மொழி


வேலையெல்லாம் முடித்து ஆசுவாசமாக மின்விசியின் கீழ் இருந்த சாய்வு நாற்காலியில் ஆசுவாசமாக அமர்ந்து மெல்லிய பூப்போன்ற துண்டால் முகத்தையும் கழுத்தையும் துடைத்துக் கொண்டாள் சரோஜா.

தன்னிச்சையாக விழிகள் தனக்கு இடப்பக்கம் இருந்த சுவரில் தொங்கிய கடிகாரத்தில் படர்ந்தது.

இன்னும் சிறிது நேரம் தான். இப்போதே மணி 11.30-யைக் கடக்கின்றது. 12.30-மணிக்கெல்லாம் பள்ளியில் இருக்க வேண்டும்.

நினைக்கும் போதே சரோஜாவிற்கு மனதிற்குள் திக் திக் என்றது. “அந்த தலைமை ஆசிரியை இன்று என்ன சொல்லப் போகின்றாளோ?…” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

அவரிடம் பேசி தப்பித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பிள்ளைகளைப் படிக்க வைத்து இருக்கின்றோமா அல்லது தான் தான் படிக்க சேர்ந்து இருக்கின்றோமா? என்று சில நேரங்களில் சரோஜாவிற்கு குழப்பமே வந்து விடும்.

அதிலும், அவர் சொல்வதாவது புரியுமா? ம்ம்..கூம்… இங்கிலாந்திலிருந்து இப்போது தான் வந்து இறங்கியவர் போல ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே இருப்பார்.

சரோஜா தமிழில் பேசினாலும் தொடர்ந்து ஆங்கிலத்தில் தொணதொணத்துக் கொண்டே இருப்பார். அவர் பேசுவது அனைத்தும் புரிந்தாலும் மும்பையில் அரசுப்பள்ளியில் படித்து வந்ததால் ஆங்கிலத்தில் சரளமாக பேச சரோஜாவிற்கு சற்றே சிரமமாக இருக்கும். அதனால் தமிழில் பேசுவது தான் வழக்கம். அப்போதெல்லாம் சுற்றி நிற்பவர்கள் சாதாரணமாகப் பார்த்தாலும் தன்னை அற்பமாகப் பார்க்கின்றார்களோ என்று தனக்குள்ளே வாடிய ரோஜா இதழ்களாகிப்போவாள்.

ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவளை கடிகாரத்தின் மணி நான் பன்னிரெண்டாகிவிட்டேன் என சிணுங்கிச் சொன்னது.

அவசர அவசரமாக பிள்ளைகளுக்கான மதிய சாப்பாட்டை எடுத்துக்கொண்டு, வீட்டின் கதவையும் வெளிக்கம்பி தடுப்பையும் பூட்டு போட்டு பூட்டிக்கொண்டு குடையை விரித்து தலைக்குமேல் பிடித்து சூரியனுக்கு மறைப்புக்காட்டி, பள்ளியை நோக்கி ஒரு தீர்மானத்தோடு நடந்தாள். தினசரி பழக்கத்தால் மனது சொன்னது, 15 நிமிடத்தில் பள்ளிக்கு சென்று சேர்ந்து விடலாம் என்று.

பிள்ளைகளுக்கு சாப்பாடு கூடையை கொடுத்துவிட்டு தலைமைய ஆசிரியையின் அறைக்கு முன்னால் மற்ற பெற்றோர்களோடு கலந்து நின்றாள். மனம் மட்டும் திக்திக் என்று அடித்துக்கொண்டது. தலைமையாசிரியை என்ன சொல்லப் போகின்றார்களோ என்று நினைத்து.

தலைமை ஆசிரியை எப்போதும் போல் எல்லா பெற்றோரையும் உள்ளே அழைத்தார்.

போதுமான இருக்கைகள் இல்லாத அந்த அறையில் முதலில் சென்ற ஓரிருவர் மட்டும் உட்காரமுடிந்தது. மீதம் உள்ளவர்களில் சரோஜாவோடு சேர்ந்து பாதிக்கு மேற்பட்டவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

சரோஜாவிற்கு உள்ளூர என்னவோ போல் இருந்தது. தனக்கு மற்றவர்கள் கொடுக்கும் மரியாதையை எல்லாம் உதிர்த்துவிட்டு இங்கு பள்ளிக்கு வரும்போது மட்டும் இலை உதிர்த்து மொட்டை கிளையாய் நிற்பதுபோல் தோன்றியது.

தலைமை ஆசிரியை பொதுப்படையாக எல்லா பெற்றோர்களுக்குமாக ஆங்கிலத்தில் சொன்னார், “உங்கள் பிள்ளைகள் சுமாராகத்தான் படிக்கின்றார்கள். சிலர் மட்டுமே நன்றாக படிக்கின்றார்கள். வீட்டில் பாடம் ஒன்றும் சொல்லிக் கொடுக்க மாட்டீர்களா?…”

பொதுவான தகவல்களை சொல்லிவிட்டு தன் மேசைமேல் இருந்த பிள்ளைகளின் தேர்ச்சி குறிப்பு அட்டையை எடுத்து கையில் வைத்துக்கொண்டு சாரோஜா நினைத்தது போல் அவளைத்தான் நோக்கி போசலானார்.

“Your son did this exam so poor in some subject. But in some subjects like Maths and Science he did well. Don’t you take care on his progress?…” இன்னும் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றார்.

சரோஜா ஒரு முடிவோட பேச ஆரம்பித்தாள், “க்யா மேடம் ஆப்கோ சமஜ் மே நேகி ஆரஹா க்யா?. க்யா கோயி அப்னே பச்சோக்கே பாரேமே கேர் நேகி கரேங்கேக் கியா? (என்ன மேடம் புரியாம பேசரீங்க. யாராவது பிள்ளைங்க மேல அக்கரை இல்லாம இருப்பாங்களா?.)” என்றாள்.

தலைமை ஆசிரியர் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை உள்ள குழந்தைகளுக்கு இந்தி பாடம் எடுத்துக்கொண்டிருந்ததால் சரோஜா பேசியது பாதி புரிந்தும் பாதி பிரியாமலும் இருந்தது.

சரோஜாவின் கேள்விக்கு அவரால் சரியாக என்ன சொல்லவேண்டும் என்று தெரியவில்லை. அதனால் “I Can’t understand what you say”, என்றார்.
தலைமை ஆசிரியர் சொல்வதைப் பெருட்படுத்தாமல் தொடர்ந்து, “அப்னே பச்சோக்கே பாரேமே ஃபிக்கர் ஹே ஸ்லியே அச்சே ஸ்கூல்மே தாக்கீலா கராயா. பைசாக்கோபி படாசம்ஜா நெகி. நெஹிதோ கார்ப்பரேசன் ஸ்கூல்மே படாத்தே (அக்கரை இருப்பதால் தான் நல்ல பள்ளில பிள்ளைங்களை படிக்க வைக்கணும்னு பணத்தைப்பற்றிக் கூட பார்க்காம இங்க கொண்டு பிள்ளைங்களை படிக்க வச்சிருக்கிறோம். இல்லைண்ணா அரசாங்க பள்ளிக் கூடத்துல படிக்க வச்சிருப்போம்.), எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே தலைமை அசிரியர் இடைமரித்தார்.

“மேடம், நீங்க சொல்ரது ஒண்ணுமே புரியல்ல. கொஞ்சம் தமிழில் பேசுங்களேன்”, என்றார்.

சுற்றி நின்ற பெற்றொர் தலைமை ஆசிரியையும் சரோஜைவையும் மாரி மாரிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“மேடம், மொழி ஒருத்தருக்கு ஒருத்தர் கருத்துக்களை பரிமாரிக் கொள்வதற்குத்தான். உங்களுக்கும் தமிழ் தெரியும் எனக்கும் தமிழ் தெரியும். ஆனாலும் நாங்க தமிழ்ல பேசினாலும் எங்ககிட்ட நீங்க ஆங்கிலத்தில தான் பேசியிருக்கீங்க. ஏன் எங்களுக்கும் ஆங்கிலத்தில சரளமா போச வந்திருந்தால் உங்க கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் தந்திருக்க மாட்டோமா?

ஏன் இதெல்லாம் உங்களுக்கு புரியமாட்டேங்குது. இப்பப் பாருங்க நீங்க இந்தி பாடம் நடத்தரீங்க. ஆனால் நான் பேசின இந்திய உங்களால் புரிஞ்சுக்கவும் முடியல்ல, திருப்பி பதிலும் சொல்ல முடியல்ல.

விளைவு, என்னை தமிழில் பேசச் சொல்ரீங்க.

இதையே முதல்ல நீங்க உணர்ந்து தமிழில் பேசரவங்க கூட தமிழிலும் ஆங்கிலத்தில் பேசரவங்க கூட ஆங்கிலத்திலும் பேசி இருக்கலாமே. ஏன் செய்யல்ல?.

புரிச்சுக்கோங்க… நாங்க உங்க கிட்ட ஆங்கிலம் படிக்க வரல்ல. பிள்ளைங்களத்தான் படிக்க அனுப்பிச்சிருக்கோம். ஏதாவது நாங்க வந்து குறைகள சொன்னா ஆங்கிலத்தில பேசி எங்க வாயை அடைச்சிருவீங்க.

எங்க கிட்ட ஆங்கிலத்தில பீலா காட்டுர நீங்க எத்தனை பிள்ளைங்களுக்கு ஒழுங்கா ஆங்கிலத்தில பேச சொல்லிக் கொடுத்துருக்கீங்க.

அதுவும் இல்லாம, நீங்க சொல்லிக் கொடுப்பீங்க என்கிறதால தான் கட்டணம் கட்டி பிள்ளைங்களை இங்க படிக்க அனுப்பரோம். நாங்க முழுவதும் சொல்லிக் கொடுக்கிறதா இருந்தா உங்களுக்கு எதுக்கு பீஸ் கொடுத்து இங்க படிக்க அனுப்பணும். அதனால, எங்கமேல பழிய போடருதுக்கு பதிலா தவறை உணர்ந்து பிள்ளைங்களுக்கு எல்லா ஆசிரியரும் ஒழுங்கா பாடம் எடுக்கணும் என்கிறத வலியுறுத்துங்க.
பாருங்க… தேர்வு வினாத்தாளில், கம்யூட்டர் டீச்சர் கம்பியூட்டர் ஒரு மின்னனு எந்திரம் என்னும் பதிலுக்கு தப்பு போட்டு இருக்காங்க…”

சரோஜாவிடமிருந்து மழைச்சரமாய் வார்த்தைகள் வந்து விழுந்தன.

தலைமை ஆசிரியைக்கு என்ன சொல்வதென்று தெரியாது சரோஜா பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மற்ற பெற்றோர்களும் சரோஜா போசுவதின் உண்மையைப் புரிந்து மனதிற்குள்ளேயே உவகை செய்தனர்.

அதன் பின் தலைமை ஆசிரியையின் அறையை விட்டு சரோஜா வெளியே வரும் வரை அவள் சொல்வதையே போயரைந்தார் போல் நின்று கவனித்துக் கொண்டிருந்தார் தலைமை ஆசிரியை.

“இனியாவது பெற்றோர்களுக்கு பாடம் நடத்துவதை விட்டு விட்டு பிள்ளைகளுக்கு ஒழுங்காக பாடம் நடத்த வேண்டும் என்பது இந்த மரமண்டைகளுக்கு புரிந்தால் சாரிதான்”, என மனதிற்குள் நினைத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள் சரோஜா.

ஃஃஃ