விபத்து.

தேசிய நெடுஞ்சாலை எண். 7, நேரம் மாலை 5.00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சூரியன் தன் ஒளிச்சிறகினை மெல்ல சுருக்கிக்கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சம் புக ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.

லாரியை ஒட்டிக்கொண்டிருந்த மூர்த்தி தனது பார்வையை சற்று சாலையிலிருந்து அகற்றி கீழிறக்கி தன் டாஸ்போர்டிலிருந்த கடிகாரத்தை நோக்கினான். மணி 5.00-த் தொடப்போகிறேன் என்பது போல் கண்சிமிட்டி விழித்தது. வேகம் 90 கி.மீயைக் கடந்து வண்டி ஒடிக்கொண்டிருந்தது.

சாலையில் கடந்து சென்ற பலகை கன்னியாகுமரிக்கு இன்னும் 7 கி.மீ என்று பறைசாற்றிக் கொண்டிருந்தது.

“இன்னும் 10 அல்லது 15 நிமிசத்துல வீட்டுக்கு போயிரலாம். என் செல்லக்குட்டி அபியையும் அன்பு மனைவி சரோஜாவையும் பார்த்து ஒருமாதம் கடந்து விட்டது. அபிக்குட்டி வீட்டிலிருக்குமா? ஒருவேளை டியூசனுக்கு போயிருக்குமோ?…
சரோஜா என்ன சொல்லுவா…வடநாட்டுக்கு லாரிகொண்டு போகும் போது சின்ன சண்டையோடும் மனவருத்தத்தோடும் போனது. பின்ன எப்பவும் குடிச்சிக்கிட்டே இருந்தா எந்த பொண்டாட்டிக்குத்தான் பிடிக்கும். சண்டைபோடாம கொஞ்சவா செய்வாங்க.

இதுக்குள்ள சரோஜா சமாதானம் ஆயிருப்பா. பாவி வாரத்துக்கு ஒரு போனாவது செய்து பேசியிருக்கலாம். இப்ப நினைச்சி என்ன செய்ய வீடு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும் நேரடியா சமாதானம் செஞ்சிக்க வேண்டியது தான். அபி டியூசன்ல இருந்தாலும் நல்லது தான்”, எண்ண ஒட்டம் பலவாறு ஓடியது மூர்த்திக்கு.

லாரி பால்குளத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. எந்திர யானை தனது வேகத்தைக் குறைக்காமல் சீராக அதே 90 கி.மீ வேகத்தில் அசராமல் சென்றுகொண்டிருந்தது.

இன்னும் ஐந்து நெடியில் கடந்துவிடும் தூரத்திலிருந்தது வட்டக்கோட்டை சந்திப்பு. அது அடிக்கடி விபத்து நடக்கும் பகுதி என்பது மூர்த்திக்கு நன்றாகவே தெரியும். அதனால் காற்று ஒலிப்பானை பலமுறை விட்டு விட்டு அடித்தான் மூர்த்தி.

இன்னும் அரைநெடியில் கடந்து விடும் தொலைவு…

பீம்…பாம்…பீம்…பாம்… என ஒலிப்பானின் சத்தம்.

மூர்த்திக்கு ஏதோ விவகாரம் நடக்கப்போகின்றது என அவன் மூளை எச்சரிக்கும் போதே….

தனது லாரியை பிரேக்கை அழுத்தி தன்னால் முடிந்த அளவு வலப்பக்கமாக லாரியின் வட்டை திருகினான்…

ட்ட்ட்டப்…என வட்டக்கோட்டை உள்ளிருந்து வந்த ஒரு வேனின் முன் பகுதி மூர்த்தியின் லாரியின் பக்கவாட்டில் மோதியது.

சற்று தொலைவில் சென்று லாரி நின்றது. லாரியிலிருந்து குதித்து இறங்கி லாரியின் பின் பக்கம் வந்து பின்னால் எட்டிப்பார்த்தான்.

தன்வண்டியில் வந்து மோதிய வேன் இடித்த வேகத்தில் 90 டிகிரி திரும்பி கன்னியாக்குமரியைப் பார்த்து நின்றதை பார்த்து மூர்த்திக்கு மனம் பதை பதைத்தது. வண்டியில் நிறைய ஆட்கள் இருந்திருப்பார்களே? உயிர்ச்சேதம் ஏதும் ஆகியிருக்குமோ?… பயரேகை மனதில் கவிழத்தொடங்கியது.

வேனின் அருகில் சென்று பார்க்கலாம் என நடக்கையில வேனின் அருகில் ஆட்கள் கூடிவிட்டது தெரிந்தது. வேன் உள்ளிருந்து சிறு குழந்தைகளின் அழுகுரல் வருவது கேட்டது. கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்களில் இரண்டு முன்று இளவட்டங்கள் தன்னை நோக்கி வருவதைக்கண்டான். அவனை கவ்வியிருந்த பயம் மேலும் அதிகமாகியது.

“ஒருவேளை உயிர்சேதம் ஏதும் ஆகியிருந்தால் நம்மை சும்மா விடமாட்டார்கள். முதுகில் டின் கட்டிவிடுவார்கள்” என பலவாறு எண்ணத்தொடங்கினான்.

ஒருநொடி மனப்போராட்டம்…தப்பித்துவிடு தப்பித்துவிடு என உள்ளுணர்வு கூவிக்கொண்டிருந்தது. மின்னல் வேகத்தில் வண்டியில் ஏரினான். சர் என வண்டியை விரைவாக எடுத்துக்கொண்டு கன்னியாகுமரி காவல் நிலையம் சென்று நின்றான்.

வெளியில் மேஜையில் எழுதிக்கொண்டிருந்த எழுத்தரிடம் சென்று “அய்யா, இப்போ வரும்போது வட்டக்கோட்டையில வச்சி ஆக்சிடண்ட் ஆயிடுச்சி. வட்டக்கோட்டையிலிருந்து வந்த வேன் என் வண்டில சைடுல இடுச்சிடுச்சி”, என்றான்.

எழுத்தர் ஏதோ எரிச்சலில் அல்லது மூர்த்தி போன்ற டிரைவர்கள் மேல் எரிச்சலில் இருந்தார் என்பது அவரது பேச்சிலேயே வெளிப்பட்டது, “வாடா வா…இப்படியே நாளுக்கொருத்தனா ஆக்சிடண்ட் பண்ணிட்டு மாமியார் வீட்டுக்குப்போறது போல இங்க வந்துடுங்க. கொஞ்ச நேரத்துல நாங்களும் கேஸப்போட்டு உங்கள ஜாமின்ல விட்டுடரோம். சட்டம் அப்படி நாங்க என்ன பண்ணுரது.
உங்களுக்கென்ன எவன் செத்தாலும் ரெண்டாயிரமோ நாலாயிரமோ கட்டிட்டு கேஸ முடிச்சிட்டுப் போயிடுவீங்க. உயிர பரிகொடுத்தவன் வீடு அம்போதான். கோர்ட் கேஸுண்ணு அலைச்சு இப்போ இருக்குற நிலையில கெடைக்கிற இன்சூரன்ஸ் பணம் கூட கிடைக்காம அல்லாட வேண்டியது தான். நீங்க என்னடாண்ணா அடுத்த ஆக்சிடண்டுக்கு தயாராயிடுவீங்க. சாவுரது உங்கவீட்டு ஆளாயிருந்தால்லா உங்களுக்கு அதோட வலி தெரியும். போடா போயி அந்த மூலைல இரு இப்ப சப்-இன்ஸ்பெக்டர் வந்துடுவார். அதுக்கு அப்புறமா ஜாமின்ல விடுரோம். அதுக்குள்ள உன் ஓணருக்கு போன் செஞ்சு, உனக்கு ஜாமின் கொடுக்குறதுக்கு ஆள ரெடிபண்ண சொல்லு”, என்றார்.

விபத்து பற்றி காவல் கட்டுப்பாட்டு அரைக்கு தகவல் கொடுத்துவிட்டு எழுதிக்கொண்டிருந்த கேஸ் கட்டை மூடிவைத்துவிட்டு சப்-இன்ஸ்பெக்டருக்கு தகவல் சொன்னர். நிலையத்தில் இருந்த இரண்டு ஏட்டுக்களை விபத்து நடந்த இடத்திற்கு செல்லப் பணித்தார்.

இரவு 10.00 மணி சப்-இன்ஸ்பெக்டரும் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற இரண்டு காவலர்களும் அவரவர் இரண்டு சக்கர வண்டியில் வந்து இறங்கினர்.

சப்-இன்ஸ்பெக்டர் வந்த போது மூர்த்தியை ஜாமீனில் எடுக்க லாரி ஒணரும் இன்னும் இருவரும் வந்து இருந்தனர்.

எழுத்தர் “அய்யா, FIR போடனும், ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு வந்தீங்களா?… உயிர்ச் சேதம் ஏதும் உண்டா?” , பவ்வியமாக.

“நல்ல காலம் உயிர்ச்சேதம் இல்ல. வேன் டிரைவரும் நல்லா பிரேக் பிடிச்சி வண்டிய ஒடிச்சி திருப்பினதுனால குழந்தைங்க உயிர் பிழைச்சது. ஆனா இருந்த குழந்தைங்க முன் சீட்ல போயி இடிச்சதுல ரெண்டு குழந்தைங்க சீரியஸா நாகர்கோவில் அரசு மருத்துவமனைல ICU-ல இருக்காங்க. உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்ல. நிறைய ரெத்தம் போயிருககு. விபத்து நடந்த உடனே பக்கத்துல இருக்குற ஏதாவது ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருந்தா கூட ரெத்தப்போக்க உடனே கட்டுப்படுத்தியிருக்கலாம். விதி என்ன செய்ரது, நடக்கரது தான் நடக்கும்” என்றவர் தொடர்ந்தார்.

“ராஸ்கல் இவனாவது வண்டிய நிறுத்தி அந்த குழந்தைங்கள மருத்துவமனைக்கு எடுத்துக்கிட்டு போயிருந்தா, குழந்தைங்களுக்கு இவ்வளவு சீரியஸ் ஆகியிருக்காது”.

இவனுங்கள முட்டிக்கு முட்டி தட்டி, பத்து நாள் உள்ளத்தூக்கி வைக்கலாம்னா அதுக்கு சட்டத்துல வழியில்ல. மீறி வைத்தோம்னா நம்ம மேல மனித உரிமை அது இதுண்ணு புகார் பண்ணிகிட்டு இருப்பானுங்க. நாமகிடந்து அலையணும்”, என்றவாறே மனவழுத்தம் தாங்காமல் மூச்சை நன்றாக இழுத்து விட்டார்.

“ஆமா அந்த லாரி டிரைவர் வந்துட்டான்லா, ஜாமீனுக்கு ஆள் வந்திருக்காங்களா?… வந்துட்டாங்கண்ணா அந்த நாயிகிட்டயும் அவனுக்கு ஜாமீன் கொடுக்க வந்திருக்கவங்க கிட்டயும் ஜாமீன் பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டு அனுப்புங்க. இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தேன்னா அந்த நாய அடிச்சே கொன்னுபுடுவேன்.

பாவம் அந்த குழந்தைங்க அடிபட்டு ரெத்தம் வழிய வழிய கோழிக்குஞ்சு மாதிரி கிடந்தது தான் கண்ணுல தெரியுது”, என்றவாறே பைக்கை நோக்கிச் சென்றார்.

அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முட்டம் கடற்கரைக்குத்தான் காற்று வாங்க செல்கின்றார் என எழுத்தர் மனதிற்குள் கணித்துக்கொண்டார்.

மூர்த்தி போலீஸ் நடைமுறைகள் முடித்து வீட்டுக்கு வரும்போது இரவு மணி 12-ஐக் கடந்திருந்தது. வீடு பூட்டியிருந்தது. தட்டிப்பார்த்தான் திறக்கவில்லை.

பக்கத்து வீட்டு திண்ணையில் படுத்திருந்த செல்லம் பாட்டி எழுந்து வந்து, “மூர்த்தி இப்பத்தா வர்ரியா?…

உன் மக படிக்கிற ஸ்கூலுல இருந்து வட்டக்கோட்டைக்கு வேன்ல போயிட்டு வரும்போது எந்த படுபாவியோ லாரில வந்து வேன்ல இடிச்சிட்டானாம். உன் மக சீரியஸா நாகர்கோயிலு பெரிய ஆஸ்பத்திரியில இருக்காம்…

ஆதான் நம்ம தெருவோட பார்க்கப்போயிருக்காங்க”…. என்று சொல்லச் சொல்ல மூர்த்திக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வர தலையில் கைவைத்து வாசல்ப் படியில் உட்கார்ந்தான்.

ஃஃஃ