கானல் நீராகிப்போனதோ கனவுகள்…


கானல் நீராகிப்போனதோ கனவுகள்
காதலர் கண்களில் ஏனிந்த அதிர்வுகள்
காலம் சொல்லும் பாடங்கள்
காயம்பட்ட பின்தான் வேதங்கள்….

மலையின் சாரல்தான் நதியின் வெள்ளங்கள்
மனதின் சாரல்தான் கவியின் துள்ளல்கள்
மரத்தின் சாரம்தான் கனியின் சுவையாகும்
மதியின் சாரம்தான் மயக்கும் பேச்சாகும்…

விதிசெய்யும் மாயம் மனிதத்தின் பயமாகும்
விதைசெய்யும் மாயம் வளர்ந்து மரமாகும்
வினைசெய்யும் மாயம் தீய விளைவாகும்
விடைதெரியா விடுகதையோ மனதில் புதிராகும்…

புன்னகைப் பூவும் சிலநேரம் புதிராகும்
புதிர்கூட பலநேரம் புன்னகையாய் மாறும்
புரியாதபோது புன்னகையும் புதிரும் தடம்மாறும்
புரிந்துகொண்டால் மனமெங்கும் பூக்கள் மலரும்…

கானல் நீரும் கனவுப்பூவும் ஒன்றல்ல
கனவின் அலைகள் ஒருநாள் நினைவாகும்
கலைந்து போகாமல் வாழ்வில் நனவாகும்
காலத்தில் அழியாத காவிய கவியாகும்…

காதலின் மொட்டுக்கள் விரிந்து மலராகும்
காதலர் உள்ளத்தில் இனிய நினைவாகும்
காதல் உள்ளம் எப்போதும் சிறகாகும்
காதல்வானில் பறந்து இன்பத்துதி பாடும்…

காதல் நெஞ்சே பிறகெப்படி – உன்
காதல் கனவுகள் கானல்நீராய் மாறும்…
கலங்காதே கலையாதே காதல் நெஞ்சே…
காலம்கூட உன்னால்தான் வாழுமென்பதை மறவாதே….
* * *

எங்களின் இரவுகள் விடியாதா…


விடியாதா… விடியாதா… எங்களின் இரவுகள் விடியாதா…
வேசங்கள் இல்லை எங்களின் நெஞ்சத்தில் மஞ்சத்தில்
வேதனை எங்களின் சொந்தங்கள் கொண்டிடும் பந்தங்கள்…
வேதங்களே சொல்லுங்கள் வாழ்க்கைக்கு வழி சொல்லுங்கள்…

சாலையோர மரத்தின் நிழலே எங்களின் வீடுகள்
சாதங்கள் முழுதாய் நிறைத்ததில்லை எங்களின் வயிருகள்
சந்தங்கள் எப்போதும் இருந்ததில்லை எங்களின் வாழ்க்கையில்
சதிகள்நிறைந்த உலகத்தில் விதியா எங்கள் வாழ்க்கை…

நிறைவாய்தானே உழைக்கின்றோம் குறைவாய் ஊதியமேன் பெறுகின்றோம்
நீதியெங்களை தொடாததேனோ நிம்மதியை வாழ்வில் தராததேனோ..
நித்திய வாழ்வில் தினம் தினம் மரணம்தான்
நினைவுகள் மட்டும் வாழுது நடை பிணமாய்…

வீடுகள் எம்முழைப்பில் தினமுயர்ந்து கோபுரத்தை விஞ்சும்
வீதியின் ஓரங்கள் தானனெனினும் தந்திடும் தஞ்சம்
விதியா…இதுவிதியா…விஞ்சிடுதே எங்களில் பஞ்சம்
விதியே காட்டாயோ எங்கள்மேல் கருணை கொஞ்சம்

ஆட்சிகள் மாறி அரசுகள் மாறிட்ட போதும்
அன்பாய் இதுவரை எம்மிடம் வந்தவரில்லை எவரும்
அரைவயிறு கஞ்சிக்கு ஏழைக்கு வழிசெய்யாத பேதம்
அரசுகள் ஆட்சிகள் இங்கே இருந்தென்ன லாபம்.

நிலைமைகள் இனி ஒருநாள் வலிந்தே மாறும்
நிலையாய் எங்களின் வாழ்வு அப்போது உயரும்
நிலைகெட்ட அரசியல் தலைகள் அப்போதெங்கே போகும்
நீதியின் கண்கள் உலகில் எப்போதுமா தூங்கும்.
* * *

வைகறைக் காற்றே வைகறைக் காற்றே- பாடல்

வைகறைக் காற்றே வைகறைக் காற்றே
வாசல் பக்கம் வீசாயோ – இந்த
ஜன்னல் மலரின் உள்ளம் குளிர
சுகந்தம் சுமந்து வாராயோ
சோகம் மறந்து புன்னகை மலர
சோகத்தை அறிந்து செல்லாயோ…(வைறைக் காற்றே…)

தளிராய் இருக்கையில் புன்னகை மலர்ந்தோம்
இணைந்தே வயலில் நடந்தோம் கழித்தோம்…
நதியில் நடந்தோம் ஜதிகள் செய்தோம்…
நாணலைத் தொட்டோம் வணக்கம் பெற்றோம்
புனலில் புகுந்தே குளித்தோம் புத்துணர்வை உணர்ந்தோம்
சோலையில் புகுந்து மலரைத்தொட்டோம்
பூவின் மணத்தைப் பெற்றோமே…
கட்டுக்கள் இன்றி காவலுமின்றி
கனவுகள் தினம்தினம் வளர்த்தோமே….(வைகறைக் காற்றே…)

இணையாய் வளர்ந்தோம் இதயம் மலர்ந்தோம்
மாயம் என்ன கூறடியோ…உன்
மாற்றம் இல்லாதோற்றத்தின் காரணம் ஏதடியோ
விரைவாய் வளர்ந்தேன் – நான்
கன்னி மலராய் மலர்ந்தேன்
கனவுகள் சுமந்தேன் – காவலில் விழுந்தேன்
காலத்தின் கொடுமை பாரடியோ
கனவா இனிவிடுதலை கூறடியோ….(வைகறைக் காற்றே…)


* * *

மெல்லிய தூரலாய் என்னைத் தொட்டாய்…

மெல்லிய தூரலாய் என்னைத் தொட்டாய் -நீ
சொல்லிச் சொல்லியே மனதை கொள்ளையிட்டாய்
வண்ணத்துப் பூச்சியாய் வானில் பறக்கவிட்டாய்
வானவில்லாய் வண்ணம் சுமந்தே ஜொலிக்கவிட்டாய்
வரம் தந்த நீ எங்கே மறைந்து விட்டாய்… மறைந்து விட்டாய்…(மெல்லிய…)

சிலையாய் கற்கள் பிறப்பதில்லை
சிற்பியின் கையில் சிலையாக மறுப்பதில்லை
கல்லாய் இருந்தவனென்னில் – உன்
பார்வை உளியால் தினம் செதுக்குகின்றாய்
வெள்ளைத்தாளாய் பறந்த என்னில்
தூரிகைகொண்டு காதலை அழகாய் வரைகின்றாய்
காதலை நானும் அறிந்தவனில்லை
காதலி நீயென்றால் இன்பம்வேறில்லை… இன்பம்வேறில்லை… (மெல்லிய…)

சிறுசிறு சொல்லாய் என்னில் விதைத்தாய்
காதல் கொடியை மெல்ல வளர்த்தாய்
பற்றிப் பிடித்திட கிளையைத் தேடுகின்றேன்
உனைச்சுற்றி படர்ந்திட உயிரில் துடிக்கின்றேன்
காதலின் சுகத்தை காட்டிவிட்டாய்
இயற்கையின் விதியை உணர்த்திவிட்டாய்
அழகே அழகே இன்பம்வேறில்லை…
காதலின்றி நீயும் நானும் இங்கில்லை… இங்கில்லை… (மெல்லிய…)

உலகத்தின் சூட்சுமம் காதலென்பேன்
துறவிலும் சிறந்தது இதுதானென்பேன்
உன்நினைவைச் சுமந்தே கனவிலும் மிதக்கின்றேன்
வா…வா…காதல் வானில் சிறகைவிரிப்போம்
தடைகள் வந்தால் தாண்டி பறப்போம்… (மெல்லிய…)
* * *

வருவாய் வருவாயென காத்திருந்தேன்…

வருவாய் வருவாயென காத்திருந்தேன் கண்கள் அயர்கிறது
விழியோரம் வழியும் நீரில் உப்பே தெரிகின்ன்றது
வருவேனென்று சொன்னவன் நீதானா?!..
வினாக்கள் பல எழுகின்றது… (வருவாய்…)

உந்தன் சொற்கள் யாவும் நீர்மேல் எழுத்துக்களா?!
உலர்த்தும் வெயிலில் தெரியும் கானல் நீர்தானா…
உயிரை உன்மேல் வைத்தே
உலை அனலில் வேகின்றேன்
உயிரே உயிரே உயிரே…எந்தன்
உதிரத்தின் கொதிப்புக்கள் அடங்காகதா…. (வருவாய்…)

காதலின் வேதனை என்னை கனவிலும் வதைக்கின்றது
கதம்பமலர்ச் சோலை காற்றில் வீணே உதிர்கின்றது
கடவுளாய் நீயும் அமர்ந்துவிட்டாய் – என்
காதல் கோயிலின் உள்ளே
கண்டிட நானும் துடிக்கின்றேன் – நீயோ
கருத்தினில் மட்டும் தெரிகின்றாய்… (வருவாய்…)

அறிவாயா உணர்வாயா
எந்தன் வேதனை புரிவாயா?!…
புல்லின் நுணி பனித்துளிபோல்
எனைத்தொட்டு அமர்வாயா?!…
சொர்க்கத்தின் சுகமனைத்தும்
ஒருசேர தருவாயா?!….
சுகம்தான் சுகம்தான் காதல் என்று
நான் புலம்பிடச் செய்வாயா?!… (வருவாய்…)

* * *

காதல் மட்டும் அல்ல வாழ்க்கை

எந்த கணம் என்ன வரும் யார் அறிவாரோ
எந்த பெண்ணும் இவ்வுலகில் நிலைத்த மனம் கொண்டிருப்பாளோ
காற்றின் திசை எந்த நாளும் நிலைத்து நிற்குமோ
கன்னியரின் மனது மட்டும் இயற்கையை வென்று நிற்குமோ. (எந்த…)

காதல் வந்துதான் மனம் கனிந்து நின்றது
பெண்பூவைச் சுற்றியே மனம் வண்டாய் பறந்தது
தேகம் ஒன்றியே தினம் சுகத்தை தின்றது
போதை விட்டபின்னும் காதல் புலம்பல் நீண்டது

இரவைவென்ற பின்னும் காதல் பகலைத் தின்றது
இணைத்த உள்ளம் இரண்டும் உயிரில் கலந்தது
இதயத்தோடு இதயம் மலரின் மணமாய் நின்றது
இருக்கும் திசையெங்கும் காதல் பரவிச் சென்றது (எந்த…)

காதல் மட்டும் அல்ல வாழ்க்கை என்பது
மோகம் விட்ட பின்னே ஞானம் வந்தது
தூறல் விட்டபின்னே வானில் உதயம் வந்தது
வைய வாழ்வில் சிந்தை தெளிவு கண்டது (எந்த…)
ஃஃஃ