கிரகணம் (பாகம் – 7)

    பாகம் – 7.

காவலற்ற எதுவும்
பயனுற்று இருத்தல் அரிது..
பயனற்ற எதுவும் காவலோடு இருத்தல் அரிது…

மதிப்பு மிக்கவை மட்டுமே
உலகத்தில் காவலுற்று இருக்கின்றது…

கட்டுக்கோப்பான காவல் தான்
கவலையற்ற வாழ்விற்கு வழிசெய்கின்றது…

காவலுற்ற உலகம் கவலையற்று இருக்கும்
காவலற்ற உலகம் கலக்கத்திலே மிதக்கும்…

தொல்லையில்லை எல்லையிலென்று தெரிந்தால்தான்
தொழில்கள் கூட நாட்டில் செழிக்கும்…

திருட்டுக்கள் நடக்காதென்று
திட்டமாய் தெரிந்தால் தான்
தூக்கம் கூட கண்ணை வந்து தழுவும்…

பயமற்று உணரும் போதுதான்
பசியைக்கூட முழுவதுமாய்
மனம் உணர்தல் கூடும்…

பயம் அத்தனை
சுகத்தையும் அழித்து
துக்கங்களை மட்டுமே பரிசாக்கும்…

பயமற்ற காவலோ
துக்கங்களின் சுவடுகளைக் கூட
சந்தோச வீட்டின் படிக்கட்டுக்களாக்கிவிடும்…

பெரியவர் கூட
என் தங்கத் தாரகைக்கு காவலாய்
வந்தவராய் இருக்குமோ?!…

ஒரு கணம் திகைத்து
மறு கணம் தெளிந்து
கலக்கத்தைத் தவிர்த்து
அப் பழத்திடமே பகர்ந்தேன்
“தாத்தா!, ஆண்களை
அம்மணீ! என்றழைப்பதில்லையே!”

தாத்தாவிற்கு பக்குவம் மட்டுமல்ல
சொற்பதமும் வாய்த்திருக்க வேண்டும்…
சுருக்கென்று வார்த்தைகளாலும்
குத்தும் கலை அறிந்திருக்க வேண்டும்…

அதனால் தான்…
“நாய்களின் குலைப்பெல்லாம்
நன்மதிக்கு கேட்டிருக்க அவசியமில்லை…”
என்றார்…

ஆகா!…
என் தேவதையின் பெயர் நன்மதியா?!…
பொருத்தமான பெயர்தான்…
பெயர்வைத்த வாய்க்கு
சர்க்கரைப் பொங்கலிடலாம் தவறில்லை!…

ஒருவேளை, பெரியவர்,
உவமை கூறி நம்மை சாடியிருக்கலாமோ?!…

இருக்காது…இருக்கக்கூடாது
உவமையாய் இருக்கக்கூடாது…
அந்த முழுமதியின் பெயர்
நன்மதியாகவே இருக்க வேண்டும்…

நன்மதியென்றே அவளின் பெயரை
என்னுள் கருக்கொண்டு
உருக்கொண்டேன்…

காதலின் வேகத்தில்
கட்டுக்களும் காவலும்
கண்களுக்கு தெரிவதேயில்லை…

காதல் எண்ணங்களுக்கும் ஏக்கங்களுக்கும்
சடங்குகளும் சம்பிரதாயங்களும் கூட
அணையிட்டு தடுத்துவிட முடிவதில்லை…

காதல் மழைக்காலத்து காளான் போன்றது…
காதலுற்றவரைக் கண்டால் – அது
வெளிப்பட்டே தீரும்…

காதல் உள்ளம்
காட்டு வெள்ளம் போல் சக்தி கொண்டது…
அது கட்டுக்களையும் காவலையும் கடந்து
தன் எல்லைகளை தொட்டே ஓடும்…

நல்ல காதலுள்ளம்
இங்கிதமும் அறிந்தது…
பிறர் உள்ளம் கசக்கி
இன்பம் காண துணியாது அது…

என் காதலை
என்னவளிடம் சொல்லியாக வேண்டும்…
தாத்தாவின் மனதையும் புண்படுத்தலாகாது…

என் செய்வேன்…
என் செய்வேன்…
என் இறைவா செப்பாயோ!…

வேலிதாண்டி தோட்டத்துள்
நுழைவதைக்காட்டிலும்
காவல்காரனோடு சமரசம் செய்து
சம்மதத்தோடு நுழைவது சிறப்பல்லவா?!…

தாத்தா நமக்கொன்றும் பகையல்லவே…
சமரசம் செய்து கொள்வதொன்றும் தவறல்லவே…

மெல்ல அருகில் சென்று
அன்போடழைத்தேன்
“தாத்தா”…

அனுபவப் பழத்திற்கென்
அழைப்பின் நோக்கம் தெரியாமலா இருக்கும்…
கண்களால் என் உள்ளம் துளாவி
உற்று நோக்கினார்…
“என்ன? சொல்ல வந்ததை சொல்.”…
என்ற அர்த்தமிருக்குமோ?…
அவர் பார்வைக்கு….

நான் அவ்வாறே
அர்த்தம் செய்துகொண்டேன்…

“தாத்தா!,
சற்று நேரத்திற்கு முன்
கிரகணம் பற்றிய
அறிவியல் உண்மைகளை பகர்ந்தேன்…
கூடிநின்ற கூட்டத்தில்
பலர் சிரிக்க, ஏளனமாய்…
இன்னவளோ,
என் கருத்திற்கு கைதட்டி
மற்றோரும் ஏற்கச்செய்தாள்…
இவ் இனியாளுக்கு
என் நன்றி பகர்தல் தகுமன்றோ!…
அதற்கு தங்கள் அனுமதியை வேண்டுகின்றேன்” என்றேன்.

அனுபவத்தின் ரேகை படிந்த
தாத்தாவின் முகத்தில்
அமைதி தவழ்ந்தது
வானம் தழுவும் மேகமதாய்…

இனியாளின் பெயர்
அமுதம் ஒத்த நன்மதியென்றே எண்ணி
“நன்மதி மிக்க நன்றி…
தங்களின் கனிவான
கைத்தட்டலுக்கு…
நான் சொன்ன பெயர் சரிதானே?!”, என்றேன்…

ஏந்திழையின் இன்முகம்
ஆயிரம் பூக்களின் மலர்ச்சியாய் ஜொலித்த போதும்…
அமுத வாயினின்றும்
குயிலின் குரலாய்
ஒரு சொல் வாராதோ என்று ஏங்கித்தவித்தேன்…

என் ஏக்கத்திற்கு…
ஏமாற்றம் தான் விடையாய் கிடைத்தது…
காதல் புத்தகத்தில்
ஏமாற்றத்தின் பக்கங்கள் தான் அதிகமோ?!…

இல்லையெனில்…
மௌனத்தின் பொருள்
சம்மதமென்று அர்த்தப்படுத்திக் கொண்டு
காதல் வேள்வியில் உருகும்
நெய்யாக வேண்டுமோ?!…

ஏங்கித்தவித்த மனது
ஆற்றாமையால் கேட்டேவிட்டது…
“கேள்விக்கு ஆறுதலாய்
பதிலொன்று பகரமாட்டீரோ?!…”

இப்போதும்
மதியின் முகத்தில் பூக்களின்
மலர்ச்சியே பூத்துச்சிரித்தது…
புல்லாங்குழலின் இசையாய்
அவளின் இன்சொற்கள்
இதழ்விட்டு பிரியவே இல்லை…
ஒருவேளை அதற்கு மனமில்லையோ?!…
தேன் அதரங்களைவிட்டு அகல்வதற்கு…

குழப்பச் சருகுகள் என்னுள்
சப்தம் செய்து கொண்டிருந்தது…
“ஒரு வேளை,
நான் பேசுவதை
அவள் விரும்பவில்லையோவென்று!…”

என் கற்பனைகளுக்கு
தாழ்ப்பாளிட்டு விட்டு…
என் நெற்றிப்பொட்டில்
வார்த்தைச் சம்மட்டியால் ஓங்கியடித்து
எதார்த்தச் சுவரில் வரட்டியாய்
ஒட்டச் செய்தார் பெரியவர்,
ஒற்றை வார்த்தையில்…

“தம்பீ!…
நன்மதிக்கு பேசவராது!!!…”

வானத்து நட்சத்திரங்கள்
உதிர்ந்து வீழ்ந்து
இருக மூடியது என்னை…
திறந்திருந்த என் கண்களுக்கு
தெரிந்ததெல்லாம் இருள் மட்டும் தான்…
அவள் ஒளிமுகம் தவிர்த்து…

இப்போதும்
பூத்துக் கொண்டுதானிருந்தது பூக்கள்
அவள் முகத்தில் மட்டும்
புன்னகைப் பூக்களாக…

அவள் பூமுகத்தின் வாசம்
என் மனப்பூக்களிலும் பரவியிருக்க வேண்டும்…
இருண்டு தெரிந்ததெல்லாம்
ஒளிப்பூக்களைச் சூடிக்கொண்டது…
என் மனம் போல…

வார்த்தை சொல்லாத காதலை…
அசையும் விழிகளும்
மலரும் பூமுகமும் சொல்லிவிடும்…

பூக்கள் பேசிப்பேசியா நம்மை ஈர்த்தது…
வான்மதி பாட்டுப்பாடியா
தன்னை பார்பார் என்றது?…

நன்மதி மட்டும்
பேசித்தான் தீரவேண்டுமா?!…
கடவுள் கூட வஞ்சனை செய்து இருக்கலாம்…
காதல் நெஞ்சம் வஞ்சிக்கலாமா?…
அவள் மேல் பிறந்த
என் காதல் ஊற்றின்
நீரோட்டம் குறையவே இல்லை…
மேலும் பொங்கிப் பிரவாகமே செய்தது…

மீண்டும் தாத்தாவின் அருகில் சென்று
சத்தமாக சொன்னேன்…
“தாத்தா!
என் பெற்றோருடன் வருகின்றேன்
உங்கள் வீட்டிற்கு”, என்று.

நன்மதி
ஒரவிழியால் பார்த்து இதழோரம்
புன்னகை ஒன்றை பூக்கவிட்டாள்..

அவளின்
ஒற்றைச் சிரிப்பில் ஒழிந்திருந்தது
உலகத்து மொழிகளின்
மொத்த வார்த்தைகளும்!!!….
ஃஃஃ……………………………………..(முற்றும்)

கிரகணம் (பாகம் – 6)

    பாகம் – 6.

ஐயப்பாடுகளுக்குள் தான்
ஐக்கியமாகிக் கொள்கின்றோம்
அநேக நேரங்களில்…

தயக்கக் கூண்டுக்குள் தான்
தவித்துக் கொண்டிருக்கிறோம் – நல்ல
தருணங்களை தவறவிட்டு விட்டு…

சோம்பலின் போர்வைக்குள் தான்
குளிர்காய்ந்து கொண்டிருக்கிறோம்
உற்சாக ஒளியை இழந்துகொண்டு…

மக்கள் வெள்ளத்தில்
நீந்திக் கரைசேர முயலும்
என் சிந்தை கவர்ந்த
சுந்தரச் செல்வியை
எட்டிவிட எண்ணி சிட்டாய் ஏகினேன்
அவள் பட்டுப்பாதம் தொட்டுக் கடந்த திசையில்…

தூரங்களை நான் கடந்த பின்னும்
இருவருக்கும் இடையேயான
தூரம் தான் குறைந்த பாடில்லை…
காட்டு வெள்ளத்தில்
எதிர் நீச்சல் போடும்
சிறு எறும்பு போலதான் என் நிலையும்…
தொடங்கிய இடத்திற்கேத்தான்
தள்ளப்படுகின்றேன் மக்கள் வெள்ளத்தால்!…

ரோஜா மலர் வேண்டுமாயின்
முட்களின் தீண்டலை தாங்கத்தான் வேண்டும்…
மலைத்தேனை ருசிக்க வேண்டுமாயின்
தேனீக்களின் கொடுக்குகளை சமாளிக்கத்தெரிய வேண்டும்…
நிழலின் அருமை தெரிவதற்கு
வெயிலின் வெம்மை உணர்ந்திருத்தல் வேண்டும்…
காதலை நுகர்வதற்கும்
காத்திருப்பும் முடிவுறா முயற்சியும் வேண்டும்…

தூரத்தில் இருக்கும் போது
தெரியாத பதற்றமும் பரவசமும்
பல காலம் பார்க்காத
ஊரை நெருங்க நெருங்க பற்றிக்கொள்ளும்…
என் நிலையும் அது தான்…
என் பிரிய சகியை நெருங்க நெருங்க…
பதற்ற நெருப்பு என்னிலும் பற்றிக்கொண்டது…
பரவசக்குளிரில் உள்ளம் குதூகலித்தது…

உற்சாகத்தின் விளிம்பில் நின்று
மயிர்க்கால்கள் கூட நர்த்தனம் ஆடி
பரவசத்தின் எல்லையை பறைசாற்றுகின்றது…

கைகள் தொடும் தூரத்தில்
காரிகையை நெருங்கிவிட்டேன்…
இருவரின் உள்ளங்களின்
தொலைவை எங்கனம் அறிவேன்?!…

எப்போதுமே திறந்த புத்தகங்கள் தான்
கடலும் காதலும்…
மூச்சையடக்கத்தெரியாதவன் கடலையும்
உணர்வுகளை மதிக்கத்தெரியாதவன் காதலையும்
மர்மம் என்கின்றான்…
மூச்சையடக்கி மூழ்கிப்பழகினால்
முத்தெடுக்கலாம் கடலில்…
உணர்வுகளில் புரிதலை வளர்த்துக்கொண்டால்
காதலிக்கும் தகுதிபெறலாம் உலகில்…

உணர்வுகளைப் புரிதல்
சாத்தியமென்றே நினைக்கின்றேன்…
காதலும் சாத்தியம் தான் அதனால்…
ஏந்திழை என்னை ஏற்கும் நிலைவரும்…
தூரத்தின் தொலைவோ
கைகளுக் கெட்டும் தொலைவில் தான்…

கணப்பொழுதில்
என் நினைவைக் கலைத்து
நெஞ்சத்தில் குடிகொண்டவளின்
முன்சென்று நின்றேன்…

உணர்வுகளின் ஏக்கத்தையும் தாக்கத்தையும்
வார்த்தைகளில் வடிவாக்கி
வானவில்லாய் வர்ணம் தீட்டி
ஆசைகளை அவளிடம் கூறிவிட
எண்ணம் என்னுள்ளே கொண்டேன்..

என்னன்னவோ செய்தும்
வார்த்தைகள் தான்
வாய்விட்டு வரமருக்கின்றது!…

அத்தனையும் தாண்டி
ஒற்றை வார்த்தையில் அழைத்தேன் அவளை,
‘அம்மணீ…’

பதிலும் வந்தது!…
அவளிடமிருந்தல்ல…
அறுபதைத்தாண்டிய ஒரு
அனுபவப் பழத்திடமிருந்து
‘தம்பீ…என்னவேண்டும்?!…’

அவளின் தாத்தாவாக இருக்குமோ?!…

ஃஃஃ……………………………………………………………… (வளரும்….)

கிரகணம் (பாகம் – 5)

பாகம் – 5.

காதல் சுவாம் போன்றது…
காதல் இதயம் போன்றது…
காதல் காற்றைப்போல் வியாபித்திருப்பது…
காதல் அலைகளாய் ஆர்ப்பரிப்பது…
காதல் நட்சத்திரமாய் ஜொலிப்பது…
காதல் மழலையாய் கனிவது…

காதல் உற்ற உலகம் காலம் கடந்து வாழும்…
காதல் அற்ற உலகம் கரைந்தே இறந்து போகும்…

காதலில் எந்தக் காதல் சிறந்தது?!…
மனிதக் காதல் சிறந்ததென்றே சிலாகித்து
நாளும் பிதற்றித்திரிகின்றோம்!…

என்வரையில் சொல்வேன்
மனிதனும், மனிதன் வளர்க்கும்
பிராணிகளும் மட்டுமே
காதலில் தாழ்ச்சி என்பேன்…
மனிதனின் சகவாசமற்ற விலங்குகளே
காதலில் உயற்சி என்பேன்…

காதலி இருக்கும் போது
மற்றொருக் காதலியை தேடித்திரிவதும்…
மனைவி இருக்கும் போதே
கள்ளக் காதலை நாடுவதும்….
மனிதரில் மட்டுமே நடக்கின்ற ஒன்று…
மனிதன் பேணிவளர்க்கும் விலங்குகள் மட்டும்
மனிதனுக்கு இழைத்ததா என்ன?!…
ஆட்டுக்கும் மாட்டுக்கும் நாய்க்கும்
நிலையான ஜோடி எது?…

ஜோடி விட்டு ஜோடி தேடும் படலம்
எந்த காட்டுவிலங்கிடமும் கண்பதறிது…

வோளைக்கொரு துணை என்பது
காட்டு ராஜா சிங்கத்திடம் இல்லை…
நாட்டு ராஜாக்கள் மட்டும்
நாயாய் அலைவதேன்?!…

ஆசைகள் அதிகம் மனிதனுக்கு…
பெண்ணாகட்டும்…
பொண்ணாகட்டும்…
மண்ணாகட்டும்…
அனைத்திடமும் ஆசை அதிகம் மனிதனுக்கு…

அஃரிணை மீது ஆசை…
நியாப்படுத்திக் கொள்ளலாம்…

உயர்திணை பெண்ணிடம் ஆசை வேண்டாம்…
அவள் பொருளல்ல…
உயிர்…
மனிதா பெண்ணிடத்தில் அன்புகொள்…
காதல் கொள்…

நிமிடத்திற்கு நிமிடம்
நிறம்மாற்றும் பஞ்சோந்தித் தனம்
காதலில் வேண்டாம்…

காதல் இயற்கையானது…
காசு பார்த்து…
ஜாதி பார்த்து…
மதம் பார்த்து…
நிறம் பார்த்து…
அழகு பார்த்து…
காதல் வளர்த்து
காதலை கொச்சை செய்யாதே!…

காதலை இயற்கையின் வழியிலேயே காதல் செய்..
காதலும் புனிதமாகும்…
நீயும் புனிதனாவாய்…

கிரகணம் முடிந்துவிட்டது…
பால் நிலா இருள் கிழித்து
மருள்நீங்கி மக்கள் காணக்கிடைக்கின்றாள்
தன் பூரணதரிசனம் தந்து
பூத்துச் சிரிக்கின்றாள்…

காதலி!… நீ மட்டும்
என் கண்களுக்குள் சிக்காமல்
கண்ணாமூச்சி விளையாடுவதின் மர்மம் என்ன?!…

காதலி?!…
வினோதமாகத் தெரிகின்றதோ?…
காதலிக்காத ஒருத்தி
கண்டவுடன் எங்கனம் காதலியாவாள்?…
அவள் காதலிக்கின்றாளா இல்லையா
என்பதல்ல கேள்வி…
நான் காதலிக்கின்றேன்
அதனால் அவளென் காதலி என்பேன்…
ஒருவேளை அவளும் காதலித்தால்
நான் அவளின் காதலன் ஆவேன்…
நாங்கள் காதலர் ஆவோம்.

அவள் காதலிக்கவில்லை என்றாலும்
அவள் என் காதலிதான்…
என் காதல் பயணம் தொடரும்…
என் பயணத்தின் எல்லை அவள்தான்…

நாம் காதல் கொண்டவர்
காதலித்தால் மட்டும் காதலிப்பதல்ல காதல்…
அவர் காதலற்ற போதும் கூட காதலிப்பதுவே காதல்…

காதல் துன்பம் செய்யத்தெறியாதது…
காதல் கொடுமை செய்யாதது…
காதல் கருணை வடிவானது…
காதல் அன்பாய் மலர்வது…

எங்கே என் காதலி…
ஏங்கித் தவிக்கின்றேன்…
உயிரின் உருவாய் அவளை ஏற்றுக்கொண்டேன்
காதலின் கருவை என்னுள் வைத்துவிட்டேன்…
காலம் காலமாய்
ஆலம் விழுதென காதலை வளர்த்திடுவேன்
காதலி அவளை கண்டு விட்டால்.

கரைமுட்டும் மலைவெள்ளம் போல்
மக்கள் கூட்டத்தின் எல்லையெங்கும்
தொட்டுத் தேடுகின்றேன்…
காணக்கிடைப்பாள் என் காதலியென்றெண்ணி…

மனதின் எண்ணெங்கள் பொய்ப்பதில்லை…
நிலையான முயற்சியென்றும் தோற்பதில்லை…

அதோ…
மக்கள் வெள்ளத்தில்
நீந்த முயல்வதென் வெண்ணிலாவா?!…

ஃஃஃ ………………………………………………… (வளரும்…)

கிரகணம் – பாகம் -4.


ஏக்கங்களும்
எதிர்பார்ப்புக்களும் தான்
அடுத்த படிக்கு ஏறவைக்கின்றது
நம்மை…

பசித்ததால் தான்
உணவைத்தேடினோம்…
உணவில் ருசியை நாடினோம்…
பொட்டல் தரைகளை விளைநிலமாக்கினோம்…
நாளைய பசிக்கு இன்றே
சேமிப்பைத்தொடங்கினோம்…
கற்கால மனிதத்திலிருந்து
தற்கால நாகரீகம் வரை
பாதைகள் பல கடந்தோம்…
அனைத்தும்
ஏக்கங்கள் எதிர்பார்ப்புகளின் விளைவே…

மனிதத்திற்கு காதல் மீதும்
ஏக்கங்களும்
எதிர்பார்ப்பும் அதிகம்…
தமிழனின் காதலுக்கோ
இன்னும் அதிகம்…

காதல் வளர்வதிலும்
காதலர்கள் வாழ்வதிலும்
காதலுள்ளவன் தமிழன்…

காதல் வளர்க்க
கடவுளையே காதலிக்க வைத்தவன்…
காதலின் வளர்ச்சிக்கு இயற்கையை
தூதுவிட்டவன்…
இயற்கையையும் காதலிப்பவன்…

தமிழன் எனக்கும்
காதல் அரும்புதலில் வியப்பென்ன?…

கிரகணப்பொழுதில்
மனதைக் கவர்ந்து சென்ற
கன்னியவளை எங்கு காண்பேன்…
என் காதல் நெஞ்சை
எங்கனம் உரைப்பேன்?…

தயக்கம் காதலின்
முதல் எதிரி…
தயக்கத்தால் தளிர்விடாமல்
முளையிலேயே கருகிய காதல் பல…

குஞ்சு முட்டையின் தோடுடைத்து
வெளிப்பட்டால் தான்
விரிந்த வானில் வலம்வரலாம்…

தயக்கக்கூட்டை விட்டு
எண்ணங்கள் வெளிப்பட்டால் தான்
காதல் மொட்டவிழ்ந்து மலரும்
வாழ்க்கை காதல் பூந்தோட்டமாய் மாறும்…

ஏந்திழையவளை
எண்திசையும் காற்றாய்
ஏகி தேடினேன்…

மான்விழியவளின்
எழில் உருமட்டுமன்று…
மலரவளின் தேகம் தொட்ட
தென்றலின் தீண்டல் கூட போதும்
அவளின் பாதம் பட்டு
புண்ணியம் தேடும் இடம் கணிக்க…

நதிதீரத்தில்
மணலென திரண்ட மக்கள் கூட்டத்தில்
வைரம் ஒன்று மறைந்தலும் சாத்தியமோ?!…

வானில் இருள்கிழித்து
மதிதன் மலர்முகம் காட்டிற்று…
என் காதல் மதிமுகம் தான் காணேன்!…

கூடிய மக்கள் வெள்ளத்தில்
மீனாய் நீந்தினேன் அங்குமிங்கும்
ஏங்கே என்னவளின் தூண்டல் விழிகள்?!…

காண்பேனா அவளை?!…
காதல் சிறையில் சிக்குண்டு
அவளின்
கைதியாவேனா விரைவில்?!…

-o0o-

கிரகணம் – பாகம் -3.


பற்றற்ற மனிதர்
யார் உளர் உலகில்?…
பற்றற்றதாய் கூறும் ஞானியரும்
பற்றியே நிற்பர் இறையடி…

பொருள் மீது…
உயிர்கள் மீது…
நியாயமாகக் கொள்ளும் பற்றை
ஆசை என்போம்…
முறையின்றிக் கொள்ளும் பற்றை
பேராசை என்போம்…

எதிர்பார்ப்பின்றி எல்லா
மனிதர் மீதும் கொள்ளும் பற்றை
மனிதாபிமானம் என்போம்…

சொந்தம் பார்த்து
பந்தம் கொள்ளும் பற்றை
பாசம் என்போம்…

ஆணிடத்து பெண்ணும்
பெண்ணிடத்து ஆணும்
உயிர்வைத்து கொள்ளும் பற்றை
காதல் என்போம்…

பெண்ணிவளிடத்து
நான் வைத்த பற்று
காதலென்று கொள்ளல் தகுமோ?!…

புரிந்துணர்ந்து அறிந்த பின்னே
வருவது மட்டுமல்ல காதல்…
பேசிக்கழித்து சிரித்த பின்னே
வருவது மட்டுமல்ல காதல்…
பார்த்த கணத்திலேயும் வரலாம் காதல்…

காதல் ஒரு நோய்…
காதல் ஒருவித பசி…

நோய்வராத உடலுமில்லை…
பசி உணராத வயிருமில்லை…

மூன்றுமே நேரம் குறித்து
சொல்லிவிட்டு வருவதில்லை…
எந்த கணத்திலும் நிகழலாம்…

பார்த்த சில கணங்களில்
அவள் மீது கொண்ட பற்றும்
காதல் என்றே கொண்டேன்…

காதலுக்கு இரு முகங்கள் உண்டா?!…
உண்மைக் காதலுக்கு
எப்போதுமே ஓரே முகம் தான்
அன்பு முகம்.

அது..
நாம் காதலித்தவர்
நம்மை காதலித்தாலும் வெறுத்தாலும்
பள்ளம் நோக்கி ஓடும் வெள்ளமதாய்
மாறாது நன்மை நினைப்பதே…

மங்கையவள்
என் கண்பார்வையினின்று மறைந்த பின்னும்
எண்ணமதில் நிலைத்தே நின்று வதைத்தாள்
வந்து என்னை பார்பார் என்று…

என் மனப்பறவை
தனக்கான கூடாக
நினைத்ததோ அவளை…
அவள் எத்திசை சென்றிருப்பாளென
ஏங்கிற்று என் மனம்…

கண்களோ எண்திசையும் சுற்றித் தேடியது…
ஏந்திளை எங்கிருப்பாளென்று…

கால்களோ மக்கள் வெள்ளத்தில்
வழி கிடைத்த இடமல்லாம் ஊர்ந்தது…

மீண்டும் காணக்கிடைப்பாள – என்
காதல் கிளி…

பெயர் கூட கேட்காமல் விட்டுவிட்டேனே?…

மனதிற்குள்ளேயே எழுதி எழுதிப் பார்க்கின்றேன்
அவள் திருப்பெயர் என்னவாய் இருக்குமென்று…
அவள் அழகுக்கு பெயர் தான் கிடைக்கவில்லை…

“நிலா” வாக இருக்குமோ?!…
இல்லை… இல்லை…
அது மாதத்தில் பாதிநாள்
தன் எழில் முகத்தையே இழந்து விடுகின்றது…

“ரோஜா”வாக இருக்குமோ?!…
இல்லை…இல்லை…
அது ஒரு பொழுதுக்குள்ளே
தன் இதழ்களை உதிர்த்து விடுகின்றது…

என்னவாகத்தான் இருக்கும் இவள் பெயர்?…
என்னவாக இருந்தால் தான் என்ன?
பெயரால் அவளுக்கு பெருமையல்ல…
எழில் நிலா அவளால் தான்
அவள் கொண்ட பெயருக்கு பெருமை.

தாயைத் தொலைத்த
குழந்தையதாய் தேடுகின்றேன்…
எங்கே சென்றிருப்பாள்
என் தங்கத் தாரகை…
ஃஃஃ………………………வளரும்…

கிரகணம். – (பாகம் -2)


இது தொடர் கதை போல கவிதையில் ஒரு சிறு முயற்சி.

பாகம்-2.

அருகில் வந்து மெல்ல
முகம் மலர்ந்து நின்றாள்…

காலைக் கதிரொளி கண்டேன்
அவள் நிலா முகத்தில்.
மதியின் தண்மை கண்டேன்
அவள் சூரியக் கண்களில்.
இரவின் வர்ணம் கண்டேன்
அவள் கார் கூந்தலில்.
மூன்றாம்நாள் பிறையை கண்டேன்
அவள் புருவ பீலியில்

பிரம்மன் பலாப்பழத்தின் சுவையில் தித்தித்து
இவளின் இதழாய் வைத்து
சிகப்பு வர்ணம் தீட்டியிருப்பானோ?!…

இவள் வனப்பை இங்கு சொல்ல
வார்த்தைகள் இல்லை…
நல்ல ஆண்மகவுக்கது முறையும் அல்ல…

முல்லையின் நறுமணம் கூட
முத்துப் பெண்ணிவளின் தரிசனம் காணத்தான்
சற்று முன் உலாவந்ததோ…

நிலாப்பெண்ணைத் தொடர்வர்
நட்டத்திரத் தோழிகள் எப்போதும்.
இவளின் தோழியர் எங்கே?!…
இவள் ஒற்றைச் சூரியனோ!…

கைகளிரண்டும் தட்டி
என் கருத்திற்கு ஊக்கம் தந்த நங்கை
அமுதவாய் மலர்ந்து
தேன் தமிழில்
ஒருவார்த்தை பாராட்டிட மாட்டாளா?…
பரிதவிப்பில்,
வானில் நின்று பூமியில் இறைநோக்கும்
பறவையின் இறகுகளாய் படபடத்தது
அடியேன் நெஞ்சம்…
அவளின் இதழ் பார்த்து…

முகில்கள் எப்போதும்
மழையாய் பூமியைச் சேர்வதில்லை…
அலைகள் எப்போதும்
நுரையோடு கரையைத் தொடுவதில்லை…
பூக்கும் பூக்கள் எல்லாம்
கனியாகும் வரை நிலைப்பதில்லை…
மனிதனின் ஆசைகளும் எல்லா
நேரங்களிலும் முழுதாய் நிறைவேறுவதில்லை…

என் எண்ணப்படி அவளும் என்னிடம்
ஒருவார்த்தை கூட பேசவில்லை…

நகரத்தின் வாசனை படாத கிராமம் இது…
கிராமத்தின் நாணமும்…
அறிமுகமில்லா ஆணிடம் என்ன அகவல் என்று
கிராமத்தின் நாகரீகத்தாலும்…
பேசாமல் இருந்திருப்பாளோ?!…

என் எண்ணம் மட்டும்
மலரைச் சுற்றும் பட்டாம் பூச்சியாய்
அவளையே சுற்றிப்பறந்தது…

அவளின் நினைவுகளோ…
என் மன ஏட்டில், அனுமதியின்றியே
தனக்காய் பல பக்கங்களை
பத்திரம் செய்து கொண்டது…

என் விழியும் எண்ணங்களும்
அவளைச் சுற்றியே பறக்க…
அவளின் விழிகளின் பார்வை
வேரெங்கோ பறந்தது…
இறைதேடிவந்த பறவை கூடுதேடி பறப்பது போல…

நியுட்டனின் மூன்றாம் விதி
இங்கும் விளையாடியது…
மின்னலாய் வந்தாள்
புயலாய் மனதைச் சுருட்டினாள்..
மீண்டும் மின்னலாய் திரும்புகின்றாள்…
என் மனதை மட்டும் கலைத்துவிட்டு…

கொள்ளையடித்துச் செல்வது குற்றமாம்…
இந்தியத் தண்டனைச் சட்டம் சொல்கின்றது…
என் மனதை கொள்ளையிட்டுச் செல்கின்றாள்
யார் இவளைத் தண்டிப்பது?!…

ஃஃஃ.
…………………………….. (வளரும்…)

கிரகணம்.

    இது தொடர் கதை போல கவிதையில் ஒரு சிறு முயற்சி.

    கிரகணம்.

    பாகம்-1

கதிரவன் கண்மூடி நித்திரையில் மூழ்கி
கணநேரம் கழித்திருக்க…
வையகம்
தன்மேல் கருப்பு போர்வை
போர்த்திக்கொண்டது…

வானம்
சாபம் பெற்ற இந்திரனாய்
சாமந்திப் பூ தோட்டமதாய்
தேகமெங்கும் நட்சத்திரக் கண்திறந்து
மின்மினிப் பூச்சியாய் மினிங்கியது…

தவழ்ந்து வந்த தென்றலின் தாலாட்டில்
நறுமணம் கலந்தது
மெல்ல மொட்டவிழந்த முல்லை…

பகலெல்லாம்
சூரிய ஆண்தனை காண
நாணம் பூண்டு மறைந்திருந்த
நிலவுப் பெண்ணாள்
மெல்ல முகமலர்ந்தாள் விண் தாமரையாய்…

தோகையவள் எழில் கூட்ட
தோழியராய் தேகம் தொட்டே
தொடர்ந்திட்டாள் மேகப்பெண்ணாள்.

விண்ணகத்து பெண்ணிவளின்
அழகெல்லாம் நாணிநிற்க
மண்ணகத்தில் பெண்ணொருத்தி பிறந்திப்பாளா?
பிறந்திருந்தால் நம் கண்ணுக்கு காணக்கிடைப்பாளா?
வாலிப நெஞ்சத்தின் தாக்கத்தால்
மூளையின் ஒருசெல்லில் எழுந்த வினாகூட
இனிமை தந்தது…

ஆற்று மணல் மேட்டில்
கூடிட்ட கூட்டத்தில் ஐக்கியமானேன்…
இன்று சந்திரகிரகணமாம்…
பார்க்கும் ஆசை
எனக்கும் இருந்தது
சந்திரகிரகணத்தை அல்ல…
கூடும் சந்திரவதனங்களை!…
இளமையின் ஈர்ப்பல்லவா?…
நான் மட்டும் விதிவிலக்கா!…

நல் பவுர்ணமி நாளில்
சந்திரனில் படும் சூரியனின் ஒளிதனை
பூமியது சிறிது நேரம் மறைத்திட
நிலவும் ஒளியின்றி மறைந்திடும் நிகழ்வு
சந்திரகிரகணம்…
இது நான் பள்ளியதில் படித்திட்ட பாடம்.

இங்கோ..ஆற்று மணல் மேட்டில்
மேவிநின்ற கூட்டத்தார் உரைத்திட்டார்
நிலாதனை இராகு வந்து விழிங்கிட
சந்திரகிரகணம் நிகழுமென்று.

மறுத்து நான்
பள்ளிப்பாடமதில் கற்றதை உரைத்திடவே
கைகொட்டி சிரிக்கின்றார்…
ஏழனமாய் எனை பார்க்கின்றார்…
தன்கருத்து உண்மையென்று புகல
முன்னவனை துணைக்களைக்கின்றார்…
பலமாக புத்தியின்றி புலம்புகின்றார்…

மாந்தர்காள்!
மந்தைவெளி மாடல்ல..
செம்மரி ஆடுமல்ல நாம்…
முன்னவர் சாய்ந்த வழி சாய்வதற்கு…
தெய்வப்புலவன் வள்ளுவனே செப்பிவிட்டான்
எவர் கூற்றென்றாலும் ஆய்ந்தறிவதே அறிவென்று…
ஆதலின் உண்மை உணருங்கள் என்று
அவர் பார்த்து உரைத்திட்டேன்…
ஆயினும் பெரியவர் ஒருவர்
எனை பார்த்து முறைத்திட்டார்.

அனைவரும் திரும்பிட்டார்
இருகை சேரும் ஓசைகேட்டு…
யாரந்த மிருதங்க ஓசைக்குச் சொந்தக்காரர்
நானும் காண ஏங்கிட்டேன்…

ஓசைகேட்ட திசையிலிருந்து
தென்றல் மல்லி வாசம் சுமந்து வந்தது
உணர்ந்து கொண்டேன்,
யாரந்த மிருதங்க ஓசைக்குச் சொந்தக்காரி…
யானை வரும் முன்னே
மணிவோசை வரும் பின்னே என்பதுபோல்
மங்கையவள் வரும்முன்னே
மல்லி மணம் கமழ்ந்ததுவோ?…

சந்திரகிரகணத்தால் எங்கும் இருள் சூழ…
எம்முன் ஒளிபரவிற்று.
சற்றுமுன் வானில் பார்த்த மதி
எம்முன் பெண்ணுருவாய்…
அட, எப்படிச்சாத்தியம் இது?…
இவள் மண்ணில் தோன்றிய நிலா…
விண்ணிலாவை விஞ்சிய பெண்ணிலா…
இவள் வரவு கண்டே
வான் நிலா மறைந்ததோ?…

என் கருத்திற்கு ஒத்து
கையொலி செய்த நங்கை இவளா?…
நிலைகொள்ளவில்லை மனம்.

காணக்கிடைப்பாளா என்று
எண்ணிய சற்று நேரத்தில்
என் முன்னே நிலவை விஞ்சிய இவள்…
இயற்கையின் அற்புதங்களில் இவளும் ஒன்றோ?!…
ஃஃஃ (வளரும்…)