த்துட்டு விரும்பி கேட்டான். நான் அய்யா கிட்ட கேட்டு வாங்கிட்டு வர்றதா சொல்லிருக்கேன்.”

“அய்யா, அந்த விளையாட்டு துப்பாக்கிய மட்டும் எடுத்துக்கட்டுமா?”.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தன்னிச்சையாக “சரிங்க செல்வம் எடுத்துக்கோங்க…” என்றேன்.

வீட்டிற்கு பைக்கில் வரும் போது, ஆதிக்கு என்ன பதில் கூறுவதென்று யோசித்துக் கொண்டே வந்தேன்.

துப்பாக்கி அவனிடம் கொடுக்காததற்கு என்ன காரணம் சொன்னாலும் அவன் அம்மாவிடம் போய் சொல்வான், “பாருங்கம்மா இந்த அப்பாவ, நான் எதைக்கேட்டாலும் வாங்கித்தரமாட்டாங்க. இந்த ஃபிரியா கிடைக்கிற துப்பாக்கியுமா என்பான் !…”

-o0o-