கந்து வட்டி.

சப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யா உட்கார்ந்திருந்த சேரில் சற்று முன் பக்கம் நகர்ந்து கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

மெல்ல மேலோங்கும் பசியை உணர்ந்தார். 10.00 மணிக்காவது வீட்டுக்போயி சாப்பிட்டு இருக்கணும், இப்ப மணி 12.00 ஆகுது இனி வீட்டுக்கு சாப்பிடப்போனா காலை சாப்பாடு சாப்பிடர நேரமா என கேட்விக்கணைகள் நீளும், பத்தாதக் குறைக்கு வாண்டுகளும் உடன் சேர்ந்து கொண்டு வாட்டும், “அப்பா ஞாயிற்றுக்கிழமையாவது நேரமா வரக்கூடாதா”, என்பதில் ஆரம்பித்து “ஏன் இன்றைக்கு எங்கள வெளிய கூட்டிட்டு போகல்ல?”, என்று நீழும். பேசாமல் மதியம் 2.00 மணிக்கு மேல வீட்டுக்குப் போயி காலைல வெளியில சாப்பிட்டு விட்டேன் என ஏதாவது புழுக வேண்டியது தான். எண்ணவோட்டம் பல வாராக கிளைபரப்பியது.

சரி இப்போதைய பசிக்கு என்ன செய்வது?…

சுற்றியும் தன் எக்ஸ்-ரே பார்வையை பாயவிட்டார். எழுத்தர் ஏதோ அக்கரையாக எழுதிக்கொண்டிருப்பது போல் தெரிந்தது. அவர் முன்பு சற்று நேரத்திற்கு முன் சமரசம் பேசி அனுப்பி வைத்த புகார் தாரர்கள் நின்று கொண்டிருந்தார்கள். வாசலில் முனியாண்டி ஏட்டு துப்பாக்கியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சேரில் உட்கார்ந்திருந்தார். வேறு யாரும் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை.

குறுக்க மறுக்க அங்கும் இங்குமாக தேவையில்லாமல் நடந்து வாங்கிக் கண்டிக்கக் கூடாது என்ற பயமாக இருக்கலாம்.

தன் முன் மேஜையில் இருந்த அழைப்பு மணியை மெல்லமாக அழுத்தினார்.

வாசலில் இருந்த முனியாண்டி இராஜவேலு அய்யா மணியடிக்கிறாறு என்னண்ணு போயி கேளு என்று சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே ஏட்டு இராஜவேலு சப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யா முன் ஆஜராகி கேட்டார்.

“ஐயா மணி பன்னிரெண்டாகுது நீங்க இன்னும் சாப்பிடப்போக வில்லையா. பசிக்கலியா?”

“அதான் இராஜவேலு கூப்பிட்டேன். வெளிய யாராவது இருந்தால் போயி ரெண்டு வாழைப்பழம் வாங்கிட்டு வரச்சொல்லுங்க. கதலி பழம் மட்டும் வேண்டாம். போலீசாரையும் யாரையும் அனுப்ப வேண்டாம். சரியா?”

“சரிங்கய்யா, அய்யா கந்து வட்டி சம்மந்தமா ரெண்டு குரூப் வெளிய நின்னுகிட்டு இருக்காங்கய்யா, வரச்சொல்லவா?”

ஒரு நெடி யோசனைக்குப் பின், “சரி இராஜவேலு, அந்த பார்ட்டிங்கள வரச்சொல்லுங்க”.

அடுத்த இரண்டாவது நிமிடத்திற்குள் இருதரப்பினரும் சப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யா முன் ஆஜரில் இருந்தனர். இரண்டு தரப்பிலும் நான்கு ஐந்து பேருக்கு மேல் இருந்தார்கள். ஒன்றிரண்டு பேர் கரைவேட்டிகளும் கட்டியிருந்தனர்.

இரண்டு தரப்பினரையும் ஆளமாக ஊடுருவிப்பார்த்தார். வந்திருந்தவர்கள் மெல்ல கைகால்களை அங்குமிங்கும் மெல்லமாக சரிசெய்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார்கள். வந்திருந்த கரைவேட்டிகளில் ஒன்று அவரின் பார்வையைப் புரிந்து கொண்டு தன் சட்டையின் மேல் வரிசைப் பொத்தானை மாட்டியது.

மெல்ல செருமியவாரே, “இங்க சுந்தர் யாரு, செல்வம் யாரு” என்றார். இருவரும் சார் என்றார்கள்.

இருதரப்பையும் பார்த்து, “யாரும் தப்பா நினைக்க வேண்டாம், தேவைப்பட்டா உங்களையும் விசாரிக்கும் போது கூப்பிட்டுக்கரேன், இப்போ சுந்தரையும் செல்வத்தையும் தவிர மற்றவங்க வெளியல இருக்குற பென்ஞ்சில போய் உட்காருங்க” என்றார்.

பிரச்சனையில் சம்மந்தப்பட்டவர்களோடு மற்றவர்களையும் கூட்டமாக வைத்து எந்தப்பிரச்சனையை விசாரித்தாலும் தேவையில்லாமல் பிரச்சனை நீளும். முடியவேண்டிய பிரச்சனைகள் கூட முடியாமலேயே இழுத்துக்கொண்டிருக்கும் பிரச்சனையும் முற்றிப்போகும் என்பது சப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யாவின் எண்ணம். அதிலும் அரசியல் கட்சி பிரமுகர்களோ அல்லது வைக்கீல்களே உடன் வந்தால் பிரச்சனை இன்னும் நீளும் என்பதை நன்கே அறிந்து வைத்திருந்தார். அதனால் எப்போதுமே அவர்களின் மனம் கோனாதவாறு பேசி வெளியே இருக்க வைத்துவிடுவது வழக்கம். சில முரண்டு பிடிக்கும் வைக்கீல்கள் என்றால் அவர்களையும் உடன் வைத்துக்கொண்டே பிரச்சனையை சுமூகமாக முடித்துவிடுவார்.

மனுதாரரையும் எதிர்மனுதாரரையும் தன் முன் கிடந்த பென்சில் உட்காரச்சொன்னார்.

“அய்யா இல்லைங்க நிற்கின்றோம்” என்றனர் ஒருமித்து.

“பரவாயில்ல பெரியவர உட்காருங்க”, என்றார்.

இருவரும் பென்ஞ்சின் நுனியில் பவ்வியமாக உட்கார்ந்தனர்.

“இப்ப சொல்லுங்க, உங்கப் பிரச்சனைய”, என்றார்.

சுந்தர் இருக்கையை விட்டு எழுந்து, “அய்யா ரெண்டு வருசத்துக்கு முன்ன தன்னோட மக கல்யாணத்துக்கு பணம் எங்கும் கிடைக்காம எங்கிட்ட வந்து கண்ணீரும் கம்பலையுமா நின்னார். நான் பாவப்பட்டு இரக்கப்பட்டு என் பொண்டாட்டி நகையை அடகு வச்சும் கையில இருந்த காசையும் போட்டு மொத்தமா ஒரு லட்சம் ரூவா குடுத்தேன். ஆனா அந்த நன்றிக்கடனுக்கு இப்ப என்ன உங்க முன்னால கொண்டாந்து நிறுத்திருக்காரு. அதுவும் இல்லாம கந்துவட்டி கேஸ் குடுப்பேண்ணு வேற பயமுறுத்துராறு”.

சுந்தர் சொல்லி முடிக்கிறதுக்கு முன் செல்வம் குறுக்கிட்டு, “அய்யா அவர் ரூவா தந்தது உண்மைதான். ஆனா அதுக்கு வட்டிமட்டுமே மாதம் மூணாயிரம் கொடுத்துட்டு வரேன். இப்ப ரெண்டு மாசமா வட்டி குடுக்கல்ல அதுக்கு வீட்டாண்ட வந்து சத்தம் போடுராறு. பணத்தை உடனே எடுத்துவையின்னு சொல்லுராறு. அதான் நான் இங்க வந்தங்க”, என்றார்.

சுந்தர், “அய்யா, நானே பாதிபணம் போக மீதிப்பணத்த சேட்டுக்கடையில எங்க வீட்டு நகைய ரெண்டு ரூவா வட்டிக்கு வச்சித்தான் கொடுத்து இருக்கேன். இவர் வட்டி ரூவா தராம இருந்தா நா எப்படி சேட்டுக்கு வட்டி கட்டுவேன். அதுவும் இல்லாம எம் பையன் வட்டி ரூவா வாங்கப் போனப்ப உன் அப்பனுக்கு இது பர நாப்பதாயிரம் வட்டி கட்டிட்டேன். அதனால இனி வட்டி தரமுடியாது. ரூவாயும் மெதுவாத்தான் தருவேன்னு சொல்லி விட்டுயிருக்காரு. அதனாலதான்கய்யா நான் போயி வாங்கும் போது இனிச்சில்ல இப்ப தர்ரதுக்கு கசக்குதாக்கும்னு சத்தம் போட்டேன் மற்றபடி ஒண்ணும் சொல்லல்ல”, என்றார்.

“அய்யா ரூவா வாங்குனது வாஸ்தவம் தான். ஆனா அதுக்கு இது வர வட்டி கொடுத்ததும் உண்மைதான. இது வர அறுபதாயிரம் ரூவா வட்டியே கொடுத்து இருக்கேன்”, என்றார் செல்வம்.

“அய்யா, வட்டி இவ்வளவுண்ணு முதலிலேயே சொல்லித்தான் கொடுத்தேன். அவரும் ஒத்துக்கிட்டு தான் வாங்கினார். ஆனா இப்ப இவ்வளவவு வட்டி குடுத்திருக்கேன் என்று சொல்லுரது என்னங்கய்யா ஞாயம்”, என்றார் சுந்தர்.

சப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யா இருதரப்பின் ஞாயத்தையும் கேட்டுக்கொண்டிருந்தவர், “சுந்தர் நீங்க பணம் கொடுத்ததும் உண்மை, செல்வம் நீங்க பணம் வாங்கியதும் உண்மை ரெண்டுபேருமே உண்மைய ஒத்துக்கிறீங்க சந்தோசம்.

அதுவும் இல்லாம செல்வம் நீங்க பணம் வாங்கும் போது மூணுவட்டிக்கு ஒத்துக்கிட்டு தான் பணத்தை வாங்கியிருக்கீங்க. ஆனா இப்ப வட்டி நிறைய குடுத்திட்டேன். அதனால இனி வட்டிக்கொடுக்க மாட்டேன். ரூபாயையும் மெல்லத்தான் கொடுப்பேன் என்பது நியாயம் இல்லாதது.

நான் என் போலீச வச்சு விசாரிச்சதுல எனக்கு தெரிஞ்சது என்னண்ணா செல்வத்துகிட்ட இப்ப நிலம் வித்த பணம் இருக்கு…”

சற்று பேசுவதை நிறுத்தியவர் மீண்டும் தொடர்ந்தார், “அதனால செல்வம் சுந்தரின் பணத்தை குடுப்பதுதான் முறை. வேண்டுமானா இப்ப கடைசியா கொடுக்காம விட்ட இரண்டு மாத வட்டியை சுந்தரிடம் குறைத்துக்கொள்ளச் சொல்லலாம், இதுக்கு இரண்டு தரப்பும் ஒத்துக்கிட்டீங்கண்ணா சொல்லுங்க. இங்கையே பேசி முடிச்சி எழுதி அனுப்பி விடுரேன். மனம் இல்லைண்ணா சொல்லுங்க, நான் உங்க புகார போர்ட்டிற்கு திருப்பி எழுதித்தரிரேன். நீங்க சிவில் கோர்ட்ல பார்த்துக்கங்க. நான் விசாரிச்ச அளவில் மிரட்டல் ஏதும் இல்லைங்கரதால என்னால கேஸ் எல்லாம் போட முடியாது. வேணும்னா ரெண்டு தரப்பும் வெளியில போயி கொஞ்சம் யோசிச்சிட்டு வாங்க”, என்றார்.

வெளியில் சென்று யோசித்தவர்கள் சற்று நேரத்திற்கு பின் உள்ளே வந்தனர்.

“அய்யா நீங்க சொல்ரதும் ஞாயமாத்தான் படுது. அதனால நீங்க சொன்னது மாதிரியே பணத்தை கொடுக்க ஒத்துக்கரேன்” என்றார் செல்வம்.

“நானும் அய்யா சொன்ன மாதிரி ஒத்துக்கரேன்” என்றார் செல்வம்.

இருதரப்பினரும் பரஸ்பரம் எழுதி கையெழுத்துப்போட்டு விட்டு புறப்பட ஆயத்தமானார்கள்.

இருதரப்பிலிருந்தும் வந்திருந்த அனைவரையும் உள்ளே கூப்பிட்டு, “நான் இப்ப சொல்ரது சட்டத்துக்கு அப்பாற்பட்ட உண்மைகள். கடைல எல்லாரும சாமான் வாங்கியிருப்பீங்க, ஒவ்வொறு கடைக்காரரும் ஒவ்வொரு பொருளுக்கு மேலயும் இருபது சதவீதம் வர லாபம் வஞ்சித்தான் விற்கின்றார்கள். ஆனா கேட்டீங்கண்ணா, அண்ணே லாபமே இல்லண்ணே, உங்ககிட்ட போயி லாபம் பார்ப்பேனா என்பார்கள். வியாபாரம்னாலே பொய்தான். ஆனா எந்த பொய்யும சொல்லாம எவ்வளவு வட்டிண்ணு உண்மைய சொல்லித்தான் வட்டிக்கு விடரவங்க விடுராங்க. ஆனா வாங்குன நாம பணமா வாங்கும் போது சந்தோசப்படுரோம். வாங்கிய பணத்தை கொடுக்கும் போது சங்கடப்படரோம். கொடுக்கணுமான்னு யோசனையும் பண்ணுரோம். இது எந்த விதத்துல ஞாயம். ஆனா துரதிருஷ்ட வசமா ஒண்ணு ரெண்டு பேரு பண்ணுர தில்லுமுள்ளு நால அவசரத்துக்கு உதவி பண்ணுர அப்பாவிகளும் பாதிக்கப்படுராங்க. ஆனா சட்டம் இப்போ கொடுக்கரவனுக்கு சாதகமா இல்ல. வாங்கி ஏமாத்தரவங்களுக்குத்தான் சாதகமா இருக்கு. அதனால பணத்தக் குடுக்கும்போது ஆயிரம் தடவ யோசிச்சி கொடுங்க. இப்படி அல்லல் படவேண்டி வராது. பணத்தக் குடுத்து யாமாந்தவங்க மேல எனக்கே பரிதாபம் இருந்தாலும் சட்டத்த மீறி நாங்க ஒண்ணும் பண்ண முடியாது. பண்ணவும் கூடாது. ஞாயம் செத்துக்கிட்டே வர்ர உலகத்துல அவங்க அவங்க தான் தங்களோட பணத்தை பாதுகாத்துக்கணும்.

இப்ப நீங்க ரெண்டு தரப்பும் ஒத்துக்கிட்டதால நான் சமரசம் செய்யமுடிச்சது இல்லண்ணா?… இரண்டு தரப்பும் கோர்ட் கேஸ்ணு இழுத்துக்கிட்டுத்தான் இருக்கணும். பணமும் போயி சந்தோசமும் போயிடும். சரி இப்போ போயிட்டு வாங்க”, என்றார்.

இருதரபபினரும் வெளியே போவதை பார்த்துக்கொண்டிருந்தவர் மனதிற்குள் என்று தான் மக்களுக்கு நியாய உணர்வுகள் மேலோங்குமோ தெரியவில்லை என்று எண்ணியவாரே வீட்டிற்குப்புறப்பட ஆயத்தமானார்.

கடிகாரத்தில் இருந்து இனிய இசை வெளிப்பட்டு மணி நான்கு என்பதை சொல்லாமல் சொன்னது.

ஃஃஃ